Published : 27 Dec 2015 11:13 AM
Last Updated : 27 Dec 2015 11:13 AM
*
நவீன காலத்தில் கட்டப்பட்ட அணைகள் எப்படி தூர் மேடிட்டிருக்கின்றன என்பதைப் பார்த்தோம். ஆனால் நம் முன்னோர்கள் கட்டிய அணைகள் தன்னைத் தானே தூர் வாரிக்கொண்ட அதிசயத்தை அறிவீர்களா?
மனிதன் தேவையில்லை, மண்வெட்டி தேவையில்லை, இயந்திரங்கள் தேவை யில்லை. விவசாயிகள் போராடத் தேவை யில்லை, நீதிமன்றம் தலையிடத் தேவை யில்லை. கோடிக்கணக்கான நிதி தேவை யில்லை, ஊழல் இல்லை, முறைகேடும் இல்லை. காரணம், நம் முன்னோர்கள் கண்டுபிடித்த அரியதொழில்நுட்பங்கள். அந்தத் தொழில்நுட்பங்களை இன்று வரை நமது அறிவியலாளர்களால் அறிந் துக்கொள்ள முடியவில்லை அல்லது அறிந்துக்கொள்ள அக்கறையில்லை.
வரலாற்று எழுத்தாளரும் தடப் பள்ளி - அரசன்கோட்டை பாசன சபைத் தலைவருமான சுபி.தளபதி செப்பேடு கள், மைசூர் மன்னர்களின் கல்வெட்டு கள், ஆங்கிலேயரின் ஆவணங்கள் மற்றும் பவானி நீர்நிலைகளைப் பராமரித்த ‘நீர் மணியம்’ சமூகத்தினரின் செவிவழிச் செய்திகள் மூலம் பவானி ஆற்றின் நீர் மேலாண்மை பற்றிய வரலாற்றை தொகுத்துவருகிறார். அவரிடம் பேசியபோது கொடிவேரி அணைக்கட்டுப் பற்றிய அறியப்படாத அரிய தகவல்கள் கிடைத்தன.
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டுப்பாளையம், சிறுமுகை, சத்தி, கோபி, நம்பியூர், அந்தியூர் உள்ளிட்ட பவானி ஆற்றுப் பகுதிகள் மைசூர் மன்னர்கள் மற்றும் விஜயநகர பேரர சின் ஆளுகையில் இருந்தன. மைசூர் மேல்நாடு என்றும் சத்தி உள்ளிட்டவை கீழ்நாடு என்றும் அழைக்கப்பட்டன. அன்றைய மக்கள் சத்தியமங்கலம் காசிபாளையம் அருகே பவானி ஆற்றின் குறுக்கே ஏரா ளமான பாறைகளைக் கொட்டி சிறு நீர்த் தேக்கம்போல உருவாக்கி பாசனத் துக்குப் பயன்படுத்தினர். ஆனால், பவானியில் அடிக்கடி பெருக்கெடுத்த வெள்ளம் இதனை அடித்துச் சென்றது.
இதனால், 1490-ல் உம்மத்தூரை ஆட்சி புரிந்த மன்னர் நஞ்சராய உடை யாரிடம் சென்ற கீழ்நாட்டு மக்கள் ஆற்றில் தடுப்பணை கட்டித் தரும்படி கேட்டனர். அதன்படி கொடிவேலி செடிகள் சூழ்ந்த ஓர் இடத்தில் தடுப் பணை கட்ட முடிவு செய்யப்பட்டது. அங்கே பாறைகள் இல்லாததால் சத்திய மங்கலத்தில் இருந்து 10 கி.மீ தொலை வில் உள்ள கம்பத்ராயன் மலையில் இருந்து பாறைகள் வெட்டிக் கொண்டு வரப்பட்டன. கட்டுமானப் பணிகளுக்காக ஒடிஷா, கர்நாடகம், ஆந்திர மாநிலங் களில் இருந்து கல்வேலைகளில் தேர்ச்சிபெற்ற கல் ஒட்டர் சமூகத்தினர் வரவழைக்கப்பட்டனர்.
சுமார் 3 ஆண்டுகளில் அணை கட்டி முடிக்கப்பட்டது. அணையை திறக்க நாள் குறித்து, மன்னர் வருவதாக ஏற் பாடானது. ஆனால், திடீரென்று வெள்ளம் பெருக்கெடுத்து அணை முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டது. தகவல் மன்னருக்குச் சென்றது. அவர் மீண்டும் அணையைக் கட்ட உத்தரவிட்டார். அதன்படி சுமார் ஒன்றரை ஆண்டுகளில் மீண்டும் அணை கட்டப்பட்டது. மறுபடி யும் அணையைத் திறக்க மன்னர் வர விருந்த நிலையில் மீண்டும் வெள்ளம். இந்த முறை ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தார்கள்.
மிகுந்த மனவேதனை அடைந்த மன்னர், ‘‘பண்ணாரி அம்மனும் நஞ்சுண் டேஷ்வரரும் நான் கீழ்நாட்டுக்குச் செல்வதை தடுக்கிறார்கள். இனிமேல் நானோ, என் குடும்பத்தினரோ கீழ் நாட்டுக்கு வர மாட்டோம்’’ என்று சொல் கிறார். மேலும், மீண்டும் அணையைக் கட்ட உத்தரவிட்டவர், அணை கட்டி முடித்தவுடன் தகவல் தனக்கு வராமல் பார்த்துக்கொள்ளும்படி சொல்கிறார். அதன்படி மூன்றாவது முறையாக அணை கட்டி முடிக்கப்பட்டது. அதுதான் இன்றைக்கும் நிலைத்து நிற்கும் கொடி வேரி அணைக்கட்டு. அதன்படி 151 மீட்டர் நீளம், 30 அடி அகலத்தில் அணை கட்டப்பட்டது. அணையின் வலதுப் பக்கத்தில் தடப்பள்ளி வாய்க்காலும், இடதுப் பக்கத்தில் அரசன்கோட்டை வாய்க்காலும் சுமார் 5 கி.மீ நீளத்துக்கு ஆற்றை ஒட்டியே வெட்டப்பட்டன. பிற்காலங்களில் பாசனம் பெருகப் பெருக தடப்பள்ளி வாய்க்கால் 26 கி.மீ வரையும் அரசன்கோட்டை வாய்க்கால் 42 கி.மீ வரையும் வெட்டப்பட்டன. கொடிவேரி அணையின் சிறப்பே அதன் கால்வாய்கள் மற்றும் மணல் வாரிகள்தான். நுட்பமான நீரியல் தொழில்நுட்பம் கொண்டவை அவை.
ஓர் ஆற்றில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தண்ணீர் எடுக்கக் கூடாது. குறிப் பிட்ட அளவு ஆற்றின் நீர் கடலில் கலக்க வேண்டும். ஆற்றின் நீரியல்போக்கு திசையில் இருந்து 50 சதவீதத்துக்கும் மேலாக எந்தக் காரணம் கொண்டும் திருப்பக்கூடாது என்கிறது உலக ஆறுகள் பாதுகாப்பு விதிமுறைகள் (Helsinki Rules). ஆனால், அன்றைக்கே நம் முன்னோர்கள் இதனை கொடிவேரி அணைக்கட்டுப் பாசனத்தில் நடை முறைப்படுத்தியிருக்கிறார்கள்.
தடப்பள்ளி கால்வாயும் அரசன் கோட்டை கால்வாயும் ஆற்றை ஒட்டியே இருபுறமும் செல்கிறது. இதனால் ஆற்றின் நீரோட்டம் திசை திருப் பப்படுவதில்லை. மேலும், ஆற்றில் இருந்து கால்வாய்களுக்குச் செல்லும் தண்ணீர் வயல்களுக்குச் சென்று அதன் கசிவு நீர் மீண்டும் வாய்க்கால் வழியாக ஆற்றுக்கு வந்துவிடும். அதாவது ஒரு பாசன நிலம் தனக்குத் தேவை யானதுபோக மீதமிருக்கும் தண்ணீரை மீண்டும் ஆற்றுக்கு அனுப்பிவிடுகிறது. இதற்காகப் பாசன நிலங்களின் மட்டத்துக்கு ஏற்ப கால்வாய்கள் அமைக் கப்பட்டன.
மிகச் சிறந்த சிக்கன நீர் மேலாண்மை இது. இங்கிருந்து ஆற்றுக்கு கீழே 60 கி.மீ தொலைவில் இருக்கிறது காலிங் கராயன் அணைக்கட்டு. தடப்பள்ளி - அரசன்கோட்டை கால்வாய்களின் மிகச் சிறந்த நீர் மேலாண்மை காரணமாக இன்றைக்கும் கொடிவேரி அணையில் பாசனத்துக்காக விநாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறந்தால், அந்தத் தண்ணீர் இடைப்பட்ட பகுதிகளின் பாசனத்துக்கு போக மீதம் சுமார் 400 கனஅடி தண்ணீர் காலிங்கராயன் அணைக்குச் சென்றுசேர்கிறது. அதேசமயம் நவீன காலத்தில் வெட்டப்பட்ட கிருஷ்ணா நதி கால்வாயில் திறக்கப்படும் தண்ணீரில் பாதியளவுகூட சென்னைக்கு வருவ தில்லை என்பதையும் இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அடுத்தது மணல்போக்கி தொழில் நுட்பம். அணைக்கட்டின் மையப் பகுதி யில் தண்ணீரின் குவி மையத்தில் கிணறு வடிவில் சுரங்கம் வெட்டப்பட்டிருக்கிறது. இது அணைக்கு வெளியே தண்ணீர் திறக்கப்படும் இடத்துக்கு சுமார் 20 அடி தூரத்துக்கு அப்பால் சென்று முடிகிறது. சுரங்கத்தின் வாய்ப் பகுதி அகலமாகவும் உள்ளேச் செல்ல செல்ல குறுகலாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுரங்கத் துக்குள் கல்லால் ஆன நுட்பமான சல் லடை அமைப்புகள் மற்றும் கல்லால் செதுக்கப்பட்ட பல்வேறு வடிவமைப்பு கள் செய்யப்பட்டிருக்கின்றன. மணல் போக்கிகளைக் கரையில் இருந்தே மூடும் வகையில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட கதவுகள் அமைக்கப்பட்டன. இந்த மணல்போக்கிகள் மணலையும் சேற் றையும் உள்ளே இழுத்து மறுபக்க சுரங்கத்தின் துவாரம் அணைக்கு வெளியே தள்ளிவிடும். இதன் மூலம் அணையில் மணலும் சேறும் தங்கவில்லை. மேலும் இதன் வழியாக தண்ணீரும் வெளியேறாது என்பதும் இதன் தனி சிறப்பு. இதனால் அணையின் நீர் தூய்மையாக இருந்தது. அணை தன்னைதானே தூர் வாரிக்கொள்ளும் தொழில்நுட்பம் இது.
இந்த அரிய தொழில்நுட்பங்களை இன்றைய மக்கள் அறியாமல் போனது தான் வேதனை. இன்று கொடிவேரி அணைக்கட்டு சுற்றுலாத் தளமாக மட்டுமே அறியப்படுகிறது. குடிநோயாளி களில் சொர்க்க பூமியாக மாறியிருக் கிறது அது. கூட்டம் கூட்டமாக வந்து மது அருந்துகிறார்கள். காலி பாட்டில் களை அணைக்குள் எறிகிறார்கள். குடித்துவிட்டு குளிப்பவர்கள் அணைக் குள் இருக்கும் மணல்போக்கிகளுக்குள் சிக்கி இறந்துவிடுகிறார்கள் என்று அவற்றில் பாறைகளையும் மண்ணையும் போட்டு தூர்த்து வைத்திருக்கிறார்கள் அதிகாரிகள். குரங்கின் கையில் கிடைத்த பூமாலையாக நவீன சமூகத் திடம் சிக்கித் தவிக்கின்றன நமது முன்னோர்களின் அணைகள்!
(நீர் அடிக்கும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT