Last Updated : 15 Mar, 2021 03:12 AM

3  

Published : 15 Mar 2021 03:12 AM
Last Updated : 15 Mar 2021 03:12 AM

அரசு வங்கிகள் விற்பனைக்கல்ல!

பொதுத்துறை வங்கிகளைத் தனியார் கைகளுக்கு மாற்றும் பணி இப்போது தீவிரமாக நடந்தேறிவருகிறது. நாடு சுதந்திரமடைந்தது முதல் 1969 வரை ஆகப் பெரும்பாலான வங்கிகள் தனியார் வசம்தான் இருந்தன. அவற்றில் பெரும்பாலானவை திவாலாகி மக்களின் சேமிப்பு காணாமல் போனது. மீதமிருந்த சில பெரிய வங்கிகள் பெருநிறுவன முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருந்தன.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் இந்தத் தனியார் வங்கிகள் எதுவும் செய்யவில்லை. அவை தங்களுக்குள்ளேயே கடன் கொடுத்துத் தங்களின் வியாபாரத்தைப் பெருக்குவதிலேயே குறியாக இருந்தன. எனவேதான் 1969-ல் 14 பெரிய தனியார் வங்கிகள் அரசு வங்கிகளாக ஆக்கப்பட்டன.

நாட்டின் முன்னுரிமைகளான விவசாயம், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்புப் பெருக்கம், ஏற்றுமதி ஆகியவற்றுக்கு அரசு வங்கிகள் பெருமளவு கடன் கொடுத்தன. சாதாரண, நடுத்தர மக்களின் சேமிப்பு சாமானிய மக்களுக்குக் கடனாக வழங்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. நாட்டின் சுயசார்பு வளர்ந்தது.

ஆனால், இதற்கு நேரெதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் பெருநிறுவன முதலாளிகளிடம் அரசு வங்கிகளை விற்பதற்கான முன்மொழிவுகள் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. முதலில் ஐடிபிஐ வங்கியும் இரண்டு அரசு வங்கிகள் தனியார்வசம் ஒப்படைக்கப்படும்; மேலும் அரசு வங்கிகள் தொடர்ந்து தனியாருக்குக் கைமாறும் என்று ஒன்றிய அரசு கொள்கைப் பிரகடனம் செய்துள்ளது.

பெருநிறுவனங்களுக்கு அனுமதி

இதற்கு முன்னோடியாக 2020 நவம்பர் மாதம் ரிசர்வ் வங்கி ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதன்படி பெருநிறுவனங்களும் ரூ.50 ஆயிரம் கோடி சொத்துள்ள வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களும் வங்கிகள் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட ஐவர் குழு 10 நிபுணர்களைக் கலந்தாலோசித்தது. அவர்களில் நால்வர் ரிசர்வ் வங்கியின் முன்னாள் உதவி ஆளுநர்கள், ஆறு பேர் தனியார் துறை வங்கி மற்றும் சேவை நிறுவனங்களின் தலைவர்கள்.

இவர்களில் 9 நிபுணர்கள் எதிராகக் கருத்து கூறியும்கூட ரிசர்வ் வங்கியின் ஐவர் குழு பெருநிறுவனங்கள் வங்கிகள் தொடங்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது. அமெரிக்காவில்கூட பெருநிறுவனங்கள் வங்கிகள் தொடங்க அனுமதிக்கப்படுவதில்லை. ஆனாலும் ஒன்றிய அரசு ஒருபுறம் பெருநிறுவனங்களை வங்கி தொடங்க அனுமதித்துவிட்டு, மறுபுறம் அவர்களிடம் அரசு வங்கிகளை ஒப்படைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இன்றளவிலேயே வங்கித் துறையில் 74% வரை அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. பல புதிய தனியார் வங்கிகளில் அந்நிய நாட்டு நிறுவனங்களின் பங்கு 51%-க்குக் கூடுதலாக உள்ளது. ஒன்றிய அரசின் இந்தத் தனியார்மயமாக்கும் முயற்சி வெற்றிபெற்றால், நமது நாட்டின் அரசு வங்கிகள் நேரடியாக அந்நிய முதலீட்டாளர்களின் கைகளுக்கு மாறும் ஆபத்தும் உள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் ‘பாங்க் ஆஃப் தஞ்சாவூர்’, ‘பாங்க் ஆஃப் தமிழ்நாடு’, ‘பாங்க் ஆஃப் கொச்சின்’, ‘பூர்பஞ்சல் பாங்க்’ உள்ளிட்ட 38 தனியார் வங்கிகள் திவாலாகியுள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றை அரசு வங்கிகள்தான் தங்களோடு இணைத்துக்கொண்டு, இவ்வங்கிகளையும் அவற்றில் இருந்த வாடிக்கையாளர்களின் சேமிப்புப் பணத்தையும் காப்பாற்றியுள்ளன. 1991-ல் புதிய பொருளாதாரக் கொள்கை அமலானதற்குப் பின்பு, மிகுந்த ஆரவாரத்தோடு தொடங்கப்பட்ட 10 வங்கிகளில் ‘குளோபல் டிரஸ்ட் பாங்க்’, ‘டைம்ஸ் பாங்க்’ உள்ளிட்ட 4 வங்கிகள் திவாலாகிவிட்டன.

உயர்மட்ட ஊழல்

புதிய தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி, பழைய தனியார் வங்கியான லஷ்மி விலாஸ் வங்கி, வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களான டிஎச்எஃப்எல், ஐஎல் & எஃப்எஸ் ஆகியவற்றிலெல்லாம் உயர்தரப்பு ஊழல் தலைவிரித்தாடுகிறது. அந்நிறுவனங்களின் உயர்தரப்பு நிர்வாகிகளே நிறுவனங்களின் பணத்தை விதிகளுக்குப் புறம்பாகக் கடன் கொடுத்துவிட்டு, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கையூட்டாகப் பெற்றுள்ளனர் என்று ஒன்றிய புலனாய்வுத் துறையும், அமலாக்கத் துறையும் குற்றம் சாட்டுகின்றன.

ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் சந்தா கோச்சார் ஐசிஐசிஐ வங்கியிலிருந்து வீடியோகான் நிறுவனத்துக்குக் கடன் கொடுத்துவிட்டு, தனது கணவர் தீபக் கோச்சார் நடத்திய நிழல் நிறுவனம் மூலமாக வீடியோகான் நிறுவனத்திடமிருந்து கையூட்டு பெற்றார் என்று குற்றம்சாட்டப்பட்டு வழக்கு நடைபெற்றுவருகிறது. யெஸ் வங்கியின் தலைவர் ராணா கபூர், யெஸ் வங்கியின் கடனாளிகளிடமிருந்து தங்கள் உறவினர்கள் நடத்திவந்த நிழல் நிறுவனங்கள் மூலமாகப் பல கோடி ரூபாய் கையூட்டுப் பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடைபெற்றுவருகிறது. இத்தகையோரிடம்தான் அரசு வங்கிகளை ஒப்படைக்க வேண்டுமென்று ஒன்றிய அரசு கூறுகிறது.

மக்கள் சேவையில் அரசு வங்கிகள்

பிணையில்லாமல், சொத்து அடமானம் இல்லாமல் விவசாயக் கடன், சிறுகுறு தொழில் கடன், பெண்களுக்கான சுயஉதவிக் குழுக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றை வழங்குவதில் அரசு வங்கிகள் கம்பீரமாக முன்னிற்கின்றன. இவை வழங்கும் கடன் அளவிலும் எண்ணிக்கையிலும் கடுகளவுகூட தனியார் வங்கிகள் வழங்குவதில்லை. இத்தகைய கடன்கள்தான் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் பெரும் பங்காற்றுகின்றன. பெரும் கடனாளிகளால் உருவாகும் வராக் கடன் 90% என்றால், சாமானிய மக்களுக்கு வழங்கப்படும் கடனால் உருவாகும் வராக் கடன் 2%-க்கும் குறைவு. மேலும், மொத்தமுள்ள 41.88 கோடி ஏழை மக்களுக்கான ஜன்தன் கணக்குகளில் அரசு வங்கிகள்தான் 40.63 கோடிக் கணக்குகளைத் திறந்துள்ளன என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. எனவே, அரசு வங்கிகள் விற்பனைக்கல்ல.

- சி.பி.கிருஷ்ணன், இணைச் செயலாளர்,
இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்.
தொடர்புக்கு: cpkrishnan1959@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x