Published : 21 Feb 2021 03:18 AM
Last Updated : 21 Feb 2021 03:18 AM

இந்தியாவுக்கு இடக்கை வேகப்பந்து வீச்சு ஏன் தேவை?

நடராஜன் எழுச்சியைத் தொடர்ந்து இடக்கை வேகப்பந்து வீச்சு மீண்டும் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் கவனம் பெறத் தொடங்கியுள்ளது. எந்தவொரு நடைமுறை பாணிக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகவியல், கலாச்சாரப் பின்னணி உண்டு. சுழற்பந்து வீச்சு ஆதிக்கம் கொண்ட நாடாகக் கருதப்பட்ட இந்தியாவில், எழுபதுகளின் இறுதியில் மிதவேகப்பந்து பாரம்பரியம் கபில்தேவ் தலைமையில் வேர்விடத் தொடங்கியது. கபில்தேவின் விளையாட்டு வாழ்க்கையின் அந்திமக் காலத்திலேயே முழுமையான வேகப்பந்து வீச்சாளர் என்கிற அடையாளத்துடன் ஸ்ரீநாத் நுழைந்தார். புத்தாயிரத்தின் தொடக்கத்தில் ஜஹீர் கான் தலைமையில் பீடு நடைபோட்ட இந்தியா, இன்று பும்ரா யுகத்தில் உலகின் மிக வலிமையான வேகப்பந்து வீச்சுப் படையாக வளர்ந்து நிற்கிறது. எழுபது ஆண்டுகளைக் கடந்த இந்த வரலாற்றில், இடக்கை வேகப்பந்து வீச்சாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். என்ன காரணம்?

கிட்டத்தட்ட இந்தியாவை அச்சில் வார்த்தது போன்ற காலநிலை கொண்ட பாகிஸ்தானோ தொடக்க காலம் தொட்டே வேகப்பந்து வீச்சையே தனக்கான அடையாளமாக முன்னிறுத்திக்கொண்டது. பாகிஸ்தான் வேகப்பந்து பாரம்பரியத்துக்கு மாட்டுக்கறி உணவு மட்டுமில்லாமல் ராணுவத் தலைமை மீது பாகிஸ்தானியர்களுக்கு உள்ள ஈடுபாடும் ஒரு காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அப்துல் காதிர் தொடங்கி தற்போது யாசிர் ஷா வரை உலகத்தரம் வாய்ந்த ‘லெக் ஸ்பின்னர்ஸ்’ உருவாகியிருந்தாலும் ஸ்விங் பந்துவீச்சுதான் அந்த அணியின் பிரதான அடையாளம். வாசிம் அக்ரமை முன்மாதிரியாகக் கொண்டு நிறைய இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் அந்த அணியில் எப்போதும் இடம்பெற்றுவருகின்றனர். பாகிஸ்தானைப் போலவே ‘லெக் ஸ்பின்’ பாரம்பரியம் கொண்ட ஆஸ்திரேலியாவும் ஆலன் டேவிட்சன், ப்ரூஸ் ரீட் தொடங்கி இன்று மிட்செல் ஸ்டார்க் வரை பெரும் இடக்கை வேகப்பந்து பட்டாளத்தையே உருவாக்கியுள்ளது. அதே நேரம், ஆஸ்திரேலியக் கண்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் நியூசிலாந்தில் வலக்கை வேகப்பந்து வீச்சாளர்கள்தான் ராஜ்ஜியம் செய்துவருகின்றனர். ஆனால் பிரையன் யூல், வெட்டோரி தொடங்கி மிட்செல் சான்ட்னர் வரை இடக்கை சுழலர்கள் அந்த அணியில் தொடர்ந்து இடம்பெற்றுவருவதை மறுக்க முடியாது.

ஒரு சௌகரியத்துக்காக, ‘லெக் ஸ்பின்னர்ஸ்’ வலுவாக உள்ள தேசத்தில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகம் தென்படுகின்றனர் என வரையறுத்துக்கொள்வோம். பாகிஸ்தான் ஆடுகளங்கள் இந்தியாவில் உள்ளதுபோல மூன்றாம், நான்காம் நாட்களில் விரிசல் அடைவதில்லை. ஒரு மரபான விரல் சுழலர் அதுபோன்ற ஆடுகளங்களில் விக்கெட் வீழ்த்துவது என்பது குதிரைக் கொம்பு. தூஸ்ராவை ஒரு முக்கிய பாணியாக பாகிஸ்தானியர்கள் கைக்கொண்டதற்குக் காரணமும் இதுதான். ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை அது இங்கிலாந்து, நியூசிலாந்து போல வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான காலநிலை கொண்ட நாடல்ல. பாறைக்கு இணையாக பௌன்ஸை வாரி வழங்கும் அந்தக் களங்களில் வெற்றிகரமாகச் செயல்பட, ஒன்று வேகமாக வீச வேண்டும் அல்லது வித்தியாசமான கோணத்தை வழங்கும் இடக்கை வேகப்பந்து வீச்சைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சுழற்பந்து வீச்சாளர் என்றால் கிரிம்மெட், வார்ன் போல மணிக்கட்டை வளைக்கத் தெரிந்திருக்க வேண்டும். நேதன் லயன் ஏன் கொண்டாடப்பட வேண்டியவர் என்பதற்கான காரணமும் இதில் அடங்கியுள்ளது.

கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தின் வரலாறு இன்னும் சுவாரஸ்யமானது. டோனி லாக், மான்டி பனேசர் மாதிரியான உலகத் தரம் வாய்ந்த இடக்கைச் சுழலர்களை உற்பத்திசெய்த அந்நாடு, இடக்கை வேகப்பந்துக்கு வாழ்வளிக்காதது ஆச்சரியம்தான். ஜேக் ஃபெரிஸ், ரியான் சைடுபாட்டம் தொடங்கி இன்று சாம் கர்ரன் வரையிலான இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களுக்கான இடத்துக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றனர். ஈரப்பதம் மிகுந்த பிரதேசத்தில் வேகப்பந்து வீச்சாளருடைய வேலை சரியான திசையில், சரியான இடத்தில் பந்தைச் செலுத்துவது மட்டும்தான். வித்தியாசம் என்ற ஒன்றுக்கான தேவையே அங்கு ஏற்படுவதில்லை. ஆனால், அதுபோன்ற ஆதரவற்ற ஆடுகளங்களில் ஒரு சுழலர் வித்தியாசத்தைக் காட்டியாக வேண்டும்.

இன விடுதலை அரசியலை கிரிக்கெட் களத்துக்குக் கொண்டுவந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடக்கை வேகப்பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்தவர்கள் மிகவும் சொற்பம். அந்த அணியின் முழுமையான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் என்றால், அது பெர்னார்ட் ஜூலியன்தான். அவருக்குப் பிறகு புத்தாயிரத்தின் தொடக்கத்தில் பெட்ரோ காலின்ஸ் நம்பிக்கை அளித்தார். ஆனால், உடல் பலத்தை மூலதனமாகக் கொண்ட அந்த அணியானது, நளினம் கொண்ட இடக்கை வேகப்பந்து வீச்சில் கவனம் செலுத்தவில்லை. வாசிம் அக்ரம், முகமது அமீர் போன்றோர் புயல் வேகத்தில் வீசினாலும் அவர்களிடம் ஒரு சுழல்பந்து வீச்சாளர்களுக்கே உரித்தான நளினம் மின்னுவதைக் காண முடியும். டிரென்ட் போல்ட்டை ரசிக்கும் இந்திய மனம், முரட்டுத்தனமான மிட்செல் ஜான்சன், ஸ்டார்க்கை ஏற்க மறுப்பது புரிந்துகொள்ளக்கூடியதே.

ஆசியக் கண்டத்தில் வாசிம் அக்ரமுக்குப் பிறகு இடக்கை வேகப்பந்து வகைமையைத் தூக்கிச் சுமந்தவர்களில் சமிந்தா வாஸும் ஜஹீர் கானும் முக்கியமானவர்கள். தீவு தேசமான இலங்கையில் முரளிதரன் மாதிரியான சுழலர்களின் நிழலில் பந்து வீசத் தளைப்பட்ட வாஸ் தன்னுடைய நேர்த்தியான மிதவேகம் மூலம் அக்ரமிடமிருந்து மாறுபட்ட ஒரு பாணியை உருவாக்கினார். அவரைத் தொடர்ந்து நுவன் சொய்சா போன்ற ஒருசிலர் நம்பிக்கை அளித்தாலும் சுழலின் பிடியிலிருந்து அந்த அணி இன்றும் முழுமையாக விடுபட முடியவில்லை.

இந்தியாவில் இடக்கை வேகப்பந்து வீச்சு ஒரு தனித்த வகைமையாகக் கவனம் பெறாததற்கு ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ளது போன்ற ஒரு முன்மாதிரி இங்கு உருவாகாததும் ஒரு காரணம். மேலும், காலங்காலமாக நிலைபெற்றுள்ள சுழல் பாரம்பரியத்தில் அதற்கான தேவையும் பெரிதாக எழவில்லை. கர்சான் காவ்ரி, ஏக்நாத் சோல்கர் என்று சிலர் எழுந்துவந்தாலும் அவர்களின் கூடுதல் நிபுணத்துவத்துக்காக மட்டுமே வரலாற்றில் நினைவுகூரப்படுகிறார்கள். இந்தியாவின் ஒரு முழுமையான இடக்கை வேகப்பந்து வீச்சு முன்னோடி என ஜஹீர் கானை மட்டுமே அடையாளப்படுத்த முடியும். வேகம், நளினம், தந்திரம் என அனைத்தும் ஒருங்கே அமைந்த நிபுணர் அவர். சுழற்பந்து வீச்சாளர்களைப் போலத் தன்னுடைய விளையாட்டு வாழ்க்கையின் அந்திமத்தில் உச்சத்தைத் தொட்ட ஒரு கலைஞன். ஜஹீரின் உண்மையான வாரிசு என இர்பான் பதானையே சொல்ல முடியும்.

இன்று காலத்தின் தேவையாக நடராஜன் கிளம்பிவந்திருக்கிறார். வெறுமனே யார்க்கரைக் கடந்தும் தன்னிடம் நுட்பங்கள் உண்டு என்பதை ஆஸ்திரேலியத் தொடரில் நிரூபித்திருக்கிறார். ஒருவிதத்தில் அவரை ஆஸ்திரேலியாவின் கேரி கில்மர், புரூஸ் ரீட் போன்றவர்களுடன் ஒப்பிடலாம். வசீகரமான ஓட்டத்தோடு மிதவேகத்தில் நல்ல ‘லெங்க்த்’தில் தொடர்ந்து வீசி மட்டையாளர்களை ஏமாற்றும் வித்தை தெரிந்தவர். தொடர்ந்து ஐசிசி தொடர்களில் இந்தியா வெற்றிபெறாமல் போவதற்கு இடக்கை வேகப்பந்து வீச்சாளர் இல்லாததும் ஒரு காரணம். அதற்கான தீர்வாக நடராஜன் இனி இருப்பார் என நம்பலாம்.

- தினேஷ் அகிரா, பத்திரிகையாளர். தொடர்புக்கு: dhinesh.writer@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x