Published : 08 Mar 2021 03:56 AM
Last Updated : 08 Mar 2021 03:56 AM

மகளிர் பாதுகாப்பும் மெளன ஓலமும்

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வெகுமக்கள் கவனத்துக்கு வரும் ஒவ்வொரு நிகழ்வின்போதும், குற்றவாளிகளுக்கு எதிரான கண்டனக் குரல்கள் ஓங்கி ஒலிப்பதும், குற்றவாளி உயர் பொறுப்பில்/ சமூகத்தில் மிகவும் மதிப்பான இடத்தில் இருக்கும் பட்சத்தில் அந்தக் குற்றச்சாட்டு/ வழக்கு நீர்த்துப்போவதும் வாடிக்கையாகிவிட்டது.

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி என்ற காவல்துறையின் உச்சப் பதவியில் இருந்த அதிகாரி ஒருவர் பணி நேரத்தில் ஒரு பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நிகழ்வும் மேற்படி பத்தோடு பதினொன்றாக, தற்காலிகப் பரபரப்புச் செய்தியாகி உரிய சட்ட நடவடிக்கையிலிருந்து தப்பிவிடக் கூடாது எனும் கவலை மேலிடுகிறது. ஒரு சாதாரண நபர் தனக்குக் கீழ்நிலையில் பணிபுரியும் பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டால் அவர் எத்தகைய சட்ட நடவடிக்கைக்கு உள்ளாவாரோ அப்படி அந்த அதிகாரி கைதுசெய்யப்பட வேண்டும். நீதியின் செயல்பாட்டில் அவரது செல்வாக்கு தடைக்கல்லாக ஆகிவிடக் கூடாது.

விசாகா நெறிமுறைகள்

இந்த நேரத்தில் இந்தியாவில் மகளிருக்கு எதிரான பாலியல் குற்றங்களும், மகளிர் பாதுகாப்பும் கடந்து வந்த பாதையில் முக்கிய மைல்கல்லாக அமைந்த விசாகா வழக்கைத் திரும்பிப் பார்ப்போம்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பன்வாரி தேவி என்ற பெண், மாநில அரசின் சமூக மேம்பாட்டுத் துறையில் பணியாற்றிவந்தார். தனது பணியின் அங்கமாக, ஒன்பது மாதப் பெண் குழந்தைக்கு நடைபெறவிருந்த‌ திருமணத்தைச் சட்டத்தின் உதவியுடன் தடுத்து நிறுத்தினார். இதனால் கோபமுற்ற அந்தப் பகுதி உயர்சாதி ஆண்கள் ஐவர் பன்வாரி தேவியை அவளது கணவன் கண்ணெதிரே கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்தனர். வழக்கு உள்ளூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேரையும் மாவட்ட அமர்வு நீதிபதி விடுதலை செய்தார். தீர்ப்பில் அவர் குறிப்பிட்டிருந்த வாசகம் நம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதிய மூடத்தனத்தைப் பிரதிபலித்தது. “உயர்சாதி ஆண்கள் கீழ்சாதிப் பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்தனர் என்ற வாதத்தை ஏற்க முடியவில்லை'' என்ற அவரது கூற்று புயலைக் கிளப்பியது.

பின்னர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டில் குற்றவாளிகளுக்கு வெறும் ஒன்பது மாத சிறைத் தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டது. விசாகா உள்ளிட்ட சில தன்னார்வத் தொண்டு அமைப்புகள் பன்வாரி தேவி வழக்கில் நீதி கோரியதுடன், பணிசெய்யும் இடங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதைத் தடுக்கத் தகுந்த உத்தரவையும் கோரியது. இதை ஏற்ற உச்ச நீதிமன்றம் 1997-ல் வரலாற்றுச் சிறப்புமிக்க விசாகா வழிகாட்டு நெறிமுறை வகுத்து உத்தரவிட்டது.

“பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் விசாகா கமிட்டி ஏற்படுத்த வேண்டும். அந்த அலுவலகத்தில் பணிபுரியும் எந்தப் பெண்ணாகிலும் தனது மேலதிகாரி தனக்குப் பாலியல் தொல்லை தந்தால் அந்த கமிட்டியில் முறையிடலாம். அந்த கமிட்டியின் உறுப்பினர்களில் பாதிப் பேர் பெண்களாக இருக்க வேண்டும். கமிட்டியின் ஒரு உறுப்பினர் அந்த அலுவலகத்தில் பணியாற்றுபவராக அல்லாமல் தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியராக இருக்க வேண்டும். கமிட்டி தனது ஆண்டறிக்கைகளை மாநில அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். விசாகா கமிட்டி அமைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்'' - இவையே உச்ச நீதிமன்றம் பிறப்பித்த விசாகா வழிமுறைகள்.

திசைதிருப்பும் முதல் கேள்வி

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் சட்ட அந்தஸ்து பெறுவது நியதி. அத்துடன் அந்தச் சட்டத்தை மேலும் வலுப்படுத்த 2013-ல் இதையொட்டிப் பணியிடத்தில் பாலியல் தொல்லைத் தடுப்பு, பெண்கள் பாதுகாப்பு, தீர்வுச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்தின்படி அமைக்கப்படும் பணியிடப் புகார் விசாரணைக் குழுவின் செயல்பாட்டில் இருக்கும் குறைகளைக் களைந்து சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பது என் கருத்து. தற்போது அத்தகைய விசாரணையின் தொடக்க நிலையிலேயே பாதிக்கப்பட்ட பெண்ணிடம் “நீங்கள் சமாதானமாகப் போக விருப்பமா?'' என்று கேட்கும் வழக்கம் நிலவுகிறது. இப்படியான கேள்வி ஆரம்பத்திலேயே அந்தப் பெண்ணை மனரீதியாகத் துவண்டுபோகச் செய்யும். ஒரு குற்றத்தை ஒருவர் செய்த பிறகு அவரைத் தண்டிப்பதுதானே முறை. குற்றவாளியைக் காப்பாற்றும் விதமாக எதற்காக சமரசத்துக்கு அந்த விசாரணை அமைப்பு மெனக்கெட வேண்டும்? இந்த நடைமுறையை மாற்றும் விதமாகச் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

பாலியல் தொல்லைத் தடுப்புச் சட்டம் குறித்துத் தொழிலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு இன்னமும்கூட எந்த விவரமும் தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் நான் சென்னை தாம்பரத்தில் உள்ள ஆயத்த ஆடைத் தயாரிப்பு தொழிற்சாலையொன்றில் பெண்கள் மத்தியில் பேச அழைக்கப்பட்டேன். அப்போது அந்த நிறுவனத்தில் விசாகா கமிட்டி இருக்கிறதா என்று கேட்டேன். பல பெண்களுக்கு அது என்னவென்றே தெரியாமல் இருந்தது. இத்தனைக்கும் அந்த நிறுவனத்தில் 3,000-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகின்றனர்.

அச்சுறுத்தும் தகவல்கள்

2019-ல் வெளியான தேசியக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி நாட்டிலேயே உத்தர பிரதேசத்தில்தான் பணி செய்யும் இடத்தில் பாலியல் அத்துமீறல் செய்யப்பட்டதாக மிக அதிகமாக வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றின் எண்ணிக்கை 5,830. இதற்கு அடுத்த நிலையில் மத்திய பிரதேசத்தில் 2,985 வழக்குகளும், அடுத்த நிலையில் மஹாராஷ்டிரத்தில் 2,910 வழக்குகளும் பதிவாகியுள்ளன. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களின் எண்ணிக்கை குறித்த வரைபடத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிஸா, டெல்லி, ஜம்மு-காஷ்மீர், அஸாம், தெலங்கானா, கேரளம் ஆகிய பிரதேசங்கள் சிவப்பு வண்ணத்தில் அச்சுறுத்துகின்றன. தமிழ்நாட்டின் நிலை அவ்வளவு மோசமில்லை என்பது சற்றே ஆறுதல்!

இந்திய அளவில் 2019 கணக்குப்படி 1,45,000 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாகியுள்ளன. பாதிப்புக்கு ஆளானவர்களில் பெண் குழந்தைகள் எண்ணிக்கை 15%. இதற்கிடையில் பாலியல் குற்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் தண்டனை விதிப்பு குறித்த விவரங்கள் மனச்சோர்வையே அளிக்கின்றன: 2006-ல் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 20% மட்டுமே தண்டிக்கப்பட்டனர். 2016-ல் இது 40% ஆக உயர்ந்தது. 2019-ல் இது 29.9% என இறங்குமுகமானது. பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை உயர்வதற்கு குற்றம்சாட்டப்பட்டவர்களின் தண்டிக்கப்படுவதன் எண்ணிக்கை குறைவதும் ஒரு முக்கிய காரணம் என்பதை தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

- திலகவதி, எழுத்தாளர், இந்திய காவல் பணித் துறை அதிகாரி (ஓய்வு)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x