Last Updated : 21 Dec, 2015 08:14 AM

 

Published : 21 Dec 2015 08:14 AM
Last Updated : 21 Dec 2015 08:14 AM

வானத்தின் கீழேதான் வாழ்கிறோம்

மாமழை பெருமழையாகவும் இருக்கும், பெருமை படைத்த மழையாகவும் இருக்கும்

சிதம்பரத்தை வீராணம் ஏரியின் தயவு என்பார்கள். வீராணம் உடைப்பெடுத்தால் சிதம்பரம் நகரைத் தடவிக்கொண்டு கடலுக்குச் சென்றுவிடும். இப்போது நடந்ததைப் பார்த்தால் தென் சென்னையைச் செம்பரம்பாக்கம் எரியின் தயவு என்று சொல்ல வேண்டும். டிசம்பர் ஒன்றாம் நாள் செம்பரம்பாக்கம் ஒன்றிரண்டு இடங்களில் உடைத்துக்கொண்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? நினைக்கவே குலைநடுங்குகிறது. மேலைக் கடல் ஒன்றின் ஆழிப்பேரலையாக வந்து அடித்துச் சென்றிருக்கும்.

அவர் இவர் என்று பார்க்காத வெள்ளம். அச்சம் அறியாதவர்களுக்கும் அச்சத்தைத் தந்தது. பசியைப் பார்க்காதவர்களுக்குப் பசியைக் காட்டியது. எல்லோரை யும் தவித்திருக்க வைத்தது. கேளாமலே தருவதற்கு ஒரு தாராளம் வந்தது. கேட்டுப் பெறுவதற்கு ஒரு எளிமை வந்தது. இதுபோன்ற நேரத்தில் வழக்கமாக கிராமங்களில் காணும் திறமையும், கல்லாமலே கைவந்திருக்கும் துணிவும் ஒளிந்துகொண்டிருந்தவைபோல் சென்னை மக்களிடமிருந்து வெளிப்பட்டன.

புணைகளைக் கட்டி மிதந்திருக்கிறார்கள். கப்பல் கவிழ்ந்து அந்தரமான தீவில் கரையேறியவர்களைப் போல் நீரின்றி, நெருப்பின்றி, உணவின்றி உயிர் வாழப் பழகியிருக்கிறார்கள். உயிருக்கு உயிர் காட்டும் பரிவும், பற்றும் அவர்கள் அறியாமலேயே மக்களை ஆக்கிரமித் தன. இத்தனை பொருளிழப்பிலும், உயிரிழப்பிற்கிடை யிலும் ஒரு ஆத்ம லாபம் வந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

காவிரியின் ஒரு வெள்ள நாள்

1977-ல் புயலோடு வந்த மழையால் காவிரிப் படுகையில் வெள்ளமும் வந்தது. வழக்கமாகவே எல்லாம் வயல் சூழ்ந்த கிராமங்கள். இப்போது வெள்ளமும் சூழ்ந்து கொண்டது. எங்கள் கிராமம் இருப்பது ஆற்றங்கரை. மண்ணெண்ணெய் கிடைக்குமா என்று சாலையின் குறுக்கே விழுந்துகிடந்த மரங்களைத் தாண்டித் தாண்டி 8 கி.மீ. நடந்து நகரத்துக்கு வந்தேன். கிடைக்கவில்லை. திரும்பி வரும்போது முன்னிருட்டு. கரையை விட்டுத் தள்ளி நின்ற உள்கிராமங்களிலிருந்து ஒரே கூச்சலும் கூப்பாடும். கிராமங்களைவிட்டு மக்கள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். பாயோடு சுருட்டிய துணிகள் தலையில். கைக்குழந்தைகள் பெண்களின் இடுப்பில். வளர்ந்த குழந்தைகள் ஆண்களின் தோளில். கையில் பிடித்தபடி மாடுகளும் கன்றுகளும். முதல் நாள் புயல் பிய்த்து வீசிச்சென்ற பச்சை மட்டைகளை முடைய நேர மில்லாமல் அவசரமாகத் தெத்தி, அகப்பட்டதைக்கொண்டு சாலையில் குச்சி கட்டிக்கொண்டிருந்தார்கள். திருச்சிக்கு மேற்கே நீரிடி விழுந்ததாகச் செய்தி. காவிரி கரைபுரண்டு புனித சூசையப்பர் கல்லூரிக்குள் புகுந்திருந்தது. உடைப்பு, வெள்ளம் என்று புரளியும் செய்தியுமாகக் கலந்து வந்தன. அல்லோலகல்லோலத்தை அன்றுதான் பார்த்தேன்.

பூமியின் புதல்வர்கள்தான்

கிராமங்களில் அடுக்கடுக்காகக் குறடுவைத்துக் கட்டி ஓடுவேய்ந்த சாவடிக் கட்டிடங்கள் உண்டு. தரைக்கு மேல் மூன்று, நான்கு அடி உயரத்தில் விசாலமான குறடு. அதற்குமேல் உள்ளடங்கினார்போல் அடுத்த குறடு. அதற்கும் உள்ளடக்கமாக மூன்றாவது குறடு. அதன் மையத்தில் ஓர் அறை. எல்லாவற்றையும் மூடிக்கொண்டு பிரமிடுபோல் ஓட்டுக்கூரை. பண்டம் பாடிகளை இந்த அறைக்குள் போட்டுப் பூட்டி, இரண்டு நபர்களைக் காவலுக்கு வைத்துவிட்டு கிராமத்தைக் காலி செய்துவிட்டார்கள். அங்கே தங்கியிருந்தாலும் கீழ்க்குறடு மட்டத்துக்குத் தண்ணீர் வந்தால் அடுத்த மேல் குறட்டுக்கு ஏறிக்கொள்ளலாம். சென்னை அடுக்ககங்களில் இப்படித்தானே நடந்தது!

மகப்பேறு காலத்தில் மகளிருக்கு வலியெடுத்தால் வழக்கமாகவே கயிற்றுக் கட்டிலில் படுக்கவைத்துத் தூக்கிக்கொண்டு, வரப்பில் நடந்து, மருத்துவ வசதியுள்ள இடம் செல்ல வேண்டிய கிராமங்கள் இருந்தன. வெள்ளம் வந்த காலத்தில் இது எப்படி இருந்திருக்கும் என்று சொல்ல வேண்டாம். பின்னர், ஒரு முறை ஆறு உடைப்பெடுத்து திடீரென வெள்ளம் கொண்டபோது தப்பிக்க மரங்களில்கூட ஏற முடியவில்லை.

மனிதர்களுக்கு முன்பே மரத்தில் ஏறியிருந்த பாம்புகள் அடையாகக் கிளைகளில் அப்பியிருந்தன. தண்ணீரில் ஒரு குச்சி தலை நிமிர்ந்து நின்றாலும் தேளும் பூரானும் எறும்புமாக அதைப் பற்றிக்கொண்டிருக்கும். ஆற்றின் கரை உடைந்த பக்கத்திலிருப்பவர்கள் கைப்பற்றாக மாடுகளைப் பிடித்து நீந்தி இக்கரைக்கு வந்தார்கள். இவை எல்லாவற்றையுமே இடத்தாலும், காலத்தாலும் உண்டான மாற்றங்களுடன் மேலும் தீவிரமாக சென்னை வெள்ளம் கண்ணுக்கு முன்னே காட்டிவிட்டது. கடந்த காலமானாலும் நிகழ்காலமானாலும் நாம் எப்போதுமே இந்தப் பூமியின் மைந்தர்கள்தான்.

மழையை மறைத்த வெள்ளம்

மழையைத்தான் சமுதாயம் எப்படியெல்லாம் சித்தரித்தது. உணர்வுகளின் வண்ணத்தைப் பூசி ‘பேய் மழை’ என்றோம், ‘பிரளயம்’ என்றோம், ‘கொட்டித்தீர்த்தது’ என்றோம், மழையின் ‘கோர தாண்டவம்’ என்றோம். உணர்வுச் சாயத்தைக் கழுவித் துடைத்த அறிவியல் சொற்களால் ‘தொடர் மழை’, ‘தொடர் கன மழை’, ‘அதி கன மழை’ என்றெல்லாம் சொல்லிவிட்டோம். மின்னஞ்சலில் நண்பர் எஸ்.வி.வேணுபாலன், மனிதத்தைக் காட்டிய ‘மாமழை’ என்றார். சிலப்பதிகாரத்தின் மங்கல வாழ்த்து நினைவுக்கு வந்தது. ‘மாமழை’ பெருமழையாகவும் இருக்கும், பெருமை படைத்த மழையாகவும் இருக்கும். மழையின் தன்மை எப்போதுமே இதுதான்.

வெள்ளங்கள் எத்தனை! வறட்சிதான் எத்தனை! ஒருபக்கம் வெள்ளம் வந்த நேரத்திலும் நெல்லை மாவட்டத்தின் பகுதி ஒன்று வறட்சியில் காய்கிறது. மனிதத்தைக் காட்டிய அதே மழையில் மாற்றத்துக்கான மறுசிந்தனையும் முளைத்திருக்கிறது. மாற்றம் குப்பைப் பிரச்சினையிலிருந்து துவங்க வேண்டும் என்று சரியாகத்தான் குரல்கள் ஒலிக்கின்றன. குப்பையின் பின்னே ஒரு குடிமைச் சமூகத்தின் கலாச்சாரம் இருக்கிறது என்பது எவ்வளவு பெரிய உண்மை! மொத்தத்தில் இன்றைய வேகமான நகர வளர்ச்சியையும், பெருநகர விரிவையும்பற்றி ஒரு மறுசிந்தனை உருவாகியிருக்கிறது.

எது துணிவு, எது ஞானம்?

மீண்டும் வெள்ளத்தில் பார்த்த நம் நகரம் நினைவுக்கு வருகிறது. பார்க்கும் இடமெல்லாம் ஈர்க்குக் குத்த இடமில்லாமல் வீடுகள். வெள்ளம் நம்மைச் சூழ்ந்ததா, நமது பெருநகரந்தான் அதைச் சிறைவைத்ததா என்று தெளிவாகத் தெரியவில்லை. மயிலையும், மாம்பலமும், மந்தைவெளியும், அல்லிக்கேணியும் ஆழ்வார்பேட்டையும் இழைந்ததுபோல் எல்லாமே இழைந்து மொத்தப் பெருநகரமாகாமல் அதுவும் அதுவுமாகவே இருந்திருந்தால் இப்படி ஆகாதோ என்று ஒரு சிந்தனை. விரைவிலேயே மூன்றில் இரண்டு நபர்கள் நகர்ப்புறங்களில் இருப்போம் என்ற நிலையில் இந்தச் சிந்தனை வலுக்கிறது.

குச்சிக் கால்களை நீருக்குள் வைத்துக்கொண்டு நிற்கும் அடுக்ககங்களுக்கு எப்படிப்பட்ட தொழில்நுட்பம் வேண்டியிருந்திருக்கும்! ஆனால், வல்லுநர்கள் மேடு பள்ளம் கணிக்கவில்லை. நீரோடும் வாட்டம் எது, வெள்ளங்கொள்ளுமா, தண்ணீர் தேங்குமா என்றும் கணிக்கவில்லை. ஒருதலையாகவே வளர்ந்திருக்கிறது தொழில்நுட்பம். பூமியையும், வானத்தையும் தெரிந்துகொள்ளாமல் இருப்பதற்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து அவற்றுக்கு அந்நியமானோம்.

ஒரு பழமொழி கேட்கிறது, “வானத்துக்குக் கீழே இருப்பவன் மழைக்குப் பயப்படலாமா?”

துணிவு இருக்கிறது. திறனும் இருக்கிறது. பயம் இல்லை. துயரேதும் இல்லை. ஆனால், துணிவின் அடிப்படை எதுவாக இருக்க வேண்டும்? அப்படியும் இப்படியுமாக அசைந்து, நிலைமையை அனுசரித்ததுபோல் நகர்ந்துகொண்டே, நகர்த்திக்கொண்டே இருக்கலாம். இந்தத் திறமைதான் துணிவின் அடிப்படையா? பழமொழி இந்தத் துணிவைத்தான் சொல்கிறதா?

வானத்தின் கீழேதான் வாழ்கிறோம் என்ற ஒரு ஞானம் உண்டு. ஒரு அங்கீகாரத்தில், பூமி என்ற கோளில் மனிதனுக்குள்ள நிலையை நாமாகவே ஏற்பதில் பிறக்கும் ஞானம். அது வாழ்க்கையை மாற்றும். மனிதனின் கலாச்சாரத்தை மாற்றும். அதுவே, அவனது மதமாகவும் விரியும். வானத்தின் கீழே வாழ்கிறோம் என்ற ஞானம்தானே நமது துணிவின் அடிப்படையாக இருக்க வேண்டும்!

தங்க. ஜெயராமன், ஆங்கிலப் பேராசிரியர், எழுத்தாளர், ஒமர் கய்யாமின் ‘ருபாயியத்’ உள்ளிட்ட நூல்களின் மொழிபெயர்ப்பாளர், தொடர்புக்கு:profjayaraman@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x