Published : 26 Apr 2021 03:17 AM
Last Updated : 26 Apr 2021 03:17 AM
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே சமூக நீதியை மையமாகக் கொண்டுதான் அரசியல் இயங்கிக்கொண்டிருக்கிறது. சமூக நீதியின் தவிர்க்கவியலாத ஓர் அங்கம் இடஒதுக்கீடு. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற கொள்கை, மாநில அரசுக்கு ஒரு மும்முனைத் தாக்குதல். முதலில், வெவ்வேறுபட்ட சமூகங்களைச் சமாளித்தாக வேண்டும். சமூகங்கள் என்பவை வாக்குகள் என்பதால், அவற்றை வெற்றிகொள்ளும் சாமர்த்தியம் அரசியல் கட்சிகளுக்கு உண்டு. இரண்டாவது, ஒன்றிய அரசின் ஒப்புதல். அரசியல் கூட்டணிகளின் வாயிலாக அதுவும்கூடச் சில நேரங்களில் சாத்தியமாகிறது. மூன்றாவது, உச்ச நீதிமன்றத்தின் ஏற்பு. ஆனால், அதன் கடைக்கண் திறப்பது அவ்வளவு எளிதல்ல.
பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு என்பதே இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று சண்பகம் துரைராஜன் வழக்கில் (1951) தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். ஒரு பெரும் போராட்டத்துக்குப் பிறகுதான் சமுதாய அளவிலும் கல்வியிலும் பின்தங்கிய வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை அனுமதிக்கும் கூறு 15(4) இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதலாவது திருத்தங்களில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டது. அதையடுத்து, இடஒதுக்கீட்டின் அளவு 50%-ஐத் தாண்டக் கூடாது என்பதில் 1962-லிருந்தே உறுதிகாட்டத் தொடங்கியது உச்ச நீதிமன்றம். இந்திரா சஹானி வழக்கில் (1992) பிற்படுத்தப்பட்டோரில் அதிக வருவாய்ப் பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது கூடாது என்றும் உத்தரவிட்டது.
மராத்தா வழக்கு
வன்னியர் சமூகத்தினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்குத் தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்த அடுத்த சில நாட்களில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டுக்காக 2014-ல் மஹாராஷ்டிரத்தில் இயற்றப்பட்ட அவசரச் சட்டம், சட்டம் இரண்டுக்குமே மும்பை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துவிட்டது. 2017-ல் மஹாராஷ்டிர அரசு நீதிபதி கெய்க்வாட் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஒன்றை அமைத்தது. அந்த ஆணையம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், 2018-ல் ‘சமூக அளவிலும் கல்வியிலும் பின்தங்கிய வகுப்பினருக்கான சட்டம்’ இயற்றப்பட்டது. ஆணையம் மராத்தாக்களுக்கு கல்வியில் 12%, வேலைவாய்ப்பில் 13% இடஒதுக்கீடு அளிக்கவே பரிந்துரைத்தது. புதிய சட்டமோ 16% இடஒதுக்கீடு அளிக்கிறது. ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு ஏற்ப இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தை மும்பை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டாலும் இடஒதுக்கீட்டை 12 மற்றும் 13%-க்கு மேலாக அனுமதிக்க மறுத்துவிட்டது. இச்சட்டம் 50% இடஒதுக்கீட்டு வரம்பை மீறுவதாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தற்போது தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது.
அரசமைப்புச் சட்டத்தின் 102-வது திருத்தத்தின்படி இந்தச் சட்டம் அமையவில்லை என்பது மற்றொரு வாதம். 102-வது திருத்தத்தின்படி சேர்க்கப்பட்டுள்ள புதிய கூறான 342(அ), சமுதாய அளவிலும் கல்வியிலும் பின்தங்கிய வகுப்பினர் யார் என்பதைக் குறித்து ஆளுநரின் கருத்து பெற்று குடியரசுத் தலைவரே முடிவுகளை எடுக்கவும், அந்தப் பட்டியலில் நாடாளுமன்றம் சேர்க்கவும் நீக்கவும் அதிகாரம் அளிக்கிறது. அதாவது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு குறித்து முடிவெடுப்பதற்குக் கூறுகள் 15(4) மற்றும் 16(4) ஆகியவற்றின் கீழ் மாநில அரசுகள் அதிகாரம் பெற்றுள்ளனவா என்பது முக்கியக் கேள்வியாக நீதிமன்றத்தின் முன்னால் நிற்கிறது.
ஐம்பது சதவீத வரம்பு
இவ்வழக்கின் இடையே, 50% இடஒதுக்கீடு வரம்பை மறுசீராய்வு செய்வது குறித்து மாநில அரசுகளிடம் கருத்து கேட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். கர்நாடக அரசு, நீதிபதி நாக்மோகன் தாஸ் தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்து, அதன் பரிந்துரையின் அடிப்படையில் 50%-க்கு மேல் இடஒதுக்கீடு அவசியம் என்று அமைச்சரவைக் கூட்டத்திலும் முடிவெடுத்துவிட்டது. இடஒதுக்கீடு தொடர்பான கோரிக்கைகள் அறிவியல்பூர்வமான தரவுகளின்படி இருக்க வேண்டும் என்பதால் இத்தகைய குழு, ஆணையங்கள் அவசியமாகின்றன. தமிழ்நாட்டில் மார்ச் மாதம் முழுவதையும் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரமே ஆக்கிரமித்துக்கொண்டுவிட்டதால் மராத்தா இடஒதுக்கீடு வழக்கோ, கர்நாடக அரசின் முன்னெடுப்போ உரிய கவனத்தைப் பெறவில்லை.
பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு அரசியலையே முதன்மைக் கொள்கையாகக் கொண்டு இயங்கிவரும் தமிழகத்தில், ஒவ்வொரு முதல்வரும் தத்தம் ஆட்சிக் காலத்தில் இதற்காக என்னென்ன முயற்சிகளை எடுத்திருக்கிறார் என்று நினைவுகூர்தல் வழக்கம். சட்டநாதன் குழுவை அமைத்தது மு.கருணாநிதியின் சாதனை என்றும், அம்பாசங்கர் குழுவை அமைத்தது எம்ஜிஆரின் சாமர்த்தியம் என்றும், 69% இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த அதைத் தனிச் சட்டமாக்கி ஒன்பதாம் பட்டியலில் சேர்க்க டெல்லியிலேயே முகாமிட்டு ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற்றது ஜெயலலிதாவின் சாகசம் என்றும் போற்றப்படுகிறது. ஆனால், அத்தனை முயற்சிகளும் தற்போது 102-வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தால் கேள்விக்குரியதாகிவிட்டன. 2007-ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, ஒன்பதாவது அட்டவணையும் சீராய்வுக்கு உட்பட்டதே. கேசவானந்த பாரதி வழக்குக்கு (1973) பிந்தைய ஒன்பதாவது அட்டவணை சேர்க்கைகள் அனைத்தும் தங்களை நியாயப்படுத்திக்கொள்ள வேண்டியது கட்டாயம். சாதிவாரிக் கணக்கெடுப்பு அதற்கான ஒரு வாய்ப்பு.
சாதிவாரிக் கணக்கெடுப்பு
சாதிவாரிக் கணக்கெடுப்பின் அடிப்படையில் அனைத்து சாதிகளுக்கும் உரிய இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது அதிமுக. அதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் ஒன்றும் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருக்கிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பின் அவசியத்தை திமுகவும் ஏற்றுக்கொள்கிறது.
படுகர், குருவிக்காரர், லம்பாடி, வேட்டைக்காரர், நரிக்குறவர் ஆகியோரைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசை வலியுறுத்துவது அதிமுகவின் மற்றொரு வாக்குறுதி. அரசமைப்புச் சட்டத்தின் கூறுகள் 341, 342 ஆகியவற்றின் கீழ் பட்டியலினத்தவர், பழங்குடியினத்தவர் பட்டியலில் ஒரு சமூகத்தைச் சேர்ப்பதற்கான அதிகாரத்தைக் குடியரசுத் தலைவரும் அந்தப் பட்டியலில் திருத்தங்கள் செய்வதற்கான அதிகாரத்தை நாடாளுமன்றமும் மட்டுமே பெற்றுள்ளன. மாநில அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை. விஸ்வகர்மா சமூகத்தினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் சேர்ப்பது குறித்துப் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளது திமுக. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் யார் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் முன்புபோல மாநில அரசுக்கு உண்டா? சாத்தியங்களைக் காட்டிலும் தடைகளே தற்போது முன்னெழுந்து நிற்கின்றன.
102-வது திருத்தம்
திமுக தனது தேர்தல் அறிக்கையில், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் வருமான உச்ச வரம்பை நீக்குவதற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று கூறியிருக்கிறது. பிற்படுத்தப்பட்டோரைச் சமுதாய அளவிலும் கல்வியாலுமே மதிப்பிட வேண்டும் என்றும் அதுவே அரசமைப்புச் சட்டத்தின்படி சரியென்றும் வாதிடுகிறது. இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஒன்றிய அரசால் மீற முடியுமா என்பது முக்கியமானதொரு அரசமைப்புச் சட்டக் கேள்வி. அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடைய எந்தவொரு சட்டத்தையும் சீராய்வு செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அதிகாரம் பெற்றுள்ளது. இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமைகளின் வகைப்பட்டது என்பதால் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் ஒன்றிய அரசையும் கட்டுப்படுத்தும்.
பிற்படுத்தப்பட்டோரின் அளவுக்கேற்ப இடஒதுக்கீட்டின் அளவை மாநிலங்களே தீர்மானித்துக்கொள்ளும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய முயற்சியெடுக்கப்படும்; தேசியப் பட்டியலின ஆணையத்தைப் போல பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கும் அரசமைப்புச் சட்ட அதிகாரங்கள் வழங்கப்பட வலியுறுத்தப்படும் என்றும் வாக்குறுதிகளை அளித்திருக்கிறது திமுக. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் சட்டரீதியான அமைப்பாக மட்டும் செயல்பட்டுவந்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை 102-வது திருத்தம் அரசமைப்புச் சட்ட அமைப்பாக ஏற்கெனவே ஏற்றுக்கொண்டாகிவிட்டது.
அரசமைப்பின்படி உறுதிசெய்யப்பட்டுள்ள இடஒதுக்கீட்டைத் தக்கவைத்துக்கொள்ளவே மாநில அரசுகள் சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கையில், தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டை விரித்தெடுப்பது எல்லாம் ஒரு நீண்ட கால இலக்காக மட்டுமே இருக்க முடியும்.
- செல்வ புவியரசன், puviyarasan.s@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT