Published : 07 Feb 2021 03:13 AM
Last Updated : 07 Feb 2021 03:13 AM

ரெண்டாம் நம்பர்!

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் திருநங்கை ஒருவர், குறிப்பிட்ட எண்ணைச் சொல்லித் தங்களைச் சமூகம் குரூரமாக அடையாளம் காட்டுவது பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். ரொம்பவும் வருத்தமாக இருந்தது. கூடவே இப்படியான பிரிவினை, பேதப் பேச்சுகளுக்கு எண்களைக் குறியீடாக்கியது எப்படிப் புழக்கத்தில் வந்திருக்கும் என்ற சிந்தனையும் வந்தது. மிகத் தரமானது என்பதற்கும், அதன் தீவிரத்தைச் சொல்வதற்கும் ‘ஒன்றாம் நம்பர்’ உதவுகிறது. ஆனால், இஸ்லாமியர்களுள் ‘ரெண்டாம் நம்பர்’ என்று சிலரை அடையாளப்படுத்தும் வழக்கம் இருப்பதை அறிவீர்களா? பரம்பரை பரம்பரையாக இஸ்லாமியர்களாக அல்லாமல் புதிதாக மதம் மாறியவர்களின் குடும்பமும், காதல் திருமணம் செய்துகொண்டு இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை இஸ்லாத்துக்குள் கொண்டுவரும் போது அந்தக் குடும்பமும் ‘ரெண்டாம் நம்பர்’ குடும்பமாகிறது. வழிவழியாக இஸ்லாமியர்களால் மட்டுமே விருத்தி செய்யப்பட்டு, எந்த வேற்று மதக் கலப்பும் அல்லாத குடும்பம், பவித்ரமான முதல் நம்பர் குடும்பம். என் பெற்றோர் காதல் கலப்பு மணம் புரிந்தவர்கள், அம்மா இஸ்லாத்துக்கு மாறியவர். பள்ளிக் காலத்தில் நண்பர்களை ஒரு குறிப்பிட்ட கேலிப்பெயர் சொல்லி, அருகில் சேர்க்காமல் கலங்கடிப்பதில் நான் கைதேர்ந்தவளாக இருந்தேன். என் சகோதரனுக்கு வரன் தேடிய சமயத்தில், அதே தீண்டாமை மாதிரியான ஒன்றைப் பேசி நாங்களும் கதறடிக்கப்பட்டோம்.

ரெண்டாம் நம்பர் அந்தஸ்து

என் தம்பி மிக இளமையிலேயே மருத்துவத்தில் அதிக மதிப்பெண் அடிப்படையில் பட்ட மேற்படிப்பு படித்தவன். அல்லைதொல்லைகளற்ற குடும்பம். சென்னையில் சொந்த வீடு என்ற காரணங்களால் கொஞ்சம் பெருமிதமாகத்தான் அப்போது இருந்தேன். அதே காரணங்களுக்காகத் தங்கள் பெண்ணைத்தான் கொடுப்போம் என்று எங்கள் எதிர்பார்ப்பை மீறின வேகத்துடன் சம்பந்தம் செய்துகொள்ள ஆர்வம் காட்டியது ஒரு குடும்பம். எல்லாம் எங்கள் ‘ரெண்டாம் நம்பர்’ ஸ்திதி தெரியும் வரையில்தான். கிட்டத்தட்ட பேசி முடித்த சம்பந்தத்தைக் கொஞ்சமும் யோசிக்காமல் முறித்துக்கொண்டார்கள். பெண் தராவிட்டால் போகட்டும், எப்படியும் இஸ்லாத்தின் அடிப்படையையாவது அந்த அம்மணிக்குப் புரியவைத்துவிடக் கங்கணம் கட்டிக்கொண்டு வீட்டுக்குத் தெரியாமல் தொலைபேசினேன். என் எல்லா வியாக்யானங்களையும் கேட்டுவிட்டு, ஒற்றை வரியில் பதில் சொன்னார் அந்த அம்மணி: “அதெல்லாஞ் சரி! தலப்புள்ளயக் கொண்டோய் ரெண்டா நம்பர் வூட்டுலயா கவுத்தண்டு என் சனம் பேசுமே அதுவளுக்கு நான் என்னத்த பதில் சொல்ல?”

இன்னொரு குடும்பத்துக்கு நாங்கள் அவர்கள் பெண்ணைப் பார்க்க காரில் ஏறின பிறகுதான் எங்கள் ‘ரெண்டாம் நம்பர்’ அந்தஸ்து தெரியவந்திருந்தது. பெண்ணுக்கு ஜுரம், பார்க்க வர வேண்டாம் என்றார்கள். 1973-லேயே கலப்பு மணம் புரிந்துகொண்ட தைரியசாலியான என் அப்பா, தன் மகளுக்கு நல்ல ஒரு இஸ்லாமிய மணமகன் கிடைக்க மாட்டான் என்ற பயத்தில், 17 வயது நிறையும் முன்பே அக்காள் மகனுக்குத் திருமணம் செய்வித்ததன் பின்னால் எத்தனை அச்சம் இருந்தது என்று எனக்கு அப்போது புரிந்தது. அதேநேரம், “இதுல என்ன இருக்கு? நாம்ப முன்னால இஸ்லாத்துக்கு வந்தம், நவ் முஸ்லிம் பின்னால வந்தவுக அவ்வளவுதானே” என்று பேசியவர்களையும் பார்த்திருக்கிறேன். சூழலியலாளர் சுல்தான் இஸ்மாயிலிடம் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது, “மதம்மாறுதல் என்பது சரியான சொல் இல்லைம்மா, மதத்துக்குத் திரும்புதல் என்பதே சரியான சொல்” என்றார். அது இஸ்லாமியர்களின் நம்பிக்கை சார்ந்த செய்தி.

மயிலாசி குடும்பம்

எனக்குத் திருமணம் முடிந்து, ஒரு வருடத்தில் என் கணவர் வெளிநாடு சென்றிருந்த சமயம், அப்பாவுக்கும் அத்தைக்கும் ஏகப்பட்ட மனத்தாங்கல்கள். ஒருமுறை பிரச்சினை முற்றியதில் என் பெரியப்பா, மௌல்வி கடுங்கோபம் கொண்டிருந்தார். “அப்பவே நான் உங்கப்பனுட்ட சொன்னேன். பிரமாதமான ஒரு வரன் வந்திருக்கு, நம்ம சய்தாள விரும்பிக் கேக்குறாவ, கட்டுவம்னு. கேட்டானா இவன்.” எனக்குக் கவலையிலும் கொஞ்சம் ஆர்வம் கூடத்தான் செய்தது. “யாரது பெரியத்தா?” என்றதற்கு, “ஒரு இஞ்சினியர். அழகான பய, நல்ல செவப்பு ஆளு, அஜார் ஒஜாரான மாப்பிள்ளை. துபாயில் நல்ல வேலயில இருக்கான். உங்கப்பன் எங்க கேட்டான்” என்றார்.

பெரியப்பாவின் இரண்டாவது மகள் என் தங்கை (சுரையா என்பதாக அவள் பெயரை வைத்துக்கொள்வோம்). என்னைவிட சில மாதங்களே இளையவள். 10-வது படித்திருந்த என் தங்கைக்கு எந்த விதத்திலும் பொருத்தமற்ற, பொருளாதார நிலையிலும் வெகுவாகப் பின்தங்கிய வரனுக்குக் கொடுத்திருந்தார்கள். “அடடா, அந்த இஞ்சினியர் மாப்பிள்ளையை நம்ம சுரையாவுக்குப் பாத்திருக்கலாமே பெரியத்தா” என்றேன். சம்பந்தம் செய்துகொண்ட வீட்டின் ஒன்றாம் நம்பர் தரத்தில் சிலிர்த்துப் பொங்கினார் பெரியப்பா. “கிறுக்கு கிறுக்கு... அதெப்புடி சரியா வரும்? அந்த மாப்பிளைக்காரனோட அப்பன் உங்கப்பனப் போல வேற ஆளக் கட்டிக்கிட்டு வந்தவன். ரெண்டாம் நம்பருக்கார மாப்பிள்ளைலா! என் தரத்துக்கு அங்க போய் விழலாமா? இப்ப கட்டுன எடம் மயிலாசி குடும்பமாச்சே. எப்படியாக் கொண்ட பரம்பரை!”

இப்போதுபோல நல்லதாக நாலு கெட்ட வார்த்தை பழகியிருக்காத பதின் வயது எனக்கு. குறைந்தபட்சம், “என்ன இதுக்கு?” என்றுகூடப் பேசத் தெரியாத கான்வென்ட் படிப்பாளி! அதுவுமில்லாமல் பெரியப்பா, ஒரு மௌல்வியிடம் போய் அப்படிப் பேசிவிட முடியுமா? அவர் வேறு கை நிறைய பத்வாக்களை வைத்திருப்பதான பாவனையில், நெரிந்த புருவங்களோடே எப்போதும் இருப்பவர். நானோ அப்போது கணவரைப் பிரிந்திருந்தபடியால் பொங்கிக்கொண்டிருந்த காதலின் துயரில், சோன்பப்டி வண்டி வீட்டைத் தாண்டி அடுத்த முக்குக்குச் சென்றுவிட்டால்கூட அழுதுவிடும் மனநிலையிலேயே சதா இருந்தவள். அழுகை கரகரக்க, பிரியமான தங்கையைக் குறைத்துப் பேசுகிறோமே என்ற எண்ணமற்றுக் கத்திக் குமித்தேன்.

ஒண்ணாம் நம்பர்!

“ஆமாமா, பின்ன கட்ட மாட்டியளா என்ன? ஓதிப் படிச்ச நீங்களே இப்புடிப் பேதம் பாத்தீங்கன்னா, படிக்காத ஜனங்களுக்கு யாரு சொல்லுவா? குரான மனப்பாடம் பண்ணியிருக்கீயளே, அல்லா எந்த சூராவுல, அத்தியாயத்துல சொல்லியிருக்காரு, என் உம்மத்தில் உயர்வுதாழ்வு இருக்குனு? ரசூல் பொறப்பிலேயே முஸ்லிமா? உங்க மதரஸாவுல என்ன சொல்லிக்குடுத்தாக? என்ன விடவும் சுரையா நெறங் கம்மி, படிப்பு கம்மி, ஒசரங் கம்மி... ஆனாலும், ஒண்ணாம் நம்பர்! அவளுக்குப் போய் அவ மாப்பிள்ளையக் காட்டியும் படிப்பு ஜாஸ்தி, அழகு அதிகம், வேலை தங்கங்கிறதுக்காக ஒரு ரெண்டாம் நம்பரக் கட்டலாமா! என்னப் போல ரெண்டாம் நம்பருக்குத்தானக் கட்டணும். படிச்சிட்டு இருந்தவ என்னப் புடிச்சு இதான் மாப்புள, கட்டுன்னீங்க, கட்டிக்கிட்டேன். இப்ப மாப்பிள்ளைக்கு அம்மா கோவக்காரி, வா தலாக்கக் குடுத்துட்டும்பீங்க, வாரேன்... ஆனா, நானு முன்னயே ரெண்டாம் நம்பர், பொறவு வேற ரெண்டாம் நம்பருல வாழாவெட்டியாவேன், எனக்கு எங்கிட்டு போய் ரெண்டாம் நம்பர் வாழாவெட்டன் ஒருத்தனப் புடிப்பீக?”

ஆயிற்றா... சில மாதங்களில் அந்த ஒண்ணாம் நம்பரும் ஒண்ணாம் நம்பரும் சேர்ந்து கொஞ்சம் பெரிய ஒன்றாகினார்கள் என்று செய்தி கேட்டு, சுரையாவைக் காணச் சென்றிருந்தேன். மனதுக்கு இனியவற்றைப் பிரியம் குறைவாகப் பேசிவிட்ட வருத்தம் நெஞ்சு நிறைய இருந்தது. ஒரு சின்னஞ்சிறிய வீட்டில் அந்த ஒன்றாம் நம்பர், 1 போல தொத்தலாய், 1-ன் மத்தியில் ஒரு சைபர் சேர்த்தாற் போன்ற ஏழு மாத வயிற்றை அமுக்கிக்கொண்டு தரையோடு தரையாக இருந்த அடுப்பில் ஈர விறகை ஊதிக்கொண்டிருந்தது. எனக்குப் பொறி ஒன்றும் கண்ணில் விழாமலே அது தன் வழக்கத்தின் படியாகக் கரித்து ஊற்றியது.

- ஷஹிதா, ‘ஆயிரம் சூரியப் பேரொளி’ நாவலின் மொழிபெயர்ப்பாளர். தொடர்புக்கு: shahikavi@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x