Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM
ஆட்சிமொழி குறித்த விவாதங்கள் நடக்கிறபோதெல்லாம் தமிழில் நிர்வாக, நீதித் துறைகளுக்குப் போதிய கருவி நூல்கள் இல்லை என்று சொல்லப்படுவது வழக்கம். புதுச்சேரி அரசு 2012-ல் வெளியிட்ட ‘சட்ட - ஆட்சியச் சொற்களஞ்சியம்’ அந்தக் குறையைப் போக்கும் ஒரு பெரும் முயற்சி. பேராசிரியர் கு.சிவமணியின் இருபதாண்டு கால உழைப்பில் வெளிவந்த அந்தச் சொற்களஞ்சியம், இன்னும் உரிய கவனம் பெறவில்லை என்பது தமிழுக்கே உரிய துரதிர்ஷ்டம். புதுவையில் வசித்துவரும் கு.சிவமணியின் விரிவான பேட்டியிலிருந்து சில பகுதிகள்...
அடிப்படையில் நீங்கள் ஒரு தமிழ்ப் பேராசிரியர். சட்டச் சொற்களஞ்சியத்தை உருவாக்கும் பணிக்குள் வந்தது எப்படி?
நீதிபதி மகராஜனுடனான ஒரு எதிர்பாராத சந்திப்புதான் காரணம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஹானர்ஸ் படித்தவன் நான். 24 வயதிலேயே கரந்தைத் தமிழ்க் கல்லூரி முதல்வராகப் பொறுப்பு வகித்தவன். பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றியபோது நிர்வாகத்துடனான கருத்து முரண்பாட்டின் காரணமாக அங்கிருந்து விலகியிருந்த நேரம் அது. கரந்தை தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் நீ.கந்தசாமிப் பிள்ளை சென்னையில் இருந்த மகராஜனுக்கு ஒரு கடிதத்தைக் கொடுத்தனுப்பியிருந்தார். கடிதத்தை வாங்கிக்கொண்ட அவர் ஷேக்ஸ்பியர், திருமூலர், பாரதியார் என்று என்னிடம் பேசத் தொடங்கினார். மூன்று மணி நேரம் அந்த உரையாடல் நீடித்தது. உரையாடலின் பெரும் பகுதி ஆங்கிலத்தில்தான் நடந்தது.
ஆட்சிமொழி ஆணையத்தில் மொழிபெயர்ப்பாளர் பணியில் சேருமாறு அழைத்தார் மகராஜன். அப்போது அவர் ஆணையத்தின் தலைவராக இருந்தார். மொழி வல்லுநர் அல்லது முழுநேர உறுப்பினர் என்ற நிலையில் அழைத்தால் மட்டுமே பணியில் சேர முடியும், அதற்குக் குறைந்த எந்தப் பணியிலும் சேர முடியாது என்று அந்த வாய்ப்பை மறுத்தேன். கந்தசாமிப் பிள்ளையைத் தொடர்புகொண்ட மகராஜன், அவசியம் என்னை அந்தப் பணியில் சேர வேண்டும் என்று வலியுறுத்தியதால் தவிர்க்க முடியாமல் போனது.
ஆணையத்தில் உங்களது பணிகள் என்னவாக இருந்தன?
60 சட்டங்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். மொழிபெயர்ப்புக் குழுக்களின் பணிகளைச் சரிபார்த்த வகையில் இதுவரையில் 500-க்கும் மேற்பட்ட சட்டங்களின் மொழிபெயர்ப்பில் பங்கெடுத்துக்கொண்டுள்ளேன்.
தமிழில் அரசமைப்புச் சட்டத்தின் அதிகாரபூர்வ மொழிபெயர்ப்பில் முக்கியப் பங்கு வகித்தவர் நீங்கள். அந்த அனுபவத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்...
நெருக்கடிநிலை நேரத்தில்தான் அரசமைப்புச் சட்டத்தின் அதிகாரபூர்வமான தமிழ் மொழிபெயர்ப்பு வெளியானது. 1988 ஆகஸ்ட் 13-ல் சென்னை ராஜாஜி ஹாலில் ஒன்றிய அரசின் சட்ட அமைச்சர் சங்கரானந்த் தலைமையில், ஆளுநர் பி.ஸி.அலெக்ஸாண்டர் வெளியிட, உச்ச நீதிமன்ற நீதிபதி ரத்னவேல் பாண்டியன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் அதிகாரபூர்வமான மொழிபெயர்ப்பு அவ்வளவு எளிதில் வெளிவந்துவிடவில்லை. ஏறக்குறைய இருபதாண்டு காலத் தடுமாற்றங்களுக்குப் பிறகுதான் வெளிவந்தது.
1967-ல் முதலாவது ஆட்சிமொழி ஆணையத்தின் காலத்திலேயே தொடங்கிய பணி அது. முதல் ஆணையத்தின் மொழிபெயர்ப்பு புலவர் நடையில் அமைந்திருந்தது. இரண்டாவது ஆட்சிமொழி ஆணையத்தின் தலைவரான நீதிபதி மகராஜன் பழகுதமிழை வலியுறுத்துபவர். எனவே, மற்றொரு மொழிபெயர்ப்பை வெளியிடுவதற்கு ஏற்பாடானது. அயல்மொழிச் சொற்கள் அதிகமாக இருக்கின்றன என்று காரணம் சொல்லப்பட்டு, இரண்டாவது மொழிபெயர்ப்பும் கைவிடப்பட்டது. முதலாவது ஆட்சிமொழி ஆணையத்தின் செயலாளரான மா.சண்முக சுப்பிரமணியம் தன்னால் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு வெளியிடப்படவில்லை என்று வருத்தம் கொண்டதோடு வேறு மொழிபெயர்ப்புகள் வெளிவருவதையும் விரும்பவில்லை. நெருக்கடிநிலைக் காலத்தில் வெளியான மொழிபெயர்ப்பிலும்கூட ரத்து, காலாவதி போன்ற அயல்மொழிச் சொற்கள் இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார். ஆனால், வல்லுநர் குழுவின் ஆய்வுக்குப் பிறகே மொழிபெயர்ப்பு வெளியிடப்படுகிறது என்றும், அயல்மொழிச் சொற்கள் அடுத்த பதிப்பில் களையப்படும் என்றும் ஓர் அரசாணை வெளியிடப்பட்டு, அது வெளிவருவதில் இருந்த தடைகள் களையப்பட்டன.
மொழிபெயர்ப்பின்போது சொல்லாக்கத்தில் நீங்கள் எதிர்கொண்ட சிக்கல்கள்?
உதாரணத்துக்கு, ரத்து என்பதை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அரசமைப்புச் சட்டத்தில் செட் அசைட், ஓவர் ரைட், ரெவோகேஷன் என்று எட்டு விதமான ரத்து முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ரத்து என்பது வெட்டிவிடுவதுதானே? ஆனால், அது பேச்சுச் சொல்லாக இருக்கிறதே, அது நல்ல தமிழ்ச் சொல்லாகவும் இருக்க வேண்டுமே என்று அறவு என்ற வேர்ச்சொல்லைப் பயன்படுத்தினோம். அறுந்துபோதல் என்பது அதன் பொருள். எந்தவொரு வார்த்தையை மொழிபெயர்த்தாலும் மூல மொழியில் உள்ள வார்த்தையைப் போன்றே சொற்குறைவு இருக்க வேண்டும். கூடுமானவரையில், ஒலிப்பு முறையும் அதையொத்து இருக்க வேண்டும். செட் அசைட் என்பதற்கு ஒதுக்கறவு, ஓவர் ரைட் என்பதற்கு ஊர்ந்தறவு, சப்ரஸ் என்பதற்கு ஒடுக்கறவு, ரெவோகேஷன் என்பதற்குப் பின்னறவு, கேன்சலேஷன் என்பதற்கு அறவுசெய்தல் அல்லது நீக்கறவு என்று முன்னொட்டுகளைச் சேர்த்து ஒவ்வொன்றையும் வேறுபடுத்திக் காட்டினோம்.
மொழிபெயர்ப்பில் இவ்வளவு துல்லியமாகச் சொற்களைப் பயன்படுத்தினால் அது புரியுமா என்ற கேள்விகளும்கூட எழுந்ததுண்டு. ஆங்கிலம் தெரிந்த ஒருவருக்கு ஆங்கிலத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள் எளிதில் புரிந்துவிடுமா என்பதுதான் அதற்குப் பதில். சட்டத் துறைக்கு என்று ஒரு படிப்பு இருக்கிறது. அதில் தகுதிபெற்ற வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். சட்டமொழி என்பது துறை சார்ந்தவர்களுக்குத்தான், எல்லோருக்கும் பொதுவான மொழிநடையில் சட்ட நூல்களை மொழிபெயர்க்க முடியாது.
உங்களுக்கு முன்பு நடந்திருக்கும் சட்ட அகராதி முயற்சிகள்?
1968-ல் முதலாவது ஆட்சிமொழி ஆணையம் நீதிபதி அனந்தநாராயணன் தலைமையில் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் பத்தாண்டு காலம் பொறுப்பில் இருந்தாலும் சட்டச் சொல் அகராதி மட்டுமே வெளிவந்தது. அது ஒரு முழுமையான அகராதியாக இல்லை. பயன்படுத்துபவர்களுக்குக் குழப்பம் வந்துவிடக் கூடாது என்பதற்காக முக்கியமான பதவிப் பெயர்களை எல்லாம் ஆங்கிலத்திலிருந்து ஒலிபெயர்த்திருந்தார்கள். முதலாவது ஆட்சிமொழி ஆணையத்தில் மா.சண்முக சுப்பிரமணியம் செயல் உறுப்பினராக இருந்தார். அவர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்புத் துறைக்குச் சென்றபோது அந்த அகராதியை விரிவுபடுத்தி வெளியிட்டார்.
இரண்டாவது ஆணையத்தில் சட்டங்களை மொழிபெயர்க்கும்போது நான் பரிந்துரைக்கும் பல சொற்களைத் தனியாகக் குறித்துவைக்கச் சொல்வார் நீதிபதி மகராஜன். சம்மன் என்பதற்கு ஆஜர் கட்டளை என்ற வார்த்தைதான் அவர் காலத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், முழுவதும் தனித்தமிழ் சொற்களைப் பயன்படுத்தும் காலம் வரும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அப்படி என்னால் குறித்து வைக்கப்பட்ட வார்த்தைகளில் ஒன்றுதான் அழைப்பாணை என்பது. 1990-ல் தமிழக அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்றேன். புதுவையில் அயல்பணியிலிருந்த எனக்கு அங்குள்ள அரசு இரண்டாண்டு பணி நீட்டிப்பு கொடுத்தது. என்னிடமிருந்த குறிப்புகளிலிருந்து சட்ட-ஆட்சியச் சொற்களஞ்சியம் உருவானது.
மாணவர்களுக்கு அகராதி, வழக்கறிஞர்களுக்கு வழிகாட்டி, மொழிபெயர்ப்பாளர்களுக்குக் கையேடு என்று வெவ்வேறு நோக்கத்திலும் பயன்படும் வகையில் இந்தச் சொற்களஞ்சியத்தை உருவாக்கினேன். கையெழுத்தில் 6,000 பக்கங்கள், தட்டச்சில் 4,000 பக்கங்கள் இருந்த இதன் முதல் வடிவத்தைச் சுருக்கி 1,400 பக்கங்களுக்குக் கொண்டுவந்தேன். தலைமைப் பதிப்பாசிரியர் என்ற பொறுப்பை ஏற்று 2002-ல் எனது பணியை முடித்துவிட்டேன். பத்தாண்டுகள் வரையில் அது எங்கே எப்படிக் கிடந்தது என்பதே தெரியவில்லை. 27.4.2012 அன்றுதான் வெளியானது. அன்றைய புதுச்சேரி முதல்வர் என்.ரெங்கசாமி வெளியிட்டார். புதுச்சேரி எழுதுபொருள் அச்சகத்தில் தற்போது கிடைக்கிறது. விலை ரூ.800 மட்டும்தான்.
கடும் உழைப்பில் உருவான சொற்களஞ்சியத்துக்கு உரிய கவனம் கிடைக்கவில்லையே என்று வருத்தங்கள் உண்டா?
இப்போதும் சொற்களஞ்சியத்தைப் பார்க்க நேர்ந்த வழக்கறிஞர்கள் என்னைத் தொடர்புகொண்டு நன்றி தெரிவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். சமீபத்தில், தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தின் கீழ் தேவநேயப் பாவாணர் விருது கொடுத்திருப்பதை முக்கியமான அங்கீகாரமாக நினைக்கிறேன். ஒரு லட்சத்தை வைத்து எப்படியும் ஓராண்டை ஓட்டிவிடுவேன். வயது 90 ஆகிவிட்டது. ஓய்வூதியமாக மாதம் ரூ.14,500 கிடைக்கிறது. வீட்டு வாடகைக்கும் மருத்துவச் செலவுகளுக்குமே அது போதவில்லை. தமிழ்ப் பேராசிரியராகவே பணியில் தொடர்ந்திருந்தால் இறுதிக் காலத்தில் இந்தளவு சிரமங்கள் இருந்திருக்காது. எனினும், சட்டத் துறையில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய அனுபவத்தில் நான் உருவாக்கிய இந்தச் சொற்களஞ்சியம் என்றும் என்னை நினைவில் வைத்திருக்கும்.
- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT