Published : 22 Mar 2021 03:13 AM
Last Updated : 22 Mar 2021 03:13 AM

வங்க அரசு ஊழலால் பீடிக்கப்பட்டிருக்கிறது!- கைலாஷ் விஜய்வர்கியா பேட்டி

ஷிவ் சஹாய் சிங்

பாஜகவின் தேசிய பொதுச் செயலரான கைலாஷ் விஜய்வர்கியா, கடந்த ஆறு ஆண்டுகளாக வங்கத்துக்கான பாஜகவின் நோக்கராக இருக்கிறார். வங்கத்தில் பாஜகவின் எழுச்சிக்கு முக்கியக் காரணகர்த்தாக்களுள் ஒருவராக அவர் பார்க்கப்படுகிறார். 2016-ல் வெறும் 10.18% வாக்குகள் மட்டுமே பெற்ற கட்சி, 2019-ல் 40.3% வாக்குகளாக உயர்ந்து, வங்கத்தில் பிரதானமான எதிர்க்கட்சியாக உருவெடுத்ததற்குக் காரணமாக இருந்திருக்கிறார். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் குறித்துப் பேசுகிறார்...

வங்கத்தில் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில் அங்கே பாஜகவின் நிலை என்ன?

வங்கத்தில் அடுத்த அரசை அமைப்பதற்கு பாஜக தயாராகிவருகிறது. வங்க மக்கள் இரண்டு அரசுகளுக்கிடையே ஒன்றைத் தேர்ந்தெடுக்கப்போகிறார்கள் - மத்தியில் உள்ளது ஒன்று, மாநிலத்தில் உள்ளது ஒன்று. மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள தலைமைகளின் பாணிகளுக்கிடையே உள்ள வேறுபாட்டை மக்கள் அறிந்திருக்கிறார்கள். ஒரு பக்கம், நரேந்திர மோடி மீதும், அவரது அமைச்சர்கள் யார் மீதும் கடந்த ஆறு ஆண்டுகளாக ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதும் இல்லை. மத்திய அரசின் திட்டங்கள் வெளிப்படைத்தன்மையுடன் மக்களைப் போய்ச்சேருகின்றன. இந்தத் திட்டங்களில் இடைத்தரகர்களின் தொல்லை கிடையாது. இன்னொரு பக்கம் பார்த்தால், வங்க மாநில அரசின் திட்டங்கள் ஊழலால் பீடிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு திட்டத்துக்கும் வங்க மக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது.

வங்கத்தில் பாஜக ஒரு முக்கியமான சக்தியாக உருவெடுக்கும் என்று நீங்கள் எப்போது உணர்ந்தீர்கள்?

2014 மக்களவைத் தேர்தலில் வங்கத்தில் 17% வாக்குகளை பாஜக பெற்றது. ஒரு சரியான மாற்றாக இந்தக் கட்சியை முன்வைத்தால் பாஜகவை மக்கள் ஆதரிக்கத் தயாராக இருப்பார்கள் என்ற எண்ணத்தை அது தந்தது. அப்போதிருந்து பல்வேறு பிரச்சாரங்களின் மூலம் எங்கள் கட்சியில் இணையும்படி மக்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். 2018-ல் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடவும், மக்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தவும் விடாமல் மாநில அரசு முட்டுக்கட்டைகளைப் போட்டது. மக்களின் கோபம்தான் 2019-ல் 42 இடங்களுள் பாஜக 18 இடங்களில் வென்றதில் பிரதிபலித்தது.

மாநிலத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தாங்கள்தான் காரணம் என்று திரிணமூல் காங்கிரஸ் அரசு கூறிக்கொள்கிறதே?

என்ன மாதிரியான வளர்ச்சி? வங்கத்தில் தான் என்ன சாதித்தேன் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டையாவது மம்தாஜியால் கூற முடியுமா? கடந்த இரண்டு ஆட்சிக் காலங்களிலும் தான் என்ன சாதனைகள் புரிந்தோம் என்பதை மாநில அரசால் எடுத்துக்காட்ட முடியவில்லை. சுதந்திரத்துக்கு முன்பு இந்தியாவில் மிகுந்த வளம் கொண்ட மாநிலங்களுள் ஒன்றாக வங்கம் இருந்தது. இன்று, மிகவும் பின்தங்கிய மாநிலங்களுள் ஒன்றாக இருக்கிறது. இடதுசாரி ஆட்சிக் காலத்தில் ஆரம்பித்து திரிணமூலின் ஆட்சிக் காலம் வரை பின்னடைவுகளையே வங்கம் சந்தித்திருக்கிறது. 1970-களில் நாட்டின் தொழில் துறைப் பங்களிப்பில் வங்கத்தின் பங்கு 24.8%; இன்று அது வெறும் 2.3%-தான். பல்வேறு கலாச்சார நடவடிக்கைகளுடன் சைதன்ய மஹாபிரபு, ராமகிருஷ்ண பரமஹம்சம் போன்றவர்களின் ஆன்மிகப் பங்களிப்புகளையும் உலகுக்கு வங்கம் அளித்திருக்கிறது. இன்று அவர்களின் பக்தர்களெல்லாம் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணரவில்லை. அதிகாரவர்க்கமானது அரசியல்மயப்படுத்தப்பட்டிருக்கிறது, காவல் துறை நிர்வாகமோ குற்றவாளிகளுடனும் மாஃபியாக்களுடனும் கைகோத்துச் செயல்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக என்ன நடந்ததென்றால் ரவுடிகளின் ராஜ்ஜியமும் மாஃபியாக்களின் ராஜ்ஜியமும்தான். நாட்டின் எல்லைப் பகுதிகளுள் ஒன்றைக் கொண்டிருக்கும் மாநிலம் வங்கம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஆகவே, உள்நாட்டுப் பாதுகாப்புக்கு முக்கியமான மாநிலம் இது. சட்டவிரோத ஊடுருவலால் பெரிய ஆபத்து எழுந்துள்ளது. கால்நடைகள் கடத்தப்படுவது இன்னும் தொடர்கிறது என்பதை நிரூபிக்கப் போதுமான சான்றுகள் உள்ளன.

கட்சித் தாவலை பாஜக ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது என்று சொல்லப்படுகிறது. இப்போது திரிணமூல் காங்கிரஸின் பல தலைவர்கள் பாஜகவில் இருப்பதால் இந்தக் கட்சி திரிணமூலின் பி-டீம் ஆகிவிட்டது என்று சொல்லப்படுகிறதே?

நதியொன்று கடலில் கலக்கும்போது அது தன்னுடைய அடையாளத்தை இழந்து கடலின் அங்கமாகிவிடும். உலகிலேயே மிகப் பெரிய கட்சி பாஜகதான்; அதில் சேர்பவர்கள் அந்தக் கட்சியின் அங்கமாகத்தான் ஆவார்கள். அப்படிச் சேர்பவர்கள் இந்தக் கட்சிக்குப் பங்களிக்க வேண்டும். பாஜகவில் முகுல் சேரும்போது திரிணமூல் காங்கிரஸின் இரண்டாவது முக்கியமான தலைவராக அவர் இருந்தார். ஆரம்ப நாட்களில் அவர் இரண்டாவது வரிசையில் அமர்வார், முதல் வரிசையில் அல்ல. எங்களுடன் சேர்ந்த பலருக்கும் இதே நிலைதான்.

பாஜக என்ன மாற்றை முன்வைக்கிறது?

ஒவ்வொரு துறையிலும் வங்கம் அளப்பரிய சாத்தியங்களைக் கொண்டுள்ளது. தொழில் துறை வளர்ச்சிக்குப் பெரும் சாத்தியம் இருக்கிறது. சிங்கூரிலிருந்து டாடா நிறுவனத்தை மம்தாஜி துரத்திய பிறகு இந்த மாநிலத்தில் முதலீடு செய்ய எந்தத் தொழில் நிறுவனமும் முன்வரவில்லை. தொழில் துறை வளர்ச்சிக்கும், அடிப்படைக் கட்டமைப்புகளின் மேம்பாட்டுக்கும், தரமான கல்விக்கும் நாங்கள் உறுதியளிக்கிறோம். வங்கம் கடற்கரையைக் கொண்டிருக்கிறது. அதன் துறைமுகங்களை மிகுந்த அளவில் பயன்படுத்திக்கொள்ள முடியும். இங்கே நிலக்கரிச் சுரங்கங்களும் உள்ளன. இந்த மாநிலத்தில் தொழில்திறன் கொண்டவர்களில் தொடங்கி இடவசதி வரை எல்லாமே இருக்கிறது. இல்லாதது எதுவென்றால் இதையெல்லாம் பயன்படுத்தக்கூடிய அரசியல் உறுதிப்பாடுதான். இன்னொரு விஷயம் என்னவென்றால் எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்து சட்டவிரோதச் செயல்களைத் தடுத்து நிறுத்துவது. 2011-ல் சிபிஐ-எம் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்காக மக்கள் திரிணமூல் காங்கிரஸுக்கு வாக்களித்தார்கள். தற்போது இந்த மாநிலத்தின் மக்களோ வளர்ச்சியை விரும்புகிறார்கள். அதனால்தான், பாஜகவுக்கு இவ்வளவு ஆதரவு காணப்படுகிறது. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மட்டுமே வளர்ச்சி சாத்தியமாகும் என்று வங்கத்தின் மக்கள் அறிந்திருக்கிறார்கள்.

‘தி இந்து’, தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x