Published : 10 Mar 2021 03:11 AM
Last Updated : 10 Mar 2021 03:11 AM
தற்சார்புக் கிராமங்கள்: விவசாயிகளுக்கு நிவாரணங்கள் அளிப்பதாலும் கடன்களைத் தள்ளுபடி செய்வதாலும் மட்டும் அவர்களை நிரந்தரத் துயரிலிருந்து மீட்டெடுத்துவிட முடியாது. நவீனத் தகவல் தொழில்நுட்ப வசதிகளை இணைத்துக்கொண்டு, கிராமங்களைத் தன்னிறைவு பசுமைக் கிராமங்களாக மாற்றுவதன் வாயிலாகவே கிராமப்புற மக்களின், விவசாயிகளின் நலிந்த பொருளாதாரத்தை மீட்டு, நிலைத்த பொருளாதார வளம் பெற முடியும். இதற்கான முன்னெடுப்பு தமிழகத்தில் எடுக்கப்பட வேண்டும். இந்தத் தொலைநோக்குத் திட்டத்துக்குக் காந்தியப் பொருளாதார மேதை ஜே.சி.குமரப்பா வகுத்தளித்த சுதேசி தற்சார்புக் கிராமங்கள் என்ற கருத்து வழிகாட்டும்.
அனைத்து விவசாயிகளுக்கும் அடையாள அட்டை: தமிழகத்தில் சுமார் 79.38 லட்சம் நில உடைமைகள் இருப்பதாக 2015 வேளாண் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்த நில உடைமைகளில் விவசாயம் செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் தனி அடையாள அட்டை வழங்கி, ஒவ்வொரு கிராம அளவிலும் நுண்ணிய அளவு திட்டமிடல் செயலாக்கம் மிக அவசியம். தமிழகத்தின் ஏழு வேளாண் தட்பவெப்ப மண்டலங்களிலும் அவற்றுக்கேற்ற பயிர் சாகுபடித் திட்டம் கட்டாயமாக வேண்டும்.
வேளாண் விளைபொருட்களுக்கு மதிப்பூட்டல் வேண்டும் : ஒவ்வொரு கிராமத்திலும் உற்பத்தியாகும் அனைத்து விளைபொருட்களும் அந்தந்தக் கிராமத்திலேயோ அல்லது நான்கு, ஐந்து கிராமங்கள் இணைந்த கூட்டமைப்பிலேயோ விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள், குறுந்தொழில் நிறுவனங்கள், குடிசைத்தொழில்கள் மூலம் மதிப்பூட்டுதல் செய்வதன் மூலம் விவசாயிகள் லாபம் பெற வழி காண வேண்டும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கில் கிராமப்புற வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். ஒரு கிராமத்துக்கு இத்தகைய தன்னிறைவு பசுமைக் கிராமம் திட்டத்தைச் செயலாக்க ரூ.5 கோடி மட்டும் போதுமானது. தமிழகத்தில் உள்ள 16,743 வருவாய்க் கிராமங்களில் விவசாயம் அதிகமுள்ள சுமார் 10,000 கிராமங்களில் ஆண்டுக்கு 1,000 கிராமங்கள் வீதம் (ஆண்டுக்கு ரூ.5,000 கோடி) 10 ஆண்டுகளில் 10 ஆயிரம் கிராமங்களில் ரூ.50,000 கோடி திட்டம் அமலாக்கினால் அது பொற்சரித்திரமாக மாறும்.
ஏக்கருக்குப் பத்தாயிரம்: தெலங்கானா மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் ‘ரயத்து பந்து’ திட்டம் தமிழகத்துக்கும் தேவையானது. ஒரு விவசாயிக்கு ஒரு போகத்துக்கு ஏக்கருக்கு ரூ.5,000 என்ற அடிப்படையில் ஆண்டுக்கு இரண்டு போக சாகுபடிக்கு, ஏக்கருக்கு ரூ.10,000 வீதம் பயிர் செய்யும் அனைத்துப் பரப்பளவுக்கும் வழங்க வேண்டும்.
முக்கியப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்: ஒவ்வொரு வருவாய்க் கிராமத்திலும், ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும் மூன்று முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒவ்வொரு கிராமத்தின் பத்து முக்கியப் பிரச்சினைகளைக் கிராம மக்கள், கிராம சபைகளின் கூட்டத்தில் கேட்டு முடிவுசெய்து இவற்றில் மூன்று முக்கியப் பிரச்சினைகளை வரிசைப்படுத்தித் தீர்வு காண்பது அடுத்த 10 ஆண்டுகளில் தன்னிறைவான கிராமங்களை உருவாக்குவதற்கு நல்ல தீர்வாகும்.
கால்நடை வளர்ப்புக்குக் கூடுதல் கவனம்: தமிழகத்தின் அந்தந்தப் பகுதிகளின் கால்நடை மற்றும் பசு இனங்கள் வளர்ப்பு முக்கியப்படுத்தப்பட வேண்டும். அனைத்துக் கிராமங்களிலும் மூலிகை வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இத்துடன் அதிக பால் தரும் வடஇந்தியப் பசு இனங்களான கிர், சாஹிவால், காங்கிரேஜ், ரெட்ஸிந்தி, தார்பார்க்கர், ராத்தி ஆகியவற்றைத் தமிழகத்தின் ஏழு தட்பவெப்ப மண்டலப் பருவநிலைக்கு உகந்தவாறு வளர்க்க சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
வட்டியில்லாக் கடன்: தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளின் கடன்கள் பற்றி மட்டுமே அரசு தனது கொள்கையை அறிவிக்கிறது. இதனால் சிறு விவசாயிகள் மட்டுமே பலன் அடைகிறார்கள். எனவே, ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி, அனைத்து வங்கிகளிலும் விவசாயக் கடன்கள் 4% வட்டிக்கும் மிகாமல் கிடைக்க வழிசெய்ய வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் உள்ளதுபோல் தேசிய வங்கிகளிலும் வேளாண் பயிர்க் கடன்களுக்கு முழு வட்டி மானியம் அளித்து ரூ.3 லட்சம் வரை வட்டியில்லாக் கடன் வழங்க வேண்டும்.
அனைத்துப் பகுதிகளிலும் கொள்முதல் நிலையங்கள்: தமிழக அரசு, ஒன்றிய அரசின் இந்திய உணவுக் கழகத்தின் முகவராகச் செயல்பட்டுக் காவிரிப் படுகை மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்துவருகிறது. ஆனால், ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை மற்ற மாவட்ட விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை. இதனால் தனியார் இடைத்தரகர்கள் வெளிமாவட்டங்களின் நெல்லை அங்குள்ள விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கி, காவிரிப் படுகை மாவட்டங்களுக்குக் கொண்டுவந்து விற்றுக் கொள்ளை லாபம் அடைகிறார்கள். இதைத் தடுக்க பஞ்சாப் மாநிலத்தில் உள்ளதுபோல் மேலும் புதிய அரசு கொள்முதல் அமைப்புகளை உருவாக்கி, நெல் உட்பட அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிசெய்ய வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT