Last Updated : 20 Nov, 2015 08:38 AM

 

Published : 20 Nov 2015 08:38 AM
Last Updated : 20 Nov 2015 08:38 AM

இயற்கையை ஏமாற்ற முடியாது!

வெயில் வெளுத்து வாங்கிய நாட்களில், எப்போது மழை வரும் என்று காத்திருந்தவர்கள் அதிர்ந்துபோய்க் கிடக்கிறார்கள். வட கிழக்குப் பருவ மழை, தமிழகம் முழுவதும் பரவலாகப் பெய்திருந்தாலும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை உலுக்கியெடுத்துவிட்டது. புறநகர்ப் பகுதிகளில் இன்னமும் வெள்ளம் முழுதாக வடியவில்லை. பல இடங்களில் பேருந்து இயக்கம் சீராகவில்லை. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலிருந்து வந்துகொண்டேயிருந்த தகவல்கள் பதைபதைக்க வைத்தன. வெள்ளத்துக்குத் தப்பிய நண்பன் ஒருவன் சொன்ன தகவல் மேலும் பதற்றம் தந்தது.

வீட்டின் எதிர்ப்பை மீறி ஒரு வட இந்தியப் பெண்ணைக் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நண்பன், சமீபத்தில்தான் பெரும்பாக் கத்தில் வீடு ஒன்றை வாங்கினான். நண்பனின் மனைவி கர்ப்பிணி. அடுத்த மாதம் 18-ம் தேதி வாக்கில் பிரசவம் என்று மருத்துவர் சொல்லியிருந்தார்.

கடந்த 15-ம் தேதி காலை நண்பனின் மனைவிக்குப் பிரசவ வலி எடுத்தது. பதறிப்போன நண்பன் டூ-வீலரை ஸ்டார்ட் செய்துள்ளான். ஸ்டார்ட் ஆகவில்லை. கால் டாக்ஸிகளும் கிடைக் கவில்லை. மேல் வீட்டில் குடியிருப்பவருடைய காரை எடுத்துக்கொண்டு சோழிங்கநல்லூர் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். மருத்துவ மனைக்குச் சென்று சேர்ந்த சிறிது நேரத்தில், பெரும்பாக்கம் ஏரி உடைத்துக்கொண்டு சாலை யில் இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் பாய்ந்தது. சற்று தாமதித்திருந்தாலும் மிகப் பெரிய விபரீதம் நிகழ்ந்திருக்கும்.

வேளச்சேரி, சோழிங்கநல்லூரைச் சுற்றியிருந்த பல புறநகர் வாசிகளின் நிலை அதுவாகத்தான் இருந்தது. 2 பெட்ரூம், ஹால், கிச்சன், வீடு, கார், பேங்க் பேலன்ஸ் என்று வாழ்க்கையின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகிவிட்டதாக வாழ்ந்த அவர்களுக்கு, ‘உயிர்’ என்ற ஒன்றும் முக்கியம் என்று உணர்த்திச் சென்றுள்ளது மழை. எல்லாம் இருந்தும் ஒரு பாக்கெட் பாலுக்கு ஹெலிகாப்டர்களை எதிர்பார்த்து மொட்டை மாடியில் பலரை நிற்கவைத்துவிட்டது இயற்கை.

மழையில் மனிதாபிமான உதவிகள் கிடைத்தது ஒருபுறம் என்றால், மனிதமற்றவர்களின் பேராசை யும் பளிச்சென்று வெளிப்பட்டது. வாடகை கார் நிறுவனம் ஒன்று, மடிப்பாக்கத்தில் படகு சேவை யைக் கட்டணத்துடன் தொடங்கி வர்த்தக வன்மத்தின் அசல் முகத்தைக் காட்டியது!

சென்னையில் ஆக்கிரமிப்புகள் அதிகமென்று குத்துமதிப்பாகச் சொல்லி வந்த நிலையில், எதுவெல்லாம் ஆக்கிரமிப்புகள் என்று படம் பிடித்துக் காட்டி, அதன் விளைவுகளை அழுத்தமாக எடுத்துச் சொல்லிச் சென்றுள்ளது மழை. நிச்சயம் இயற்கையை ஏமாற்ற முடியாதுதான்!

தொடர்புக்கு: manikandan.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x