Published : 13 Jun 2014 09:00 AM
Last Updated : 13 Jun 2014 09:00 AM
உறுதியாக நின்ற உருகுவே
தென் அமெரிக்க நாடான உருகுவேதான் உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டியில் முதல் சாம்பியன். முதல் உலகக்கோப்பைப் போட்டி நடந்ததும் உருகுவேயில்தான். ஆனால், அந்தப் போட்டியில் கலந்துகொள்ள ஐரோப்பிய நாடுகள் தயக்கம்காட்டின. ‘அத்தனை தூரம் பயணம் செய்து யாரப்பா விளையாடுவார்கள்?’ என்று அலுத்துக்கொண்ட ஐரோப்பிய நாடுகள், கடைசியில் பெல்ஜியம், பிரான்ஸ், ருமேனியா, யூகோஸ்லோவியா ஆகிய நான்கு நாடுகளின் அணிகளை மட்டும் அனுப்பின. இதனால் சங்கடமடைந்த உருகுவே, அடுத்து நடந்த இரண்டு உலகக்கோப்பைகளில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது. “எங்கூருக்கு வர மாட்டீங்க... ஒங்கூருக்கு மட்டும் நாங்க வரணுமோ?” என்று வீராப்பு காட்டிய உருகுவே, 1950-ல் பிரேசிலில் நடந்த போட்டியில் கலந்துகொண்டு கோப்பையை மீண்டும் வென்றது. ரோஷமுள்ள சாம்பியன்தான்!
‘அது கடவுளின் கை!’
கால்பந்து என்றால் பீலேவுக்குப் பின்னர் கடவுளாகப் போற்றப்படுபவர் அர்ஜெண்டினாவின் மரடோனா. மறக்க முடியாத எத்தனையோ கோல்களை அடித்துப் புகழின் உச்சிக்குச் சென்ற அந்த மேதையின் ஒரு கோல் மட்டும் சர்ச்சைக்குரியது. 1986-ல் மெக்சிகோவில் நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் பிரிட்டனுக்கு எதிராக நடந்த போட்டியில் பிரிட்டன் வீரரை ஏமாற்றி பந்தைத் தலையால் தட்டி கோல் விழச் செய்தார் மரடோனா. உடனே, ஓடிச் சென்று அணியின் மற்ற வீரர்களை ஆரத்தழுவிக் கொண்டாடவும் செய்தார். ஆனால், அந்த கோலை, தலையால் மட்டும் அல்ல, கையாலும் தட்டினார் என்று பிரிட்டன் வீரர்கள் நடுவரிடம் முறையிட்டனர். அவர் அதை நம்பவில்லை. பலகாலம் கழித்து அந்த உண்மையை மரடோனா தனக்கே உரிய பாணியில் ஒப்புக்கொண்டார். “அந்த கோலை என் தலையும் ‘கடவுளின் கையும்' இணைந்தே அடித்தன” என்று கூறிவிட்டார். ஆண்டவனிடம் அப்பீல் ஏது?
16 ஆண்டுகால சாம்பியன்!
இத்தாலிதான், கால்பந்து உலகக்கோப்பைப் போட்டியில் நீண்டகால சாம்பியன். அதில் ஒரு சுவாரஸ்யம் உண்டு.1934-ல் போட்டியை நடத்திய இத்தாலியே கோப்பையை வென்றது. தொடர்ந்து 1938-ல் வென்று கோப்பையைத் தக்கவைத்தது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்க வேண்டிய உலகக்கோப்பைப் போட்டி, அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு நடைபெறவில்லை. காரணம், இரண்டாம் உலகப் போர். இந்த எட்டு ஆண்டு இடைவெளியையும் சேர்த்துத்தான் இத்தாலியின் 16 ஆண்டுகால சாம்பியன் சாதனை என்பது வரலாற்றில் மிக முக்கியம் அமைச்சரே!
சொந்த ஊரில் நொந்துபோன தென் ஆப்பிரிக்கா
2010-ல் உலகக்கோப்பை நடந்தது தென் ஆப்பிரிக்காவில். முதன்முதலாக, ஆப்பிரிக்க மண்ணில் நடந்த உலகக்கோப்பைப் போட்டி அதுதான். போட்டியை நடத்தும் நாடு என்பதால், முதல் சுற்றில் விளையாட அந்நாடு தகுதிபெற்றிருந்தது. ஆனால், அத்தனை பலமில்லாத அந்த அணி, உருகுவே அணியுடனான போட்டியில் 0-3 என்ற கோல் வித்தியாசத்தில் பரிதாபமாகத் தோற்று, முதல் சுற்றிலேயே வெளியேறியது. போட்டியை நடத்தும் நாடு முதல்சுற்றிலேயே மண்ணைக் கவ்வியது அந்தப் போட்டியில்தான்!
ஆசியாவின் நிறைவேறாத ஆசை
ஆசியாவில் ஓரளவு பலம் கொண்ட அணிகள் என்றால், தென் கொரியா மற்றும் ஜப்பானைக் குறிப்பிடலாம். எனினும், தென் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம் நிறைந்த உலகக்கோப்பையில் எந்த ஆசிய நாடும் வென்றதில்லை. 2002-ல் இந்த தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து உலகக்கோப்பைப் போட்டியை நடத்தின. இரண்டாவது சுற்றில் துருக்கியிடம் தோல்வியடைந்து ஜப்பான் வெளியேறியது. தென் கொரியா மட்டும் போராடி அரையிறுதி வரை சென்றது. ஆனால், பலம் வாய்ந்த ஜெர்மனி அணியிடம் தோல்வியடைந்தது.
நாட்டாமை… கார்டை மாத்திக் காட்டு
கால்பந்து போட்டிகளில் வீரர்களின் ஓட்டத்துக்குச் சமமாகப் போராடுபவர்கள் நடுவர்கள்தான். சும்மா சொல்லக் கூடாது, காளையின் பலத்துடன் களத்தில் நிற்கும் வீரர்களின் கோபதாபங்களுக்கு ஈடுகொடுக்கும் மன உறுதி பெற்றவர்கள் அவர்கள். இந்த முறை, 14 நாடுகளிலிருந்து 25 நடுவர்கள் பங்கேற்கின்றனர். இவர்களில் ஓசியானியா பகுதியிலிருந்து பங்கேற்கும் ஒரே நடுவர், நியூசிலாந்தைச் சேர்ந்த பீட்டர் ஓலேரிதான். இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், 25 நடுவர்களில் மூன்று பேர்தான் தொழில்முறை நடுவர்கள். மற்ற அனைவரும் பிற துறைகளில் பணியாற்றுபவர்கள். இந்தப் பட்டியலில் ஒரு வழக்கறிஞரும் இருக்கிறார். அப்ப சரி, நாட்டாமை பணி நல்லவிதமா நடக்கும்!
எடுபடுமா அமெரிக்கா?
உலகத்துக்கே நாட்டாமையாக இருக்கலாம். ஆனால், உலகக்கோப்பைக் கால்பந்து போட்டியில் அமெரிக்காவுக்கென்று பெரிய சாதனைகள் கிடையாது. 2002 உலகக்கோப்பைப் போட்டியில் காலிறுதிவரை முன்னேறிய அமெரிக்கா ஜெர்மனியிடம் தோற்றது. அதுவே அமெரிக்காவைப் பொறுத்தவரை சாதனைதான். சூறாவளியாய் இயங்கும் சுண்டைக்காய் நாடுகளிடம் வல்லரசின் வலிமை எடுபடுமா என்பது சந்தேகம்தான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT