Published : 19 Nov 2015 09:04 AM
Last Updated : 19 Nov 2015 09:04 AM

மெட்ராஸ்ல மட்டும் இன்னா வாயுது?!

>கே.கே.மகேஷ் கட்டுரைக்கு ஒரு சென்னைக்காரரின் பதில்: மகேஸ் அண்ணாத்தே வண்க்கோம்! நேத்திக்கி நீ எய்துன ‘சென்னையை அல்லாக்கா தூக்கிருவோமா?’ன்னு ஒரு கட்டுர பட்ச்சேன். சோக்கா சொல்லிக்கீறப்பா நீ நம்ம சென்னையப் பத்தி. படிக்கச் சொல்லோ சிப்பு சிப்பா வந்துச்சி. இன்னான்னு கேக்குறியா? சொல்றேன். சென்னைக்காரென், சென்னைக்காரென்னு சொல்லிப் பொருமுறிய… நா சொல்றன் கேட்டுக்கோ நைனா!

நானும் என்ன மேரி கொஞ்ச பேரும் மெட்ராசுல பொர்ந்து வள்ந்து சென்னைல குப்ப கொட்டினுகீறோம். எங்க ஊர் சென்னைன்னு சொல்றவங்க யாராச்சும் உண்டா? கேட்டா மருத, திருநெவேலி, கோயம்புத்தூர்னுதா சொல்றாங்கோ! எந்தக் கடைன்னாலும் வேற ஊர்க்காரங்கதான் ஓனருங்களா கீறாங்கோ. இல்லைன்னா, சேட்டுங்கோதான் ஓனரா கீறாங்கோ. நாங்க இன்னமும் ததிங்கினத்தோம் போட்டுக்கினுதான் கீறோம். அதப் பத்தி யாருனா கண்டுக்குறாங்களா? அதான் நைனா சென்னை.

மயக் காலத்துல சென்னய அதிகாரிங்க நல்லா சோக்கா வெச்சுனு கீறாங்கோன்னு நென்ச்சுக்குக்குனு கீற நீயி! உன்க்கு ஒரு விசயம் சொல்ட்டமா... மய பேஞ்சா, வெள்ளம் வந்தா நாங்கதான் மொதல்ல மெதப்பம். உனக்கு என்னா? நீ உன் சொந்தக்காரன், மாமன், மச்சான் வூடுன்னு குஷாலா குந்திக்குவே. எங்களுக்கு எவனும் எடம் குடுக்க மாட்டான் நைனா இந்தப் பட்டணத்துல! பக்கத்துலயே பெரிய பெரிய கட்டடங்கோ இருக்கும். அங்க இருந்துக்கினு எங்கள வேடிக்க பாப்பாங்களே கண்டி எடம் குடுக்க மாட்டான். அப்புறம் கரண்டு. இன்னாவோ அது மட்டும் சுகுர்றா சொல்லிக்கினே! ஆனா, மயக் காலத்துல அதான் எங்களுக்கு டெரரா பூடும். தண்ணியில கால வெச்சு கரண்டு வலிக்குமா? இல்ல தண்ணி வலிக்குமான்னு தெர்யாம உக்காந்துக்கிறோம். நீ இன்னான்னா…

தாமரபரணி நதிய இன்னாவோ ஏலம் வுட்டாங்கோன்னு நீங்க அல்லாரும் கூவுறீங்க? அதிகாரிங்ககூட சண்டை வலிக்கிறீங்க. கரீட்டுதான்! அதே மேரிதான் நைனா எங்களுக்கும் நடந்துச்சி. 50 வர்சத்துக்கு முன்ன கூவம்கூட அத்தினி அரும்மியா இருந்துச்சுப்பா! நெறய கலர் கலர் மீனுங்கள நானே பாத்திருக்கேன். அத்த சாக்கடையா மாத்தினாங்களே! நாங்க இன்னா கூவி, இன்னா பிரோஜனம்? ஆத்தோரமா குட்ச போட்டுக் குடியிருந்தோம். அத்தயும் தூக்குனாங்கோ. அப்பவும் நாங்க பேச முடியாமக் கெடந்தோம் அண்ணாத்தே! சுனாமி வர எடம்னு கடலோரமா இருந்த எங்களத் தூக்கி எங்கியோ போட்டாங்கோ. வேலக்கிப் போறவங்களும், இஸ்கூலுக்குப் போற கொயந்தைகளும் ரெண்டு மூணு பஸ்சு மாறிப் போறோம். பஸ்சுக்கு பாஸ்கூடக் குடுக்கல இவுங்கோ!

ஒரு காலத்துல நுங்கம்பாக்கத்துல ஒரு ஏரி இருந்துதாம். அத்தோட கரை பாக்கச் சொல்லோ படா சோக்கா இருக்குமாம். அங்க ஒக்காந்துக்கினு இங்கிலீசு தொர ஒர்த்தரு படம் வரைவாராம். இப்டில்லாம் எங்க ஆயா சொல்லிக்கினு இருக்கும். நாங்கூட அது ஏதோ டூப் வுடுதுன்னுதான் நெனச்சன்.

கொஞ்ச நாள் மின்னாடிதான், ஆயா சொன்னது உண்மன்னு ஒரு படிச்ச மன்சன் சொன்னாரு. அங்க பக்கத்துல ஏரிக்கர மாரியம்மன் கோயிலயும் காட்டுனாரு. அங்க ஏரி இர்ந்த அடயாளமே இல்ல. ஆத்தா மாரியம்மன் சும்மா உக்காந்துகினு ட்ராஃபிக்க காத்துக்கினு கீது. இது மேரி நெறய ஏரிங்களக் காணோமாம். சொன்னாங்கோ. ஏன்னு கேளு! சென்னைக்குப் பொயப்பு தேடி வர ஆளுங்க ஜாஸ்தியாய்ட்டாங்களாம். அல்லாருக்கும் வூடு கட்ட எடம் இல்ல. அதான் ஏரி, குளம்னு அடஞ்சிக்கிட்டாங்கோ. அப்பால மயத் தண்ணி வூட்டுக்குள்ள பூந்திரிச்சுன்னு கூவுறாங்கோ!

சென்ன வறண்டு போனதுக்கு நாங்க காரணமில்ல.இதுக்கெல்லாம் காரணம், வெளியூர்லேர்ந்து இங்க வந்தவங்கோதான் அண்ணாத்தே! எங்களுக்கு ஓட்டுப் போட மட்டும்தான் பெர்மிசன்! மத்தபடி வசதி, வேலன்னு கேட்டா ஒர்த்தரும் பதில் சொல்ல மாட்டங்கோ.

சென்னைன்னா பணக்காரங்க வாயுற எடம்னு அல்லாரும் நெனச்சுக்கறீங்கோ. எங்க எட்த்துக்கு வந்து பாக்கச் சொல்லோதான் நெசம் தெர்யும். வந்தவங்கள வாழ வெச்சிக்கிட்டு நாங்க செத்துக்கினுகீறோம் நைனா. நெல்லைத் தமிழ், கோவைத் தமிழ்னு பேசுனா பெருமையாப் பாப்பாங்கோ. ஆனா, மெட்ராஸ் தமிழ்னா, ரவுடிங்கோதான் அத்தப் பேசுவான்னு சொல்வாங்கோ. சினிமாவுல சொல்லவே வேணாம்! ஆனா, சினிமாவுல காட்ற கிராமம், நெசத்துல அப்பிடியா கீது? பாதிக்கு மேல அல்லாம் உடான்சுதானே! அது மேரிதான் இதுவும்னு நாங்க வுட்டுட்டோம்.

கடேசியா சொல்றேன் நைனா… எங்க ஊர்லயே எங்களுக்கு மருவாதி, கௌரத இல்ல அண்ணாத்தே. நீ சொன்னா மேரி சென்னய அல்லாக்காத் தூக்கி தெக்கு பக்கமா வெச்சிடு. அப்பவாவது எங்களுக்கு வயி கெடக்குதானு பாப்போம்.

தொடர்புக்கு: srijavenkatesh@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x