Published : 04 Apr 2021 03:15 AM
Last Updated : 04 Apr 2021 03:15 AM
சித்திரை உச்சிவெயில். உடல் முழுக்க வியர்வையில் நனைந்திருந்தாலும் அசராமல் காத்திருக்கிறது கூட்டம். அலரும் ஒலிபெருக்கியின் முழக்கங்களுக்கும், தொண்டர்களின் ஆரவாரத்துக்கும் இடையில் கிழித்துக்கொண்டு நுழையும் பிரச்சார வேனிலிருந்து வெளிப்படும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மூன்றாண்டுகளுக்கு முன்புபோல பலராலும் சாதாரணமாக மதிப்பிடப்பட்டவராக இல்லை; 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி உட்பட எதிரில் உள்ள அத்தனை நட்சத்திரப் பிரச்சாரகர்களின் பிரதான இலக்கும் அவரே. ஆளுங்கட்சியின் தலைவரை அல்லது முதல்வரைப் பிரதான இலக்காக்கி நடக்கும் பிரச்சாரங்களிலிருந்து இந்தத் தேர்தல் முழுவதுமாக மாறுபட்டிருக்கிறது; எதிர்க்கட்சித் தலைவரையே எல்லோரும் குறிவைக்கிறார்கள். ஜாம்பவான் கருணாநிதியின் மறைவுக்குப் பின் திமுகவில் அதிகார மாற்றத்தைச் சுமுகமாகக் கைமாற்றிக்கொண்டதோடு, ஒட்டுமொத்தக் கட்சியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ஸ்டாலின் கூட்டணியையும் ஜாக்கிரதையாகக் கையாள்கிறார்.
தன்னுடைய தவறுகள், போதாமைகளை ஸ்டாலின் தீர்வுகள் வழி எதிர்கொள்கிறார். தான் கருணாநிதிபோல வசீகரமான பேச்சாளர் அல்ல என்பதை உணர்ந்திருப்பவர் திமுகவின் கூட்டங்களை மக்களுடன் உரையாடும் களமாக மாற்றியிருக்கிறார். எல்லோருக்கும் பொறுமையாகக் காது கொடுப்பதும், குறைகளுக்கு முகம் கொடுப்பதும், சரியானவர்களிடம் பொருத்தமான பொறுப்புகளை ஒப்படைப்பதும் ஸ்டாலினின் பெரிய பலம் என்கிறார்கள் கட்சியினர். சரியான தருணத்தில் கட்சியைத் தகவல் தொழில்நுட்ப யுகத்துக்கும் நகர்த்தியவர் மாறிவரும் புதிய சூழல்களுக்கு ஏற்ப கட்சிக்குப் புது உருவம் கொடுத்திருக்கிறார். 2014 மக்களவைத் தேர்தலில் அத்தனை இடங்களிலும் தோற்ற கட்சி 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் வென்றது பெரிய திருப்பம். 2021 சட்டமன்றத் தேர்தல் ஸ்டாலினுடைய வாழ்வில் முக்கியமான தேர்தல். கடுமையாக உழைக்கிறார். 20 நாட்களில் அவருடைய பிரச்சார வாகனம் 12,000 கி.மீ. பயணித்து 234 தொகுதிகளையும் சுற்றிவந்திருக்கிறது. தங்கும் ஊர்களில் வீதிகளில் மக்களுடன் நடப்பவர் தொடர் பயணங்களுக்கு இடையே பேசினார்.
இந்த நாட்களில் உங்களுடைய ஒரு நாள் எப்படியிருக்கிறது?
உண்மையில், எந்த ஊருல இருக்கேன், எந்த ஊருல தூங்குறேன்னு என்னாலேயே யூகிக்க முடியாத அளவுக்கு ஓடிக்கிட்டே இருக்கேன். பொதுவா, ஒரு திட்டமிட்ட வாழ்க்கை முறை என்னுடையது. காலையில அஞ்சரை மணிக்கு எழுந்துடறது, பத்திரிகைகளை வாசிக்கிறது, ஐஐடி வளாகத்துல நடைப்பயிற்சி, அடுத்ததாக வீட்டுல உடற்பயிற்சி, காலை உணவு, விருந்தினர் சந்திப்பு, அப்புறம் ‘முரசொலி’ அலுவலகத்துக்குப் போறது, அதன் பிறகு அறிவாலயம், அப்புறம் வீட்டுல மதிய உணவு, சின்ன தூக்கம், மீண்டும் சந்திப்புகள், திரும்பவும் மாலையில் அறிவாலயம், இரவு பொதுக்கூட்டங்கள், அப்புறம் வீடு, இரவு உணவு, கொஞ்ச நேரம் வாசிப்பு, தூக்கம்னு இருக்கும். ஆனா, தேர்தல் எல்லாத்தையும் மாத்திருச்சு. தேர்தல்னாலே அப்படித்தானே! அதுவும் இது தேர்தலா இல்லை; யுத்தமா ஆயிடுச்சு.
நீங்கள் செய்த முதல் தேர்தல் பிரச்சாரம் எது? இன்றிலிருந்து அன்றைய தமிழகத்தை நினைவுகூர்ந்தால், நாம் எதையெல்லாம் பெற்றிருக்கிறோம், எதையெல்லாம் இழந்திருக்கிறோம், என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்?
எனக்குப் பன்னிரண்டு வயசு இருக்கும். சென்னை மாநகராட்சிக்கு அப்போ தேர்தல் நடந்துச்சு. எங்க பகுதியிலேர்ந்து கவுன்சிலர் பதவிக்கு ஜேசுதாஸ்ங்கிறவர் திமுக சார்புல நின்னார். நானும் நண்பர்களும் சேர்ந்துக்கிட்டு சைக்கிள்ல முன்னாடி மைக்கைக் கட்டிக்கிட்டு உதயசூரியனுக்கு ஓட்டு கேட்டு கோபாலபுரம் தெருக்கள்ல போனோம். அப்படித்தான் என் பேச்சு மைக்ல ஆரம்பிச்சுச்சு. கோபாலபுரத்துல சண்முகம் அண்ணன்னு நாங்க சொல்வோம், அவரோட சலூன்தான் எங்க கூடுகைக்கான இடம். அங்கேதான் ‘இளைஞர் திமுக’னு மன்றம் ஆரம்பிச்சோம். அடுத்து, 1967 சட்டமன்றத் தேர்தல்லேயும் கொடி புடிச்சோம். 1971 தேர்தல்ல நாடகம் போட்டோம். பெரிய ஆளாகி தமிழ்நாடு முழுக்கச் சுற்றுப்பயணம் செஞ்சது அப்படிங்கிறது 1984-ல் நடந்துச்சு. இளைஞரணியைப் பெரிசாக் கட்டுற வேலையையும் சேர்த்து அப்ப பார்த்தோம். பரிதி இளம்வழுதி, திருச்சி சிவா இவங்களையெல்லாம் உள்ளடக்கி ஒரு குழு. கார்லேயே தமிழ்நாடு முழுக்கப் போனோம். இரவுல பயணம்; பகல்ல கூட்டங்கள். நான்தான் காரை ஓட்டுவேன். அன்னைக்குப் பார்த்த தமிழ்நாட்டுக்கும் இன்னைக்குப் பார்க்கிற தமிழ்நாட்டுக்கும் இடையில நிறைய நல்ல மாற்றங்கள் இருக்கு. முக்கியமா வறுமையை, பசியைப் பெரிய அளவுல ஒழிச்சுருக்கோம். ஆனா, இன்னும் நிறைய நாம முன்னேறியிருக்கணும். அது நடக்காமல் போக முக்கியமான ஒரு காரணம் அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஏற்படக்கூடிய தேக்கநிலை; திமுக கொண்டுவர்ற நல்ல திட்டங்களைத் திமுக கொண்டுவந்ததுங்கிற ஒரே காரணத்துக்காக அவங்க நிறுத்துறது தொடர் வளர்ச்சியில பெரும் முட்டுக்கட்டை. தமிழகம் இழந்திருக்கிறதா நான் நினைக்கிறது நல்ல சுற்றுச்சூழலை. இதை மாத்தணும்னுதான் கட்சியிலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குன்னு ஒரு அணியை உருவாக்கினோம். வளர்ச்சின்னு பேசும்போதெல்லாம் சுற்றுச்சூழல் நலனையும் கவனத்துல எடுத்துக்கணும்னு நெனைக்கிறேன். அதுதான் நீடித்த வளர்ச்சிக்கான வழி, இல்லையா?
ஐம்பதாண்டுகள் அரசியல் வாழ்க்கையில், உங்கள் தலைமையிலான ஒரு ஆட்சிக்காக நீங்கள் பிரச்சாரம் செய்யும் முதல் தேர்தல் இது. சகல அமைப்பு பலங்களையும் கொண்ட மத்திய அரசு – மாநில அரசு இரண்டும் சேர்ந்த ஒரு கூட்டணியை எதிர்க்கிறீர்கள். அழுத்தத்தை எப்படி உணருகிறீர்கள்?
என் தலைமையிலான ஆட்சி வரணுங்கிறதைவிடவும், திமுக ஆட்சிக்கு வரணுங்கிறதுக்காகத்தான் உழைச்சிக்கிட்டிருக்கேன். தலைவர் கலைஞர் இல்லாத சூழல்ங்கிறதுதான் கூடுதல் பொறுப்பு. இதுவரைக்கும் அவரே எல்லாமுமாகவும் இருந்தார், அவர் சிந்திப்பார், நாங்க அவர் சொல்றதைச் செஞ்சாப் போதும்; இப்போ சிந்திக்கிறது, செயல்படுத்துறது ரெண்டையும் செய்ய வேண்டியிருக்கு. மத்தபடி தமிழர் விரோத சக்தியும், தமிழர் துரோக சக்தியும் கூட்டணி அமைச்சிருக்கிறது எங்களுக்கு வசதிதான்.
பொதுவாக, திமுக - அதிமுக இரண்டுமே தேர்தல்களை நடைமுறைரீதியாக அணுகுவதும், தேர்தல்களில் நிர்வாகரீதியிலான விஷயங்களைப் பேசுவதுமே வழக்கம். மாறாக, இந்தத் தேர்தலைச் சித்தாந்தப் போராக நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். என்ன காரணம்?
இது திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையிலான தேர்தல் இல்லை; தமிழ் மக்களுக்கும் பாசிஸ சக்திகளுக்கும் இடையில நடக்குற யுத்தங்கிறதாலதான் அப்படிக் குறிப்பிடுறேன். இந்திய ஒன்றியத்துல ஏற்கெனவே மாநிலங்களுக்கு இருக்கிற அதிகாரங்கள் குறைவு. அண்ணா காலத்துலேர்ந்து மாநிலங்களை மையப்படுத்தினதா இந்தியாவை மாற்றியமைக்கணும்னு நாம பேசிக்கிட்டிருக்கோம். கலைஞர் நிறைவேற்றின மாநில சுயாட்சி தீர்மானத்தைத் தொடர்ந்து வலியுறுத்திக்கிட்டு இருக்கோம். மாநிலங்களுக்குன்னு மிச்சம் இருக்குற கொஞ்சநஞ்ச உரிமைகளையும் வேட்டையாடிட்டுருக்குற அரசா மோடியோட பாஜக அரசு இருக்கு; அதுகிட்ட தன்னோட சொந்த சுயநலன்களுக்காகத் தமிழ்நாட்டோட எல்லாத் தனித்துவங்களையும் உரிமைகளையும் பலிகொடுக்குற அரசா பழனிசாமியோட அதிமுக அரசு இருக்கு. நாம என்ன மொழி பேசணும், நாம என்ன சாப்பிடணும்கிறதுல தொடங்கி நம்ம குழந்தைங்களை என்ன படிக்க வைக்கணும், என்ன வேலைக்கு அவங்களை அனுப்பணும்கிறது வரைக்கும் டெல்லி தீர்மானிக்கும்னா அப்போ நாம எல்லோரும் அடிமைகளா? மாநிலங்களோட நிதி உரிமையை ‘ஜிஎஸ்டி’ மூலமாப் பறிச்சாங்க. கல்வி உரிமையைப் பறிக்குறதுக்குத் தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு முறையையும் புதிய கல்விக் கொள்கையையும் கொண்டுவந்தாங்க. அடுத்து, வேலைவாய்ப்புகளையும் குறிவைச்சிட்டாங்க. தன்னுடைய ஆதிக்கப் பலத்தால் ஒட்டுமொத்தமா மாநிலங்களைக் கீழே தள்ளக்கூடிய அக்கிரமம் இது. மாநிலங்களுக்கான வலுவான குரல் தமிழ்நாடு. ஆனா, அதிமுகவை பாஜக கொத்தடிமை ஆக்கிட்டதாலேயே இன்னைக்குத் தமிழ்நாடு தன்னுடைய குரலை இழந்து உரிமைகளைப் பறிகொடுத்து நிக்குது. இது தமிழ்நாட்டுக்கு பாஜகவும் அதிமுகவும் இழைச்சுருக்குற மாபெரும் அவமானம். இந்த அவமானம் துடைக்கப்படணும். அதனாலதான், இது தமிழ்நாட்டோட சுயமரியாதையை மீட்டெடுக்கும் போர்னு குறிப்பிடுறேன்.
கடந்த காலத்தில் தமிழ்நாட்டில் டெல்லி ஆதிக்கம் ஓரளவேனும் மட்டுக்குள் இருக்க மாநிலக் கட்சிகளே இங்கு பிரதான இடத்தில் நீடிப்பதும் காரணம். திமுக எதிர் அதிமுக என்கிற சமன்பாட்டை இதற்கு முன் இரு கட்சிகளுமே அனுசரித்துவந்திருக்கின்றன. இம்முறை ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்கிற அளவுக்கு அதீதமான நிலைப்பாட்டுக்குத் திமுக சென்றது வியப்பளிப்பதாக இருந்தது. வெற்றிடம் என்று ஒன்றில்லை. அதிமுக இல்லாவிட்டால் அந்த இடத்தை பாஜகதானே நிரப்பும்?
ஏற்கெனவே நிரப்பிடுச்சு. இன்னைய பழனிசாமியோடஅதிமுக முன்னைய அதிமுக இல்லைங்கிறதையும், அது அதிமுக முகமூடி போட்டுக்கிட்டுருக்கிற பாஜகங்கிறதையும் புரிஞ்சுக்கிட்டீங்கன்னா பதில் கிடைச்சுரும். தமிழ்நாட்டுல பாஜகவால வேரூன்ற முடியாது. அதனாலதான், அதிமுகவை அது உண்டு செரிச்சு அந்த இடத்தைத் தன்னோட இடமா மாத்திக்கிற முயற்சியில இருக்கு. ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்னால் அதிமுகவுல நடந்த ஒவ்வொரு விஷயத்துலேயும் பாஜகவின் சதிவலைப் பின்னல்கள் இருக்கு. பழனிசாமியும் அவரோட அமைச்சரவை சகாக்களும் அடிச்சு வைச்ச கொள்ளைக்கான ஆதாரங்களைக் காட்டி மிரட்டியே இன்னைக்கு அதிமுகவைத் தன் கைக்குள்ள கொண்டுவந்துடுச்சு பாஜக; தன்னோட சுயநலனுக்காகக் கட்சியோடு சேர்த்து, தமிழ்நாட்டோட அத்தனை உரிமைகளையுமே காவுகொடுத்துடுச்சு பழனிசாமி அரசாங்கம். ஆக, அதிமுகவோட முதுகுக்குப் பின்னால பாஜக பதுங்கி இருக்கு. பாஜகவின் நோக்கம் சம்ஸ்கிருதமயமா இருக்கு. இந்திமயமா இருக்கு. அது மட்டுமல்ல; தமிழ் விரோதமாகவும் தமிழர் விரோதமாகவும் இருக்கு. விளைவா, உரிமைக்குக் குரல் கொடுக்குற தமிழகம், இன்னைக்கு மத்திய அரசோட எல்லா எதேச்சதிகாரச் செயல்பாடுகளையும் ஏத்துக்க வேண்டிய கீழ்நிலையை அடைஞ்சுருக்கு. இந்த நிலைமையிலேர்ந்து நாம மீளணும்னா ரெண்டும் ஒண்ணாகி நிக்கிற அதிமுக – பாஜக கூட்டணி முற்றிலுமா தோற்கடிக்கப்படணும். தப்பித்தவறி அதிமுக சில இடங்கள்ல ஜெயிச்சாலும் அதையும் தேர்தலுக்குப் பிறகு பாஜக கபளீகரம் பண்ணிடும்கிறதுதான் உண்மை. அதனாலதான் ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்.’ திமுகவோட இந்த முழக்கத்தை முழு சங்கியா மாறி நிக்குற பழனிசாமியோட இன்னைய அதிமுகவை நிராகரிக்கிற முழக்கமாகவே பார்க்கணும்.
தொலைநோக்கைக் கொண்டது என்றாலும், திமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற ஐந்தாண்டுகள் போதவே போதாது என்ற பேச்சு நிபுணர்கள் மத்தியில் இருக்கிறது. குறிப்பாக, பெரிய கடன் சுமையில் தமிழகம் தத்தளிக்கும் நிலையில், புதிதாக ஆட்சிக்கு வரும் எந்த அரசுக்கும் பெரும் பொருளாதாரச் சுமை காத்திருக்கிறது. இத்தகு சூழலில் திமுகவால் இவ்வளவு வாக்குறுதிகளையும் எப்படி நிறைவேற்ற முடியும்?
ஒவ்வொரு வாக்குறுதியையும் தனித்தனியா எடுத்து வைச்சு பரிசீலிச்சா இந்தக் கேள்விக்குப் பதில் கிடைச்சுரும். எல்லா வாக்குறுதிகளும் நிதி சம்பந்தமானவை கிடையாது. பல வாக்குறுதிகள் ஒரு அரசாங்கத்தின் கவனம் பெறாதவையா இருக்கு; அதையெல்லாம் நிறைவேற்ற நிதி அவசியம் இல்லை; கவனம்தான் அவசியம். அப்புறம் சில வாக்குறுதிகள் சங்கிலித் தொடர் விளைவாக நடக்கக்கூடியதா அடுக்கப்பட்டிருக்கு. உதாரணமா, ‘ஆண்டுக்குப் பத்து லட்சம் பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்’னு திருச்சியில் அறிவிச்சேன். தமிழ்நாட்டோட பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கத்துல கொண்டுபோற திட்டத்தோடு இணைஞ்சது இது. இந்த ஒரு விஷயத்தைச் செஞ்சுட்டாலே பல விஷயங்கள் தானா நிறைவேறிடும்.
தொடர்ந்து, ‘ஆளுமைத்திறன் அற்றவர் ஸ்டாலின்’ என்று முன்னெடுக்கப்படும் பிரச்சாரம் இந்தத் தேர்தலில் மேலும் பெரிதாக ஒலிக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
திராவிட இயக்கத் தலைவர்களைச் சித்தாந்தரீதியா எதிர்க்கத் தெரியாத சில்லறைகள் எப்போதும் இது போன்ற கொச்சைப்படுத்துதல்கள்ல இறங்குறது வழக்கம். இந்த மாதிரி இழிவுபடுத்தல்களால என்னைப் பலவீனப்படுத்த முடியாது; ஏன்னா, தொடக்கக் காலத்துலேர்ந்து இந்த மாதிரி வசைகளை மிதிச்சுக் கடந்துதான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன். ஆனா, இப்படிப் பேசுறவங்களை நோக்கி ஒரு கேள்வி கேட்கலாம்னு நெனைக்கிறேன், ‘ஆளுமைத்திறன் ஸ்டாலினுக்கு இல்லைன்னு சொல்றீங்க. அப்புறம் எதுக்காகப்பா ஆளுமைத்திறனற்ற ஒரு ஸ்டாலினை எதிர்க்க இத்தனை பேர் ஒண்ணுகூடி நிக்குறீங்க?’
கூட்டங்களில் பேசும்போது சொற்கள் அல்லது எண்ணிக்கையைத் தவறவிடுவது உங்களுக்கு அதிகம் நடக்கிறது. இதற்கு என்ன காரணம்? இதை உங்கள் தலைமைப் பண்போடு இணைத்துப் பேசுபவர்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தவறுதல் மனுஷ இயல்பு. குறிப்பா, மேடைகள்ல இப்படியான தவறுதல் ஏற்படுற வாய்ப்பு ரொம்ப அதிகம். இது பலருக்கும் நடந்திருக்கு. இன்னைக்குக் காட்சி ஊடகங்களோட காலத்துல இது அதிக வெளிச்சத்துல தெரியுது. நான் சொல்றதுல கருத்துப்பிழைகளோ, அரசியல் விமர்சனங்களோ இருந்தால் அதைத் தாராளமா சொல்லுங்க, விவாதிக்கலாம். ஆனா, வார்த்தைகளைத் தவறவிடுறதை விமர்சிக்கிறேன்கிற பேருல நான் பேசுற விஷயத்தை இருட்டடிக்கிறது அறிவு நாணயம் கிடையாது. அதோட பேச்சுத்திறன் மட்டுமே தலைமைப் பண்பும் கிடையாது, அது பல்வேறு திறன்களோடு தொகுப்பு.
சமூக வலைதளங்களில் உங்களைக் கேலிசெய்து வரும் காணொளிகளைக் காண்கிறீர்களா? அவற்றையெல்லாம் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோன்றும்?
பார்ப்பேன், எதாச்சும் திருத்திக்கொள்ள வேண்டியது இருந்தா திருத்திக்கிறேன். மற்றதுக்கு சிரிச்சுட்டு அப்படியே கடந்து மறந்துபோறேன்!
திரும்பத் திரும்ப, ‘இந்து மதத்துக்கு எதிரான கட்சி திமுக’ என்று குற்றஞ்சாட்டுவதன் மூலம், கிட்டத்தட்ட ‘இந்துக்களுக்கான கட்சி திமுக’ என்று சொல்லும் நிலைக்கு உங்களைத் தள்ளிவிட்டதா பாஜக? கையில் வேலோடு நீங்கள் நின்றது அரசியல் உத்தியாக எடுபட்டாலும் சித்தாந்தரீதியாகத் திமுகவுக்கு அது சறுக்கல் என்கிற விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
திருத்தணிக்குக் கிராம சபைக் கூட்டத்துக்குப் போயிருந்தேன். அந்த ஊரோட அடையாளமாக வேல் என் கையில மக்களால கொடுக்கப்பட்டுச்சு. வாங்கிக்கிட்டேன். இதுல சித்தாந்தச் சறுக்கல் எங்கே வருதுன்னு புரியலை. ஒருவேளை நான் அதை வாங்க மறுத்திருந்தா அப்போ என்ன சொல்லியிருப்பாங்க? சரி, கையில வேலை வாங்கினாலும் தவறு, வாங்காட்டினாலும் தவறுன்னா நான் என்னதான் செய்யணும்னு நெனைக்கிறாங்க? கடவுள் – மதம் சம்பந்தமா என்னோட நிலைப்பாட்டைப் பல இடங்கள்ல தெளிவுபடுத்தியிருக்கேன். அது ஒவ்வொருத்தருடைய விருப்பம், சுதந்திரம். இந்து மதத்துக்கு மட்டும் இல்லை; எந்த மதத்துக்கும் எதிரானது இல்லை திமுக. அதே சமயம், அரசியல்லேயும் அரசு நிர்வாகத்துலேயும் மதத்தைக் கலக்கிறதை உறுதியா திமுக எதிர்க்கும். திமுக எப்போவெல்லாம் ஆட்சிக்கு வந்ததோ அப்போவெல்லாம் எல்லாத் துறைகளையும்போல அறநிலையத் துறையும் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டதுங்கிறதுதான் வரலாறு. அது அடுத்து வர்ற ஆட்சிலேயும் தொடரும்.
திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து ரௌடியிஸம் வளர்ந்துவிடும்; பெண்கள் பாதுகாப்பாக வெளியே செல்ல முடியாது; சுதந்திரமாகத் தொழில் செய்ய முடியாது என்ற குற்றச்சாட்டை இப்போது அதிமுக பிரதானத் தாக்குதலாக மாற்றியிருக்கிறது. இத்தகு குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் பதில் என்ன?
மிக மோசமான அவதூறு இது. திமுகவை இழிவுபடுத்துறேன்கிற பேர்ல உண்மையில் மக்களை பழனிசாமி அச்சுறுத்துறார். ஒரு முதலமைச்சருக்கு இது அழகல்ல. சிதம்பரம் காவல் நிலையத்துல பெண் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டது திமுக ஆட்சியிலா நடந்தது? பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடங்கி காவல் துறை உயரதிகாரியால ஒரு பெண் காவல் துறை அதிகாரிக்கே பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது வரைக்கும் தன்னுடைய ஆட்சியில் பெண்களுக்கு எதிரா நடந்த அட்டூழியங்களுக்கு பழனிசாமி அரசாங்கம் எப்படி எதிர்வினையாற்றுச்சுன்னு மக்களுக்குத் தெரியும். அதிமுகவினருக்கு இதுபற்றிப் பேசவே அருகதை கிடையாது. ஆனாலும், மக்களுக்கு நான் உறுதிமொழி தர்றேன், சட்டம் ஒழுங்குக்கு எந்தப் பாதிப்பும் வராது. சட்டமீறல்களை இரும்புக் கரம் கொண்டு திமுக அரசு அடக்கும்.
தேர்தலில் திமுக வென்றாலும், சட்டமன்ற உறுப்பினர்களை உடைத்துத் தம் பக்கம் அவர்களை இழுத்து, பாஜக ஆட்சி அமைக்கலாம் என்ற பேச்சு சகஜமாக இருக்கிறது. இதை எதிர்கொள்ள என்ன வியூகம் வைத்திருக்கிறீர்கள்?
எதிரிகளை எதிர்கொள்ள முழு பலத்தோடேயே திமுக இருக்கு. நான் பலம்னு சொல்லும்போது அது ரெண்டு விதமா அர்த்தப்படுத்துறேன். ஒண்ணு, எண்ண பலம்; மத்தொண்ணு, எண்ணிக்கை பலம். பலரையும்போல பாஜகவையும் வெறும் ஒரு அரசியல் கட்சியா திமுக பார்க்கலை. நாம வேற, அவங்க வேற. பாஜக இந்தத் தமிழ் மண்ணுக்கு எதிரி, தமிழர்களின் எதிரி. இந்தப் புரிதல் ஒவ்வொரு திமுககாரருக்கும் இருக்கு. அதை மேலும் வலுப்படுத்துவோம். இதையும் தாண்டி பாஜக விளையாட முயற்சிக்கலாம்னுதான் வெறும் 118 இடங்கள் போதாது; 234 இடங்கள்லேயும் கூட்டணி ஜெயிக்கணும்னு உயிரைக் கொடுத்து வேலை பார்த்துக்கிட்டிருக்கோம். திமுக எதையும் எதிர்கொள்ளும்!
பிரதமர் மோடியின் பிரச்சாரத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பாஜக வேட்பாளர்களே மோடி படத்தைத் தவிர்த்துட்டு, ஜெயலலிதா படத்தோடு ஓட்டு கேட்கப்போறாங்கன்னா அதுக்கு மேல அவருடைய பிரச்சாரத்துக்குத் தமிழ்நாட்டுல உள்ள மதிப்பைப் பத்தி நான் சொல்ல என்ன இருக்கு?
மாறிக்கொண்டிருக்கும் சூழலில், வெறும் நிர்வாகத்தை மட்டுமே முன்னிறுத்தி அரசியலில் நீடித்து நிற்க முடியாது. பண்பாட்டுத் தளத்தில் ஆர்எஸ்எஸ் செயலாற்றுவதன் மூலம் உண்டாக்கும் சிந்தனை மாற்றங்களுக்கான பலன்களையே மேலே அரசியல் தளத்தில் பாஜக அறுவடை செய்கிறது. ஆக, அதற்கு எதிர்ச் சிந்தனைகளைப் பேசுவதற்குப் பண்பாட்டுத் தளத்தில் திமுகவும் செயலாற்ற வேண்டும்; திமுகவுக்கும் இதற்கென ஓர் அமைப்பு வேண்டும் என்ற குரல் இருக்கிறது. இப்படி நீண்ட கால நோக்கில் பாஜகவை எதிர்கொள்ள என்ன செய்யப்போகிறீர்கள்?
சாதிய, மதவிய சக்திகளின் கொட்டத்தை அடக்க அரசியல்ரீதியா தேர்தல் களத்தில் மட்டுமல்லாமல், தத்துவார்த்தரீதியா பண்பாட்டுத் தளத்திலும் வேலைசெய்ய வேண்டிய கட்டாயத்தை முழுமையா உணர்ந்திருக்கோம். திமுக தேர்தல் அறிக்கையில் ‘சென்னையில் திராவிடர் இயக்க தீரர்கள் கோட்டம் அமைக்கப்படும்’னு சொல்லிருக்கோம் இல்லையா, தமிழர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கான வரலாற்றைச் சொல்றதா அதை அமைப்போம். கழகத்தோட பாசறைகளுக்கு மீண்டும் புத்துயிர்ப்பு கொடுப்போம். பாசறைக் கூட்டங்களைக் கிராமங்கள்ல தொடங்கி சமூக வலைதளங்கள் வரை கொண்டுபோவோம். இது பெரியார், அண்ணா, கலைஞர் மண்… திராவிட மண்… எல்லாப் பிளவு சக்திகளையும் தமிழை வெச்சு திருப்பியடிப்போம்!
பாலின, சாதி, மதச் சமத்துவத்தை முழுமையாக ஏற்றவர்களாக எப்படிக் கட்சியைத் தயார்செய்யப்போகிறீர்கள்?
சமூகநீதி - சுயமரியாதை - சமத்துவம் – சகோதரத்துவம் இதெல்லாம்தான் திராவிட இயக்கத்தோட அடிப்படைக் கொள்கைகள். இதை ஆழமாக் கட்சியினர் மனசுல விதைக்கணும்னு நெனைக்கிறேன். தமிழுணர்வு இதற்கான கருவியா அமையணும்.
ஒவ்வொரு தலைவருக்கும் தான் சார்ந்திருக்கும் சமூகம் தொடர்பில் ஒரு கனவு இருக்கும். உங்கள் கனவில் உள்ள தமிழ்நாடு எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்?
அனைத்து அதிகாரங்களையும் கொண்டதா நம்ம தமிழ்நாட்டை மாத்தணும். எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்கிறதா தமிழ்நாடு இருக்கணும். இதுதான் என்னோட தமிழ்நாடு!
- சமஸ், தொடர்புக்கு: samas@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT