

தந்திரம் அடைந்த பிறகு மெட்ராஸ் மாநிலத்துக்கு மூன்றாவது முறையாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு 1962. கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துகொண்டிருந்த திமுகவுக்கு இது இரண்டாவது சட்டமன்றத் தேர்தல்.
ராஜாஜியின் சுதந்திரா கட்சியுடன் திமுக கூட்டணி வைத்திருந்தது. அந்தத் தேர்தலில் பெரியாரின் ஆதரவு காமராஜருக்கே (காங்கிரஸ்) இருந்தது. திமுகவுக்கு ஆதரவாக எம்ஜிஆர் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். காங்கிரஸுக்கு ஆதரவாக சிவாஜி பிரச்சாரம் மேற்கொண்டார். சினிமா உலகின் தாக்கம் அந்தத் தேர்தலில் அதிகமாக இருந்தது. முன்னணி நடிகர்களை வைத்து ‘வாக்குரிமை’ என்ற பெயரில் ஒரு படத்தை காங்கிரஸ் கட்சி எடுத்தது.
தேர்தலில் காங்கிரஸ் 139 இடங்களில் வெற்றிபெற்றது. திமுக 50 இடங்களில்தான் வெற்றிபெற்றது என்றாலும் முந்தைய தேர்தலைவிட 37 தொகுதிகள் அதிகம். அண்ணா காஞ்சிபுரம் தொகுதியில் தோல்வியடைந்தார். இந்தியாவிலேயே முதன்முறையாகத் தேர்தலில் நின்று வெற்றிபெற்ற நடிகர் என்ற சிறப்பை அத்தேர்தலில் திமுக சார்பாகப் போட்டியிட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் பெற்றார்.