Published : 17 Feb 2021 03:12 AM
Last Updated : 17 Feb 2021 03:12 AM

திட்டமிட்ட புதிய நகரங்கள் நம் காலத்தின் தேவை

புறநகர்ப் பகுதிகளில் அதிகரித்துவரும் மக்கள்தொகையை உத்தேசித்துத் திட்டமிட்ட வடிவமைப்புடன் எட்டு புதிய நகரங்களை உருவாக்கவும் அதற்காக ரூ.8,000 கோடி நிதி ஒதுக்கவும் 15-வது நிதிக் குழு பரிந்துரைத்துள்ளது. இப்படியொரு திட்டத்துக்காக இதற்கு முன்பு நிதிக் குழு இவ்வளவு அதிகமான நிதியை ஒதுக்கியதில்லை என்று தனது ஆச்சரியத்தைத் தெரிவித்திருக்கிறார் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் செயலரான துர்கா ஷங்கர் மிஸ்ரா.

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 31.2% மக்கள் நகர்ப்புறங்களில் வசித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் 26% மட்டுமே நகர்ப்புறம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கிறார்கள். மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, நகரங்கள் என்பவை 5,000-க்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்டிருப்பவை, ஒரு சதுர கிமீ பரப்புக்குள் 400-க்கும் மேற்பட்டவர்கள் வசிப்பவை, 75%-க்கும் அதிகமானவர்கள் விவசாயம் சாராத பணிகளைச் செய்பவர்கள் என்று வரையறுக்கப்பட்டிருந்தன. ஆனால், இவ்வாறு வரையறுக்கப்பட்ட நகரங்களில் பலவும் ஊராட்சி அமைப்பின் கீழேதான் இருக்கின்றனவேயொழிய அவற்றுக்கென்று தனி நகராட்சி அமைப்புகள் உருவாக்கப்படவில்லை. பெருநகரங்களையொட்டிய புறநகர்ப் பகுதிகள் பலவும் இப்படி ஊராட்சி அமைப்பின் கீழாகத்தான் நிர்வகிக்கப்பட்டுவருகின்றன.

இந்தியாவில் அமையவிருக்கும் புதிய நகரங்கள் ஏற்கெனவே வளர்ச்சியடைந்த பெருநகரங்களின் புறநகர்ப் பகுதிகளில் அமையவுள்ளனவா அல்லது முற்றிலும் பசுமை நகரங்களாகத் திட்டமிடப்பட்டுள்ளனவா என்று தெரியவில்லை. ஆனால், இந்த இரண்டு நிலைகளிலுமே புதிய நகரங்களின் தேவை இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். இருபத்தியோராம் நூற்றாண்டின் அறிவுத் துறை விவாதங்களில் நகர்ப்புறத் திட்டமிடுதல் தவிர்க்க இயலாததாக மாறியிருக்கிறது.

தொழில் நகரப் பெரும் பாதைகள்

‘யுனிவர்சிட்டி ஆஃப் பென்சில்வேனியா பிரஸ்’ வெளியிட்டுவரும் ‘த சிட்டி இன் த ட்வென்டி பர்ஸ்ட் செஞ்சுரி’ நூல் வரிசையில் மட்டுமே இதுவரையில் நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளிவந்துள்ளன. நிலைத்த வளர்ச்சியைக் கொண்ட பசுமை நகரங்கள், இயற்கைப் பேரிடருக்குப் பிறகு நகரங்களின் மறுகட்டமைப்பு, பெருநகரங்களில் பெண்களின் உடல்நலம், பாதுகாப்புடன் கூடிய குடியிருப்புகள், நகர்ப்புற வேலைவாய்ப்புகள், நடைபாதை வணிகம், வீட்டுமனைத் தொழில், பெருநகரங்களின் குடிசைப் பகுதிகள் என்று வெவ்வேறு கோணங்களில் மேற்கொள்ளப்பட்ட சமூக, பொருளியல் ஆய்வுகள் இவை. இந்த நூல் வரிசையில் இந்திய அறிஞர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளும் உண்டு.

சாய் பாலகிருஷ்ணன் எழுதியுள்ள ‘ஷேர்ஹோல்டர் சிட்டீஸ்’ என்ற தலைப்பிலான புத்தகம் தொழில்நகரங்களை இணைக்கும் பொருளாதாரப் பெரும் பாதைகளுக்கான திட்டமிடல்கள் வழிநெடுக உள்ள விவசாய நிலங்களின் தன்மைகளை மாற்றிவிடுவதைக் கவனப்படுத்துகிறது. ஏறக்குறைய ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக பசுமைப் புரட்சிக் காலத்தில் பாசன வசதிகளைப் பெற்று விளைநிலங்களாக மாற்றப்பட்டவை இப்போது வெறும் சொத்துகளாக மட்டுமே பார்க்கப்படுகிற மனமாற்றத்தை இந்தப் புத்தகம் விளக்குகிறது. இந்தியாவின் நகர்ப்புற வளர்ச்சியில் இப்படிப் பேசப்படாத பக்கங்கள் இன்னும் நிறையவே இருக்கின்றன.

ஒன்பது கோட்பாடுகள்

உருவாகவிருக்கும் புதிய நகரங்கள் தொழில்வளர்ச்சியை மட்டுமே கருத்தில்கொள்ளாமல் அங்கு வசிக்கும் மக்களுக்கான வாழ்வியல் தேவைகளையும் நியாயமான முறையில் நிவர்த்தி செய்ய வேண்டும். ‘ப்ரின்ஸ்டன் ஆர்க்கிடெக்சுரல் பிரஸ்’ வெளியிட்டுள்ள ‘சிட்டி பில்டிங்’ என்ற புத்தகம் 21-ம் நூற்றாண்டு நகரங்களுக்கு ஒன்பது திட்டக் கோட்பாடுகளைப் பரிந்துரைக்கிறது. அவற்றில் முதன்மையானது நீடித்த, நிலையான வளர்ச்சியைக் கொண்டதாக நகரங்கள் அமைய வேண்டும் என்பது. இரண்டாவது கோட்பாடு, போக்குவரத்துத் தொடர்புகள் வலுவாக இருக்க வேண்டும் என்பது. தற்போது ஒன்றிய அரசு முன்னெடுத்துவரும் தொழில்நகரங்களுக்கு இடையிலான பெரும் பாதைத் திட்டங்களை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். மூன்றாவது கோட்பாடு, நகரங்களின் கட்டுமானங்களுக்கான விதிமுறைகள் ஒரேமாதிரியாக இருந்தாலும் அங்கு அமையும் கட்டுமானங்கள் தங்களுக்கிடையில் பன்மைத்துவம் கொண்டதாக அமைய வேண்டும் என்கிறது. நான்காவது கோட்பாடு, நகரங்களில் திறந்தவெளிகளுக்குக் குறிப்பிடத்தக்க அளவில் இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஐந்தாவது கோட்பாடு, ஒரு நகரத்தின் புதிய கட்டுமானங்கள் ஏற்கெனவே அங்குள்ள கட்டுமானங்களுக்கு ஒத்திசைந்தததாக அமைய வேண்டும் என்றும் மரபார்ந்த கட்டுமானங்களும் ஊர்ப்புற நிலவெளி அமைப்புகளும் பாதிப்புகளுக்கு ஆளாகாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. தொழில்நகரங்களின் விரிவாக்கப் பகுதிகள் நில அமைப்புகளுக்கும் நீரோட்டங்களுக்கும் கேடாக முடிகின்றன என்பதே நமக்கு அனுபவப் பாடம். புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஆறுகளுக்குப் புத்துயிர் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது ஆறாவது கோட்பாடு. ஏற்கெனவே கட்டுமானங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட நிலங்களில் புதிய கட்டுமானங்களை உருவாக்க வேண்டும் என்றும் இந்தக் கோட்பாடு கூறுகிறது. நிலமும் நீரும் பயன்படுத்தப்பட்டு வீசியெறியக்கூடிய பொருட்கள் அல்ல என்பதே இக்கோட்பாட்டின் அடிப்படை. அதே நேரத்தில், நகர்ப்புறமும் அங்கு அமைந்துள்ள கட்டுமானங்களும் புதிய மாற்றங்களை ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமைய வேண்டும் என்று கூறுகிறது ஏழாவது கோட்பாடு. ஏற்கெனவே இருக்கும் உள்கட்டமைப்புகளைக் கொண்டு மக்கள் அடர்த்தியைச் சமாளிக்கும் வகையில் நகரங்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என்று எட்டாவது கோட்பாடும், அந்த நகரத்தை ஒரு பண்பாட்டு அடையாளமாக உருவாக்க வேண்டும் என்று இறுதிக் கோட்பாடும் கூறுகின்றன.

நகரென்னும் கனவு

திட்டமிடாத நகர்ப்புற வளர்ச்சியில் ஒரு நகருக்குத் தேவையான இத்தகைய அம்சங்களில் ஒன்றிரண்டோ பலவோ இல்லாதிருக்கலாம். திட்டமிட்டு நகரங்களை உருவாக்கும்போது அனைத்தையும் உள்ளடக்கிக்கொள்ள முடியும். மனித சமுதாயத்தின் வரலாற்றில் மனிதர்கள் நகரங்களில் வாழ்ந்த காலமே நாகரிகத்தின் உச்சமாகவே கருதப்படுகிறது. ஆனால், இன்று விளக்கினடியில் இருள்போல, பொருளாதார வளர்ச்சி என்னும் பெருவெளிச்சத்தின் கீழே தொழிலாளர்களுக்கு ஆரோக்கியமான வாழ்விட வசதிகள்கூட இல்லாதவையாகவே நகரங்கள் அமைந்துள்ளன.

நிதிக் குழுவின் பரிந்துரையில் உருப்பெறவிருக்கும் புதிய நகரங்கள் உலகம் முழுவதும் இன்று தீவிரமாக நடந்துவரும் பல்துறை விவாதங்களைக் கருத்தில்கொண்டு வடிவமைக்கப்படட்டும். நிதித் துறை வல்லுநர்கள், கட்டிடக் கலைஞர்கள், பொறியாளர்கள் மட்டுமின்றி சமூக - பொருளாதார அரசியல் அறிஞர்கள், கலை இலக்கிய ஆளுமைகள் ஆகியோரையும் உள்ளடக்கிய வழிகாட்டும் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். புதிய கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கிற அதே சமயம், ஏற்கெனவே உள்ள நகரங்களை இயன்றவரைக்கும் மறுவடிவமைப்பு செய்ய வேண்டிய தேவையும் இருக்கிறது. ஏனெனில், நகரங்கள் என்பவை வெறும் சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள் மட்டுமில்லை; நடைமுறை வாழ்க்கையில் அதிகபட்ச சாத்தியங்களுக்கு உருவம் கொடுக்கும் முயற்சி அவை.

இன்று விளக்கினடியில் இருள்போல, பொருளாதார வளர்ச்சி என்னும் பெருவெளிச்சத்தின் கீழே தொழிலாளர்களுக்கு ஆரோக்கியமான வாழ்விட வசதிகள்கூட இல்லாதவையாகவே நகரங்கள் அமைந்துள்ளன!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x