Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM
நான்கு மாநிலங்களுக்கு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருப்பது அசாமில் மட்டும்தான். அசாமில் அடுத்தடுத்து ஆட்சியில் அமர்ந்த காங்கிரஸ் அல்லாத ஒரே கட்சி என்ற பெருமையும் பாஜகவுக்குக் கிடைத்திருக்கிறது. 126 உறுப்பினர் கொண்ட சட்டமன்றத்தில் ஆட்சியமைப்பதற்குத் தேவை 64 இடங்கள். இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி மொத்தம் 75 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி 50 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன.
2016 சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணிக்குக் கிடைத்த இடங்கள் 86. கடந்த முறை பாஜக கூட்டணியில் அசாம் கண பரிஷத், போடோலாந்து மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. பாஜக இத்தேர்தலைப் போலவே கடந்த தேர்தலிலும் 60 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. மற்ற இரு கட்சிகளும் முறையே 14 மற்றும் 12 இடங்களைப் பெற்றன. கடந்த முறை பாஜக கூட்டணியில் இருந்த போடோலாந்து மக்கள் முன்னணி இம்முறை காங்கிரஸ் கூட்டணிக்குச் சென்றுவிட்டது. அக்கட்சிக்கு மாற்றாக ஐக்கிய மக்கள் விடுதலைக் கட்சி, பாஜக கூட்டணியில் புதிதாக இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்குக் கிடைத்திருக்கும் இடங்கள் 6 மட்டுமே.
எதிர்த்து நின்ற பெருங்கூட்டணி
பாஜகவுக்கு எதிரான பெரும் கூட்டணியில் எட்டு கட்சிகள் இடம்பெற்றிருந்தன. நிச்சயமாக இது பெரும் சவால்தான். காங்கிரஸ், அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, போடோலாந்து மக்கள் முன்னணி தவிர சிபிஐ, சிபிஐ(எம்எல்), சிபிஐ(எம்எல்) விடுதலை, ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளும், குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்துப் புதிதாகத் தொடங்கப்பட்ட அஞ்சாலிக் கண மார்ச்சா கட்சியும் இடம்பெற்றிருந்தன. காங்கிரஸ் கட்சிக்கு 95 இடங்களும், பத்ருதீன் அஜ்மல் தலைமையிலான அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 20 இடங்களும் ஒதுக்கப்பட்டன. சிபிஐ(எம்எல்) இரண்டு இடங்களிலும் மற்ற கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.
பாஜக கூட்டணிக்கு இம்முறை 11 தொகுதிகள் குறைந்திருப்பதைச் சறுக்கல் என்று சொல்லிவிட முடியாது. அசாமிய மொழி பேசுபவர்களில் பெரும் பகுதியினர் குடியுரிமைச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தனர். அந்த எதிர்ப்பு பாஜகவை பலவீனப்படுத்திவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை. அதைவிடவும் முக்கியமானது அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியுடனான காங்கிரஸ் கூட்டணி. ஏறக்குறைய 40% முஸ்லிம்கள் வாழும் அசாமில் இது பாஜகவின் வெற்றியை அசைத்துப் பார்க்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டது. முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் 46 தொகுதிகளில் இந்தக் கூட்டணி உறுதியான வெற்றி பெறும், போடோ பிராந்தியத்தின் 12 தொகுதிகளிலும் போடோலாந்து மக்கள் முன்னணி வெற்றி பெறும் என்ற கணிப்புகளில் பாதி மட்டுமே உண்மையாகியிருக்கின்றன.
வெற்றிக்குக் காரணமான ஒற்றை ஆளுமை
மெகா கூட்டணியும் குடியுரிமைச் சட்டத்தின் காரணமான அதிருப்தியும் பாஜகவின் வெற்றியைப் பாதிக்காததற்கு முக்கியக் காரணகர்த்தா ஹிமாந்த பிஸ்வா சர்மா. கடந்த பாஜக ஆட்சியில் நிதி, திட்டமிடல், மக்கள் நல்வாழ்வு உள்ளிட்ட முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்தவர். மிகச் சிறந்த தேர்தல் வியூகியான அவர், அடிப்படையில் ஒரு காங்கிரஸ்காரர். 2015-ல்தான் பாஜகவில் இணைந்தார்.
எந்த வாக்குறுதியை அளித்தாலும் அதை நிறைவேற்றுவார் என்று மக்களிடம் இருக்கும் நம்பிக்கையே சர்மாவின் பலம். கரோனாவை அவர் எதிர்கொண்ட விதமும் பாராட்டுகளைப் பெற்றது. மாநிலம் முழுவதும் அவர் நடத்திய பிரச்சாரக் கூட்டங்கள் மிகப் பெரிய செல்வாக்கை அவர் மீது உருவாக்கியிருக்கின்றன. பாஜகவுக்கு வாக்களித்தவர்களில் பெரும் பகுதியினர் சர்மாவுக்கு வாக்களிப்பதாகவே நினைத்தனர். அதனாலேயே பாஜக வேட்பாளர்கள் பலரும் சர்மா தங்களது தொகுதியில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று விரும்பினர்.
இருதுருவ அரசியல்
பத்ருதீன் அஜ்மல் கூட்டணியில் இடம்பெற்றது காங்கிரஸ் கட்சிக்குப் பலம் சேர்த்தது என்றால், அதையே பாஜகவும் தனக்குப் பலமாக மாற்றிக்கொண்டது. வங்கதேசத்திலிருந்து வந்த முஸ்லிம்களைப் பாதுகாக்க விரும்புபவர் அஜ்மல்; ஆனால், பாஜகவோ அசாமியர்களின் அடையாளத்தைப் பாதுகாக்க விரும்புகிறது என்று இருதுருவ அரசியலைக் கட்டமைத்தது பாஜக. சட்டவிரோதக் குடியேறிகளுக்கும் அசாமியர்களுக்கும் இடையிலான முரணானது கடைசியில் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான முரணாக உருமாற்றம் அடைந்தது.
பாஜகவுக்கு எதிரான வாக்குகளும் காங்கிரஸ் கூட்டணிக்கு மொத்தமாக மாறவில்லை. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக உருவான புதிய கட்சிகள் அந்த வாக்குகளைச் சிதறடித்துவிட்டன. மேலும், காங்கிரஸ் கட்சிக்கு எப்போதுமே ஆதரவாக இருக்கும் பிராந்தியங்களை இந்த முறை பாஜக தன்வசப்படுத்திவிட்டது. முக்கியமாக, தேயிலைத் தோட்டப் பிராந்தியங்கள் காங்கிரஸ் கட்சியின் நிரந்தர ஆதரவுப் பகுதிகள். பாஜக அரசு அப்பகுதிகளைக் குறிவைத்து நிறைவேற்றிய புதிய நலத்திட்டங்கள் பலவும் அங்கு காங்கிரஸ் கட்சிக்கு இருந்த செல்வாக்கைக் குறைத்துவிட்டது.
பெண்களின் ஆதரவு
அசாமில் பெண்களின் ஆதரவு பாஜகவுக்கு இருந்தது. மாநில அரசின் அருணோதயத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ரூ.830 வழங்கப்படுகிறது. இந்த உதவி, ரூ.3,000 ஆக உயர்த்தப்படும் என்பது பாஜகவின் வாக்குறுதிகளில் ஒன்று. தவிர, சுயஉதவிக் குழுக்களில் பெண்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருக்கிறார் சர்மா.
முதல்வர் சர்வானந்த சோனாவல், அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா இருவருக்கும் இடையிலான முரண்பாடுகள் மக்களுக்கும் தெரிந்திருக்கின்றன என்றபோதும் அது எந்த வகையிலும் கட்சியின் வலிமையைப் பாதித்துவிடவில்லை. தங்களுக்குள் யார் முந்துவது என்று மோதியபடியே இருவருமே கட்சியின் வெற்றிக்காகப் போராடினார்கள். இதோ இப்போதும்கூட அடுத்து ஆட்சியமைப்பதைப் பற்றி சர்வானந்த சோனாவல், ஹிமாந்த பிஸ்வா சர்மா இருவரும் தங்களது ஆதரவு எம்எல்ஏக்களுடன் தனித்தனியாகத்தான் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
அசாமில் தங்களது தலைவராக முன்னிறுத்த யாருமில்லை என்பதே காங்கிரஸின் மிகப் பெரிய பலவீனம். கூட்டணியின் தோல்விக்கும் அதுவே முக்கியக் காரணம். ஆற்றல் மிகுந்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஹிமாந்த பிஸ்வா சர்மா பாஜகவில் இணைந்தது அக்கட்சிக்கு அசாமில் நிரந்தர பலவீனத்தை ஏற்படுத்திவிட்டது.
பாஜகவின் வெற்றிக்குக் காரணமான ஒற்றை ஆளுமை ஹிமாந்த பிஸ்வா சர்மா. ஆற்றல் மிகுந்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான இவர் பாஜகவில் இணைந்தது காங்கிரஸுக்கு அசாமில் நிரந்தர பலவீனத்தை ஏற்படுத்திவிட்டது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT