Published : 15 Apr 2021 03:09 AM
Last Updated : 15 Apr 2021 03:09 AM
ஆளப்படும் பரப்பும் அதில் வசிக்கும் குடிமக்களும் எந்தவொரு அரசுக்கும் இன்றியமையாத கூறுகள். இந்தியாவில் மாநில அரசுகளைப் பொறுத்தவரையில் தமது ஆட்சிப் பரப்பை மட்டுமல்ல, அங்கு வசிக்கும் மக்களின் குடியுரிமையைக்கூட தீர்மானிக்கும் அதிகாரம் அவற்றுக்கு இல்லை. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை அனைத்துக் குடிமக்களுக்குமான உரிமை சாசனமாக விளங்குகிறது என்பது உண்மைதான். ஆனால், அதை அடுத்து வரும் முதல் இரண்டு அத்தியாயங்களும் முறையே ஆட்சிப் பரப்பு, குடியுரிமை ஆகியவை குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தையும் ஒன்றிய அரசிடமே ஒப்படைத்திருக்கின்றன.
2019-ல் தேசிய அளவில் பெரும் விவாதங்களை எழுப்பிய இரண்டு பிரச்சினைகள், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஒன்றியப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதும், குடியுரிமைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தமும். ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட தனிச்சிறப்பான அந்தஸ்து தற்போது முடிவுக்கு வந்துவிட்டது. காஷ்மீர் மன்னருடன் செய்யப்பட்டிருந்த உடன்பாடுகளை மீறலாமா என்ற கேள்விகள் எல்லாம் ஒருபுறமிருக்க, இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி ஒன்றிய அரசு எந்தவொரு மாநிலத்தின் எல்லையையும் திருத்தியமைப்பதற்கு முழு உரிமை பெற்றிருக்கிறது என்பதுதான் உண்மை நிலை.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 3-ன்படி ஒன்றிய அரசு ஒரு மாநிலத்தைப் பிரித்துப் பல மாநிலங்களாக்கலாம். பல மாநிலங்களை இணைத்து ஒன்றாக்கலாம். பல மாநிலங்களிலிருந்து குறிப்பிட்ட பகுதிகளைப் பிரித்து தனி மாநிலமாக்கலாம். மாநிலத்தின் பரப்பை விரிவாக்கலாம், குறைக்கலாம். பெயரையும் மாற்றலாம். மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களின் மறு எல்லைகள் மறுசீரமைப்புக்கு ஆளானபோது, அன்றைய சென்னை மாநிலத்தின் எல்லைகளும் இப்படி மாறுதலுக்கு ஆளாகியிருக்கின்றன. மாநிலத்தின் பெயரை மாற்றும் அதிகாரமும் ஒன்றிய அரசுக்கே இருக்கிறது. தற்போது தமிழ்நாடு என்று சூட்டப்பட்டிருக்கும் பெயரும் ஒன்றிய அரசின் ஒப்புதலுக்குப் பிறகே நடைமுறைக்கு வந்திருக்கிறது.
அப்படியென்றால், ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு அவரால் ஆளப்படுகிற பரப்பின் மீது முழு உரிமையில்லையா என்றால் ஆமாம், அப்படித்தான். ஆனால், ஒன்றிய அரசு இவ்விஷயத்தில் முன்னறிவிப்பின்றி முடிவெடுத்துவிடாதவாறு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய முன்முடிவானது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது ஒன்று. தொடர்புடைய மாநிலத்தின் சட்டமன்றத்தின் கருத்தை அறிவதற்காக அந்த முன்முடிவு அனுப்பப்பட வேண்டும் என்பது மற்றொன்று. மாநில அரசின் கருத்தை ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயமில்லை. ஆனால், அந்தக் கருத்தைத் தெரிவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள கால அளவுக்குள் ஒன்றிய அரசு இவ்விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
சென்னை மாநிலத்திலிருந்து ஆந்திரப் பிரதேசம் பிரிந்து சென்றபோது அன்றைய முதல்வர் ராஜாஜி அதற்குத் தடையாக இருக்கவில்லை. சட்டமன்றத்தில் ஒருமனதாகத்தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், சென்னையில் தற்காலிகமாகத் தலைநகரம் வேண்டும் என்ற கோரிக்கைக்கு அவர் கடைசிவரையில் செவிசாய்க்கவில்லை. வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காவிட்டாலும், சென்னையைத் தக்கவைப்பதற்காகத் தொடர்ந்து கிளர்ச்சிகளை நடத்துவதற்கு ம.பொ.சிவஞானத்தை ஊக்குவித்தார். பெரியாரையும் பேசவைத்தார். அதற்கு முன்னதாக, பொட்டி ஸ்ரீராமுலு மரணத்தால் ஆந்திரப் பகுதியில் கலவரங்கள் எழுந்த நிலையில் மாநில முதல்வர் ராஜாஜியிடம் கருத்து கேட்காமலேயே தனி ஆந்திரம் அமைக்கப்படும் என்று பிரதமர் நேரு அறிக்கை விட்டார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால், சென்னை இரண்டு மாநிலங்களுக்கும் பொதுத் தலைநகராக இருக்கும் என்ற யோசனைகள் முன்வைக்கப்பட்டபோது, வேறு முதலமைச்சரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள் என்று நேருவிடம் தான் சொன்னதைப் பத்திரிகையாளர்களிடமும் பகிர்ந்துகொண்டார் ராஜாஜி. ஒரு மாநில முதல்வர் அரசமைப்புச் சட்டத்துக்குக் கட்டுப்பட வேண்டும். தேசியக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தால் அக்கட்சியின் தலைமைக்குக் கட்டுப்பட வேண்டும். அதற்கிடையில், தனது மாநிலத்தின் நலனிலும் குறியாக இருக்க வேண்டும் என்பதற்கு மாநில எல்லைகள் மறுசீரமைப்பு விஷயத்தில் ராஜாஜி ஒரு முன்னுதாரணம்தான். இத்தனைக்கும் மொழிவாரி மாநிலங்கள் என்ற கொள்கைக்கு நேர் எதிரானவராக அவர் இருந்தார். வடக்கெல்லை மீட்புப் போராட்டத்தின்போதும்கூட குறிப்பிட்ட காலம் வரையில், கைது நடவடிக்கைகளை அவரது அரசு தவிர்த்தே வந்தது. மாநில அரசின் இந்த ஈடுபாடும் அக்கறையும் பசல் அலி கமிஷன் அறிக்கையின்படி தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் கேரளத்துடன் இணைக்கப்பட்டபோது வெளிப்படவில்லை என்ற விமர்சனம் காமராஜரின் மீது கூறப்பட்டுவருகிறது. இதே வகையிலான மற்றொரு குற்றச்சாட்டு கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி மௌனித்திருந்தார் என்பது.
1974-ல் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கச்சத்தீவு ஒப்பந்தத்தின்படி, அத்தீவு இலங்கையின் வசம் ஒப்படைக்கப்பட்டது. அடுத்த மாதமே அந்த ஒப்பந்தம் குறித்த தமிழகத்தின் வருத்தத்தைத் தெரிவிக்கும் வகையில் சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றினார் அன்றைய முதல்வர் கருணாநிதி. ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கச்சத்தீவு விஷயத்தில் தமிழக அரசின் முடிவை ஒன்றிய அரசு கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கூடி முடிவெடுத்து அதைக் கடிதமாக அனுப்பியிருந்த நிலையிலும், ஒன்றிய அரசு அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. நாடாளுமன்றத்திலும்கூட திமுக தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இவ்விஷயத்தில், எல்லா வகையான எதிர்ப்புகளும் மாநில உணர்வைப் பிரதிபலிக்க முடியுமே தவிர, ஒன்றிய அரசை அவற்றால் கட்டுப்படுத்த முடியாது என்பதுதான் உண்மை நிலை. குடியுரிமையின் கதையும் அதுவேதான்.
குடியுரிமைச் சட்டத்தில் ஒன்றிய அரசு கடந்த 2019-ல் கொண்டுவந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சில மாநிலங்களின் முதல்வர்கள் வெளிப்படையாகவே தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். குடியுரிமைச் சட்டத் திருத்தம் இந்தியாவின் மதச்சார்பின்மையின் மீது நடத்தப்பட்ட நேரடியான தாக்குதல் என்றார் பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றிவிட்டீர்கள், ஆனால், மதத்தின் அடிப்படையில் நாட்டைப் பிரிப்பதற்கு நான் ஒருபோதும் விட மாட்டேன் என்றார் மம்தா. அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான இந்த சட்டத் திருத்தத்துக்கு இங்கே இடமில்லை என்றார் பினராயி.
அப்போதைய மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ஆகியோரிடமிருந்தும் இத்தகைய எதிர்ப்புகள் எழுந்தன. ஆனாலும், உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளிடமிருந்து வந்த பதில், ஒன்றிய அரசின் பட்டியலில் உள்ள விஷயத்தின் மீது இயற்றப்பட்ட சட்டங்களை மறுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு அறவே இல்லை என்பதுதான். ஒன்றியப் பட்டியலின் 17-வது இடுகையின்படி குடியுரிமை, குடிமையாக்கம், அயலவர்கள் குறித்த விஷயங்கள் குறித்து முடிவெடுக்கவும் சட்டமியற்றவும் முழு அதிகாரம் ஒன்றிய அரசிடமே உள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும்கூட குடியுரிமைச் சட்டத் திருத்தம் விவாதிக்கப்பட்டது. திமுக தனது தேர்தல் அறிக்கையில், இந்தியக் குடியுரிமைச் சட்டத் திருத்தம் 2019-ல் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று நாடுகளுடன் நான்காவது நாடாக இலங்கையையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என்று முதலில் அறிவித்திருத்திருந்தது. இதன் வழியாக, இந்தியாவில் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்வதே அதன் நோக்கம். சட்டரீதியாகத் தற்போதுள்ள நிலையில் இதுவே நமக்குள்ள வாய்ப்பு. ஆனால், குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை திமுக ஏற்றுக்கொள்கிறதா என்ற கேள்வி எழுந்தவுடன், இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-ஐ திரும்பப் பெற ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டது.
திமுக தொடக்கத்திலிருந்தே குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்துவருகிறது, கையெழுத்து இயக்கம் நடத்திவருகிறது என்பதெல்லாம் உண்மைதான். மு.க.ஸ்டாலின் சொல்வது போல அக்கட்சி ஆட்சிக்கு வரும் வாய்ப்பிருந்தால், அச்சட்டத் திருத்தத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவும்கூடச் செய்யலாம். ஆனால், அந்தத் தீர்மானம் மாநில அரசின் கருத்தை ஒன்றிய அரசுக்குத் தெரிவிப்பதாக இருக்குமே தவிர, ஒன்றிய அரசைக் கட்டுப்படுத்த முடியாது. அதிமுக உட்பட, மாநிலக் கட்சிகள் இந்த வரம்பெல்லையை அறிந்துகொண்டேதான் தங்களது எதிர்ப்புக் குரலை வலுவாக ஒலிக்கின்றன. அரசமைப்புச் சட்ட வகைமுறைகளைத் தாண்டியும் மக்களின் குரலுக்குக் கூடுதல் மதிப்புண்டு என்ற நம்பிக்கை மட்டுமே அதற்குக் காரணம். குடியுரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் நாளை திரும்பப்பெறவும் கூடும். ஆனால், அந்த முடிவு ஒன்றிய அரசின் கைகளில்தான் இருக்கிறது.
(தொடரும்)
- செல்வ புவியரசன்,
தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT