Published : 22 Mar 2021 03:13 AM
Last Updated : 22 Mar 2021 03:13 AM
திமுகவின் தேர்தல் அறிக்கையைப் படிக்கிறபோது அது ஒற்றை மேஜையிலிருந்து உருவாகவில்லை என்பது உறுதியாகிறது. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவானது தமிழகம் முழுவதும் பயணித்து ஐந்து கட்டங்களாகக் கட்சியின் பொறுப்பாளர்களையும் பொதுநல ஆர்வலர்களையும் சந்தித்து அதன் அடிப்படையில் இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது. அறிக்கை தயாரிப்புக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான சுப்புலெட்சுமி ஜெகதீசன் மட்டுமே நூற்றுக்கணக்கானவர்களிடம் தொலைபேசி வாயிலாகக் கருத்துகளைக் கேட்டறிந்திருக்கிறார். மற்றொரு உறுப்பினரும் கல்வியாளருமான அ.இராமசாமி தனது முழு நேரத்தையும் இதற்காகச் செலவழித்து கருத்துகளைத் தொகுத்தும் செம்மைப்படுத்தியும் இருக்கிறார். இது தவிர, தேர்தல் வியூக அமைப்பில் இணைந்து பணியாற்றும் இளைஞர்கள் ஊர் ஊராகச் சென்று அங்குள்ள நீண்ட காலக் கோரிக்கைகளைத் திரட்டியிருக்கிறார்கள். ஐஏஎஸ் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள்கூடத் தங்களது ஆலோசனைகளை அனுப்பி அவை ஏற்றுக்கொள்ளப்பட்டதைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துவருகிறார்கள்.
அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் பல மாத ஒருங்கிணைந்த உழைப்பு தெரிகிறது என்றாலும் கடைசியில் இத்தனையையும் ஒரே ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றிவிட முடியுமா என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. எதிர்காலத் தமிழகம் குறித்த பல்லாயிரக்கணக்கோரின் கனவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் திமுகவின் தேர்தல் அறிக்கை வடிவம் கண்டிருக்கிறது என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு ஆட்சிக்கு வந்தாலும் அடுத்த ஐந்தாண்டுகளில் இவற்றில் ஐந்தில் ஒரு பகுதியைக்கூட திமுகவால் நிறைவேற்றிவிட முடியாது என்பதும் உண்மை.
பிரதானத் திட்டங்கள்
ஆட்சியைப் பிடித்துத் தொடரவும் செய்யும்பட்சத்தில் படிப்படியாக மேற்கொள்ளப்பட வேண்டிய தொலை நோக்குத் திட்டங்கள் பலவற்றையும் உள்ளடக்கிய பட்டியல் இது. நீண்ட கால அவகாசத்தைக் கோரும் அந்தத் திட்டங்களுக்கான தெளிவான புரிதலையும் கொண்டிருக்கும் அறிக்கை என்ற அளவிலேயே திமுகவின் தேர்தல் அறிக்கையைப் பற்றி மதிப்பிட முடியும்.
நீதிக் கட்சி வரலாற்றின் பெருமிதங்களிலிருந்து தொடங்கும் திமுகவின் தேர்தல் அறிக்கை அந்தக் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றான மாநிலங்களின் உரிமைகளுக்கு முதலிடம் கொடுத்துள்ளது. கல்வித் துறையை மாநில அரசுப் பட்டியலுக்குத் திரும்பக் கொண்டுவருதல், தமிழ்நாட்டுக்கென தனிக் கல்விக் கொள்கையை உருவாக்குதல், ஒன்றிய ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழை இடம்பெறச் செய்வதற்கான முயற்சிகள், தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவலக மொழியாக்குதல், உச்ச நீதிமன்றப் பணிகளைப் பரவலாக்கிவிடும் வகையில் தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் மேல்முறையீட்டு நீதிமன்றங்களை உருவாக்குதல், தமிழை உயர் நீதிமன்ற மொழியாக அங்கீகரித்தல் ஆகிய திட்டங்களை அது முன்வைக்கிறது. உலகத்தின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கைகள் நிறுவப்படும் என்பதோடு அனைத்து மாநகராட்சிகளிலும் செம்மொழிப் பூங்காவை நிறுவவும் உறுதியளிக்கிறது. கட்சிக் கொள்கை, வெகுமக்கள் விருப்பம் ஆகியவற்றைத் தாண்டி துறைசார்ந்த வல்லுநர்களின் கருத்துகளும் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதற்கான ஒரு சான்று, தமிழ் எழுத்துவடிவங்களில் மாற்றங்கள் செய்வதைக் கட்டுப்படுத்தும் சட்டம். ஊடகங்கள் பயன்படுத்தும் எழுத்துருக்களும் இதில் உள்ளடக்கம்.
அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்களை விசாரிப்பதற்குத் தனி நீதிமன்றம், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆகியவை தேர்தல் வாக்குறுதிகளாகாது; அதிமுகவை வம்புக்கு இழுப்பதையே நோக்கமாகக் கொண்டவை. எனினும், வெளிப்படையான நிர்வாகம், சேவை உரிமைச் சட்டம், வேளாண் துறைக்கென்று தனி நிதிநிலை அறிக்கை என்று தொடரும் வாக்குறுதிகள் ஆட்சி நிர்வாகத்திலும் நிதி நிர்வாகத்திலும் கவனத்துக்குரியவையாக அமைந்துள்ளன.
விவாதங்களும் விளக்கங்களும்
முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் அகதிகளாக வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை கிடைக்க முயற்சிகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ள திமுக, அதற்காகக் குடியுரிமைத் திட்டத்தில் நான்காவது நாடாக இலங்கையையும் இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. எனில், குடியுரிமைச் சட்டத்தை திமுக ஏற்றுக்கொள்கிறதா என்று விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அந்தச் சட்டத்தை திமுக இப்போதும் ஆதரிக்கவில்லை என்று விளக்கம் கூறப்பட்டுத் திருத்தமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறு குறு விவசாயிகளின் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதியும் பின்பு அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி என்பதாகத் திருத்தம் கண்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்கள் ரத்துசெய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய பிறகுதான் ஆளும் அதிமுக கூட்டுறவுச் சங்கக் கடன்களை ரத்துசெய்ததாக உரிமை கோரிவருகிறது திமுக. தற்போது தேர்தல் அறிக்கையில் தாங்கள் கூறிய பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு, அரசு ஊழியர்களுக்கு ஓராண்டு கால மகப்பேறு விடுப்பு, மகளிருக்கு பஸ் பயணச் சலுகைத் திட்டம், முதியோர் உதவித் தொகை உயர்வு, கல்விக் கடன் தள்ளுபடி, வெளிநாடு வாழ் தமிழர்களுக்குத் தனித் துறை, கரிசல் மண் எடுக்க அனுமதி, ஆட்டோ வாங்க மானியம், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதியை அதிமுக காப்பியடித்துவிட்டது என்று குற்றஞ்சாட்டுகிறது.
திமுகவின் தேர்தல் அறிக்கை மார்ச் 13 அன்றும் அதிமுகவின் அறிக்கை அடுத்த நாளும் வெளியாகின. அதிமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்த பிறகு இரண்டு நாட்கள் அவகாசத்தில் திமுக தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டதுபோல, தேர்தல் அறிக்கை விஷயத்தில் அதிமுகவுக்கு ஒரு வாய்ப்பு. அதே நேரத்தில், அதிமுகவின் அம்மா உணவகங்கள் போன்ற நல்ல திட்டங்களைக் கலைஞர் உணவகங்கள் என்ற பெயரில் திமுகவும் நகலெடுத்திருக்கிறது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பொது இடங்களில் தாய்மார்கள் பாலூட்டுவதற்கான வசதிகளை மேம்படுத்துவோம் என்று திமுகவும் கூறியிருக்கிறது. நல்ல திட்டங்கள் எப்படியோ நிறைவேறினால் சரிதான்.
அதிமுக தேர்தல் அறிக்கையுடன் ஒப்பிடுகையில் திமுகவின் தேர்தல் அறிக்கை மிகவும் விரிவானது மட்டுமின்றி, நுட்பமானதும்கூட. ஓர் உதாரணத்துக்கு விவசாயத் துறையை எடுத்துக்கொள்ளலாம். நியாயவிலைக் கடைகளில் பனை வெல்லம், தனி விவசாயிகளுக்கும் பயிர்க் காப்பீடு, தென்னை, பனை விவசாயிகளுக்கான சிறப்புத் திட்டங்கள், தேங்காய் நேரடிக் கொள்முதல் என்று தெளிவான பார்வையோடு விவசாயத் துறைக்கான தனது திட்டங்களை விளக்கியிருக்கிறது திமுக. நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆய்வு மையம் நிறுவப்படும் என்பது போன்று ஆங்காங்கே ஒருசில அறிவிப்புகளை நகலெடுத்துவிட்டதாலேயே அதிமுக தேர்தல் அறிக்கை குறித்து திமுகவினர் பதற வேண்டியதில்லை.
திமுக அறிக்கையின் பலம்
திமுகவின் மொத்த அறிக்கையையும் அதிமுக அப்படியே அறிவித்திருந்தாலும்கூட திமுகவின் மாவட்டவாரியான தேர்தல் அறிக்கை அதன் பலத்தில் தனித்து நிற்கும். ஒவ்வொரு மாவட்டத்தின் தீர்க்கப்படாத நெடுநாள் கோரிக்கைகளைப் பட்டியலிட்டிருக்கிறது திமுக. மாவட்டவாரியான தேர்தல் அறிக்கையைப் படிக்கும் ஒருவருக்கு அவரது ஊரின் பெயரைக்கூட அதில் பார்க்கக் கிடைக்கலாம். குறைந்தபட்சம் ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரைச் சுற்றியுள்ள ஐந்து கிமீ பரப்பளவின் நெடுநாள் பிரச்சினை தேர்தல் அறிக்கையில் விவாதிக்கப்பட்டிருப்பது நெருக்கத்தை உருவாக்கக்கூடும்.
கடைசியாக, தமிழகத்தை இந்தியாவின் முன்னுதாரணமாக மாற்றிக் காட்டக்கூடிய வாய்ப்புகள் உள்ள இந்தக் கனவுகள் முழுவதும் நிறைவேறுமா, அதற்குத் தேவையான நிதியாதாரங்களுக்கு என்ன செய்யப்போகிறோம், கால அவகாசம் என்ன என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. முதலில், கூரை ஏறிக் கோழியைப் பிடிப்போம் என்று எண்ணவும் தோன்றுகிறது. மொத்த வாக்குறுதிகளிலிருந்து முன்னுரிமைப் பட்டியல் ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியம். தேர்தல் வாக்குறுதிகள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்று ஒவ்வொரு மாதமும் முதல் நாளன்று அறிக்கை அளிக்கப்படும் என்பதாகக் கூறப்பட்டுள்ளது. நம்புவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT