Published : 19 Nov 2015 08:50 AM
Last Updated : 19 Nov 2015 08:50 AM
சூரியக் குடும்பத்தில் பூமியைத் தவிர வேறு எங்கும் உயிர்கள் இல்லை!
குளிர் காலத்தில் காட்டுப் பகுதியில் இரவில் குளிர் காய்வதற்காக சுள்ளிகளைப் போட்டு தீ மூட்டுவர். அதைச் சுற்றிலும் கும்பலாகப் பலர் உட்கார்ந்திருப்பர். மிக அருகில் உட்கார்ந்தால் சூடு அதிகம் தாக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். மிகவும் தள்ளி உட்கார்ந்தால் இதமான வெப்பம் கிடைக்காது. எனவே, இதமான வெப்பம் கிடைக்கின்ற அளவுக்கு உகந்த தூரத்தில் உட்கார்ந்திருப்பார்கள். பூமியும் சரி, ‘குளிர் காய்வதற்கு’ ஏற்ப சூரியனிலிருந்து உகந்த தூரத்தில் அமைந்திருக்கிறது. ஆனால், புதனும் வெள்ளியும் சூரியனுக்கு அருகில் உள்ளன. செவ்வாய் கிரகம் சற்றே தள்ளி அமைந்துள்ளது.
முதலில் நாம் சூரிய மண்டல அமைப்பு பற்றிக் கவனிப்பது நல்லது. ஒரு காகிதத்தில் ஒரு புள்ளி வையுங்கள். அதுதான் சூரியன். அந்த புள்ளியைச் சுற்றி நெருக்கமாக ஒரு சிறிய வட்டம் போடுங்கள். புதன் கிரகம் அந்த வட்டத்தில் அமைந்தபடியாக சூரியனைச் சுற்றுகிறது. முதல் வட்டத்தைச் சுற்றி இன்னொரு வட்டம் போடுங்கள். அதுதான் வெள்ளி கிரகத்தின் சுற்றுப்பாதை. அதைச் சுற்றி இன்னொரு வட்டம் போடுங்கள். அந்த வட்டத்தில்தான் பூமி அமைந்துள்ளது. நான்காவது வட்டத்தில் செவ்வாய் கிரகம்.
பனிக்கட்டி, பாறை: கோள்கள்
மேலும் வட்டங்களைப் போடலாம். ஐந்து முதல் ஒன்பது வரையிலான வட்டங்களில்தான் வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியவை அமைந்துள்ளன. இந்த ஐந்துமே பனிக்கட்டி உருண்டைகள். இவை எல்லாமே சூரியனிலிருந்து மிகத் தொலைவில் இருப்பவை. பூமியிலிருந்து பார்த்தால் சூரியன் 25 பைசா அளவில் தெரிவதாக வைத்துக்கொண்டால், வியாழன் கிரகத்திலிருந்து பார்க்கும்போது சூரியன் மிளகு அளவில்தான் தெரியும். வியாழனில் வெயில் சிறிதும் உறைக்காது. எனவேதான் வியாழனும் அதற்கு அப்பால் உள்ள கிரகங்களும் பனிக்கட்டி உருண்டைகளாக உள்ளன.
மாறாக புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகியவற்றைப் பாறைக் கோள்கள் என்று சொல்வர். அதாவது, இந்த நான்கிலும் தரை உண்டு. மண் உண்டு. மலைகள், பள்ளத்தாக்குகள் ஆகியனவும் உண்டு.
பூமியில் உயிரினம் தோன்றுவதற்கு உகந்த மற்ற சூழ்நிலைகளையும் கவனிப்போம். முதலாவதாக பூமியில் போதுமான அடர்த்தி கொண்ட காற்று மண்டலம் உள்ளது. இரண்டாவதாக இந்தக் காற்று மண்டலம்தான் சூரியனிலிருந்து வருகின்ற ஆபத்தான எக்ஸ் கதிர்களைத் தடுத்து உயிரினங்களைக் காப்பாற்றுகிறது. உயிரினத்துக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய சில வகை புற ஊதாக் கதிர்களையும் காற்று மண்டலம் தடுக்கிறது. விண்வெளியிலிருந்து வருகின்ற கதிர்வீச்சிலிருந்தும் நம்மை இந்தக் காற்று மண்டலம் காக்கிறது.
நீர்சூழ் உலகு!
மூன்றாவதாக பூமியில் உயிரினத்துக்குத் தேவையான தண்ணீர் இருக்கிறது. பூமியின் மேற்பரப்பில் 71 சதவிகிதம் கடல்களால் ஆனது. தண்ணீரானது துருவப் பகுதிகளில் பனிக்கட்டி வடிவில் உள்ளது. காற்றில் ஆவி வடிவில் உள்ளது. பூமியின் நிலப் பகுதிகளில் ஆறுகளாக ஓடுகிறது. பூமி ஒன்றில்தான் நீர் வடிவிலும் பனிக்கட்டி வடிவிலும் ஆவி வடிவிலும் தண்ணீர் இருக்கிறது.
நான்காவது சாதக அம்சம் பூமியின் பருமன். பூமி தகுந்த பருமன் கொண்டதாக உள்ளதால், அதற்குச் சரியான ஈர்ப்பு சக்தி உள்ளது. அவ்விதம் ஈர்ப்பு சக்தி உள்ளதால்தான் பூமி தனது காற்று மண்டலத்தை இழக்காமல் கெட்டியாகப் பிடித்து வைத்துக்கொண்டுள்ளது.
ஐந்தாவது அம்சம், பூமியின் சுழற்சி வேகம். பூமி தனது அச்சில் உகந்த வேகத்தில் சுற்றுவதால்தான் பூமியில் பொதுவில் கடும் குளிரோ கடும் வெப்பமோ இல்லை. இல்லத்தரசிகள் நெருப்பில் அல்லது தணலில் அப்பளம் சுடும்போது அப்பளம் தீய்ந்து விடாமல் இருக்க அதைத் தக்கபடி திருப்பிப் போடுவார்கள். பூமியின் சுழற்சி வேகம் அந்த அளவில் உள்ளது. இத்துடன் ஒப்பிட்டால் சந்திரனில் 14 நாள் பகல். 14 நாள் இரவு.
ஆறாவது அம்சம், பூமியின் காந்தப் புலம். சூரியனிலிருந்து வரும் ஆபத்தான துகள்கள் பூமியைத் தாக்காதபடி இந்தக் காந்தப் புலம் தடுக்கிறது. மேலே கூறிய அம்சங்கள் அனைத்தும் சேர்ந்து பூமியில் உயிரினம் தோன்றித் தழைக்க உதவியுள்ளன.
வியாழன் உள்ளிட்ட ஐந்து பனிக்கட்டி உருண்டைகளும் உயிரினத்துக்கு உகந்த சூழல்களைக் கொண்டவை அல்ல. மீதியுள்ள புதன், வெள்ளி, செவ்வாய் ஆகிய கிரகங்களில் உள்ள நிலைமைகளைக் கவனிப்போம்.
சாத்தியமற்ற கிரகங்கள்
புதன் கிரகம் சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. எனவே, பகல் வேளையில் அதிகபட்ச வெப்பம் 430 டிகிரி செல்சியஸ். இரவாக உள்ள பகுதியில் குளிர் மைனஸ் 170 டிகிரி செல்சியஸ். புதன் கிரகத்தில் உயிரினம் கிடையாது என்பதில் வியப்பில்லை. தவிர, புதன் கிரகத்தில் அனேகமாகக் காற்று மண்டலம் கிடையாது.
வெள்ளி கிரகத்துக்கு ஜோசிய சாஸ்திரத்தில் சுக்கிரன் என்று பெயர். சுக்கிரன் என்றாலே சுக்கிர தசைதான் நினைவுக்கு வரும். ஆனால், வெள்ளி கிரகத்துக்கு சுக்கிர தசை அடிக்கவில்லை. மாறாக, நிரந்தர ‘சனி தசை’தான். வெள்ளி கிரகத்துக்குக் கடந்த காலத்தில் ரஷ்யாவும் அமெரிக்காவும் அனுப்பிய ஆளில்லா விண்கலங்கள் ‘அமுக்குப் பிசாசு’ அழுத்தியதுபோல நொறுங்கின. வெள்ளி கிரகத்தில் நிலவும் பயங்கரக் காற்றழுத்தமே அதற்குக் காரணம். அது போதாதென வெள்ளியில் எந்த இடமானாலும் வெப்பம் 460 டிகிரி செல்சியஸ் அளவில் உள்ளது. வெள்ளி கிரகம் ஒரு அக்கினிக் குண்டம். இது போதாதென வானிலிருந்து அமில மழை பெய்கிறது.
செவ்வாய் தேறுமா?
சூரியனிலிருந்து தள்ளி நான்காவதாக அமைந்த செவ்வாயில் வெயில் தாக்கம் குறைவு. மெல்லிய காற்று மண்டலம் உள்ளது. தண்ணீர் கிடையாது. வடிவில் பூமியை விடச் சிறியது என்பதால், காற்று மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்துக்கொள்ள இயலவில்லை. இன்னமும் அது தனது காற்று மண்டலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகிறது. செவ்வாயின் துருவப் பகுதியில் பனிக்கட்டிகள் உண்டு என்றாலும் காற்று மண்டல அடர்த்தி இன்மை காரணமாக செவ்வாயில் பனிக்கட்டிகள் உருகி நீராக மாறாமல் நேரடியாக ஆவியாக மாறுகின்றன. சூரிய மண்டலத்தில் பூமிக்கு வெளியே குறைந்தது நுண்ணுயிர்கள் இருக்க வாய்ப்பு கொண்ட ஒரே கிரகம் செவ்வாய்தான். ஆனால், இதுவரை தேடியதில் செவ்வாயில் நுண்ணுயிர்கள்கூட இல்லை.
ஆக, சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் பூமியைத் தவிர, வேறு எந்தக் கிரகத்திலும் உயிரினம் கிடையாது.
பூமி பெற்றுள்ள விசேஷ சாதகங்களால் பூமியில் உயிரினம் தோன்றியதாகக் கூறலாம். அப்படியானால் சூரிய மண்டலத்துக்கு அப்பால் எங்கோ இருக்கின்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றுகின்ற ஒரு கிரகம் பூமி போன்று அதே சாதக நிலைமைகளைப் பெற்றிருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படியான கிரகத்தில் உயிரினம் இருக்குமா? அப்படியும் சொல்லிவிட முடியாது.
- என். ராமதுரை, மூத்த எழுத்தாளர்,
தொடர்புக்கு: nramadurai@gmail.com
வியாழன்தோறும் தொடர்வோம்…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT