Last Updated : 03 Mar, 2021 03:23 AM

 

Published : 03 Mar 2021 03:23 AM
Last Updated : 03 Mar 2021 03:23 AM

கவிதை என்பது மிகமிக ரகசியமான ஓர் உயிரி- வே.நி.சூர்யா பேட்டி

5 கேள்விகள் 5 பதில்கள்

இளம் கவிஞரான வே.நி.சூர்யாவின் முதல் கவிதைத் தொகுப்பு ‘கரப்பானியம்’ பெரும் வரவேற்பைப் பெற்றது. பொறியியல் படிப்பை முடித்திருக்கும் வே.நி.சூர்யா முழுக்கக் கவிதை சார்ந்து செயல்படுபவர். ‘பரிசோதனை’ என்ற சிற்றிதழை நடத்திய அனுபவமும் அவருக்கு உண்டு. கடந்த சில ஆண்டுகளாக ஆங்கிலம் வழியாக வே.நி.சூர்யா தமிழுக்குக் கொண்டுவரும் உலகக் கவிதைகள் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகின்றன. சென்னைப் புத்தகக்காட்சிக்கு வந்திருந்த வே.நி.சூர்யாவுடன் உரையாடியதிலிருந்து...

நீங்கள் எழுத வந்ததன் பின்னணியைக் கூறுங்கள்?

என் சொந்த ஊர் நாகர்கோவில். சிறு வயதில் பெரும்பாலும் விளையாட்டுகளைப் பராக்குப் பார்த்துக்கொண்டு இருப்பவனாகவே இருந்துவந்திருக்கிறேன். இழந்த விளையாட்டுகளுக்கு மாற்றாக எனது அம்மா வழியாகச் சிறிது சிறிதாகப் புத்தகங்கள் அறிமுகமாகின்றன. பிறகு, தனியாக நூலகங்களுக்குச் செல்லத் தொடங்குகிறேன். என்னை முதன்முதலில் அசைத்த கவிதைகள், எங்கள் ஊர் அரசு நூலகத்தில் நான் எடுத்துப் படித்த ‘நகுலனின் கவிதைகள்’தான். அதன் பிறகு, வெளியே பேச்சு குறையக் குறைய உள்ளே பேச்சு கூடிக்கொண்டே செல்கிறது. எனக்கும் சொல்ல சில விஷயங்கள் இருக்கின்றன என்ற நம்பிக்கை வலுப்பட நான் எழுதத் தொடங்குகிறேன். ஆனால், கவிதை என்ற வடிவத்தை ஏன் பிரதான வெளிப்பாட்டு முறையாகத் தேர்ந்துகொண்டேன் என்பது பல விஷயங்களைப் போலவே இன்னும் புதிராகவே உள்ளது.

உங்கள் கவிதைகளில் இருத்தலின் பதைபதைப்பும் ஆழ்மனதின் உலகமும் அதிகம் ஆக்கிரமித்துக்கொள்வது எதனால்?

செடிகொடிகளுக்கு ஒளி எப்படி அவசியமோ அதே அளவுக்கு வாழ்க்கைக்கு அதற்கு அப்பால் இருப்பவை அவசியமாக இருக்கின்றன என்றே நான் நம்புகிறேன். இங்கு உள்ளதையும் இங்கு இல்லாததையும் இணைவைப்பதற்குக் கவிதையைத் தவிர வேறு சிறப்பான உபகரணங்கள் உண்டா என்ன? அழகும் உண்மையும் ஒரு இருப்பைத் தொடுகையில் உண்டாகும் பதைபதைப்பையும் கவிதை பகிரத்தானே வேண்டும்? உலகத்தை, அன்றாட வாழ்க்கையை நான் ஒரு மாபெரும் மர்மம் என்றே அனுபவம் கொள்கிறேன். ஒவ்வொன்றும் ரகசியம்போலவே எனக்குத் தெரிகிறது. சமயத்தில் காற்று தழுவுவதுகூட மர்மமாகத்தான் இருக்கிறது. அனைத்திலும் சாவித்துளை இருக்கிறது; ஆனால், சாவியில்லை. இதுதான் என்னுடைய அனுபவமாக இருக்கிறது. ஒருவகையில், அழகையும் உண்மையையும் எதிர்கொள்கையில் குழப்பம்தான் எனது அறிதலுக்கான கருவியாகவே இருக்கிறது. அதனால், எனது கவிதைகளும் அப்படி இருக்கின்றனபோலும். மேலும், கவிதை என்பதே மிகமிக ரகசியமான ஓர் உயிரிதானே.

நெடுங்கவிதைகள் குறைந்துபோன காலகட்டத்தில் நீங்கள் உங்கள் ‘கரப்பானியம்’ தொகுப்பில் அதிக அளவில் நெடுங்கவிதைகள் எழுதியிருக்கிறீர்கள். இதற்கான உந்துதல் எப்படிக் கிடைத்தது?

இந்தத் தொகுப்பில் உள்ள நெடுங்கவிதைகள் ஒரே அமர்வில் எழுதப்பட்டவை. மரணத்தின் நெருக்கம், பிரிவு என எனது நெருக்கடியான காலகட்டம் என்று அந்தக் கவிதைகள் எழுதப்பட்ட காலகட்டத்தைச் சொல்லலாம். ‘நினைவுநாள்’ போன்ற நெடுங்கவிதைகளின் ஊடாகவே நான் அந்தக் காலத்தைக் கடந்துவந்தேன். மேலும், நான் கோவையாகவும் நிறையவும் பேசக்கூடிய ஆள் இல்லை (இப்போது சற்று அப்படியில்லைதான்). பெரும்பாலும், மறைந்து இருக்க ஆசைப்படுகிறவன். கவிதையை விட்டால் எனது அனுபவங்களைச் சொல்லவும் எனக்கு வேறு தீர்க்கமான உபாயங்கள் இருந்ததில்லை. மேலும், மிதப்பதைவிட அமிழ்வதே எனது மனநிலையாக இருக்கிறது. ஒருவேளை நெடுங்கவிதைகளுக்கான உந்துதல் இந்தப் பின்னணியில் இருந்தும் வந்திருக்கலாம்.

உங்கள் மீது தாக்கம் செலுத்திய முன்னோடிகள், நீங்கள் விரும்பிப் படிக்கும் சக கவிஞர்கள் யார்?

என் மீது தாக்கம் செலுத்திய முன்னோடிகள் என நகுலனையும் அபியையும் சொல்ல முடியும். ரோமானியத் தத்துவ அறிஞர் எமில் சியோரனும் கணிசமான அளவுக்கு என்னைப் பாதித்திருக்கிறார். கண்டராதித்தன், க.மோகனரங்கன், ஷங்கர்ராமசுப்ரமணியன், ராணிதிலக், சபரிநாதன் ஆகியோரின் கவிதைகளை மிகவும் விரும்பிப் படிக்கிறேன்.

கவிதைகள், கவிதை மொழிபெயர்ப்புகள் என்று தொடர்ந்து இயங்கும் உங்களின் எதிர்கால இலக்கியக் கனவு என்ன?

காற்றில் இறகுபோல அல்ல; பறவை மாதிரி செல்லவே பிடித்திருக்கிறது. இப்போதைக்கு உலகக் கவிதைக்கான திரட்டு ஒன்றைக் கொண்டுவரும் கனவொன்று உள்ளது. அது கூடிய விரைவில் சாத்தியமாகும் என்று நம்புகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x