Published : 02 Dec 2015 11:10 AM
Last Updated : 02 Dec 2015 11:10 AM
*
குழந்தைகளை நேசிப்பதுபோல ஏரி, குளங்களை நேசித்தவர்கள் நம் முன்னோர்கள். தாங்கள் வெட்டிய ஏரிகளுக்கும், குளங்களுக்கும் பிடித்தமான பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தனர். மலர்கள் சூழ்ந்த குளங்களை பூங்குளம், அல்லிக்குளம், ஆம்பக்குளம், குறிஞ்சிக்குளம் என்றும், மரங்கள் சூழ்ந்த குளங்களை மாங்குளம், இலுப்பைக் குளம், பலாக்குளம், விளாங்குளம், வாகைக்குளம் என்றும் அழைத்தனர். தெய்வத்தின் பெயர்களிலும் குளங்கள் அழைக்கப்பட்டன.
நீர்நிலைகள் மீது அக்கறையோடு மிகுந்த நேசமும் வைத்திருந்ததால்தான், அதை வெறும் குளம், குட்டை என்று அழைக்காமல் பாசத்தோடு பெயர் வைத்து அழைத்தனர். ஆனால், நவீன தொழில்நுட்பங்களில் முன்னேறிவிட்ட நாம், நமக்கு நினைவு தெரிந்து கடந்த 50 ஆண்டுகளில் ஒற்றைக் குளத்தை யாவது உருவாக்கி பெயர் சூட்டி யிருப்போமா?
ஆற்றின் கால்வாய்கள், வெள்ள நீர் வடிகால்களை எப்படி எல்லாம் சீரழித்தோம் என்று நேற்று பார்த்தோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட அந்த வடிகால் கள். அரிகேசரி ஆறு, வல்லபப் பேராறு, நாட்டாறு, பராக்கிரமப் பேராறு இவை எல்லாம் வைகை ஆற்றுக் கல்வெட்டுகளில் கண்டெடுக்கப்பட்ட பெயர்கள். ஆனால், இவை ஆறுகளின் பெயர்கள் அல்ல. வைகையில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் கால்வாய்களின் பெயர்கள். கால்வாய்களே ஆறுபோல பெரிய அளவில் வெட்டப்பட்டன என்பதை கல்வெட்டுக் குறிப்புகள் உணர்த்து கின்றன.
இவ்வாறாக மொத்தம் 3 வகை கால்வாய்கள் அமைக்கப்பட்டன. முதலாவது, வரத்துக் கால்வாய் (Supply Channel). இவற்றில் வரத்துக் கால்வாய்களின் தொழில்நுட்பம் அபாரமானது. ஆறுகளில் குறிப்பிட்ட வளைவுகளில் மட்டுமே வரத்துக் கால்வாய்களின் தலைப்பகுதி வெட்டப் பட்டன. அப்படி வெட்டும்போது ஆற்றில் இருந்து தண்ணீர் மட்டுமே கால்வாய்க்குள் செல்லும். மணல் புகாமல் தடுக்கப்பட்டது. தவிர, ஆற்றில் நீர்வரத்து குறையும் காலத்தில்கூட தடையின்றி கால்வாய்க்குள் தண்ணீர் சென்றது. இதற்கு இன்றும் உதாரணமாக இருக்கிறது வைகை ஆற்றில் இருந்து வட ஏரிக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் கால்வாய்.
இரண்டாவது, மறுகால் அல்லது வெள்ள வடிகால் (Surplus Channel). வெள்ளக் காலங்களில் ஏரிகளின் உபரி நீரை கலிங்கல் வழியாக வெளியேற்றும் கால்வாய்தான் மறுகால்வாய். இவற்றின் கொள்ளளவும் ஏரியின் நீர்வரத்துக் கால்வாயின் கொள்ளளவும் சமமாக இருக்கும். நீர்வரத்தும் நீர் வெளியேற்றமும் சரிசமமாக அமைந்து வெள்ளப் பெருக்கை தடுக்க உதவிய தொழில்நுட்பம் இது.
மூன்றாவது, பாசனக் கால் அல்லது கழனிக்கால் (Distribution Channel). ஏரி மடையின் வெளிப்புறத்தில் அமைக்கப் பட்ட இந்த கால்வாய்கள் மூலம் பாசன நிலங்களுக்கு தண்ணீர் பிரித்து விநியோகிக்கப்பட்டது. நிலங்களின் அளவுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட இந்த கால்வாய்கள் கண்ணாறு, வதி, பிலாறு என்றெல்லாம் அழைக்கப்பட்டன. இவற்றின் தொழில்நுட்பத்தைக் கண்டு இன்றைய நவீன நீரியல் நிபுணர்களே வியக்கின்றனர்.
நெல் பயிரிடுவதற்கு மிருதுவான நிலம் தேவை. அதற்காக நிலத்தை மிருதுவாக்கவும், சமப்படுத்தவும் அதிக அளவில் நீர் தேக்கப்பட்டது. சில நாட்களுக்குப்பிறகு, அதை உழுது நீரை வடித்து விட்டு, நெற்பயிரை நடுவார்கள். இப்படி வடிக்கும்போது கிடைக்கும் உபரி நீரையும், கூடுதலாக கிடைக்கும் மழைநீரையும் வடிகால் வாய்க்கால் களில் சேகரித்து, அடுத்தடுத்த வயல் களுக்கு விடுவார்கள். இது மிகச் சிறந்த நீர் சிக்கன மேலாண்மை. இதற்கேற்ற மிக நுட்பமான நில மட்ட அளவுகளில் பாசனக் கால்வாய்கள் அமைக்கப்பட்டன.
இதற்கு உதாரணமாக திகழ்ந்தது சென்னானேரி. இது திருநெல்வேலி மாவட்டத்தில் பணகுடி - கள்ளப்பனை கிராமங்களுக்கு இடையே இருக்கிறது. ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை பொறியியல் அறிஞர்கள் ச.மா.ரத்னவேல், கள்ளபிரான் ஆகியோர் இந்த ஏரியை நேரில் ஆய்வு செய்து, இதன் தொழில்நுட்பம் பற்றி ஏராளமான குறிப்புகளை எழுதியுள்ளனர்.
ஏரியின் பாசனப் பரப்புகள் மேற்கில் இருந்து கிழக்காக மிதமான சரிவுடனும், தெற்கில் இருந்து வடக்காக கூடுதல் சரிவுடனும் உள்ளன. கால்வாய்கள் வழியாக பாசன நிலங்களுக்கு தண்ணீர் விடப்பட்டபோது தண்ணீர் வேகமாக பாய்ந்து, வளமான மேல் பகுதி வண்டலை அரித்துச் செல்லாதபடி விடப் பட்டன. தெற்குப் பகுதியின் பிரதான கால்வாயில் இருந்து தண்ணீர் வயலுக்குச் செல்கிறது. வடக்குப் பகுதி யின் வாய்க்கால் உபரிநீரை வடிக்கிறது. இன்றைய நவீன பொறியாளர்களின் கற்பனைக்கு எட்டாத தொழில்நுட்பம் இது.
அமெரிக்க பொறியியல் வல்லுநர் கில்பர்ட் லாவேன் (Gilbert Lavine) தனது ‘Irrigation and Agricultural Development of Asia’ நூலில் மேற் கண்ட தொழில்நுட்பத்தை எப்படி சிலாகிக்கிறார் தெரியுமா?
‘‘மிதமான சாய்வு தளமாக உள்ள நிலப்பரப்பில் மேல் வரிசைப் பயிர்களுக்கு குறிப்பிட்ட அளவுக்கு முதலில் நீர் பாய்ச்சப்படுகிறது. பிறகு சுழற்சி முறையில், அடுத்த வரிசை களில் அமைந்த பாத்திகளுக்கு படிப் படியாக நீர் அளவைக் குறைத்து பாய்ச்சப்படுகிறது. மேல் பாத்திகளுக்கு ஊற்றப்படும் நீர், கீழ் பாத்திகளுக்கும் வழிந்தோ, கசிந்தோ வரும் என்பதால் நீர் அளவு குறைக்கப்படுகிறது. இதனால் எல்லா அடுக்குகளிலும் உள்ள பயிர்களுக்கும் போதுமான தண்ணீர் கிடைக்கிறது. எல்லா பாத்திகளுக்கும் சம அளவில் தண்ணீர் பாய்ச்சாமல் தண்ணீரை சிக்கனமாகவும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்த முடிகிறது. மிகவும் சிக்கனமான, பயனுள்ள இந்த நீர் மேலாண்மை வளரும் நாடுகளில்கூட புழக்கத்தில் இல்லை!’’ என்கிறார் அவர்.
ஒரு அமெரிக்கப் பொறியாளருக்கு தெரிந்த அருமை நமக்குத் தெரியாமல் போனதுதான் வேதனை.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த சென்னானேரியை பார்க்க பணகுடி கிராமத்துக்கு சென்றோம். ஏரியின் பெயரைச் சொல்லிக் கேட்டால் ஊரில் யாருக்கும் தெரியவில்லை. அப்படி ஒரு ஏரியே இல்லை என்றார்கள்.
கடைசியில், ஜெபக்குமார் என்ற பள்ளித் தலைமை ஆசிரியர், ‘‘சென்னா னேரி என்ற பெயரை எல்லாம் மக்கள் மறந்து பல ஆண்டுகள் ஆகிறது. பராமரிப்பும் இல்லாமல் பாழாகிக் கிடக்கிறது ஏரி’’ என்றார். நம்மை ஏரிக்கு அழைத்துச் சென்று காட்டினார்.
கடல்போல பரந்திருந்தது ஏரி. இப்போது பெய்த மழையில் ஏரி நிரம்பி இருந்தாலும் உள்ளே சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்திருந்தன.
வெளிநாட்டு பொறியாளர்களையும் வியக்கவைத்த தொழில்நுட்பக் கால்வாய்கள் மண்மூடிப் போய் அனாதையாய்க் கிடந்தன. மதகுகளும் பராமரிப்பின்றிக் கிடந்தன.
‘‘ஏரி முழுக்க தண்ணியிருந்தும், என்ன பிரயோசனம்.. பெருசா பாசனம் ஒண்ணும் இல்லீங்க’’ என்று அங்க லாய்த்தார் அங்கு வந்த உள்ளூர்க்காரர்.
எப்படி இருக்கும் பாசனம்? நாம்தான் கண் இருந்தும், பார்வையற்றவர்களாக அல்லவா இருக்கிறோம்!
(நீர் அடிக்கும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT