Published : 28 Jan 2021 07:23 AM
Last Updated : 28 Jan 2021 07:23 AM
தமிழக அரசின் டிசம்பர் 21, 2020 தேதியிட்ட ஆணையின்படி “சாதிகள், சமூகங்கள், பழங்குடியினர்கள் பற்றிய அளவிடக்கூடிய புள்ளிவிவரங்களைச் சேகரிக்க ஆணையம்” அமைக்கப்பட்டது. இந்தச் சாதிகளின் புள்ளிவிவர ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.குலசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சாதிப் புள்ளிவிவர ஆணையத்தின் செயல்பாடுகளில் மிக முக்கியமானவை:
1. தமிழகத்தில் உள்ள சாதிகள், பழங்குடிகளின் வகைகள் எத்தனை என்பதை ஆராய்ந்து ஒரு பட்டியல் தயாரிக்க வேண்டும். இதில் புலம்பெயர்ந்து தமிழகம் வந்தவர்களின் சாதிகளும் இடம்பெற வேண்டும். 2. தயாரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள சாதிகள், பழங்குடிகள் ஒவ்வொன்றிலும் உள்ள மக்கள்தொகை, அவற்றின் சமூக, பொருளாதார, கல்வி, அரசியல் தன்மைகளைப் பற்றிய புள்ளிவிவரங்களும் சேகரித்துத் தர வேண்டும்.
எத்தனை சாதிகள்?
2011 தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நடத்தப்பட்ட சாதிவாரியான புள்ளிவிவரத்தில் 46 லட்சம் சாதிகள், உப-சாதிகள், பழங்குடிகள் இருப்பதாக மக்கள் தெரிவித்தனர் என்று கூறப்படுகிறது. எதனால் இந்த சிக்கல்? மக்கள் தாங்களாக தங்கள் சாதிகளைக் கூற வேண்டுமானால், ஒரே சாதிக்குள் பல பிரிவுகள் இருக்கும், அவை அனைத்தும் தனித்தனி சாதிகளாக மக்கள் கூறுகின்றனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்ட சாதிகளை ஒரு வரையறைக்குள் வைத்து, சாதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். இது மிகச் சிக்கலான செயல்முறை, இதற்குப் பல ஆண்டுகள் ஆகும். குறிப்பாக சமூக-மானுடவியல் வல்லுநர்களைக் கொண்டு இந்த வரையறையை அறிவியல்ரீதியாகச் செய்ய வேண்டும்.
இதற்கு மாறாக ஒரு சாதிகள் பட்டியலை வைத்துக்கொண்டு, அதில் மக்கள் எந்த சாதியில் உள்ளனர் என்று கேட்டறிந்தால், சாதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்று நினைக்கின்றனர். தமிழகத்தில் உள்ள சாதிகளின் பட்டியலை முதலில் தயாரிக்க வேண்டும் என்று சாதிப் புள்ளிவிவர ஆணையம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதற்கு இதுதான் காரணம் என்று எடுத்துக்கொள்ளலாம்.
புதிய சாதிப் பட்டியலைத் தயாரிப்பது எளிதானதன்று. ஏற்கெனவே தமிழக அரசு வைத்துள்ள சாதிப் பட்டியலைக் கொண்டு இந்த முயற்சியை ஆரம்பிக்கலாம். இந்தப் பட்டியலில் விடுபட்டுப்போன சாதிகள் பல இருப்பதாக சாதிச் சங்கங்கள் கூறலாம். அவற்றை சாதிப் பட்டியலில் இணைப்பதற்கு சமூக-மானுடவியல் ஆய்வுகள் தேவை. மற்ற மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்த மக்களின் சாதிகளையும் இதில் சேர்க்க வேண்டும். இந்தியாவில் அதிகமாகப் புலம்பெயர்வை ஈர்க்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. எனவே, புதிய சாதிகளின் எண்ணிக்கையும் அதிகமாகும். எனவே, சாதிகள் பட்டியலைத் தயாரிப்பதிலிருந்து சிக்கல் ஆரம்பமாகிறது.
சட்டச் சிக்கல்கள்
சமூக, பொருளாதார, கல்வி, அரசியல் புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதில் சட்டரீதியான சிக்கல்களும் உள்ளன. இந்தியாவில் இவ்வாறான புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதற்கு இரண்டு சட்டங்கள் உள்ளன. முதலாவது, ‘மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டம் 1948’. இந்தச் சட்டத்தின்படி ஒன்றிய அரசு மட்டுமே இந்தியாவில் வசிக்கும் அனைத்து மக்களிடமிருந்தும் சட்டரீதியாகப் புள்ளிவிவரங்களைச் சேகரிக்க முடியும். எனவே, தமிழக அரசு அமைத்துள்ள சாதிப் புள்ளிவிவர ஆணையத்துக்கு இந்தச் சட்டம் பொருந்தாது.
இரண்டாவது, ‘புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் சட்டம் 2008’மற்றும் அதன் விதிகள் 2011. இச்சட்டத்தில் உள்ள சாதக பாதக அம்சங்களைக் காண்போம். இச்சட்டத்தில் ஒவ்வொரு மாநில அரசும் அதன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் மக்களிடமிருந்து புள்ளிவிவரங்களைச் சேகரிக்கலாம். அதற்கான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும். அந்த அதிகாரி ஒரு அறிக்கை வெளியிட வேண்டும். அதில் என்ன புள்ளிவிவரம், எதற்காக, யாரிடமிருந்து கேட்கப்படுகிறது என்ற விவரங்களை அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்கப்பட்ட பின் மக்கள் தங்களுக்குத் தெரிந்த விவரங்களை உண்மைத் தன்மையுடன் புள்ளிவிவரம் சேகரிக்கும் அதிகாரிக்கு வழங்க வேண்டும். உண்மையை மறைத்தாலோ அல்லது விவரத்தைத் தர மறுத்தாலோ அந்த நபருக்குத் தண்டனை வழங்க இந்தச் சட்டத்தில் இடம் உள்ளது.
இந்தச் சட்டத்தின் சிறப்பு அம்சம் திரட்டப்பட்ட புள்ளிவிவரங்கள் அடையாளமற்ற நபரின் புள்ளிவிவரமாக மட்டுமே வெளியிடப்பட வேண்டும். அதாவது தனிநபர் அடையாளங்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும். இதில் பெறப்பட்ட விவரங்கள் புள்ளிவிவர ஆய்வுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும், வேறு எந்தப் பயன்பாட்டுக்கும் கொடுக்கக் கூடாது.
‘புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் சட்டம் 2008’-ன்படி சமூக-பொருளாதார-கல்வி-அரசியல் புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதால் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று, மக்கள் அனைவரும் தங்களுக்குத் தெரிந்த விவரங்களை உண்மைத் தன்மை குறையாமல் கொடுக்க வேண்டும். இதனால் புள்ளிவிவரத்தின் நம்பகத்தன்மை மேம்படும். இரண்டு, தங்களின் உண்மைத் தரவு மற்றவர்களால் அல்லது அரசால் கூட வேறு எதற்கும் பயன்படுத்த மாட்டாது என்பதை உறுதியாக நம்பி மக்கள் விவரங்களை அளிக்க முன்வருவார்கள்.
இந்தச் சட்டத்தின்படி அல்லாமல், நேரடியாக இந்த ஆணையம் புள்ளிவிவரத்தைச் சேகரிக்க முடியாதா? முடியும். ஆனால், அவ்வாறு புள்ளிவிவரம் சேகரிக்கும்போது மக்களின் ஒத்துழைப்பைக் கட்டாயப்படுத்த முடியாது. எனவே, ‘புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் சட்டம் 2008’-ன்படி சமூக-பொருளாதார-கல்வி-அரசியல் புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதை இந்த ஆணையம் முன்னெடுக்க வேண்டும்.
கேள்விப் பட்டியலே தீர்வு
அடுத்த சிக்கல் புள்ளிவிவரம் சேகரிக்கும் கருவி, அதாவது, கேள்விப் பட்டியல். இதனை சிறப்பான நிபுணர் குழுவுடன் இணைத்து இந்த ஆணையம் தயாரிக்க வேண்டும். குறைவான எண்ணிக்கையில், எளிமையான கேள்விகள் மூலம் முழுமையான விவரங்களைப் பெறுவதுதான் சிறப்பானதாக இருக்கும். குறிப்பாக, தமிழகம் முழுவதும் உள்ள எல்லாக் குடும்பங்களிலிருந்தும் அனைத்து முக்கிய விவரங்களைச் சேகரிக்க இந்த முறையைப் பின்பற்றி சிறிய, எளிய கேள்விப் பட்டியல் தயாரிக்க வேண்டும். முடிந்தவரை ஆம்/இல்லை, அல்லது எண்ணிக்கையில் பதில் அளிக்கும் கேள்விகள் அதிகமாக இருக்க வேண்டும். அப்படி உருவாக்கப்பட்ட கேள்விப் பட்டியலைக் கொண்டு, இன்றைய நவீனக் கணினி முறையில் அவ்வப்போது ஆராய்ந்து முடிவுகளை எடுக்க முடியும். இதனால் இந்த ஆணையத்தின் பணியும் சிறப்பாக அமையும்.
- இராம.சீனுவாசன், பொருளாதார அளவியல் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம்,
தொடர்புக்கு: seenu242@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT