Last Updated : 26 Feb, 2021 03:14 AM

 

Published : 26 Feb 2021 03:14 AM
Last Updated : 26 Feb 2021 03:14 AM

காவிரிக் கரையில் ஏன் காமதேவனை எரிக்கிறார்கள்?

மாசி மாதப் பெளர்ணமியில் காவிரிக் கரை கிராமங்களில் காமதகனம் நடக்கும். தவறினால் பங்குனி மாத முழு நிலவில் நடக்கும். இந்த இரண்டு மாதங்களின் ஒரு அமாவாசையிலிருந்து மூன்று, ஐந்து, ஏழாம் நாளில் காமண்டி நடுவார்கள். வளர்பிறையின் கடைசி நாளான பெளர்ணமியில் காமதேவனுக்கு அடையாளமாகும் காமண்டியைக் கொளுத்திவிடுவார்கள். நல்ல மழைக்காகவும் விளைச்சலுக்காகவும் இந்த விழா நடக்கிறது.

மேட்டூர் அணை மூடி, காவிரியில் நீரோட்டம் நின்றுபோயிருக்கும். ஊரல் சாரல் மட்டும் கருமணல் தெரியும் பளிங்கு நீராக ஆறுகளில் நெளிந்து ஓடிக்கொண்டிருக்கும். காலையும் மாலையும் பனிமூட்டம் இன்னும் கலைந்திருக்காது. ஒரு மாதத்துக்கு மேல் மும்முரப்பட்டிருந்த அறுவடை ஓயும் நேரம். மஞ்சள் நிற நெல் தாளின் மணத்தோடு இளங்காற்று. மாமரமும் புங்க மரமும் மருதாணித் தளிராகத் துளிர்க்கும். இன்னும் சில நாட்களில் காமனின் வரவு கூறி இளவேனிலும் வந்துவிடும். இப்போது ஏன் காமனை எரிக்கிறார்கள்?

கருத்தளவில்தான் இருப்பு

கண்ணனோடு தன்னைச் சேர்த்துவைக்கச் சொல்லி, தையிலும் மாசியிலும் பங்குனியிலும் ஆண்டாள் காமதேவனை வேண்டுகிறாள். அவன் வரவுக்காக தை மாதம் தரை விளக்கிக் கோலமிடுகிறாள். மாசியில் தூவாளி மணலால் தெருவை அலங்கரிக்கிறாள். தலையை அள்ளி முடிந்துகொள்ளாமலும், தாம்பூலம் தரிக்காத உதடு வெளுத்துப்போகவும், ஒரு வேளை மட்டுமே உண்டு மூன்று வேளையும் காமனைத் தொழுகிறாள். கண்ணனோடு சேர்வதற்குக் காமனின் கருணை வேண்டி மேற்கொள்ளும் நோன்பைச் சொல்வது ஒரு அழகான இலக்கிய மரபு. கோவலன் வரவுக்காக காமவேள் கோட்டத்தில் வேண்டிக்கொள்ளும்படி கண்ணகிக்கு தேவந்தி சொல்ல, அது தங்கள் வழக்கமல்ல என்று கண்ணகி கூறுவதாக சிலப்பதிகாரத்தில் வருகிறது. அதே இலக்கிய மரபு வண்ணத்தில் இது ரக வேறுபாடு என்றும் வைத்துக்கொள்ளலாம்.

காமனுக்கு அனங்கன், உடம்பு கழிந்தவன் என்றும் பெயர். கண்ணுக்குத் தெரியும் உருவம் பெறாமல், கருத்தளவிலேயே அவன் இருப்பு. தாவரங்கள், விலங்குகள், புழுக்கள், மனிதர்கள் என்று எதையும் உணர்வாக ஊடுருவி அடிமை கொள்ளும் ஒருவனுக்கு இப்படித்தானே நம்மால் உருவம் காட்ட முடியும்! அவனுக்கு வாய்த்த உருவம் நம் புராண, இதிகாசக் கற்பனையின் உச்சம்.

காமனின் வில் நாமக் கரும்பால் ஆனது. மலரில் மொய்க்கும் வண்டுகளே அந்த வில்லுக்கு நாண். வண்டுகளின் ரீங்காரம்தான் நாண் ஓசையின் டங்காரம். தாமரை, மா, அசோகு, மல்லிகை, நெய்தல்—இந்த ஐந்து மலர்கள் அவன் அம்புகள். மனிதர்கள் வசமிழக்கும் நிலைக்கு வந்ததும் சட்டென்று அசோக மலரை எய்து அடிமையாக்கும் சமர்த்தன். தென்றலே அவன் தேர். தேரை இழுப்பது பச்சைக் கிளிகளின் கூட்டம். குயிலோசை அவன் சங்கநாதம். ஒருமுறை அவன் சிவனைக் குறிவைத்துச் செல்லும்போது, இந்தக் கிளிகளின் கூட்டத்தால் இமயமே பச்சைமயமானது என்பது புராணம். புன்னை மரங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு அவன் எய்த அம்பு சிவனைத் தாக்காமல் திரும்பிவிட்டதாம். சிவனின் மூன்றாவது கண்ணிலிருந்து புறப்பட்ட பொறி, காமனை எரித்து, குங்கிலியப் பொடியாகக் கரித்துச் சாம்பலாக்கியதாம். எமனுக்கு எமனான சிவனால் தான் உயிரிழந்தால் அது நற்கதிதான் என்று புறப்பட்டவன் காமன்.

முடிவில்லாத கதை

ஒரு புராணத்தில் காமதேவனின் மனைவி ரதியின் புலம்பலாக வருபவை சிருங்காரத்தின் ரச நுட்பம் காட்டும் சங்கதிகள். “நீ எப்போதும் என் மனதில் இருக்கிறாய் என்று சொல்வீர்கள். அது உண்மையானால், நீங்கள் எரிந்துபோனபோது நானும் அல்லவா கூடவே எரிந்திருக்க வேண்டும்?” என்று ரதி புலம்புகிறாள். “உங்களிடம் ஊடி என் ஒட்டியாணத்தால் ஒரு முறை கட்டினேன், இன்னொரு முறை நீலோற்பல மலரால் அடித்தேனே அதனால் வந்த கோபத்தால் சென்றுவிட்டீர்களா?” என்றும் கேட்பாள். புராணத்தை உண்மை என்றே கொண்டாலும் இந்த ரதியின் காதலன் எரிந்துபோனான் என்ற அந்த உண்மையை நம் மனம் ஒப்புமா? எரியவில்லை என்று ஒரு கட்சியும் எரிந்தான் என்று ஒன்றும் காமண்டியில் லாவணி பாடுவதற்கு வேறு என்ன உளவியல் அடிப்படை வேண்டும்? சில கதைகளின் முடிவோடு நம் மனம் சமாதானமாகாது. எரித்தது சிவனே ஆனாலும் இந்த சமாதானம் வராது. வாலியைக் கொன்ற ராம பாணத்தோடு யார்தான் சமாதானமானார்கள்?

காமண்டி நடுவதற்குப் பெரியது, சிறியது, அதற்கும் சிறியது என்று ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிய சதுரங்கள்போல் மண்ணால் மேடை கட்டிக்கொள்வார்கள். அதன் நடுவே மூன்று கிளைகள் உள்ள, ஆள் உயர ஆமணக்குச் செடி, கொருக்காத் தட்டை, துவரை மிளார் - இம்மூன்றையும் நடுவார்கள். தர்ப்பையைப் பிரியாகத் திரித்து இவற்றைச் சேர்த்துக் கட்டியதுபோல் சுற்றிவிடுவார்கள். ஒரு வறட்டியை நடுவில் துளையிட்டுத் தொங்கும்படி இதில் கட்டிவிடுவார்கள். மண்ணில் பிடித்த சிவலிங்கமும் மேடையில் உண்டு. இதுதான் காமண்டி. காமதகனம் வரை இதற்கு ஊர் மக்கள் மாலையில் விளக்கேற்றி, அபிஷேகம் செய்து, அவல் கடலை, சுண்டல் படைத்தும் மாவிளக்கு வைத்தும் கும்பிடுகிறார்கள். பெளர்ணமியில் பத்து வயதுச் சிறுவர்கள் நால்வருக்கு சிவன், பார்வதி, மன்மதன், ரதி என்றும் ஐந்தாவதாக ஒரு சிறுவனுக்கு உரல் பண்டாரமென்றும் வேஷம் கட்டுவார்கள். தூக்குச் சப்பரத்தில் ரதி, மன்மதன் படத்தை வைத்துத் தெருக்களில் வலம்வருவார்கள். அப்போது வில் அம்போடு மன்மதன், கூடவே ரதியும் சிவனும் பார்வதியும் சப்பரத்துக்கு முன்னால் செல்வார்கள். உரல் பண்டாரம் மட்டும் உரல் மேல் காமண்டி அருகே காவலுக்காக அமர்ந்திருப்பார்.

மேடையில் ஒரு ரசவாதம்

வீட்டுக்கு வீடு அந்த சப்பரத்துக்குத் தேங்காய் உடைத்துக் கற்பூரம் காட்டிக் கும்பிடுவார்கள். சப்பரம் காமண்டிக்குத் திரும்பியதும் மன்மதன் படத்தைத் தனியாகக் கிழித்து காமண்டியில் வைத்து, அதனோடு காமண்டியை எரித்துவிடுவார்கள். எரிந்து சாம்பலாகி அடங்கியதும் எல்லோரும் ஆற்றுக்குச் சென்று தலைமுழுகி வீடு திரும்புகிறார்கள். காமண்டி கொளுத்தும் வரை நிகழ்ச்சி வெறும் குறியீடுதான். எரித்துவிட்டுக் குளிக்கும்போது அதுவரை குறியீடாக இருந்தது சட்டென்று நிஜமாக மாறிவிடுகிறது. ஏதாவது ஒரு கட்டத்தில் குறியீடு ததும்பி நிஜத்துக்குள் விழுவது புராணங்களை நிகழ்த்துவதில் வரும் நாடகப் புதிர். அப்போது வேஷம் நிஜமாகும் ரசவாதம் நடக்கும். இப்படி இல்லையென்றால், காமண்டி எரிந்த பிறகு ஏன் எல்லோரும் தலைகுளிக்க வேண்டும்?

எரிந்த சாம்பலை மூன்றாம் நாள் அகற்றிவிட்டு, புது மேடையில் சிவலிங்கம் வைத்து, மன்மதன் உயிர்த்துவிட்டதாகப் பூஜை செய்கிறார்கள். ரதிக்கு மட்டுமே அவன் உருவம், மற்றவர்களுக்கு அவன் அருவம் என்பது சிவனின் கருணை. காமத்தைக் கடியும் மரபு ஓர் இழை. காமனை தேவனாக்கி வழிபடும் இழை இன்னொன்று. அவனையே ஆண்டு தவறாமல் எரித்து, அருவமாக மீட்டுக்கொள்வது மற்றொன்று. காவிரிக்கரை கலாச்சாரம் ஒன்றோடு ஒன்று ஓயாமல் உரையாடும் உறவில் நிலைத்துவிட்ட எதிராளி இழைகள். காமதகனத்தில் லாவணியைவிட உரத்துக் கேட்பது இந்த உரையாடல்தானே!

- தங்க.ஜெயராமன், ‘காவிரி வெறும் நீரல்ல’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: profjayaraman@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x