Published : 18 Feb 2021 03:18 AM
Last Updated : 18 Feb 2021 03:18 AM
இந்த ஆண்டு பத்ம விபூஷண், பத்ம பூஷண் விருதுகள் இஸ்லாமிய அறிஞர்கள் மௌலானா வஹீதுத்தின் கான் மற்றும் மௌலானா கல்ப் சாதிக் (மரணத்துக்குப் பின்) ஆகியோருக்கும் தரப்பட்டிருப்பது பலருக்கும் வியப்பளிப்பதாக இருக்கலாம். வஹீதுத்தின் கானுக்கு 2000-ம் ஆண்டு பத்ம பூஷணும், 2009-ல் ராஜீவ் காந்தி தேசிய மத நல்லிணக்க விருதும் வழங்கப்பட்டிருப்பதை நினைவுகூரலாம். மறுபுறம் இந்த அறிஞர்களின் சேவையை அங்கீகரிப்பதன் மூலம் அரசு எவ்விதம் தேசிய வாழ்வு அமைய வேண்டுமென்பதை விரும்புகிறது என்பதை உணர்த்துவதாகவும் கொள்ளலாம்.
நல்ல இஸ்லாமியருக்கான வழிகாட்டல் என்னவோ, அதுவே நல்ல இந்து, சீக்கிய, கிறிஸ்துவருக்கும் பொருந்தும். இந்த வார்ப்புரு நல்லதொரு இஸ்லாமியன், உலகளாவிய குடிமகனுக்கான முன்மாதிரியைவிட வேறுபட்டதுமல்ல. இந்த முன்மாதிரியானது சமூகத்தை சேவையால், கொடையால், சமாதானத்தால், சகோதரத்துவத்தால் மேம்படுத்தி வாழ்வதாகவே இருக்க வேண்டுமென்கிறது. இந்தத் திசையிலிருந்துதான் வஹீதுத்தின் கான் இஸ்லாமிய மரபுகளின் வளங்களுக்குள்ளும் மூழ்கி முத்தெடுத்து, அது கூறும் உலகளாவிய மானுட அறத்தை வெளிக்கொண்டுவருகிறார். இஸ்லாம் என்பதே சமாதானம் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. இறை விருப்பத்துக்குப் பணிந்து உலக அற விழுமியங்களை ஏற்று, உலகை வாழ்வதற்கான உன்னத இடமாக மாற்றுவதற்கு ஒவ்வொரு தனி மனிதனும், சமூகமும் தன்னை ஆட்படுத்திக்கொள்ள வேண்டுமென்கிறது இஸ்லாம். இது முஸ்லிம்களின் தனிப்பட்ட, கூட்டு நடத்தையில் பிரதிபலித்தால் மட்டுமே அதற்குப் பொருளிருக்க முடியும். சமாதான வழிகாட்டல் மதம் போதிப்பதையும், அது உருவாக்கும் பண்பாட்டையும் பொருத்தே அமையும், மதிப்பிடமுடியும்.
சமாதான லட்சியம்
இஸ்லாமியரிடையே சமாதானத்தை உருவாக்க முயன்ற மிகச் சில பாரம்பரிய, மரபு சார்ந்த அறிஞர்களில் ஒருவர் மௌலானா வஹீதுத்தின் கான். சமாதானத்தை முழுமையான சித்தாந்தமாக முன்வைக்கும் லட்சியத்தில் அமைதிக்கும் ஆன்மிகத்துக்குமான மையத்தை புதுடெல்லியில் அவர் உருவாக்கினார். ‘தி ப்ராஃபெட் ஆஃப் பீஸ்’, ‘தி ஏஜ் ஆஃப் பீஸ்’, ‘இஸ்லாம் அண்டு வேர்ல்டு பீஸ்’ போன்ற நல்லிணக்கத்தை வளர்க்கும் நூல்களை அவர் எழுதியிருக்கிறார்.
முஹம்மத்தின் தீர்க்கதரிசனமிக்க காலகட்டம் என்பது கி.பி.628-ல் செய்துகொள்ளப்பட்ட ஹுதைபியா ஒப்பந்தம் என்பது மௌலானாவின் கருத்து. மெக்கா நகரவாசிகளுடனான இடைவிடாத போரை முடிவுக்குக் கொண்டுவர நபிகள் நாயகம் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டு தமது சீடர்கள் பழையதை மறக்க வேண்டினார். இது சரணாகதி உடன்படிக்கை என்று கூறிய தன் ஆதரவாளர்களின் அதிருப்திக்கு ஆளாக நேர்ந்தது. அதைப் பொருட்படுத்தாமல் என்ன விலை கொடுத்தும் இந்த சமாதானம் என்பதே அவரது லட்சியமாக இருந்தது. பகைமையின் முடிவில் இரு சமூகங்களிடையே நல்லுறவும் கருத்துப் பரிமாற்றமும் வளரும் புறச்சூழல் உருவானது. அதன் பின் எதிரிகளும் அவருடன் இணைந்தனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெற்றியின் திருவிழாவாக மெக்கா வென்றெடுக்கப்பட்டது. மௌலானாவின் இஸ்லாம் குறித்த விளக்கம் ‘நன்மையும் தீமையும் சமமானவையல்ல; மிகச் சிறந்ததைக் கொண்டு தீயதைத் தடுப்பீராக; அப்போது உம்முடன் கடும் பகை கொண்டிருந்தவரும் உற்ற நண்பராகிவிடுவதைக் காண்பீர்’ என்கிற திருக்குர்ஆனின் 41:34 வசனத்தில் கூறப்பட்டுள்ளது என்பதாகும்.
அரசியல் உரையாடல்
அபுல் அ(ஹ்)லா மௌதூதி (1903 - 1979) அளித்த விளக்கமான ‘அரசியல் இஸ்லாம்’ கோட்பாட்டுக்கு மாறுபட்டு, இஸ்லாமிய இறையியலின் ஆணிவேர் உரையாடலின் மூலமான சமாதானம் என்பதே மௌலானா வஹீதுத்தின் கானின் நிலைப்பாடு. இனவெறியும், மதவெறியும் கொண்ட சித்தாந்தத்தை முற்றாக விமர்சித்து, அதன் பொய்மைத் தன்மையை மௌலானா விளக்கி எழுதியுள்ளார். உலகை வென்று இஸ்லாம் மேலோங்கும் என்கிற சிந்தனையை முஸ்லிம்களின் மனோநிலையில் செல்வாக்குச் செலுத்துவதை இது ஊக்குவிக்கிறது என்று விமர்சனம் செய்கிறார். இதற்காக ஏராளமான கட்டுரைகள், நூல்கள் எழுதிய மௌலானா வஹீதுத்தின் கான் இது குறித்து அரை நூற்றாண்டாகப் பேசிவருகிறார். இஸ்லாமிய அரசியல் கோட்பாடுகள் என்பவை கடந்துபோன பொற்காலக் கனவின் எச்சமாக வெறுப்பும், பகைமை ததும்ப உருவானதே ஆகும்.
சமாதானத்துக்கான உரையாடல்
‘வஞ்சிக்கப்பட்டவர்’ என்றதுமே ‘கற்பனை எதிரி’யை மனம் கட்டமைத்துவிடும். இந்த மனநிலை மோதல், வன்முறை ஆகியவற்றின் அடிப்படை என்பதைச் சரியாக அடையாளம் காட்டினார் வஹீதுத்தின் கான். முஸ்லிம்களுக்கு எதிரான சதி என்கிற சந்தேக மனோநிலை, இஸ்லாமின் மீதும் உலகின் மீதும் பெரும் பாதிப்பை உருவாக்கிவிடக் கூடும். ‘இந்தியன் முஸ்லிம்ஸ்: தி நீட் ஃபார் எ பாஸிட்டிவ் அவுட்லுக்’ (இந்திய முஸ்லிம்களுக்கு நேர்மறைக் கண்ணோட்டம் தேவை) என்கிற நூலில் பகையாளியை உருவாக்கிக்கொள்ளும் மனோநிலைக்கு எதிராக வாதிட்டு, முரண்பாடுகளைச் சீர்ப்படுத்த முனைகிறார். சக முஸ்லிம் சகோதரர்கள் அற மேன்மையில் கவனம் செலுத்தி, சமூக-பொருளாதார முன்னேற்றமும் பெற்று, பிற சமூகத்தினருடன் நல்லிணக்கம் காண வலியுறுத்தினார்.
இவ்விதம் 1980-களின் மத்தியிலிருந்து இஸ்லாமிய அடையாளத்தைச் செதுக்கிவரும் சர்ச்சைக்குரிய விஷயங்கள் எல்லாவற்றிலும் முஸ்லிம் சமூகத்தினரின் பொதுவான மனநிலையுடன் உடன்படாமலேயே வேறு நிலைப்பாட்டை வஹீதுத்தின் கான் மேற்கொண்டுவந்தார். அறவுணர்வுடன் செயல்படவும், கடும்போக்கைத் தவிர்க்கும்படியும் முஸ்லிம்களை மௌலானா வஹீதுத்தின் கான் கேட்டுக்கொள்கிறார். மிக மோசமான அவதூறுகளுக்கு முகங்கொடுத்து, சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக ‘முஸ்லிம் தனிநபர் சட்டம்’ தொடர்பாகச் சட்டமியற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளதையும் அவர் வலியுறுத்தினார். ஈரானின் ராஜகுருவாக இருந்த இமாம் கொமேனி (1902 - 1989) சல்மான் ருஷ்டிக்கு எதிராக வெளியிட்ட ஃபத்வாவையும் மௌலானா ஏற்கவில்லை. மதம், அரசியல் இரண்டின் கலவை அருவருப்பானது என்றும் மதநெறிப்படியும் சரியல்ல, அரசியல்ரீதியாகவும் நல்லதல்ல என்பதால், கொலையாணைக்கான மதத் தீர்ப்பைத் திரும்பப் பெறுவதே சிறந்தது என்கிறார். பாபர் மசூதி மீதான உரிமைக் கோரலை விட்டுத்தருமாறு முஸ்லிம்களை அறிவுறுத்தியபோது, மௌலானா மீது பழிசுமத்தப்பட்டது. சட்டப்படியான உரிமை, சரி-தவறு என்ற நீதிக்கான வாதங்களுக்கு அப்பாற்பட்ட நிலையை இவ்வழக்கு மீறிச் சென்றுவிட்ட அசாதாரண எதார்த்தத்தை அனைவரும் அறிவர். ஆனால், பாபர் மசூதியை விட்டுக்கொடுத்து, தம்மைச் சூழவரும் பேராபத்தைத் தவிர்க்க வேண்டுமென முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறும் துணிவு பெற்றவராக மௌலானா மட்டும் இருந்தார். முஸ்லிம் தலைவர்கள் தங்களால் தாண்ட முடியாத உயரத்தை எட்ட முயன்றனர், அது புலியின் வாலைப் பிடித்த கதையாக ஆனது.
வெற்றிக்கான முயற்சி
இன்றைய பன்முகத்தன்மை கொண்ட, மதச்சார்பற்ற உலகில் இஸ்லாமியர்கள், அனைவருடனும் இணங்கி வாழ வேண்டும் என்று நல்லிணக்கக் கருத்தை மௌலானா வஹீதுத்தின் கான் பரப்பிவருகிறார். நவீன காலத்துக்கேற்ப திருக்குர்ஆனை மறுவாசிப்பு செய்ய வேண்டுமெனத் தூண்டிய சர் சையத் அஹ்மத் கான் ( 1817 - 1898); மௌலானா அபுல்கலாம் ஆசாத் (1888 - 1958) போன்றோரிடம் மௌலானா சிந்தனையின் வேர்களைப் பின்தொடர்ந்து போய்ச் சேர முடியும். இந்த இரண்டு பேரறிஞர்களும் மீள்வாசிப்பினூடாக இஸ்லாத்தை இன்றைய உலகுக்கு இணக்கமானதாக மாற்ற முயன்றனர். பிற மதங்களுடன் நல்லிணக்கம், ஒற்றுமை என்பதே இஸ்லாமின் சாரம் என்று அவர்கள் காட்டினார்கள். புவியியல் பண்பாட்டுப் புரிதலில் நேரும் வேறுபாடுகளால் உருவானவையே வெவ்வேறு மதங்கள் என்பதையும் அவர்கள் விளக்கினார்கள். மௌலானா வதீதுத்தின் கானின் முயற்சிகள் சந்தேகத்துடனும் வெறுப்புடனும் மட்டுமே அணுகப்பட்டன. அவரது கருத்துகள் சரியானவையே என்பதைக் காலம் உணர்த்தும்.
- நஜ்முல் ஹுதா, ஐபிஎஸ் அதிகாரி
© ‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: டாக்டர் ஜீவா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT