Last Updated : 30 Mar, 2021 03:14 AM

1  

Published : 30 Mar 2021 03:14 AM
Last Updated : 30 Mar 2021 03:14 AM

களத்தில் பவனி: கோவை மண்டலத்தின் பிரச்சாரத் திருவிழா

தமிழகத்தின் மேற்கு மண்டலம் எனப்படும் கோவை மண்டலத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களில் மொத்தம் 55 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் அதிக அளவாக சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளும், குறைந்த அளவாக நீலகிரி மாவட்டத்தில் 3 தொகுதிகளும் உள்ளன.

தொழிற்சாலைகள் நிறைந்த கோவை மாவட்டத்தின் மையப் பகுதிகள், பனியன் தொழிலில் சிறந்து விளங்கும் திருப்பூரின் மையப் பகுதிகள், கைத்தறி, விசைத்தறி சாயத்தொழில், தோல் பதனிடும் தொழில் நிறைந்த ஈரோடு மாவட்டத்தின் மையப் பகுதிகள், இரும்பு உருக்காலை, பல்வேறு மோட்டார் நிறுவனங்கள், தொழிற்பேட்டை, வர்த்தகங்கள் நிறைந்த சேலம், ஒசூர் நகரங்கள் தவிர்த்து மீதி எல்லாப் பகுதிகளும் இங்கே விவசாயத்தை நம்பியே உள்ளன.

மேற்கு மண்டலத்தில் உள்ள 41 தொகுதிகளில் இந்தத் தேர்தலில் திமுக – அதிமுக இடையே 36 தொகுதிகளில் நேரடிப் போட்டி நிலவுகிறது. இவற்றில் முக்கியமாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, அவைத் தலைவர் தனபால், பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், எஸ்.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், இளித்துரை கே.ராமச்சந்திரன், கொங்குநாடு மக்கள் கட்சி ஈ.ஆர்.ஈஸ்வரன், ஆதித்தமிழர் பேரவை அதியமான், பாமக கோ.க.மணி, பாஜக வானதி சீனிவாசன், மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் களத்தினில் உள்ளனர்.

கமல் பிரசன்னம்

மநீம கட்சி பிரிக்கும் வாக்கு சதவீதம் தம்மைப் பாதிக்குமோ என்ற அச்சம் அதிமுக - திமுக இரு கட்சியினரிடமும் காணப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் மநீம 11.4% வாக்குகள் வாங்கியிருக்கிறது. கோவை தெற்கில் மநீம வாங்கிய வாக்குகள் 16%. கோவையைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மநீமவுக்கு செல்வாக்கு இல்லை. மநீம நகர்ப்புறம் சார்ந்த கட்சி என்பதற்குச் சான்று இது. ஆகவே, கோவை நகர்ப்புறப் பகுதியில் மநீம கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளை நம்பிதான் கோவை தெற்கில் களம் இறங்கியிருக்கிறார் கமல்ஹாசன். வேட்பு மனு தாக்கல் செய்த அடுத்த நாளே தொகுதிக்குள் பிரச்சாரப் பயணமாகிவிட்டார். பெரும்பான்மை மக்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ளும் ரேஸ்கோர்ஸில் நடைப் பயணம். சாதாரண டீக்கடைகளில் டீ அருந்துதல், மீன் சந்தையில் பொதுமக்களிடம் நேரடிச் சந்திப்பு, அரைகுறையாய் நிற்கும் மேம்பாலப் பகுதிகளில் எல்லாம் திடீர் திடீர் என கமல் பிரசன்னம் ஆக, அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டவர்கள் ஏராளம்.

பாஜக வானதி சீனிவாசன், காங்கிரஸ் மயூரா ஜெயக்குமார், ஜல்லிக்கட்டுப் புகழ் கார்த்திகேய சிவசேனாதிபதி ஆகியோர் வீடு வீடாக, கடை கடையாகச் சென்று ‘அக்கா, அண்ணா’ என்று சொல்லி வாக்கு கேட்கிறார்கள். அதெல்லாம் உடனுக்குடனே வலைதளங்களில் வைரலாகின்றன. இதற்காகவே இவர்கள் தங்களுக்கென்று ஐடி பிரிவை உடன் வைத்திருக்கிறார்கள்.

எஸ்.பி.வேலுமணியின் சூளுரை

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே தன் சொந்தத் தொகுதி தொண்டாமுத்தூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். மற்ற தினங்களில் திருப்பூர், அவிநாசி, நீலகிரி என மற்ற அதிமுக வேட்பாளர்களுக்குப் பிரச்சாரம் செய்யச் சென்றுவிடுகிறார். கோவை புறநகர் தெற்கு, கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு, திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு மற்றும் மேற்கு, நீலகிரி ஆகியவற்றுக்கு இவரே தேர்தல் பொறுப்பாளர். இந்த மாவட்டங்களில் உள்ள 21 தொகுதிகளில் அதிமுகவை வெற்றிபெற வைப்பது தன் பொறுப்பு என்று எஸ்.பி.வேலுமணி சூளுரைத்திருக்கிறார். நாமக்கல், ஈரோடு மாநகர் ஆகியவற்றுக்கு அமைச்சர் பி.தங்கமணி பொறுப்பு. ஈரோடு புறநகருக்கு அமைச்சர் செங்கோட்டையன் பொறுப்பு. சேலத்துக்குத் தேர்தல் பொறுப்பாளர் பொன்னையன். தருமபுரிக்கு கே.பி.அன்பழகன். கிருஷ்ணகிரிக்கு கே.பி.முனுசாமி.

தமிழகத்திலேயே கடுமையான போட்டி நிலவும் மண்டலம் இதுதான் என்று சொல்லிட முடியும். ஏனெனில், திமுகதான் ஆட்சிக்கு வரும் என்று சொல்லும் கருத்துக் கணிப்புகள்கூட கோவை மண்டலம் அதிமுகவுக்கு சாதகமாக இருப்பதாகச் சொல்கின்றன. இதற்கு, மூன்று காரணங்கள். முதலாவது, முதல்வரின் தொகுதி இந்த மண்டலத்தில் இருப்பதால் நம்மூர் மனிதர் முதல்வராக இருக்கிறார் என்பதாகும். இரண்டாவதாக, கோவை மண்டலத்துக்கு வேறு எந்த பிராந்தியத்தைக் காட்டிலும் அதிகமான திட்டங்களை முதல்வர் கொண்டுவந்திருக்கிறார் என்பதாகும். மூன்றாவது சாதிக் கணக்குகள். கொங்கு மண்டலத்தின் செல்வாக்கு மிக்க கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி என்பது அதிக அளவிலான வாக்குகளை அதிமுகவுக்குப் பெற்றுத்தரும் என்பதாகும்.

இதை முறியடிக்க திமுக முழு அளவிலான வியூகங்களை முடுக்கிவிட்டிருக்கிறது. மேற்கு மண்டலப் பொறுப்பாளராக தயாநிதி மாறன் நியமிக்கப்பட்டிருக்கிறார். சுப்புலட்சுமி ஜெகதீசன், ராமலிங்கம், மு.பெ.சாமிநாதன் போன்ற மூத்த தலைகள் ஒருபுறம் என்றால், செந்தில் பாலாஜி முதல் கார்த்திகேய சேனாபதி வரையிலான புதிய வரவுகள் மறுபுறம் என்று கடுமையான நெருக்கடியை அதிமுகவுக்கு உருவாக்கிவருகிறது.

களைகட்டும் பிரச்சாரம்

திமுகவுக்கு அதன் தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, மகளிரணிச் செயலாளர் கனிமொழி, ஆ.ராசா, லியோனி, உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு பகுதிக்கும், வேலுமணி இன்னொரு பகுதிக்குமாகப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். பாஜக வானதிக்கு வாக்கு கேட்டு நமீதா உள்ளிட்ட நடிகைகளும் வந்துசென்றுள்ளனர். அமமுக வேட்பாளர்களை ஆதரித்து டி.டி.வி.தினகரன் வந்துசென்றுள்ளார்.

ஸ்டாலின் கூட்டத்தில் கேள்வி கேட்டதற்காக அதிமுக பெண்மணி ஒருவர் தாக்கப்பட்டதாக எழுந்த சலசலப்பு, கோவை மாவட்டத்தில் ஒரு உதவி ஆய்வாளர் தாக்கப்பட்டது, அதிமுக-திமுகவினர் மோதலில் ஒரு சார்பாக முடிவு எடுத்தது காரணமாகத் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட உடனடியாக மாவட்ட ஆட்சியரும், காவல் துறை ஆணையரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எல்லாம் சேர்ந்து களைகட்டி நிற்கிறது கோவை மண்டலம்.

- கா.சு. வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x