Published : 09 Nov 2015 09:17 AM
Last Updated : 09 Nov 2015 09:17 AM
எனது நண்பர் ஒருவரிடம் - பிஹாரின் உயர் சாதியைச் சேர்ந்தவர் - சில நிமிடங்களுக்கு முன்னால் ‘‘பிஜேபியின் தோல்விக்குக் காரணம் என்ன?” என்று கேட்டேன். ‘‘அடக்கி வாசித்திருக்க வேண்டும். முன்னேற்றம்… முன்னேற்றம் என்று சொல்லிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது, உங்களால் முன்னேறியது பருப்பு விலையைத் தவிர வேறு ஏதும் இல்லை என்று மக்கள் ஒருமித்த குரலில் சொல்லிவிட்டார்கள். சாதாரண மக்களுக்கு விலைவாசி குறைய வேண்டும். அவர்களுக்குப் பெரிய பிரச்சினைகளுக்குக் கவலை கிடையாது.’’ நண்பர் பாஜக ஆதரவாளர். நான் அவரோடு முரண்பட விரும்பவில்லை. ஆனால், இந்திய அரசியலைப் பற்றி மிகத் தெளிவான புரிதல் சாதாரண மக்களுக்கு இருக்கிறது என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.
சாதிகள் கூட்டணியின் வெற்றி என்று இதைச் சொல்ல முடியுமா? ஒரு கோணத்தில் பார்த்தால் சாதிகள் வென்று விட்டன. சாதிகள் இன்னும் இறுக்கம் பெறும் என்று சொல்லத் தோன்றும். ஆனால், இதே வாதத்தைத் திருப்பிப் போட்டால், பாஜக வெற்றிபெற்றிருந்தால் அது உயர் சாதிகளின் வெற்றி என்று சொல்ல முடியாதா? எனவே, இது சாதிகளின் வெற்றி என்று சொல்ல முடியாது. தலித் மக்கள் எல்லோரும் பாஜகவுக்கு ஆதரவளித்திருந்தால் லாலு-நிதிஷ் கூட்டணி பெருவெற்றி அடைந்திருக்க முடியாது. இன்றைய வெற்றியில் காங்கிரஸின் பங்கு இருக்கிறது. முஸ்லிம்களின் பங்கு இருக்கிறது.
லாலு யாதவ் கை ஓங்கும் என்பது உண்மை. ஆனால், அவர் முன்பு ஆட்சி செய்தது போல், தனிக்காட்டு ராஜாவாக இயங்க முடியாது. நிதிஷின் கை சுத்தம் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். அவர் லாலுவைத் தன்னிச்சையாக இயங்க விட மாட்டார். எனவே, பிஹாரில் ஊழலற்ற முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் ஆட்சி அமைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இந்தக் கூட்டணியின் அடிப்படை முரண், லாலு தனது வம்சம் பிஹாரைத் தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என்று விரும்புவதுதான். எனவே, இந்தக் கூட்டணி உடையவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு அதற்குச் சாத்தியம் இல்லை. 1919 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னால் அது நிகழலாம்.
‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’ என்று எம்ஜிஆர் பாணியில் சாட்டையைச் சுழற்றி இந்தியத் தேர்தல்களில் வெற்றிபெறுவது கடினம் என்பதை இந்தத் தேர்தல் நிறுவுகிறது. மோடியின் பேச்சுகளைக் கேட்கக் கூட்டம் நிரம்பி வழிந்தாலும், மக்களுக்கு அவரால் பிஹாருக்கு ஏதும் செய்ய முடியாது என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. பிஹாரின் தலைவர் யார் என்பதைச் சொல்லாமல் வெற்றி பெற்ற பிறகு, அவரது பொம்மை ஒருவரை மத்தியிலிருந்து இயக்கலாம் என்பது அவரது எண்ணம் என்பது பிஹார் மக்களுக்குத் தெரிந்திருந்தது. பிரதமரின் பேச்சும் பிரதமரின் பேச்சாக இல்லை. உலக அளவில் இயங்கும் பிரதமர் தெரு ஓரத்தில் பேசுகின்றவர் நிலைக்கு இறங்கி வருவதை மக்கள் விரும்பவில்லை. எனவே, இது மோடியின் தோல்வி என்று சொல்ல வேண்டும்.
ஆனால், அவருடையதைவிட அவரது வலதுகரமான அமித் ஷாவின் மிகப் பெரிய தோல்வி இது. நெப்போலியனைவிட, ஜெனரல் ஷுகாவை விட மிகச் சிறந்த போர்த் தந்திர வல்லுநர் என்று அவர் பாஜக ஆதரவாளர்களால் அழைக்கப்பட்டார். ஆனால் “இதுவரை தெரியாத இந்த வழுக்கைத் தலை இப்போது எப்படி எல்லா இடங்களிலும் தெரிகிறது?” என்பது சாதாரண மக்களின் கேள்வியாக இருந்தது. பின்னிருந்து செயல்படுபவர் திடீரென்று முன்னால் வந்தால் மக்கள் அவரை ஏற்க மாட்டார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். ஆர்எஸ்எஸ் தலைவர் பகவத் வேறு கூத்தில் கோமாளியாக இடஒதுக்கீடு முறையைப் பற்றிப் பேசியதும் பாஜகவின் பின்னடைவுக்கு மிகவும் முக்கியமான காரணம்.
இதைவிட மிகப் பெரிய பிரச்சினை பாஜகவுக்கு இருக்கிறது. இந்தியா முழுவதும், சிறுபான்மையினரைத் தங்கள் பக்கம் கொண்டுவர வேண்டும் என்று கட்சியில் பலர் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் பாஜக இந்துக் கட்சி என்று அறியப்படுவதைவிட இந்தியாவின் வலதுசாரிக் கட்சியாக அறியப்பட வேண்டும் என்று நினைக்கிறவர்கள். இவர்கள் கை ஓங்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அதை ஆர்எஸ்எஸ் விரும்பாது. அமைதியாக இதுவரை இருந்த அத்வானி ஆதரவாளர்களும் உரத்த குரலில் பேசத் தொடங்கலாம். ஆனால், கடைசியில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் கைதான் ஓங்கி நிற்கும். அவர்கள்தான் கட்சியின் அஸ்திவாரம். எனவே, பாஜகவின் பிரச்சினைகள் பூதாகாரமாகப் பெருகும் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.
தேசிய அளவில் காங்கிரஸ் மட்டும்தான் பாஜகவுக்கு ஈடு கொடுத்துச் செயல்பட முடியும். ஆனால், காங்கிரஸின் தலைமைக்கு அதைச் செய்யும் திறன் இருக்கிறதா என்பது சந்தேகம். காங்கிரஸ் அடுத்தகட்டத்தை நோக்கி நகர வேண்டும் என்றால், அடுத்த வருடம் வரும் உத்தரப் பிரதேசத் தேர்தலின் வியூகங்களைப் பற்றி காங்கிரஸ் இப்போதே யோசிக்க வேண்டும். மாயாவதி, சிறுபான்மையினருடன் சேர்ந்து கூட்டணி அமைப்பதைப் பற்றி தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்.
இந்திய மக்கள் இழுத்துப் பிடிப்பதில் வல்லவர்கள் என்பதை இந்தத் தேர்தல் மறுபடியும் நிரூபித்திருக்கிறது. இந்திரா காந்தி யோடு ஒருவர் கை என்றுமே ஓங்கியிருப்பது முடிந்துவிட்டது. எனவே, தலைவர்கள் தான்தோன்றியாகச் செயல்படுவது கடினம். ஆனால், இதையும்விட மேலாக இது நேரு கண்ட இந்தியாவின் வெற்றி என்று நான் சொல்வேன். மதச்சார் பின்மையை இந்திய மக்கள் ஒருநாளும் கைவிட மாட்டார்கள் என்பதை பிஹார் மக்கள் உரத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
அவர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட் டிருக்கிறோம்!
- பி.ஏ. கிருஷ்ணன், தொடர்புக்கு: tigerclaw@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT