Published : 24 Mar 2021 03:13 AM
Last Updated : 24 Mar 2021 03:13 AM
‘இயற்றலும் ஈட்டலும்’ எனத் தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டித் தொடங்குகிறது மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பிரகடனம். திமுக, அதிமுக கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் வாக்குறுதிகளும்தான் தமிழக அரசு 5.75 லட்சம் கோடி கடன்பட்டிருப்பதற்குக் காரணம் என்று சுட்டிக்காட்டும் இந்தப் பிரகடனம், இலவசங்களை அறிவிப்பது மக்களுக்கு விரோதமானது என்று கண்டிக்கிறது. இலவசத் திட்டங்களுக்காகச் செலவிடப்படும் பெருந்தொகையால் தடைபட்டு நிற்கும் அத்தியாவசியத் திட்டங்களைச் சுட்டிக்காட்டுகிறது. தம்மால் மட்டுமே தமிழகத்துக்கான தொலைநோக்குத் திட்டங்களை அவற்றின் தன்மை மாறாமல் நடைமுறைப்படுத்த முடியும் என்று உறுதியளிக்கிறது மக்கள் நீதி மய்யம்.
மநீம-வின் தேர்தல் அறிக்கை அடுத்த பத்தாண்டுகளுக்கானதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. துறைவாரியாக 41 பகுதிகளாக அமைந்துள்ளது. பொருளாதாரத்துக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளுக்குள் தமிழகத்தின் வருமானத்தை நான்கு மடங்காக்கிக் காட்டுவோம் என்று சூளுரைக்கிறது. அரசின் கடனைக் குறைப்பதோடு வரியில்லா வருமானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க முனைகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுத் துறை நிறுவனங்களைச் சீர்படுத்தவும் அந்நிறுவனங்களின் ஊழியர்களைப் பங்குதாரர்களாக அங்கீகரிக்கவும் விரும்புகிறது.
தொகுதிகளே அலகுகள்
ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களைக் கண்டிக்கும் மநீம, மாநிலப் பட்டியலில் இருக்கும் விவசாயத் துறை குறித்து மாநில அரசே சட்டமியற்றும் என்று அறிவிக்கிறது. நகரங்களின் வசதிகளை உள்ளடக்கிய ஊரகப் பகுதிகள் என்ற அப்துல் கலாமின் கருத்துருவான புரா திட்டத்தின் அடிப்படையில், ஊரகத் தொகுப்புகள் உருவாக்குவதும் 234 தொகுதிகளின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. மாவட்டம், வட்டம், ஒன்றியம் என்ற வருவாய்த் துறை அடுக்குகளுக்கு மாற்றாக தொகுதிகளையே மநீம அலகாகக் கொண்டிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.
ஜிஎஸ்டி வரியமைப்பால் சிறு குறு நடுத்தரத் தொழில் துறைகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் நசிவடைந்த தொழில்கள் புத்துயிர் பெறுவதற்கு, ஜிஎஸ்டி வரியமைப்பில் திருத்தங்கள் செய்ய முயற்சிக்கப்படும் என்று உறுதியளிக்கிறது மநீம. தொழில் துறைகள் ஒவ்வொன்றையும் மூன்று மடங்கு வளர்த்தெடுக்க முயற்சி செய்யப்படும் என்று அக்கட்சி கூறுகிற அதே நேரத்தில், அதற்கான வழிமுறைகளில் ஒன்றாக அந்நிய முதலீட்டையும் முன்னிறுத்துகிறது என்பது கவனிக்கத்தக்கது.
பெயரும் செயலும்
அமைப்புசாரா தொழிலாளர்களையும் அமைப்பு களாக்குவது நல்ல யோசனைதான். அதற்காக அவர்களது தொழிற்பெயர்களில் மாற்றங்கள் கொண்டுவந்துவிடுவதாலேயே அவர்களது தொழில் நிலைமையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுவிடுமா என்ன? கட்டுமானத் தொழிலாளர்களை வாழ்க்கை முறை மேம்படுத்துநர்கள் என்று அழைத்தால் மட்டும் போதாது, அவர்களது வாழ்க்கையும் மேம்பட வேண்டும். மூன்றாம் பாலினருக்கு திருநங்கையர் எனப் பெயர் சூட்டியதால் மட்டுமல்ல, அவர்களுக்கு நலவாரியம் தொடங்கியதற்காகவுமே மு.கருணாநிதி நினைவுகூரப்படுகிறார். எந்தவொரு பெயர் மாற்றமும் செயலிலும் வெளிப்பட வேண்டும்.
குடிசை இல்லா வீடுகள், 20 லட்சம் நவீன பசுமை வீடுகள், ஒரு லட்சம் கோடி பொருளாதாரம் என்று இந்தப் பிரகடனத்தில் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தொழில் மற்றும் உற்பத்தித் துறைகளில் உலகளாவிய நிறுவனங்களுடன் சேர்ந்து தமிழகத்தின் வரியில்லாத வருவாயை ஆண்டுக்கு ரூ.2 லட்சமாக உயர்த்தி, அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் கடன் சுமை முற்றிலும் இல்லாமல் ஆக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால், உலகளாவிய நிறுவனங்களுடனான கூட்டுறவு, முதலீட்டின் அடிப்படையிலானதா, தொழில்நுட்பத்தின் அடிப்படையிலானதா என்பது குறித்தெல்லாம் போதிய விளக்கங்கள் இல்லை. காகிதங்களைத் தவிர்த்துக் கணினிமயப்படுத்துவதாலேயே ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட முடியும் என்ற புதிய ‘வெண்மைப் புரட்சி’யின் நம்பிக்கை அசாத்தியமானதாக இருக்கிறது. அரசு ஊழியர்களின் பணிக்காலத்தை மதிப்பிட்டு அவர்களை முன்கூட்டியே ஓய்வுபெறச் செய்வதற்கான திட்டங்கள் சற்றே அதிர்ச்சியையும் அளிக்கின்றன.
ஆறு, குளங்கள், ஏரிகள் அனைத்தையும் இணைக்கும் நீலப் புரட்சி, மரபணு மாற்றப்பட்ட பயிர்களை ஆதரிக்கும் பசுமைப் புரட்சி, மதிப்புக் கூட்டப்பட்ட வேலைவாய்ப்பு, தமிழ் படித்தோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, ஆங்கில மொழியறிவுக்குத் தனிப் பயிற்சி, எல்லா நகரங்களிலும் மோனோ ரயில் திட்டம், ராணுவத் தரத்தில் மக்கள் உணவகம் என மநீமவின் பிரகடனம் விரிகிறது. ஏற்கெனவே காஞ்சிபுரத்தில் அறிவிக்கப்பட்ட செழுமைக்கோடு வரையறைகளும் இந்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ளன.
குடும்பத் தலைவிகளுக்கு வருமானம்
கோவையில் கடந்த மார்ச் 19-ல் தேர்தல் அறிக்கையை அறிமுகப்படுத்திப் பேசிய கமல்ஹாசன், இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற தங்களது கருத்து அரசியல் கட்சிகளால் ரூ.1,000, ரூ.1,500 என்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாகப் புதிய விளக்கத்தை அளித்துள்ளார். திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கி, இல்லத்தரசிகளின் வருமானத்தை உயர்த்துவதுதான் அவரது உண்மையான திட்டமாம். ஆனால், வீட்டு வேலை மட்டுமே செய்யும் மகளிருக்கு ரூ.3,000 மதிப்புரிமைத் தொகையாக வழங்கப்படுமாம்.
முன்னுரையிலேயே இலவசத் திட்டங்களைச் சாடியபடி தொடங்கும் மநீமவின் தேர்தல் அறிக்கை, இலவசங்களிலிருந்து முற்றிலுமாக விலகி நிற்கவும் முடியவில்லை. அறிக்கையின் கடைசி அத்தியாயத்தில் உறுதியளிக்கப்பட்ட திட்டங்களுக்கு ‘இலவசங்கள் அல்ல, சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள்’ என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. எல்லா இலவச அறிவிப்புகளுக்கும் அதே காரணங்கள்தான் சொல்லப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT