Published : 14 Apr 2021 03:13 AM
Last Updated : 14 Apr 2021 03:13 AM
அதிகாரங்களைப் பற்றி ஒன்றிய அரசு பேசுகிறபோது, மாநில அரசு அதிகாரங்களை அல்ல, உரிமைகளைப் பற்றியே பேச வேண்டியிருக்கிறது. இந்தியக் கூட்டாட்சி அமைப்பின் சிறப்பியல்புகளைப் படிக்கும்போதெல்லாம் ‘ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா(து) அலியுமல்லன்’ என்ற நம்மாழ்வார் பாசுரம்தான் நினைவுக்கு வருகிறது. இந்திய அரசமைப்பு கூட்டாட்சி அமைப்புதான். ஆனால், முழுமையான கூட்டாட்சி அமைப்பு அல்ல. அது பகுதியளவிலான கூட்டாட்சி என்றே வர்ணிக்கப்படுகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சியைக் குறிக்கும் ‘ஃபெடரல்’ என்ற வார்த்தை இடம்பெறவே இல்லை. எனினும், முதலாவது கூறிலேயே மாநிலங்களின் ஒன்றியம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதே என்ற சமாதானங்களும் உண்டு.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஒன்றிய-மாநில அரசுகளின் உறவு ஒரு முக்கிய விவாதப் பொருளாக அமைந்தது. எஜமானர்-அடிமைகள் என்று எதிர்க்கட்சி வெளியிட்ட விளம்பரப் படங்கள் கவனத்தை ஈர்த்தன. மாநில அரசின் அனைத்துத் திட்டங்களுக்கும் ஒன்றிய அரசின் உதவி நிச்சயம் வேண்டும் என்றும் தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றால் ஒன்றிய - மாநில அரசுகள் இணக்கமாக இருக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் பழனிசாமி விளக்கமளித்தார். இந்திய அரசமைப்பில் இது நீண்ட காலமாகத் தொடர்ந்துவரும் ஒரு தவிர்க்கவியலாத விவாதம். எனவே, இந்த விமர்சனங்களிலும் விளக்கங்களிலும் ஆச்சரியம் கொள்வதற்கு ஒன்றுமில்லை.
சட்டமன்றம் நாடாளுமன்றமல்ல
இந்தியாவின் நாடாளுமன்ற அவைகள் மட்டுமல்ல, மாநிலச் சட்டமன்றங்களும்கூட பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறைகளைப் பின்பற்றித்தான் இயங்குகின்றன. அவைக் கூட்டங்களை நடத்துவதற்கான விதிமுறைகள் ஒன்றாக இருந்தாலும் இரண்டுக்கும் அதிகாரங்கள் ஒன்றாக இல்லை. ஒன்றிய அமைச்சரவையின் முடிவுக்குக் குடியரசுத் தலைவர் முழுமையாகக் கட்டுப்பட்டவராக இருந்தாக வேண்டும். ஒன்றிய அளவில் அமைச்சரவைக் குழு அதிகாரம் மிகுந்ததாக இருக்கிறது என்றால், மாநில அளவில் அத்தகைய அதிகாரம் மாநில அமைச்சரவைக்கும் அளிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லவா? அப்படியில்லை. ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இருக்கிற ஆளுநர் கையில் அளவுகடந்த அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையின் கருத்துப்படி அவர் நடக்கிறவரைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதற்கு மாறாகவோ எதிராகவோ ஆளுநர் நடந்தார் என்றால், ஒரு மாநில அரசு எப்படி நடந்துகொள்கிறது என்பதில்தான் அந்த மாநிலத்தின் தன்னாட்சி உரிமை அடங்கியிருக்கிறது. மாநில அமைச்சரவை ஆளுநருடன் அனுசரித்தும் போகலாம், ஒன்றிய அரசுடன் மல்லுக்கட்டவும் செய்யலாம். இதையெல்லாம், மாநில சட்டமன்றத்தின் பெரும்பான்மையைக் காட்டிலும் ஆளுங்கட்சியை வழிநடத்தும் தலைவரின் ஆளுமைதான் தீர்மானிக்கிறது.
தன்னாட்சி உரிமையைப் பேசியே அரசியல் நடத்தும் மாநிலம் தமிழகம். அறுபதுகளின் இறுதியிலேயே தேசியக் கட்சியின் பிடியிலிருந்து மீறி மாநிலக் கட்சிகளின் ஆட்சியில் மாறி மாறி ஆளப்படும் மாநிலமும்கூட. எனவே, மாநிலக் கட்சிகளின் தலைவர்கள்தான் தமிழக அரசியலின் முகமும்கூட. அதே நேரத்தில், தேசியக் கட்சிகளுடன் இணங்கியும் பிணங்கியும்தான் எல்லாக் காலத்திலுமே அவர்கள் அரசியல் நடத்திவந்திருக்கிறார்கள். ஒன்றிய அரசை முற்றிலும் எதிர்த்து நிற்பதும் மாநில நலனுக்கு நல்லதல்ல, அப்படியே முழுமையாக ஆதரித்து நிற்பதும் நல்லதல்ல. காலமும் சூழலும் மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அதிகாரங்களும்கூட இதையெல்லாம் தீர்மானிக்கின்றன.
ஒன்றிய அரசின் பெருவலிமை
மாநிலப் பட்டியலில் இருக்கிற எல்லா விஷயங்களிலும் மாநில அரசுகள் அதிகாரம் பெற்றிருக்கின்றன, பொதுப் பட்டியலில் உள்ள இடுகைகளில் மட்டும் ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு உடன்பட்டு முடிவெடுக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், ஏழாவது பட்டியலில் இடம்பெற்றுள்ள எந்தவொரு விஷயத்தையும் அது மாநிலப் பட்டியலில் இருந்தாலுமேகூட ஒன்றிய அரசு நினைத்தால் பெரும்பான்மை மாநிலங்களின் ஆதரவோடு கையிலெடுக்க முடியும். அப்படியென்றால், இந்திய அரசமைப்பில் ஒன்றிய அரசே முழுமையான அதிகாரத்தைப் பெற்றிருக்கிறது. இதற்கிடையில்தான், மாநில அரசுகளைத் தலைமையேற்று நடத்தும் பிராந்தியக் கட்சிகளின் தலைவர்கள் தங்களுக்கான முத்திரைகளைப் பதித்துக்கொண்டிருக்கிறார்கள்.
சுதந்திர இந்தியாவின் புதிய அரசமைப்பின்படி 1952-ல் அன்றைய ஒருங்கிணைந்த சென்னை மாநிலத்துக்கு நடந்த முதல் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்த ராஜாஜி முதல் தற்போதைய பழனிசாமி வரைக்கும் இந்தச் சவால்களைச் சந்தித்தபடியேதான் ஆட்சி நடத்தியிருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தில் வெற்றிவாகை சூடிய காட்சிகளும் உண்டு. தடுக்கி விழுந்த காட்சிகளும் உண்டு. இந்த இடைப்பட்ட காலத்தில், அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட சில திருத்தங்களால் மாநிலங்களின் உரிமைகள் ஒன்றிய அரசின் கைகளுக்குச் சென்றதும் உண்டு. உச்ச நீதிமன்றத்தின் சில வழிகாட்டும் தீர்ப்புகளால், மாநிலங்களின் உரிமைகள் உறுதிசெய்யப்பட்டதும் உண்டு. ஆட்சிகள் கலைக்கப்பட்டதும் உண்டு. மாநிலங்களின் உரிமை குறித்து பேசும்போது தமிழ்நாட்டின் வரலாற்றை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் வரலாற்றையும் சேர்த்துத்தான் பேச வேண்டியிருக்கிறது. ஏனெனில், தமிழக வரலாற்றை மட்டுமல்ல இந்திய வரலாற்றையும் அரசமைப்புச் சட்டம்தான் இயக்கிக்கொண்டிருக்கிறது.
அரசமைப்புச் சட்டத்தின் வாயிலாக ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் என்னென்ன, அவருக்கு மறுக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களும் என்னென்ன, சட்டமியற்றும் அவைகளிலும் நிர்வாக மற்றும் நீதித் துறைகளிலும் அவரால் செலுத்தப்படக்கூடிய செல்வாக்கு என்ன என்பதையெல்லாம் அரசமைப்புச் சட்டத்தின் பக்கங்களிலிருந்தும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளிலிருந்தும் திரும்பிப் பார்க்கலாம். அதுபோல, அரசமைப்புச் சட்டம் அளித்த வாய்ப்புகளைத் தாண்டியும் தங்களது அரசியல் நட்புறவாலும் வியூகங்களாலும் ஒன்றிய அரசின் கூட்டணி ஆட்சியில் பங்கேற்றதாலும் மாநில முதல்வர்கள் நிகழ்த்திய சாதனைகளைச் சரித்திரத்தின் பக்கங்களிலிருந்து புரிந்துகொள்ளலாம். ஒன்றுக்கொன்று இணையாகத் தொடரும் இந்தப் பயணத்தில், அரசமைப்பு அளித்த அதிகாரங்களைப் போலவே ஆளுமை மிக்க தலைவர்களின் அனுபவங்களும் நமக்கு நிறையவே வழிகாட்டக்கூடும்.
(தொடரும்)
- செல்வ புவியரசன்,
தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT