Published : 01 Feb 2021 03:12 AM
Last Updated : 01 Feb 2021 03:12 AM

ஏற்றத்தாழ்வை எப்படிக் களையப்போகிறோம்?

அமிதாப் பேஹர்

கரோனா பெருந்தொற்று நெருக்கடியின் உண்மையான முக்கியத்துவத்தைப் பற்றிய கூர்மையான, மிகவும் வெளிப்படையான கூற்றுகளில் ஒன்று ஐநா அவையின் பொதுச்செயலர் அன்டோனியா கட்டரஸினுடையது. “நாம் உருவாக்கிவைத்திருக்கும் சமூகங்களின் பலவீனமான மண்டையோட்டின் விரிசல்களை அப்பட்டமாகக் காட்டியிருப்பதால் கரோனா பெருந்தொற்று ஊடுகதிருடன் (எக்ஸ்ரே) ஒப்பிடப்படுகிறது. எங்கெங்கிலும் காணப்படும் தவறான நம்பிக்கைகளையும் பொய்களையும் அது தோலுரித்துக் காட்டிக்கொண்டிருக்கிறது: திறந்த சந்தைகள் எல்லோருக்குமான மருத்துவப் பராமரிப்பைத் தரும் என்ற பொய்; நாம் வாழ்ந்துகொண்டிருப்பது நிறவெறி முடிவுக்கு வந்த ஒரு காலகட்டத்தில் என்கிற பிரமை; நாம் எல்லோரும் ஒரே படகில்தான் சென்றுகொண்டிருக்கிறோம் என்ற பொய். நாம் எல்லோரும் ஒரே கடலில்தான் மிதந்துகொண்டிருக்கிறோம் என்றாலும் சிலர் மட்டும் உயர்ரகப் பாய்மரப் படகில் இருக்கிறார்கள் என்பதும் மற்றவர்கள் மிதக்கும் சிதிலங்களைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் வெளிப்படை” என்றார் அவர்.

2021-க்கான ஆக்ஸ்ஃபாம் சர்வதேச அமைப்பின் ஆண்டறிக்கையானது, மிகப் பொருத்தமாக ‘ஏற்றத்தாழ்வு வைரஸ்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையானது ‘உயர்ரகப் பாய்மரப் பட’கில் இருக்கும் சிலருக்கும் ‘மிதந்துசெல்லும் சிதிலங்களைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கும்’ மிகவும் பெரும்பான்மையாக இருப்பவர்களுக்கும் இடையில் நிலவும் ஏற்றத்தாழ்வு மீது சங்கடப்படுத்தும் விதத்திலான, ஆனால் முக்கியமான வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. பல பத்தாண்டுகளாக, போர், பட்டினி என்று இந்தியா பெரும் சவால்களை எதிர்கொண்டுவந்திருக்கிறது. ஆனால், புலப்பெயர்வு நெருக்கடி, பொதுமுடக்கங்கள், பொருளாதாரம் மிக மோசமாகச் சுருங்கிப்போனது போன்றவற்றை ஏற்படுத்தியதும் நொறுங்கிவிழும் மருத்துவக் கட்டமைப்பை வெளிச்சம் போட்டுக் காட்டியதுமான கரோனா பெருந்தொற்று இந்தக் குடியரசு எதிர்கொண்ட முன்னுதாரணமில்லாத பரீட்சை. நாட்டில் பெருகிவரும் ஏற்றத்தாழ்வால் ஏற்பட்ட ஆழமான விரிசல்களை இனங்காண்பதற்கு ‘கோவிட் ஊடுகதி’ரைப் பயன்படுத்துவதற்கு இதுதான் தருணம்; பெருந்தொற்றுக்குப் பிந்தைய மீட்சியைப் பொறுத்தவரை, எல்லோருக்கும் சமத்துவமான, நியாயமான, நீடிக்கக் கூடிய எதிர்காலத்தை உறுதிசெய்யும் அடிப்படையிலேயே வேறுபட்ட பொருளாதார மாதிரியைத் திட்டமிடுவது குறித்து முடிவெடுக்கவும் இதுவே தருணம்.

சங்கடமான உண்மைகள்

செல்வம், பாலினம், இனங்கள் போன்றவற்றில் ஏற்கெனவே காணப்பட்ட ஏற்றத்தாழ்வுகளைக் கரோனா வைரஸானது எப்படி வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது, அவற்றால் எப்படி வலுப்பெற்றது, அவற்றை மேலும் எப்படி அதிகப்படுத்தியிருக்கிறது என்பதைப் பற்றிய சங்கடமான உண்மைகளை ஆக்ஸ்ஃபாம் அறிக்கை தீவிரமாகச் சுட்டிக்காட்டியுள்ளது. 20 லட்சம் பேருக்கும் மேல் இந்த வைரஸால் உயிரிழந்திருக்கிறார்கள். பல கோடிக்கணக்கானோர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் செல்வந்தர்கள், தனிநபர்களும் சரி பெருநிறுவனங்களும் சரி, மேன்மேலும் செல்வம் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். உலக அளவில் மார்ச் 18-லிருந்து டிசம்பர் 31, 2020 வரை கோடீஸ்வரர்களின் செல்வம் இந்திய மதிப்பில் ரூ. 2.84 கோடி கோடி (ரூ. 2,84,33,827,50,00,000) அதிகரித்திருக்கிறது. ஒன்பது மாதங்களுக்குள் பணக்காரர்கள் வரிசையில் முதல் ஆயிரம் பேர் தாங்கள் இழந்த எல்லாச் செல்வங்களையும் மீட்டுக்கொண்டனர், அதே நேரத்தில் உலகின் மிக வறிய மக்களோ தாங்கள் இழந்ததைத் திரும்ப அடைவதற்கு ஒரு தசாப்தத்துக்கு மேல் ஆகலாம் என்று பல மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. வறுமையில் வாழும் ஒட்டுமொத்த மக்களின் எண்ணிக்கை 2020-ல் 20 கோடியிலிருந்து 50 கோடி வரை அதிகரித்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

பெண்கள் அதிக அளவு இடம்பெற்றிருந்த பொருளாதாரத் துறைகள்தான் உலகளவில் இந்தப் பெருந்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பாலினப் பரிமாணத்துடன், இந்தப் பெருந்தொற்றின் ஏற்றத்தாழ்வான பாதிப்புக்கு இனரீதியிலான பரிமாணமும் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, பிரேசிலில், வெள்ளையின மக்களைவிட ஆப்பிரிக்க வம்சாவளி மக்கள் கரோனாவால் இறப்பதற்கு 40% வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. குறைந்த அளவு சம்பளம் தரும், சம்பளமே தராத மருத்துவப் பராமரிப்பு வேலைகளை இந்தப் பெருந்தொற்று பெருமளவில் அதிகரித்திருக்கிறது, இவை பெரும்பாலும் பெண்களால் செய்யப்படுபவையே.

இந்தியப் பணக்காரர்களும் ஏழைகளும்

பெருந்தொற்றை அடுத்து இந்தியா முன்னதாகவும் மிகக் கடுமையாகவும் பொதுமுடக்கங்களை விதித்தது. இதனால் இந்தியாவின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கி வேலையில்லாத் திண்டாட்டம், பட்டினி, பதற்றம்கூடிய புலப்பெயர்வு, கூடவே சொல்ல முடியாத அளவிலான இன்னல்கள் தூண்டிவிடப்பட்டன.

பெருந்தொற்றின் மோசமான பாதிப்பிலிருந்து பணக்காரர்களால் தப்ப முடிந்தது. அதிக அளவில் சம்பளம் வாங்கும் மேல்தட்டுப் பணியாளர்கள் தங்களை எளிதில் தனிமைப்படுத்திக்கொண்டு, வீட்டிலிருந்து வேலைபார்க்க முடிந்திருக்கிறது. இந்திய கோடீஸ்வரர்களின் செல்வம் பொதுமுடக்கத்தின்போது 35%-மும் 2009-லிருந்து 90%-மும் அதிகரித்திருக்கிறது. இதெல்லாம் இந்தியாவின் பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிட்டு, பொருளாதாரமானது வீழ்ச்சியடைந்த தருணத்தில் நடந்திருக்கிறது. பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவின் முதல் 11 பணக்காரர்களின் செல்வத்தில் ஏற்பட்ட அதிகரிப்பைக் கொண்டு அடுத்த 10 ஆண்டுகள் ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட’த்தை எளிதில் செயல்படுத்த முடியும். பொது முடக்கத்தின்போது எப்படி முகேஷ் அம்பானி ஒவ்வொரு மணி நேரமும் ரூ. 90 கோடி சம்பாதித்தார் என்பதையும் அதே நேரத்தில் மக்கள்தொகையில் 24% பேர் மாதத்துக்கு ரூ.3 ஆயிரத்துக்குக் கீழேதான் சம்பாதிக்க முடிந்தது என்பதைப் பற்றியும் வியப்பூட்டும் செய்திகளை நாம் படித்துவருகிறோம்.

சர்வதேசத் தொழிலாளர் அமைப்பைப் பொறுத்தவரை அமைப்புசாரா பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட 40 கோடி தொழிலாளர்கள் மிகக் கொடிய வறுமையினுள் தள்ளப்படும் அபாயத்தை எதிர்கொண்டிருக்கின்றனர். ஆக்ஸ்ஃபாம் அறிக்கையானது 79 நாடுகளில் 295 பொருளியர்களிடம் கருத்துக்கணிப்பை மேற்கொண்டது. முன்னணிப் பொருளியர்களான ஜெயதி கோஷ், ஜெஃப்ரி சாக்ஸ், கேப்ரியேல் ஸுக்மன் போன்றவர்களை உள்ளடக்கிய கருத்துக்கணிப்பு அது. கருத்துகளைக் கூறியவர்களில் 87% பேர் தங்கள் நாடுகளில் வருமான ஏற்றத்தாழ்வு மிகவும் அதிகரிக்கும் என்று நினைப்பதாகக் கூறியிருக்கிறார்கள். இந்த அளவிலான ஏற்றத்தாழ்வால் கடுமையான தீமைகள் விளையும். இது குறித்த அக்கறையைப் பன்னாட்டு நிதியம் (ஐ.எம்.எஃப்.), உலக வங்கி, பொருளாதார ஒத்துழைப்புக்கும் மேம்பாட்டுக்குமான அமைப்பு ஆகியவை வெளிப்படுத்தியிருக்கின்றன.

ஏற்றத்தாழ்வை எதிர்த்துப் போராடுதல்

அரசமைப்புச் சட்டத்தால் எதிர்பார்க்கப்பட்ட நியாயமான இந்தியாவின் இன்றியமையாத அடித்தளமாக ஏற்றத்தாழ்வை அகற்றும் செயல்பாட்டை நாம் இனம்கண்டாக வேண்டும். அரசானது ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்குத் திட்டவட்டமானதும், குறிப்பிட்ட கால அளவுக்குள் நிறைவேற்றப்பட வேண்டியதுமான இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தியைத் தாண்டியும் நமது கவனம் சென்றாக வேண்டும், மேலும் எது உண்மையிலேயே முக்கியமானதோ அதன் மேல் கவனம் செலுத்தத் தொடங்க வேண்டும். பொருளாதார மீட்பு நடவடிக்கைகளின் முதன்மையான செயல்பாடாக ஏற்றத்தாழ்வை எதிர்த்துப் போரிடுதல் இருக்க வேண்டும். இது பாலின சமத்துவத்தையும் சாதிச் சமத்துவத்தையும் உள்ளடக்க வேண்டும். தென் கொரியா, சியரா லியோன், நியூசிலாந்து போன்ற நாடுகள் ஏற்றத்தாழ்வைக் குறைப்பதைத் தேசிய முன்னுரிமையாகக் கொண்டு, என்னவெல்லாம் செய்யலாம் என்பதைப் பிற நாடுகளுக்குக் காட்டிக்கொண்டிருக்கின்றன.

முன்னுரிமை அடிப்படையில் நான்கு விஷயங்களைச் செய்யலாம். ஒன்று, மருத்துவ சேவை, கல்வி, பிற பொதுச் சேவைகள் போன்றவற்றை அனைத்து மக்களுக்கும் கட்டணமின்றி வழங்குவதில் அரசு ஈடுபாடு செலுத்த வேண்டும். பொதுச் சேவைகளை அனைவருக்கும் வழங்குவதென்பது சுதந்திரமான, நியாயமான சமூகங்களின் அடித்தளமாகும். மேலும் பாலின ஏற்றத்தாழ்வு, சாதி ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதில் அவற்றுக்கு ஈடிணையற்ற சக்தி இருக்கிறது. இதை நோக்கி எடுத்துவைக்கும் முதல் அடியானது பெருந்தொற்றைச் சமாளிப்பதற்கு எல்லா குடிமக்களுக்கும் விலையில்லா தடுப்பூசியைச் செலுத்துவதாகும். இரண்டாவது, உத்தரவாதமான வருமானப் பாதுகாப்பு என்பது அடிப்படையானது என்பதை இந்த வைரஸ் நமக்குக் காட்டியிருக்கிறது. இது நடப்பதற்கு நமக்கு வாழ்க்கை நடத்துவதற்கு மட்டும் போதுமான ஊதியம் போதாது, பெரிய அளவிலான பணிப் பாதுகாப்பு, தொழிலாளர் உரிமைகள், நோய்வாய்ப்படும்போது ஊதியத்துடனான விடுப்பு, குழந்தை பெற்றவர்களுக்கு ஊதியத்துடனான விடுப்பு, மக்கள் தங்கள் வேலையை இழந்தால் வேலையில்லா நிலைக்கான ஆதரவு போன்றவையும் கிடைக்க வேண்டும். மூன்று, செல்வ வரிகளை மறுபடியும் கொண்டுவர வேண்டும், பணப் பரிவர்த்தனைகளுக்கான வரிகளை உறுதிப்படுத்த வேண்டும், வரி கட்டாமல் நழுவுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மிகப் பெரிய செல்வந்தர்களுக்குக் கடுமையான வரிவிதிப்பு மேற்கொண்டதன் மூலம் அர்ஜெண்டினாவால் 21.87 ஆயிரம் கோடி திரட்ட முடிந்திருப்பதென்பது மற்ற நாடுகளுக்கெல்லாம் பாடம். நான்காவது, நமது புவிக்கோள் மேலும் பாதிப்படையாமல் தடுத்து அதை நம் குழந்தைகளுக்குப் பாதுகாத்துத் தருவதற்காக பசுமைப் பொருளாதாரத்தில் நாம் முதலீடு செய்ய வேண்டும்.

ஏற்றத்தாழ்வுக்கு எதிரான போரும் பருவநிலை நீதிக்கான போரும் ஒரே போர்தான்.

- அமிதாப் பேஹர், ஆக்ஸ்ஃபாம் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி.

‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x