Published : 29 Dec 2015 09:31 AM
Last Updated : 29 Dec 2015 09:31 AM
*
அணையைத் திறக்க வேண்டாம் என்று கதறும் விவசாயிகளை எங்கேயாவது கேள்விபட்டது உண்டா? அதற்கு உலகில் ஒரே ஒரு உதாரணம் காட்ட முடியுமா? தமிழகத்தில் முடியும். அதுதான் ஒரத்துப்பாளையம் அணை. ஆயத்த ஆடைகளால் அழிக்கப்பட்ட அன்னை மடி அது. நவீன ஆடைகளால் நசுக்கப்பட்ட கந்தல் துணி அது. வல்லரசுகளின் சிவப்பு பொருளாதாரத்தில் சிக்கி சீரழிந்த அழகிய கிராமம் அது. ஒரு மயானம் போல காட்சியளிக்கிறது ஒரத்துப்பாளையம் அணை. அணையில் கலங்கலாக தேங்கியிருப்பது தண்ணீர் அல்ல; விவசாயிகளின் கண்ணீர்.
நாம் குடிப்பதற்கு உகந்த தண்ணீரில் டி.டி.எஸ். (Total dissolved solids) அளவு 500 1,500 வரை இருக்கலாம். பாசனத்துக்கு உகந்த தண்ணீரில் அது 2,100 வரை இருக்கலாம். ஆனால், ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீ ரில் இருக்கும் டி.டி.எஸ். அளவு 6,000. இது அரசு சொல்லும் அளவு. ஆனால், சில சமயங்களில் இது 17,000 வரை கூட செல்லும் என்கிறார்கள் நீரியல் நிபுணர்கள். அணையை நெருங் கும்போதே மூச்சு முட்டுகிறது. திருட்டுத் தனமாக திறந்துவிடும் ரசாயனக் கழிவு களால் நிரம்பி நிற்கிறது அணை.
சுற்றியிருக்கும் ஊர்களில் எல்லாம் புற்றுநோயைப் போல நில மெங்கும் ஊடுருவி வருகிறது அணை யின் ரசாயனம். அணையைச் சுற்றி இருக்கும் நிலங்கள் கந்தக பூமியாகி விட்டன. பச்சை வயல்கள், தென்னை தோப்புகள் கருகிவிட்டன. நொய்யல் ஆற்றுப் பாசனத்தில் இரண்டு போகம் நஞ்சை விளைந்த மண் இது. நெல் விளைந்த பூமியில் இன்று புல்கூட முளைப்பதில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பு பாசனத்துக்காக கட்டப்பட்ட அணை, தனது ஆயுள் காலத்தில் ஒரு நாள்கூட பாசனத்துக்குப் பயன்பட வில்லை. வாழ்ந்து கெட்டதைதான் பார்த்திருக்கிறோம். வாழாமலேயே கெட்டிருக்கிறது அணை.
இந்தப் பகுதியில் அணையைக் கட்டப்போகிறோம் என்று அரசு அறிவித்தபோது கொண்டாடினார்கள் விவசாயிகள். ஒரத்துப்பாளையம், கொடுமணல், கத்தாங்கன்னி, தம்ம ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட ஊர்க ளில் விவசாயிகள் 700 ஏக்கர் வரை நிலங்களைக் கொடுத்தார்கள். இன்று மொத்த விவசாயமும் செத்துப்போய் விட்டது. 60 ஆயிரம் ஏக்கர் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தென்னை மரங்கள் மூலியாக நிற் கின்றன. காக்கை, குருவிகூட அவற்றில் கூடு கட்டுவதில்லை.
ஒரு சொட்டு ரசாயனக் கழிவு நீரைக்கூட நொய்யல் ஆற்றில் விடக் கூடாது என்றுச் சொல்லியிருக்கிறது உச்ச நீதிமன்றம். கழிவு நீரை வெளி யேற்றும் சாய ஆலைகளை அடைத்து விட்டோம் என்கிறார்கள் அதிகாரிகள். நாங்கள் தொழிலே செய்வதில்லை என்கின்றனர் ஆலை அதிபர்கள். ஆனால், அணைக்கு விநாடிக்கு 35 கனஅடி ரசாயன கழிவு நீர் வந்துக்கொண்டுதான் இருக்கிறது என்கிறார்கள் விவசாயிகள். வானத்தில் இருந்தா வருகிறது ரசாயனக் கழிவு நீர்?
ஒருமுறை ஈரோடு காலிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவு நீரை விட்டார்கள். விவசாயிகள் போராடிய தால் அது தடுக்கப்பட்டது. குறுகிய காலமே அதில் கழிவு நீர் ஓடினாலும் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. அங்கு ஆய்வு நடத்தியவர்கள் ஒரு அடி வரைக்கும் விவசாய நிலங்களை வெட்டி எடுத்தால்தான் தீர்வு காண முடியும் என்றார்கள். அப்படியெனில் ஒரத்துப்பாளையம் அணையில் 25 ஆண்டுகளாக ரசாயனக் கழிவு தேங்கி நிற்கிறது. இந்த பூமியை என்ன செய்ய முடியும்? பாதாளம் வரை ஊடுருவிவிட்டது விஷம். இந்த ஊரின் பெயரைச் சொல்லி வரன்கூட கேட்க முடிவதில்லை. திருமணம் ஆகாமல் தவிப்பவர்கள் பலர்.
ஒரு காலத்தில் 34 துணை ஆறுகளும் 120 கால்வாய்களுமாக ஒய்யாரமாக ஓடியது நொய்யல் ஆறு. இன்று நொந்து சாகிறது நொய்யல். அதில் ஓடுவது தண்ணீர் அல்ல; சயனைடு, ஈயம், தாமிரம், துத்தநாகம், குரோமியம் நச்சுக் கழிவுகள் ஓடுகின்றன. 100 கிலோ பின்னலாடையை உற்பத்தி செய்ய 500 கிராம் வெட்டிங் ஆயில்,4 கிலோ காஸ்டிக் சோடா, 5 கிலோ ஹைட்ரோ குளோரிக் அமிலம், 8 கிலோ சோடா ஆஷ், 3 கிலோ அசிட்டிக் அமிலம், 10 கிலோ உப்பு, 2 கிலோ பெட்ரோல், 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவை. பின்னலாடை தயாரித்த பின்பு இதே அளவு கழிவு நீர் எங்கே போகும்? ஆலை அதிபர்கள் வீட்டுக்குள்ளா விட்டுக்கொள்வார்கள்? ஆற்றில்தான் கலந்தாக வேண்டும்.
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியால் பல ஆயிரம் கோடி அந்நியச் செலா வணி வருவாய் கிடைக்கிறது என்கிறது அரசு. அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ஜப்பான், சுவீடன் என உலகெங்கும் ஏற்று மதியாகின்றன திருப்பூரின் பின்ன லாடைகள். ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். ஏன் அந்த நாடுகளில் எல்லாம் பின்னலாடையை உற்பத்தி செய்ய முடியாதா? ராக்கெட் தயாரிக்க தெரிந்த நாடுகளுக்கு கேவலம் ஜட்டி, பனியன் கூடவா தயாரிக்க தெரி யாது? தெரியும். பின்பு ஏன் நம்மிடம் வாங்குகின்றன? ஏனெனில் இளிச்ச வாயர்கள் நாம். கேள்வி கேட்க மாட்டோம். காசு வருகிறதா, எதையும் யோசிக்க மாட்டோம்.
அந்த நாடுகளைப் பொறுத்தவரை இவை எல்லாம் கறுப்பு வர்த்தகம். தண்ணீர் தேசமான சுவீடனில் ஒரு சாயத் தொழிற்சாலை கிடையாது. ஒரு தோல் தொழிற்சாலை கிடையாது. காலணி தயாரிப்புக்கு புகழ் பெற்ற இத்தாலியில் தோல் பதனிடும் தொழிற்சாலையே இல்லை. அந்த நாடு ஆம்பூர், வாணியம் பாடி மற்றும் வேலூரில் இருந்து பதப்படுத்தப்பட்ட தோலை இறக்குமதி செய்துகொள்கிறது.
அந்நிய நாடுகளைச் சொல்லி தப்பில்லை. அவற்றின் ஆட்சியாளர்கள் மக்களுக்கு விசுவாசமாக இருக்கிறார் கள். ஆனால், நமது ஆட்சியாளர்கள் யாருக்கோ விசுவாசமாக இருக்கி றார்கள். நீர்நிலைகளை அழிக்கி றார்கள். ஏற்றுமதி மாயையில் மறைநீரை என்னும் பொக்கிஷத்தை இழந்துக் கொண்டிருக்கிறோம் நாம். மறைநீரை இறக்குமதி செய்துகொண்டி ருக்கின்றன வளர்ந்த நாடுகள். இதன் பெயர்தான் சிவப்புப் பொருளாதாரம். தற்கொலைப் பொருளாதாரம் இது. தோலின் மாயையில் பாலாற்றை இழந்து நிற்கிறோம். பின்னலாடை வலையில் நொய்யலை இழந்து தவிக் கிறோம்.
கி.மு. 400-களில் நொய்யல் ஆற்றின் கொடுமணல் நகரத்தில் இருந்து வைரம், வைடூரியம், முத்து மணிமாலைகளை ஏற்றுமதி செய்தோம். ஆனால், 21-ம் நூற்றாண்டில் ஜட்டி, பனியனை ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறோம். இதுதான் வளர்ச்சியின் அடையாளமா?
தீர்வு என்ன? ஒரத்துப்பாளையம் அணையின் தற்போதைய தண்ணீரை விவசாயத்துக்குப் பாய்ச்ச முடியாது. முதலில் சாயக்கழிவு நீர் நொய்யலில் கலப்பது முற்றிலுமாக தடுக்க வேண்டும். கடந்த 2008-ம் ஆண்டு அணையின் இரு கரைகளிலும் தேங்கியிருந்த ரசாயன கழிவுகளை தூர் வாரினார்கள். அதேபோல அணைக்குள் சுமார் 10 அடி வரை தூர் வார வேண்டும். பின்பு மழை நீரை அணையின் முழுமையான கொள்ளளவில் தேக்க வேண்டும். டைப்பியா (Typha) என்கிற தாவரங்களையும் அணையில் வளர்க்கலாம். இந்த தாவரங்களின் வேர்ப் பகுதி ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் தன்மை கொண்டவை. இதுபோன்ற திட்டங்கள் திருப்பூர், வீரபாண்டி உள்ளிட்ட இடங்களில் சில சாய ஆலைகளே செயல்படுத்தியுள்ளன. பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் செயற்கை நீருட்டல் செய்யலாம். எவ்வளவு அதிகம் முடியுமோ அவ்வளவு மழை நீரை பூமிக்குள் செலுத்த வேண்டும். விவசாயிகள் தங்களது மண்ணை ஆய்வுக்கு உட்படுத்தி ரசாயன கலப்பு விகிதங்களை அடையாளம் காண வேண்டும். அதற்கேற்ப தொடர்ந்து இயற்கை உரங்களை நிலங்களில் ஊறப்போடுவதன் மூலம் மண் வளத்தை மீட்க முடியும். |
(நீர் அடிக்கும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT