Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM
சென்னை மெட்ரோ ரயிலின் முதல் வழித்தடத்தில் புதிய வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரையிலான விரிவாக்கப்பட்ட ரயில் சேவையைப் பிரதமர் மோடி சமீபத்தில் தொடங்கிவைத்தார். இந்த விரிவாக்கத்தோடு புதிய வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் 13 திருநர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்னும் செய்தி பலரை மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. புதிய வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டிருப்பவர்களில் ஏழு பேர் திருநங்கைகள், ஆறு பேர் திருநம்பிகள் என்று சென்னை மெட்ரோ ரயிலுக்குப் பணியாளர்களைத் தேர்ந்தெடுத்து அளிக்கும் ஒப்பந்ததாரர் நிறுவனமான கே.பி.ஐ.சி. பிரைவேட் லிமிடெட் செயல் மேலாளர் திலக்ராஜ் கூறினார்.
தகுதிக்கான வேலை
திருநர்களைப் பணியமர்த்த வேண்டும் என்னும் நல்லெண்ண நோக்கத்தைத் தாண்டியும் இந்த 13 பேரும் இந்தப் பணிகளுக்கான கல்வித் தகுதியைக் கொண்டவர்கள். கூடவே, இந்தப் பணிகளுக்கான பயிற்சிகளை எடுத்துக்கொண்டு, அது தொடர்பான தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்று, நேர்காணலில் வெற்றிபெற்ற பிறகே இந்தப் பணிகளைப் பெற்றுள்ளனர். இவர்கள் திருநர்கள் என்பதற்காகச் சிறப்பு சலுகைகள் எதுவும் காண்பிக்கப்படவில்லை.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திருநர்களைப் பணியில் அமர்த்துவது இது முதல் முறை அல்ல. 2019-ல் மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் அக்னிஷா என்னும் திருநங்கை ஆபரேட்டராக நியமிக்கப்பட்டார். தற்போது நிலைய சேவை மேலாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். நேரு பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்திலும் சில திருநர்கள் வாகன நிறுத்துமிடப் பணிகளில் நியமிக்கப்பட்டாலும் அவர்கள் அந்தப் பணிகளில் நீடிக்கவில்லை.
ஒரே நேரத்தில் 13 திருநர்கள் நியமிக்கப்பட்டிருப்பது குறித்து பேசிய திலக்ராஜ் “சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திருநர்களைப் பணியில் அமர்த்த விரும்பியது. எங்கள் நிறுவனத்துக்கும் இதைச் செயல்படுத்துவதில் விருப்பம் இருந்தது. எனவே, திருநர்களுக்காகப் பணியாற்றும் அரசுசாரா நிறுவனங்களைத் தொடர்புகொண்டோம். அவர்கள் பரிந்துரைத்த பட்டதாரிகளைத் தேர்ந்தெடுத்து , நேர்காணல் செய்து பயிற்சியளித்துப் பணிக்குத் தயார்படுத்தினோம். பாலின மாற்றம் செய்துகொண்டவர்கள் என்பதற்காகத் தகுதியும் திறமையும் கொண்டவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படும் நிலை நீடிக்கக் கூடாது; பணி வாய்ப்புக்குப் பாலினம் தடையாக இருக்கக் கூடாது. தற்போது மெட்ரோ ரயில் நிலையத்தில் பணிகளைப் பெற்றுள்ள திருநர்கள் நன்கு பணியாற்றி உயர் பதவிகளைப் பெற உத்வேகமும் பயிற்சியும் அளித்துவருகிறோம். வருங்காலத்தில் மற்ற நிலையங்களிலும் திருநர்களைப் பணியில் அமர்த்த மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது” என்றார்.
பொதுமக்களின் ஏற்பு
புதிய வண்ணாரப்பேட்டை ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு சோதனைப் பிரிவில் பணியமர்த்தப்பட்டிருக்கும் திருநங்கை வினித்ரா தேவி (30) தன்னம்பிக்கையுடனும் மனநிறைவுடனும் பேசுகிறார்: “2015-ல் எம்.ஏ., பொருளியல் பட்டம் பெற்றேன். வீட்டில் தனிப்பயிற்சி வகுப்புகள் எடுப்பது போன்ற வேலைகளைச் செய்துவந்தேன். நிலையான வேலையோ வருமானமோ இல்லாமல் இருந்தேன். திருநங்கைகளுக்கான சிநேகிதி அமைப்பில் திட்ட மேலாளராக இருந்தேன். அதன் பிறகு எங்கள் அமைப்பில் இருந்த பட்டதாரிகள் சிலரைத் தேர்ந்தெடுத்து மெட்ரோ ரயில் ஊழியர்கள் மெட்ரோ ரயில் நிலையப் பணிக்கான பயிற்சியை எங்களுக்கு அளித்தார்கள். எங்கள் அனைவருக்கும் இதுவே முதல் பணி. பணி நியமனச் செயல்முறையிலும் பணியில் சேர்ந்த பிறகும் எங்களையும் மற்றவர்களுக்குச் சமமாக நடத்துகிறார்கள் என்பதே மகிழ்ச்சியளிக்கிறது. மெட்ரோ ரயிலில் எங்களுக்குப் பணி வழங்கியிருப்பது முன்னுதாரணமான மாற்றம் என்று சொல்லலாம். அதுவும் ஒரு அரசு நிறுவனத்தில் எங்களுக்கு வேலை கிடைத்திருப்பது மிகச் சிறந்த வாய்ப்பாகப் பார்க்கிறோம். திருநர்களுக்கான என்னுடைய ஒரே வேண்டுகோள் தயவுசெய்து எப்படியாவது பாடுபட்டுப் படித்து முடித்துவிடுங்கள். படித்தவர்களுக்குக் கண்டிப்பாக வேலை கிடைக்கும். மெட்ரோவைப் போலவே மற்ற நிறுவனங்களும் எங்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”
அரசு, நிறுவனங்கள், அமைப்புகள் இது போன்ற முயற்சிகளை மேற்கொண்டாலும் சமூகத்தில் அவை என்ன விதமான தாக்கத்தை விளைவிக்கின்றன என்பதே அவற்றின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும். இந்த விஷயத்திலும் வினித்ரா தேவிக்குக் கிடைத்திருக்கும் அனுபவம் பெரும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. “நேற்று ரயிலில் பயணிக்க வந்த ஒரு பெண்மணி, ‘ரயில் நிலையங்களில் திருநங்கைகள் இரவல் கேட்பதைப் பார்க்கும்போதெல்லாம் இவர்கள் நிலை மாறாதா என்று ஏங்குவேன்; கடவுளிடம் வேண்டிக்கொள்வேன். இப்படி உங்களைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறி என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதுவிட்டார். நான் இந்த வேலையைப் பெற்றிருப்பதற்கு என் அம்மாகூட இவ்வளவு பூரிப்பு அடைந்திருப்பாரா என்று தெரியவில்லை. நாங்கள் நல்ல பணிகளைப் பெற்று வாழ்க்கையில் முன்னேறுவதைப் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள் என்பதே உண்மை” என்றார்.
திருநம்பிகளுக்கான நம்பிக்கை
இந்த வரவேற்கத் தக்க முன்னகர்வு தமிழில் செய்தியான விதம் திருநர்கள் பற்றிய புரிதலில் நாம் எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என்பதைச் சுட்டுவதாக அமைந்திருக்கிறது. ‘சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் 13 திருநங்கைகள் நியமனம்’ என்றே மிகப் பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டன. ஆங்கிலத்தில் பெரும்பாலும் பாலினத்தை மாற்றிக்கொண்டவர்களைக் குறிப்பதற்கான பொதுச் சொற்களான ‘ட்ரான்ஸ்பர்சன்’ அல்லது ‘ட்ரான்ஸ்ஜெண்டர் பர்சன்’ என்றே சரியாகப் பயன்படுத்துகிறார்கள். இத்தகைய சூழலில் சென்னை மெட்ரோ ரயில் போன்ற ஒரு மிகப் பெரிய மக்கள் பயன்பாட்டுத் திட்டத்தில் பொதுமக்களுடன் அன்றாடம் புழங்க வேண்டிய பணிகளில் திருநங்கைகளுக்குக் கிட்டத்தட்ட இணையான எண்ணிக்கையில் திருநம்பிகளையும் பணியில் அமர்த்தியிருப்பதற்கு தமிழக அரசு, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனியார் ஒப்பந்ததார நிறுவனங்கள் என தொடர்புடைய அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்பதில் சந்தேகமில்லை.
புதிய வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் பணியாற்றும் திருநம்பியான கஜகிருஷ்ணனிடம் பேசியபோது “திருவண்ணாமலையில் பி.ஏ., ஆங்கிலம் படித்துள்ளேன். திருநங்கைகள், திருநம்பிகள் என்றாலே வேலைக்குச் சேர்த்துக்கொள்ள எல்லோரும் தயங்குவார்கள். இந்தச் சூழலில் சென்னை மெட்ரோவும் கேசிஐசி நிறுவனமும் எங்களையும் மற்றவர்களுக்குச் சமமானவர்களாக மதித்து இந்த வேலையைக் கொடுத்திருக்கிறார்கள். இது எங்கள் வாழ்வில் முதல் படி. இதில் நாங்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டு அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறுவோம். ரயில் நிலையத்தில் உயரதிகாரிகள், உடன் பணியாற்றுபவர்கள் எல்லோருமே எங்களுடன் இயல்பாகத்தான் பழகுகிறார்கள். பெரும்பாலானவர்கள் நாங்கள் இந்தப் பணிக்கு வந்திருப்பது குறித்துச் சந்தோஷப்படுகிறார்கள். சமூகத்தில் திருநம்பிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், அப்படி ஒருவர் இருக்க முடியும் என்பதையே பலர் ஏற்றுக்கொள்வதில்லை. நீங்கள் பொய்யாக நடந்துகொள்கிறீர்கள் என்கிறார்கள். இன்னும் நிறைய பேர் தங்களுடைய குடும்பச் சூழலாலும் சமூகம் குறித்த பயத்தாலும் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இருக்கிறார்கள். சமூகம் எங்கள் பாலினத்தை ஒரு குறையாகப் பார்க்காமல் இயல்பானதாகப் பார்க்க வேண்டும். நாங்கள் வேலை கேட்டுச் சென்றால் எங்கள் தகுதி, திறமையை மட்டுமே பார்த்து வேலை கொடுக்கவோ மறுக்கவோ வேண்டும் என்பதே என் வேண்டுகோள்” என்கிறார்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் முதல் வழித்தடத்தில் இரண்டு சுரங்கப் பாதை ரயில் நிலையங்களுக்குப் பிறகு வரும் உயர்நிலைப் பாதை ரயில் நிலையமாகப் புதிய வண்ணாரப்பேட்டை ரயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சமூகத்தின் விளிம்புநிலைப் பிரிவினராக ஒதுக்கப்பட்டிருந்த திருநர்களைப் பணியில் நியமிப்பதை இயல்பாக்கம் செய்திருப்பதன் மூலம் சமூகத்தை மேம்பட்டதாக மாற்றும் முனைப்பின் சின்னமாக வண்ணாரப்பேட்டை ரயில் நிலையம் விளங்குகிறது. திருநர்களின் வாழ்வில் மேலும் பல வழித்தடங்கள் உருவாவதற்கு இது முன்னுதாரணமாக இருக்கட்டும்!
- ச.கோபாலகிருஷ்ணன்,
தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT