Last Updated : 03 Mar, 2021 03:23 AM

 

Published : 03 Mar 2021 03:23 AM
Last Updated : 03 Mar 2021 03:23 AM

மணல்: பொறியியலும் அரசியலும்

மணல், கட்டுமானப் பணிகளில் பிரதான இடுபொருளாக இருக்கிறது. எழுபதுகளில் எங்கள் ஊரில் யாருக்கு மணல் வேண்டுமென்றாலும் சூசை அண்ணனைத்தான் அணுகுவார்கள். அவரிடம் மாட்டுவண்டி இருந்தது. வரத்து மணலை அவரே வெட்டி எடுப்பார். அவரது கூலிக்கும், மாடு, வண்டியின் மராமத்துச் செலவுக்குமாக ஒரு தொகையை வாங்கிக்கொள்வார்.

1990-களில் தாராளமயம் தொடங்கியது. மக்கள் கிராமங்களிலிருந்து நகரங்களுக்குப் பெயர்ந்தனர். வீட்டு மனைகளின் சந்தை விரிந்தது. வீடுகளும் அடுக்ககங்களும் சாலைகளும் பாலங்களும் பெருகின. மணலின் தேவை கூடியது. ஆறுகள்தோறும் பொக்லைன் இயந்திரங்கள் மணலை அகழ்ந்தெடுத்தன. ஒவ்வொரு மழைக் காலமும் புதுமணலைக் கொண்டுவரும். ஆனால், அள்ளப்படும் மணலின் அளவு, வரத்து மணலைவிடப் பன்மடங்கு அதிகம். இதனால் ஆற்றின் படுகை தாழ்ந்துபோனது. சரளையும் பாறையும் மேலெழும்பின. ஆற்றுப் பாசனம் பாதிக்கப்பட்டது. நிலத்தடி நீர்மட்டம் தாழ்ந்தது. குடிநீருக்குத் தட்டுப்பாடு வந்தது. விவசாயக் கிணறுகளில் நீர் வறண்டது. நீர்வாழ் உயிரினம் அருகியது. நீர்ப்பிடிப்புப் பகுதி குறைந்தது. இந்தச் சூழலை நமது ஆட்சியாளர்களும் பொறியாளர்களும் எங்ஙனம் நேரிட்டார்கள்?

மணலின் பொருளாதாரம்

எண்பதுகளில் மணல் அள்ளுவதை நெறிப்படுத்தும் பொறுப்பு ஊராட்சிகளிடமிருந்து பொதுப்பணித் துறைக்குக் கைமாற்றப்பட்டது. 1990-களில் மணலுக்கான கிராக்கி கூடிக்கொண்டே போனது. அப்போது மணல் அள்ளுவதற்கான முற்றுரிமை சில தனியார்களுக்கு வழங்கப்பட்டது. முறைகேடுகள் மலிந்தன. சமூக ஆர்வலர்கள் நீதிமன்றங்களை நாடினார்கள். அதற்குப் பலன் இருந்தது. 2003-ல் தனியார்களிடமிருந்த மணல் அள்ளும் முற்றுரிமையை அரசு ரத்துசெய்தது. அது பொதுப்பணித் துறைக்கு வழங்கப்பட்டது.

உச்ச நீதிமன்றமும் பல அறிவுறுத்தல்களை வழங்கியது. மணல் அள்ளும் படுகைகளை நிலவியல் துறை அங்கீகரிக்க வேண்டும். சூழலியல் துறை தடையில்லாச் சான்று வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியரிடம் உரிமம் பெற வேண்டும். மணற்குழிகள் நான்கடி ஆழத்துக்கு மிகலாகாது. அரசுச் செயலரின் அனுமதியிருந்தால் மட்டுமே இயந்திரங்களைப் பயன்படுத்தலாம்.

எனினும் பிரச்சினை தீரவில்லை. பொதுப்பணித் துறையால் மணலை எல்லாப் பயனர்களுக்கும் நேரடியாக வழங்க முடியவில்லை. அது மணலை அள்ளவும், லாரிகளில் ஏற்றவும், பயனர்களுக்கு மறு விற்பனை செய்துகொள்ளவும் ஒப்பந்தக்காரர்களை நியமித்தது. `இதன் மூலம் மணல் மாஃபியா, வேறு உடை தரித்து மீண்டும் சந்தைக்குள் நுழைந்தது' என்று எழுதினார் பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரன்.

அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரங்களல்ல ஆறுகள். தாமிரபரணி போன்ற மடி வறண்ட ஆற்றில் மணல் அள்ளுவதை நீதிமன்றம் தடைசெய்தது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை மணியை ஒலித்துக்கொண்டே இருந்தார்கள். இவற்றைத் தாண்டி அள்ளப்பட்ட மணல் பணித்தலத்தை எட்டியபோது, பயனர்கள் செலுத்திய விலை, அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாக இருந்தது. இப்படியாக மணல் பற்றாக்குறையும் அதன் விலை உயர்வும் கட்டுமானத் துறையைப் பாதித்தது.

மணலின் பொறியியல்

இந்தச் சூழலில் பொறியாளர்கள் சோம்பல் முறித்துக்கொண்டு எழுந்தார்கள். மணலுக்கு மாற்றாகக் கருங்கல் தூளைப் பயன்படுத்தலாம் என்றார்கள். இந்தத் தூள் இப்போது எம்- சாண்ட் என்கிற பெயரில் அறியப்படுகிறது. இது ‘manufactured sand’ (தயாரிக்கப்பட்ட மணல்) என்பதன் சுருக்கம். பி-சாண்ட் என்பது plastering sand என்பதன் சுருக்கம்; சாந்தாகப் பயன்படக்கூடியது. எம்-சாண்டும் பி-சாண்டும் ஆற்று மணலைவிட மாற்றுக் குறைவானவை என்று பயனர்கள் கருதினார்கள். அந்தக் கருத்து தவறானது. இதைப் பொறியாளர்கள் விளக்கியிருக்க வேண்டும். அவர்கள் அப்படிச் செய்யவில்லை. ஏனெனில், பொறியியல் சமூகத்திலேயே பலருக்கும் இதைக் குறித்துச் சரியான புரிதல் இருப்பதாகத் தெரியவில்லை.

கான்கிரீட் பிரதானமாக மூன்று இடுபொருட்களால் உருவாகிறது. அவை: சிமெண்ட், பருண் சேர்மானம் (coarse aggregate), நுண் சேர்மானம் (fine aggregate). சிமெண்டும் நுண் சேர்மானமும் சேர்ந்து சாந்து உருவாகிறது. இந்தியத் தரக்கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டிருக்கும் விதிநூல் IS-383 இந்தச் சேர்மானங்களை வரையறுக்கிறது. இந்த விதிநூல், ஆதியில் 1952-ல் வெளியானது. 1963-லும் 1970-லும், கடைசியாக 2016-லும் மேம்படுத்தப்பட்டது. இந்த நூல் பருண் சேர்மானமாகக் கருங்கல் ஜல்லியைக் குறிப்பிடுகிறது. நுண் சேர்மானம் பின்வரும் நான்கு வகைப் பொருட்களில் ஒன்றாக இருக்கலாம் என்கிறது: பொடிக்கப்பட்ட கருங்கல் தூள், பொடிக்கப்பட்ட சரளைக்கல் தூள், மணல், எம்-சாண்ட் ஆகியன. விதி நூலில் குறிக்கப்பெறும் எம்-சாண்ட் என்பது தாதுப் பொருட்களைக் கலந்து தொழிற்சாலையில் தயாரிக்கப்படுவது. இவற்றில் முதல் மூன்று வகைச் சேர்மானங்களின் பண்புநலன்களையும் விதிநூல் விவரிக்கிறது

முதலாவதாக, 70 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட விதிநூல் கருங்கல் தூளும் மணலும் நுண் சேர்மானங்களாகப் பயன்படுத்தப்படலாம் என்று சொல்கிறது. எனினும் நெடுங்காலமாக ஆற்று மணல்தான் நுண் சேர்மானமாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. ஏனெனில், அது சகாயமாகக் கிடைத்தது. வரத்து மணலை மட்டும் அள்ளிக்கொண்டிருந்தவரை அது சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கவில்லை. ஆனால், அதன் பயன்பாடு பெருகியதும், விதிநூல் `IS-383' அனுமதித்திருக்கிற கருங்கல் தூள் உள்ளிட்ட பிற சேர்மானங்களுக்குக் கட்டுமானத் துறை மாறியிருக்க வேண்டும். பொறியியல் சமூகம் அதைச் சாதித்திருக்க வேண்டும். ஆனால், அது தனது தார்மீகக் கடப்பாட்டிலிருந்து வழுவியது மட்டுமில்லை, அதைப் பற்றிய பிரக்ஞையும் இல்லாமல் இருக்கிறது. 70 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட வரையறையைப் பற்றிய போதம் இல்லாமல், அதை மீண்டும் நிரூபிக்க முயல்கிறது கல்விப்புலம்.

இரண்டாவதாக, விதிநூல் IS-383 'எம்-சாண்ட்' என்கிற பதத்தைத் தொழிற்சாலைகளில் பல்வேறு தாதுக்களின் கலவையால் உருவாக்கப்படும் நுண் சேர்மானத்துக்குத்தான் பயன்படுத்துகிறது. மாறாகக் கட்டுமானத் துறையும் கல்விப்புலமும் கருங்கல் தூளுக்கு இந்தப் பதத்தைப் பயன்படுத்துகிறது. ஒரு பக்கம் இந்தியத் தரக்கட்டுப்பாட்டு மையம் விதிநூல்களை வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. மறுபக்கம் கட்டுமானத் துறை மட்டுமல்ல, கல்விப்புலமும் அதைப் பற்றிக் கவலைப்படாமல், தவறான பெயர்களைப் பயன்படுத்துகிறது. இங்கே ஆய்வாளர்களும் கல்வியாளர்களும் களப்பொறியாளர்களும் ஆட்சியாளர்களும் பயனர்களும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள் வதில்லை. களத்திலும் கல்விப்புலத்திலும் உள்ளவர்களில் பலர், தங்களது பொறியியல் ஞானத்தை மேம்படுத்திக்கொள்ள முயற்சிப்ப தில்லை. அறிவாளர்களின் இந்தப் பலவீனம் மணல் மாபியாவின் பலமாக மாறிவிட்டது.

என்ன செய்யலாம்?

ஆற்று மணலின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும். கான்கிரீட்டுக்கும் சாந்துக்கும் கருங்கல் தூளைப் பயன்படுத்த வேண்டும். அதன் பண்புநலன்களைப் பரிசோதித்துச் சான்று வழங்கும் பணியை அரசுத் துறைகளும் பொறியியல் கல்லூரிகளும் ஏற்க வேண்டும். மேலும், கருங்கல் தூளும் உலகம் உள்ளளவும் கிடைத்துக்கொண்டிருக்காது. அதன் கையிருப்பையும் தேவையையும் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு, அதன் பயன்பாட்டை நெறிப்படுத்த வேண்டும். தாதுக்களின் கலவையில் உருவாகும் உண்மையான `எம்-சாண்'டைக் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்; இதற்கு அதிக காலம் வேண்டிவரும்; ஆனாலும் செய்தாக வேண்டும். கடைசிச் சொட்டுவரை இயற்கையின் மடியை உறிஞ்சுகிற அறமற்ற செயலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர்., தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x