Published : 14 Dec 2015 10:03 AM
Last Updated : 14 Dec 2015 10:03 AM
*
கொட்டித் தீர்த்த கன மழை கடலூர் மக்களுக்கு ஒருபுறம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், அதன்மூலம் கிடைத்த சக மனிதர்களின் அன்பும், ஆதரவும் மாவட்ட மக்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்குக் குவிந்துள்ள நிவாரணப் பொருட்களே சாட்சியாக நிற்கின்றன. ஓரிரு வரிகளில்தான் குறிப்பிட்டோம் பாதிப்பின் ஆழத்தை. அந்த ஆழத்தைக் காட்டிலும் அன்பு அதிகம் என நிரூபித்துவிட்டனர் ‘தி இந்து’ வாசகர்கள்.
காலையில் தூங்கி எழுந்ததும், பல் துலக்க பற்பசை, பிரஷ், முகம் துடைக்க துண்டும், குளிக்க சோப்பும், உடுத்த கைலி, புடவை, வேட்டி, ஆயத்த ஆடைகள், உண்ண தயார் நிலையில் இருக்கும் உணவு வகைகள், அரிசி, பருப்பு வகைகள், மசாலா பாக்கெட்டுகள், அதை சமைக்க ஸ்டவ், பாத்திரம் உள்ளிட்ட பொருட்கள், தலை வலி தைலங்கள், மருந்து மாத்திரைகள், நொறுக்குத் தீனிகள், இரவில் படுக்க பாய், போர்த்திக்கொள்ள போர்வை, கொசுக்கடியில் இருந்து தப்பிக்க கொசுவத்திச் சுருள் மற்றும் சிறுவர் சிறுமியருக்கான ஆயத்த ஆடைகள், பிறந்த குழந்தைக்கான ஆயத்த ஆடைகள் என அனைத்தும் நிவாரணப் பொருட்களாக குவிந்துள்ளன.
வாசகர்கள் அனுப்பி வைத்த இத்தனைப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியது தன்னார்வலர் குழு. பொருட்களை பெற்றுக்கொண்ட மக்கள் உள்ளம் நெகிழ்ந்து ‘தி இந்து’வின் சேவையை மனமார வாழ்த்தினார்கள். அவர்களில் சிலர் சொன்ன வார்த்தைகள் நம்மையும் நெகிழ வைத்தன.
“இந்த நேரத்துக்கு அவசியமானத கொடுக்குறீங்களே எப்பேர்பட்ட உதவி இது. எப்படிங்க எங்க வாழ்நாள்ல மறக்க முடியும்” என்ற குரல்கள் போகுமிடமெல்லாம் ஒலித்தபோதுதான் அறிந்தோம் வாசகர்களின் ஆழமான அன்பையும், அவர்களின் உதவும் மனப்பான்மையையும்.
“இதையும் தாண்டி மழை நேரத்துல புள்ளைங்கல வச்சுக்கிட்டு பாலுக்கு அவஸ்தப்பட்ட எங்களுக்கு ஹார்லிக்ஸூம், பால் பவுடரும் கொடுத்ததுதான் பெரிய விஷயம்.” என்ற குரல்கள் தாய்மார்களிடம் இருந்து அதிகமாகவே ஒலித்தது.
“என் வாழ்நாளில் இதுபோல மழைய நான் பாத்ததில்ல, மழை பெஞ்சதுக்கு அப்புறந்தான் தெரிஞ்சது, இவ்வளவு பேரு எங்களுக்கு உதவ இருக்காங்கன்னு, எனக்கு சாதி சனம் யாருமில்ல, நீங்க யாரு எவருன்னு தெரியாது, ஆனா என் மகன் இருந்தாக் கூட இப்படி செய்வானான்னு சந்தேகம். இப்ப நீங்க செஞ்சிருக்கறத நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா’’ என்று நடுங்கிய குரலில் கூறினார் கடலூரை அடுத்த அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த அம்சா.
ஸ்கூல் பேக்கெல்லாம் நனஞ்சுடுச்சி!
“எப்ப மழை பெஞ்சாலும் எங்க ஊருல தண்ணி வரும். ஆனா இந்த வாட்டி வந்த மாதிரி எப்பவும் வரல. ஸ்கூல் பேக்கெல்லாம் நனஞ்சு போச்சு, புத்தகமெல்லாம் ஏடு ஏடா வந்துருச்சி. வேற டிரஸ்ஸூம் இல்ல. ஒரு வாரமா நாங்கெல்லாம் ஸ்கூல்லத்தான் இருந்தோம். மெட்ராஸ்ல இருந்து வந்த பிறகுதான் வேற டிரஸ் கிடைச்சுது. இப்ப நீங்க தான் யூனிபாஃர்ம் கொடுத்தீங்க. சுடிதாரும் கொடுத்திருக்கீங்க. நியூஸ் பேப்பர்காரங்க இத செய்யறது புதுசா இருக்கு. எங்க வீட்ல எங்க அப்பா அம்மாவுக்குப் படிக்கத் தெரியாது. நான் தேங்க்ஸ் சொல்றேன் அங்கிள்” என்றார் பள்ளி மாணவி சுபாஷினி கண்கலங்கியவாறு.
“ரேஷன் கார்டுகூட இல்லப்பா, அதனால எனக்கு எந்தப் பொருளும் தரலீங்க. வூட்ல எதுவுமில்ல. எல்லாம் தண்ணில கிடக்கு, என்ன பண்றதுன்னு தெரியல. நிவாரண முகாம்ல சாப்பாடு மட்டும் போடறாங்க, மாத்து துணி கூட இல்ல. தண்ணில கிடக்கற பொருள ஒவ்வொண்ணா சேத்துக்கிட்டு இருக்கேன். இந்த மாதிரி வேதன ஒரு பக்கம் இருந்தாலும், உங்கள மாதிரி அன்பு செலுத்துறவங்களும் இருங்காங்க. யாரோ எவரோ எங்களுக்கு பொருள் கொடுத்த மவராசன் நல்லாயிருக்கட்டும். எனக்கு இப்ப பசி கூட பெருசா தெரியல. ஏன்னா வீடு தேடி வந்து கொடுத்துட்டுப் போறீங்களே அதுதாங்க எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்றார் சிதம்பரம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி.
பெங்களூர் தமிழ் பெண்கள்
பெங்களூரைச் சேர்ந்த பெங்களூர் மெட்ரோ போலீஸ் தமிழ் பெண்கள் அமைப்பினர் கடந்த 7-ம் தேதி ரூ.7 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மீண்டும் ரு.3 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு, அலுமினியப் பாத்திரம், சமையல் பாத்திரங்கள், மெழுகுவத்தி, தீப்பெட்டி, இளம் பெண்களுக்கான ஆயத்த ஆடைகள் என பல்வேறு வகையான பொருட்களை அவர்களே வாடகை வாகனங்கள் மூலம் அனுப்பி வைத்தனர். அவர்களையும் நன்றியோடு நினைவு கூர்கின்றனர் கடலூர் மக்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT