Last Updated : 09 Mar, 2021 03:11 AM

 

Published : 09 Mar 2021 03:11 AM
Last Updated : 09 Mar 2021 03:11 AM

பதிப்புத் தொழில்தான் திருப்தியைத் தரும் துறை!- ஆர்.காயத்ரி, ராம்ஜி பேட்டி

சாரு நிவேதிதாவின் வாசக முகாமிலிருந்து வந்த ராம்ஜி, ஆர்.காயத்ரி இருவரும் சேர்ந்து ஆரம்பித்த ‘ஜீரோ டிகிரி பப்ளிஷிங்’ இன்று முன்னணி எழுத்தாளர்கள், இளம் எழுத்தாளர்கள் என்று பலரையும் பதிப்பிக்கும் குறிப்பிடத்தகுந்த பதிப்பகம் ஆகியிருக்கிறது. ஆரம்பித்து சில ஆண்டுகளிலேயே இந்தப் பதிப்பகம் கொண்டுவந்திருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை 200-க்கும் மேல். புத்தகக் காட்சியில் ‘ஜீரோ டிகிரி பப்ளிஷிங்’கின் ராம்ஜி, ஆர்.காயத்ரி இருவரையும் சந்தித்து உரையாடியதிலிருந்து...

நீங்கள் இருவருமே வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள். பதிப்புச் சூழல் என்பது லாபம் தருகிற ஒரு விஷயமாக இல்லையெனினும், இந்தத் துறைக்கு வர வேண்டும் என்று உங்களுக்கு எப்படித் தோன்றியது?

காயத்ரி: 2014-ல் நான் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பிரெஞ்சுப் பேராசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருந்தேன். அப்போது, பிரெஞ்சு எழுத்தாளர் பத்ரிக் மோதியானோவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவருடைய எழுத்து கொஞ்சம்கூட நன்றாக இருக்காது. அவருக்கு நோபல். ஆனால், தமிழில் இருக்கும் நல்ல எழுத்தாளர்களெல்லாம் வெளியில் போய்ச்சேரவில்லை என்று நினைத்தேன். இப்படி இருக்கும்போது சாரு நிவேதிதாவின் ‘எக்ஸைல்’ நாவலை ‘மார்ஜினல் மேன்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்து வைத்துக்கொண்டு, ஒவ்வொரு ஆங்கிலப் பதிப்பகத்திலும் ஏறி இறங்கினோம். யாரும் அந்த நூலைப் பதிப்பிக்க முன்வரவில்லை. அப்போதுதான் ஏன் நாமே ஒரு பதிப்பகம் தொடங்கக் கூடாது என்று தோன்றியது. ராம்ஜி கிட்டத்தட்ட 18 ஆண்டு காலம் என் குடும்ப நண்பர். அவரும் நானும் சாருவும் 2017 புத்தகக்காட்சிக்கு ஒன்றாகச் சென்றோம். சாருவின் புத்தகங்களைப் பதிப்பித்திருக்கும் ஒரு பதிப்பகத்தின் அரங்குக்குச் சென்றோம். கிட்டத்தட்ட 60 புத்தகங்களை சாரு அந்தப் பதிப்பகத்துக்குத் தந்திருக்கிறார். ஆனால், அந்த அரங்கில் சாருவின் 5 புத்தகங்கள்தான் வைக்கப்பட்டிருந்தன. சாரு ரொம்பவும் நொந்துபோய்விட்டார். அப்போதுதான் ராம்ஜி சொன்னார், “நாம ஒரு பதிப்பகம் தொடங்குவோம் சாரு. அதில் உங்கள் புத்தகங்கள் எல்லாவற்றையும் கொண்டுவருவோம்” என்று. எனக்கும் அதே எண்ணம்தான். அப்படி, ஒரு கோப்பை காப்பியில் ஆரம்பித்ததுதான் ‘ஜீரோ டிகிரி பதிப்பகம்’. இதற்காகப் பேராசிரியர் வேலையை விட்டுவிட்டேன். பதிப்புத் தொழில்தான் எனக்குத் திருப்தியைத் தரும் துறை!

ராம்ஜி: ஹெச்எஸ்பிசி வளைகுடாவில் மனிதவளம், பயிற்சி ஆகியவற்றுக்கான தலைமை அதிகாரியாக இருந்தேன். நிறைய சுயமுன்னேற்ற நூல்களும் ஆங்கில நூல்களும் படிப்பேன். இதுதான் என் பின்னணி. இப்படி இருக்கும்போது காயத்ரி சொன்னதுபோல் சாருவுக்காக ஒரு பதிப்பகம் தொடங்க வேண்டும் என்று யோசித்தோம். அதற்குள் நான் இரண்டு திரைப்படங்களுக்கு ஃபைனான்ஸ் செய்துவிட்டிருந்தேன். சினிமா உலகில் நிறைய பணம் வரும் போகும். அதனுடன் பதிப்பகம் ஆரம்பிப்பதற்குத் தேவைப்படும் முதலீட்டை ஒப்பிட்டுப்பார்த்தால், இது ஒன்றுமே இல்லை என்று தோன்றியது. 2017-ல் பூர்வாங்க வேலைகள் தொடங்கி 2018-ல் பதிப்பகத்தை ஆரம்பித்துவிட்டோம். பணம் சம்பாதிக்க எனக்கு சினிமா, ரியல் எஸ்டேட் என்று பல தொழில்கள் இருந்தாலும் என் நேரத்தை நான் அதிகம் செலவழிக்கும் துறை பதிப்புத் துறைதான்.

சாருவின் புத்தகங்கள் சரி, மற்றவர்களின் புத்தகங்களைப் பிரசுரிக்க எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?

ராம்ஜி: நமக்கு என்ன பிடித்திருக்கிறது என்பதைவிட மக்கள் எதை விரும்பி வாசிக்கிறார்கள் என்பதை அறிந்து பதிப்பிக்க வேண்டியது முக்கியம். அதைத்தான் நாங்கள் செய்கிறோம்.

காயத்ரி: நாங்கள் பதிப்பகம் தொடங்கியதும் பலரும் அவர்களுடைய படைப்புகளின் கைப்பிரதியை எங்களுக்கு அனுப்பினார்கள். அவர்கள் அனுப்பியதை நான்தான் படித்துப் பார்த்தேன். அவற்றில் இலக்கியத் தரம் இருக்கிறது என்று எனக்குத் தெரிந்தால் வெளியிடுவது என்ற முடிவை நாங்கள் எடுப்போம். அப்படி முதன்முதலில் எங்களுக்கு வந்த புதிய படைப்பாளியின் படைப்புதான் ஜெர்மனியில் வசிக்கும் இலங்கைத் தமிழ் எழுத்தாளரான சாதனாவின் ‘தொலைந்து போன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்’. அப்புறம் நாங்கள் தேடிப்போகத் தேவையில்லாத அளவில் படைப்புகள் எங்களைத் தேடிவந்தன. புத்தகத் தயாரிப்பைப் பொறுத்தவரை அச்சு, தாள், அட்டை வடிவமைப்பு போன்றவற்றில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்பதற்காக ஆங்கிலப் புத்தகங்களுக்கு நிகராகக் கொண்டுவருகிறோம்.

இப்போது உங்கள் பதிப்பகம் எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது?

ராம்ஜி: பதிப்பகம் ஆரம்பித்து இதுவரை 200-க்கும் மேற்பட்ட புத்தங்களை வெளியிட்டிருக்கிறோம். எங்களிடம் 60 எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இதுவே குறிப்பிடத்தக்க வளர்ச்சிதான் என்று நினைக்கிறோம்.

‘ஜீரோ டிகிரி பப்ளிஷிங்’ கீழே வேறு சில பிரசுரங்களும் தொடங்கியிருக்கிறீர்கள் அல்லவா?

காயத்ரி: ‘ஜீரோ டிகிரி பப்ளிஷிங்’கில் நேரடி ஆங்கில நூல்களையும், தமிழிலிருந்து ஆங்கில நூல்களையும் கொண்டுவருகிறோம். இது மட்டுமல்லாமல், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வரும் புத்தகங்களுக்கும் நேரடித் தமிழ்ப் புத்தகங்களுக்கும் ‘எழுத்து பிரசுரம்’, குழந்தைகளுக்கான இரு மொழிப் புத்தகங்களுக்காக ‘கமர்கட்’ என்ற பிரசுரம், வெகுஜனப் படைப்புகளுக்காக ‘பிறகு’ என்ற பிரசுரம். நானெல்லாம் ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் எழுத்துகளையெல்லாம் படித்துப் படிப்படியாக வளர்ந்தவள்தான். வாசிப்புக்கு உள்ளே ஒருவரை ஈர்ப்பதற்கு அவர்களெல்லாம் முக்கியப் பங்காற்றுகிறார்கள். அதனால்தான் ‘பிறகு’ பிரசுரம். வெகுஜன எழுத்துகளையெல்லாம் மோசமான தாளில், மோசமான அட்டைப் படத்துடன்தான் மக்கள் பார்த்திருப்பார்கள். அந்த எழுத்துகளையும் நல்ல தாளில், நல்ல வடிவமைப்பில் அழகாகக் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறோம்.

எதிர்காலத் திட்டம் என்ன?

ராம்ஜி: மணிக்கொடி எழுத்தாளர்களில் தொடங்கி தற்போதைய பிரபல எழுத்தாளர்கள் வரை பதிப்பிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் நூல்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் நிறைய ஆசை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x