Published : 07 Mar 2021 03:14 AM
Last Updated : 07 Mar 2021 03:14 AM
கவிதை, பதிப்பு, அரசியல், சினிமா எனப் பல்வேறு துறைகளிலும் முழுமூச்சோடு இயங்கிவரும் மனுஷ்யபுத்திரன் இந்தப் புத்தகக்காட்சிக்கு மூன்று பெரும் கவிதைத் தொகுப்புகளைக் கொண்டுவந்திருக்கிறார். 14 மாதங்களில் 1,700 கவிதைகள் எழுதியிருப்பது என்பது சாமானிய காரியம் அல்ல. ‘அன்பில் ஒரு டீஸ்பூன் கூடிவிட்டது’ தொகுப்பில் அகவுணர்வு சார்ந்த கவிதைகளும், ‘அலெக்ஸா... நீ என்னைக் காதலிக்கிறாயா?’ தொகுப்பில் புறவுலக விஷயங்களும், ‘வசந்தம் வராத வருடம்’ தொகுப்பில் ஊரடங்குக் காலக் கவிதைகளும் தொகுக்கப்பட்டிருக்கின்றன.
இவ்வளவு கவிதைகள் எழுதுவதற்கான உந்துதலையும் ஆற்றலையும் எங்கிருந்து பெற்றீர்கள்?
நாம் வாழும் வாழ்க்கையின் சிக்கலான கட்டமைப்புதான் உந்துதலைக் கொடுக்கிறது. இந்தப் பின்நவீனத்துவ யுகத்தில் வாழக்கூடிய ஒரு மனிதனின் வாழ்க்கை மிகவும் பரந்துபட்டதாகவும் சிக்கலானதாகவும் இருக்கிறது. இங்கே தனிமனித அனுபவம் என்ற ஒன்று இல்லவே இல்லை. உலகின் எந்த மூலையில் நடக்கும் சம்பவங்களும் நமக்கே நடப்பதுபோன்ற ஒரு அனுபவத்தை ஏற்படுத்துகிறது. இதை ஒரு படைப்பாளி எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் முக்கியம். எனக்கான காட்சிப் படிமங்களுக்கோ, எனக்கான மன உந்துதலுக்கோ எல்லையே இல்லாமல் ஆகிவிட்டது. எல்லா யதார்த்தத்தையும் கவித்துவ யதார்த்தமாக மாற்ற முடியும் என்கிற அளவில் இன்று என் கண்களும் மனமும் பிரம்மாண்டமாக விரிவடைந்திருக்கின்றன. அது இந்த யுகத்தில் வாழும் ஒரு மனிதனுக்குத்தான் சாத்தியம். அந்த விதத்தில், தொடர்ச்சியாக எழுதுவதற்கான விஷயங்கள் முடிவற்ற விதத்தில் கிடைத்துக்கொண்டே இருப்பதாகப் பார்க்கிறேன். நான் செய்வதெல்லாம் அதற்கு முகங்கொடுப்பது மட்டும்தான்.
கவிதைகளுக்கான பாடுபொருளை எதிலிருந்து எடுக்கிறீர்கள்?
எனக்கு ஒரு சுவரொட்டி வாசகம் போதும். எமினம் இசையில் இருக்கும் ஒரு துளி போதும். எங்கோ கேள்விப் படும் ஒரு செய்தி போதும். உலகின் எந்த ஒரு மூலையில் நடக்கும் செய்திகளும் அத்தனை விசித்திரங்களும் அடுத்த நிமிடம் நம் கைகளுக்கு வந்துவிடுகின்றன. எனவே, கவித்துவ அனுபவத்துக்காக ஒரு கவிஞர் இனிமேல் காத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது. அந்தக் காட்சிகளை ஒரு கவிஞரின் கண்கள் வழியாக நான் பார்க்கிறேன். கச்சாப்பொருளாகக் கிடைப்பவற்றின் அளவுகள் பிரம்மாண்டமாக மாறிவிட்டன என்பதால், ஒரு கவிஞர் ராப்பகலாக வேலைசெய்துகொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.
அன்றாடச் செய்திகளை நீங்கள் கவிதைகளாக எழுதுவது விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகிறது. ஒரு செய்தி எந்தக் கணத்தில் உங்களிடம் கவிதையாக ஆகிறது?
ஒரு விஷயத்தின் மீது உங்களுடைய தரிசனம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பொறுத்துதான். நேற்று ஒரு செய்தியைப் படித்தேன்: ஒரு வடமாநிலக் கிராமத்தில் பழங்கால முறைப்படி மனிதர்களைக் கூண்டில் அடைத்து சிறைப்படுத்தித் தண்டனை கொடுக்கிறார்கள். இது எனக்கு ஒரு செய்தி மட்டுமல்ல. இதன் வழியாக, ஒரு மனிதருடைய வாழ்க்கையின் வெவ்வேறு தருணங்களில் அவர் கூண்டில் அடைக்கப்படும் சித்திரம் மனதில் வருகிறது. ஒவ்வொருவருக்கும் இந்தக் கூண்டுகள் வேறுவேறாக இருக்கின்றன. சிலருக்கு வேலையாக, சிலருக்குச் சாதியாக, சிலருக்கு அவர்களது பொருளாதார நிலைமையாக இருக்கின்றன. இதை நான் கவிதையாக விரித்து எழுதிவிடுகிறேன். நான் முதலில் உடைக்க விரும்பும் விஷயம் என்னவென்றால், கவிதை ஆக முடியாத பொருள் என்று இந்த உலகத்தில் ஒன்றுமே கிடையாது என்பதைத்தான்.
அன்றாடச் செய்திகளெல்லாம் உரைநடையாக இல்லாமல் கவிதையாக ஆகும்போது அது எந்த வகையில் உரைநடை யிலிருந்து வீரியம் மிக்கதாக இருப்பதாக நினைக்கிறீர்கள்?
என் கவிதை மொழியைக் கிட்டத்தட்ட உரைநடைக்குப் பக்கத்தில் கொண்டுவந்துவிட்டேன். கவித்துவமான சொற்கள் இல்லாமலேயே கவிதையை எழுப்ப முடியுமா என்ற சவாலை நான் முன்வைக்கிறேன். அதாவது, கவிதைகளுக்குள் செயல்படுவது அதனுடைய அலங்காரங்களோ பூடகத் தன்மையோ உருவகங்களோ படிமங்களோ அல்ல. மாறாக, ஒரு கவித்துவ உண்மை அதற்குள் இருக்கிறதா என்பதுதான். ஆக, கிட்டத்தட்ட ஒரு செய்தியை எழுதக்கூடிய மொழியில் நான் கவிதையை எழுதுவேன். உதாரணமாக, `அழுகை வராமல் இல்லை/ ஒரு வைராக்கியம்/ உங்கள் முன்னால் அழக் கூடாது என்று’. இதற்குள் ஒரு கவித்துவமான சொல்லோ படிமமோ கிடையாது. ஆனால், அது எங்கேயோ உணர்வுகளின் ஆழத்தைப் போய்த் தீண்டுகிறது. மற்றவர்கள் முன்னால் அழுகையை மறைத்துக்கொள்பவர்கள் காலங்காலமாக இருந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களோடு நான் தொடர்புகொள்ள நினைக்கிறேன். இந்தக் கவித்துவ தரிசனம் இருக்குமென்றால், வேறு மெனக்கெடல்களே தேவையில்லை.
உங்கள் கவிதைகளைப் பார்க்கும்போது நீங்கள் உலகின் மிகத் தனிமையான ஒருவர்போலவும், அன்புக்கு ஏங்குபவர்போலவும் தென்படுகிறீர்களே, என்ன காரணம்?
இது சுவாரஸ்யமான கேள்வி. என் நிஜ வாழ்க்கையைப் பார்க்கும் யாருமே என் கவிதைகளை நம்ப மாட்டார்கள். ஏனென்றால், நான் எப்போதும் பல நபர்களுடன் இணைந்து செயலாற்றிக்கொண்டிருப்பவன். எனில், இந்தத் தனிமை எங்கிருந்து வருகிறது? இவ்வளவு தொடர்புகளோடு இருக்கும் ஒரு நபர், தனிமை என்று சொன்னால் அந்தத் தனிமையின் பொருள் என்ன? உங்கள் தனிமை என்பது தனிமனிதராக நீங்கள் தனியாக இருப்பது என்பது அல்ல. இந்தப் பின்நவீனத்துவ யுகம் எவ்வளவு தொடர்புகளோடு இருந்தாலும் ஒவ்வொருவரையும் துண்டுதுண்டாகப் பிரித்திருக்கிறது. ஆக, இந்தத் தனிமை என்பது ஒரு இருத்தலியல் பிரச்சினை ஆகிறது. நான் எழுதுவது இதைத்தான்.
அதிக எண்ணிக்கையில் எழுதுவதால் கவிதைகள் நீர்த்து விடும் அபாயமும், ஒரே மாதிரி எழுதும் அபாயமும் கொண்டிருக் கின்றன என்று ஒலிக்கும் குரலுக்கு உங்கள் பதில் என்ன?
நிறைய எழுதுவது தொடர்பான புகார்களெல்லாம் தமிழ்நாட்டில்தான் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்றன. இப்படியான மாயையை உருவாக்கியவர்கள் தமிழ்நாட்டிலுள்ள சிறுபத்திரிகைக்காரர்களும், ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் கவிதை எழுதக்கூடியவர்களும்தான். நான் முழு நேரக் கவிஞன். பூக்கோவ்ஸ்கியை எடுத்துக்கொள்ளுங்கள்; அவன் எத்தனை ஆயிரம் கவிதைகள் எழுதியிருக்கிறான். நெரூதா, ரூமி என யாரையுமே இப்படி அவர்கள் சமூகம் சொல்லவில்லையே. இன்னொரு விஷயம், குறைவாக எழுதக்கூடியவர்களுடைய கவிதைகளை எடுத்துப் பாருங்கள். ஒவ்வொரு கவிதையும் தனித்துவமான மொழியிலா இருக்கிறது? ஒரு கவிஞன் ஒரு மொழியைத்தான் கண்டுபிடிக்கிறான். அது அவனுடைய உடல்போன்றது. ஒரு கவிஞன் ஒவ்வொரு தொகுப்பிலும் வேறுவேறு பாத்திரங்கள் ஏற்பதற்கு அவன் நடிகன் கிடையாது.
கவிஞர், பதிப்பாளர், அரசியலர் என்ற அடையாளங்களில் எது உங்களுக்கு நெருக்கமானது?
எப்போதுமே கவிஞன் எனும் அடையாளம்தான் எனக்கு முக்கியமானதாக இருக்கிறது. அது சார்ந்த பெருமிதம் எனக்கு எப்போதுமே உண்டு. என்னுடைய மற்ற வேலைகளெல்லாம் என் கவிதைகளைச் செறிவூட்டுவதற்கான விஷயமாகத்தான் பார்க்கிறேன். ஏனென்றால், மற்ற வேலைகள் மூலமாகத்தான் நான் சமூகத்தோடு ஆழமாகப் பிணைக்கப்படுகிறேன். இல்லையென்றால், சின்ன கூண்டுக்குள் சுருங்கிப்போய்விடுவேன். ஒரு கவிஞரின் முக்கியமான விஷயமாக நான் என்ன நினைக்கிறேன் என்றால், ஒதுங்கிப்போகாமலும் தனிமைப்படுத்திக்கொள்ளாமலும் நீ எழுதுவதற்கான சமூக, தனிமனித உறவுகளைப் பெரிதாக்கிக்கொண்டே இரு என்பதுதான். அந்த விதத்தில், நான் ஈடுபடக்கூடிய எல்லா வேலைகளுமே என் கவிதைகளுக்காகத்தான் செய்கிறேன்.
- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT