Published : 27 Jan 2021 11:20 AM
Last Updated : 27 Jan 2021 11:20 AM
என்னதான் தொலைக்காட்சித் தொடர்களாக இருந்தாலும், மருத்துவராக இருப்பதனால் சில காட்சிகள் எனக்குக் கவலையை ஏற்படுத்துகின்றன. எத்தனை முறைதான் இந்த நாடி பிடித்து, கர்ப்பத்தைக் கண்டுபிடிப்பார்கள். அதுவும் தகுதிபெற்ற சித்த வைத்தியர் அல்ல. ஒரு கிராமத்துப் பெண்மணி யாராவது நிஜமாகவே கண்டுபிடித்திருக்கிறாரா? யாராவது அதைக் கண்கூடாகக் கண்டு நம்பி இருக்கிறார்களா? தெரியவில்லை.
அதேமாதிரி பரிசோதிக்கும் மருத்துவர் ஒன்று அநேகமாக சொல்வார். ‘கர்ப்பப்பை பலவீனமாக இருக்கிறது. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’. கனத்தைத் தாங்கத்தான் இயற்கை கர்ப்பப்பையைப் படைத்து இருக்கிறது. ஒரே ஒரு அபாயம்தான் (அதுவும் அசாதாரணமாக). கர்ப்பப்பையின் வாய் திறந்துகொள்ளும் அபாயம். அதையும் கண்டுபிடித்து ஆவன செய்ய முடியும்.
கர்ப்பமானதும் மயங்கி விழுவார்கள். உங்கள் வீடுகளில் பிள்ளை பெற்றவர்கள் இருப்பார்கள் அல்லவா? அவர்களைக் கேளுங்கள். யாராவது எப்போதாவது கர்ப்பம் காரணமாக மயங்கி விழுந்திருக்கிறார்களா என்று. வாந்தி, வயிற்றுப் பிரட்டல், சோர்வு சரி... மயக்கம்? ஊம்ஹும்.
பிரசவ வலியும் திடீரென்று தொடங்குவது மட்டுமின்றி உடனேயே அலறித் துள்ளித் துடிப்பது. இதெல்லாம் மருத்துவரீதியாக உண்மையல்ல. குறைந்தபட்சம் 4 - 5 மணி நேரமாவது ஆகும். இந்த மாதிரி பெரிய வலி வருவதற்கு. இந்தக் காட்சிகளைப் பார்க்கும் இளம் பெண்களுக்குத் தேவையில்லாத பயம் ஏற்படாதா? அதுதான் என் கவலை. அறுவை சிகிச்சையில் பெற்றுக்கொள்ள நினைக்க மாட்டார்களா? இந்த விஞ்ஞான முன்னேற்றமடைந்துள்ள காலத்தில் வலியைக் குறைக்க, தவிர்க்க எத்தனையோ வழிகள் உள்ளன. கர்ப்பமும் பிரசவமும் வியாதியல்ல. இயற்கை நிகழ்வுதான் என்று அவர்களுக்குப் பெற்றோர் அறிவிக்க வேண்டும்.
வேறொரு கேலிக்கூத்து. யாராவது மயங்கி விழுந்தால் உடனே எல்லோரும் சூழ்ந்து ‘உனக்கு என்ன ஆச்சு, என்ன ஆச்சு... கண்ணைத் திற’ என்று பதறுவார்கள். தண்ணீர் தெளிப்பதையோ, மருத்துவரை அழைப்பதையோ கண்டதில்லை. மயங்கியவர் நாற்காலி, ஸ்டூல் போன்றவற்றிலிருந்து விழுந்தாலும்கூட இதேதான். மாரடைப்போ, தலையில் அடியோ, எலும்பு முறிவாகவோகூட இருக்கலாம். அப்போதும் ‘என்ன ஆச்சு?’தான். விழுந்தவர் சட்டென்று கண் விழித்து ‘விழுந்துவிட்டேன்’ என்று சொல்லிவிட்டுத் திரும்ப மயங்கினால் எவ்வளவு வேடிக்கையாக இருக்கும் என்று எண்ணிச் சிரிப்பேன். ஏன் இறந்துதிருந்தால்கூட ‘நான் இறந்துவிட்டேன்’ என்று சொல்லலாம் அல்லவா?
விழுந்தவரை எங்கே அடி என்று தெரியும்வரை நகர்த்தக் கூடாது என்பது முக்கியம். இது தவறான எண்ணங்களை அளிக்கும் என்கிற பயம் எனக்கு.
வேறொரு வேடிக்கை. ஒருவர் ஓடுவார். நல்லவரோ கெட்டவரோ தெரியாது. ஆனால், துரத்துபவர் ‘டேய் ஓடாதே, ஓடாதே நில்லு..’ என்று கூவிக்கொண்டே ஓடுவார். துரத்துபவர் (சில சமயம் காவல்துறையைச் சேர்ந்தவர்) காரிலோ, இருசக்கர வாகனத்திலோ வந்து இறங்கியிருப்பார். தேடிக்கொண்டிருக்கும் ஆள் ஓடுவதைக் கண்டதும், வண்டியில் ஏறித் துரத்துவாரா? அதுதான் இல்லை. ‘நில் ஓடாதே’ என்று ஓடுவார்.
கோயிலுக்குப் போவார்கள். அர்ச்சனை செய்வார்கள். சில சமயம் அடிப்ரதட்சிணம், ஏன் அங்கப்பிரதட்சிணம் கூடச் செய்யலாம். திடீரென்று சடையாண்டியாக, நெற்றி நிறைய விபூதியும் குங்குமமாய் ஒருவர் வந்து கதாநாயகியைப் பார்த்து ‘ஹா..ஹா...’ என்று சிரித்து அருள்வாக்கு சொல்லத் தொடங்குவார். எத்தனை கோயில்களில் இப்படி நடக்கிறது? தொடரைப் பார்ப்பவர்கள் இப்படியும் நடக்கும் என்று நம்பத் தொடங்குவார்களே என்றுதான் கவலை.
தமிழ் உச்சரிப்பு கொஞ்சம் தகராறுதான். தொடர்களில் ‘டப்’ செய்வதால் மோசம் இல்லை. ஆனால், சில நிகழ்ச்சிகளில் பேசுபவர்கள் வாயில் தமிழ் ‘தமிள், தமில்’ என்னவாக வேண்டுமானாலும் மாறும். எழுத்துகளில் வல்லினமும் மெல்லினமும் தடுமாற்றம் விளைவிப்பதில்லை. இடையினம் மிக லாவகமாக நாக்கை மடித்து நுனியை மேல் பல்லின் பின்தொட்டு ‘ந’, ‘ன’ மேல் அண்ணத்தைத் தொட்டு ‘ள’ நன்றாக பின்னால் மடித்து ஒன்றையும் தொடாமல்தான் ‘ழ’. செந்தமிழும் நாப்பழக்கம்!
உச்சரிப்பு மட்டுமல்ல. இலக்கணமும் தகராறுதான். பண்மையில் தொடங்கும் வாக்கியம் ஒருமையான வினைச்சொல்லில் முடியும். ‘சாட்சிகள் நடந்தது’, ‘செய்திகள் சொல்லப்பட்டது’தான். ‘நடந்தன’, ‘சொல்லப்பட்டன’ கிடையாது. மேலும், எல்லாம் ‘எதிர்காலம்’தான். நிகழ்காலமே கிடையாது. ‘இங்கு இருக்கக்கூடிய தெய்வம்’, ‘அருளைக் கொடுக்கக்கூடிய’ தான். ‘இருக்கின்ற’ ‘கொடுக்கின்ற’ கிடையவே கிடையாது.
சில செய்தி ஒளிபரப்புகளில் ஆங்கில வார்த்தைகள் சிதைக்கப்படும். பலமுறை விண்வெளிக் கலமான ராக்கெட் (Rocket) 'Racket' என்று கலக நிகழ்ச்சியாவதை கேட்டிருக்கிறேன்.
‘கரோனா’வினால் தடைப்பட்ட, நின்றுபோன தொடர்கள் உண்டு. இப்போது என்ன காரணமோ தெரியவில்லை. இரண்டு, மூன்று தொடர்களைக் கொஞ்ச நாட்களுக்குக் கலந்து கட்டி அடிக்கிறார்கள். செயற்கையாக இருக்கிறது. பாசுமதி அரிசியில் பால் பாயாசம் செய்து ‘வெனிலா’ எஸன்ஸை ஊற்றிய மாதிரி ஒட்டாமலும் ருசிக்கக் கஷ்டமாகவும் இருக்கிறது.
‘வீட்டுச் சிறை’ உடல் நலக் குறைவு, வீட்டில் ஒரு வேலையும் செய்ய முடிவதில்லை. மனமும் எண்ணங்களும் தெளிவாக இருப்பதினால் தொலைக்காட்சி உறுதுணையாக இருக்கிறது. நிகழ்ச்சிகளை மட்டுமன்றி அவற்றைப் பற்றி நினைத்து அலசுவதிலும் பொழுது போகிறது. இன்றைய மந்திரமாகிய ‘இதுவும் கடந்து போகும்’தான் துணை.
சந்திப்போம்... சிந்திப்போம்..!
கட்டுரையாளர்: கல்யாணி நித்யானந்தன், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு),
டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.
தொடர்புக்கு: joenitya@yahoo.com
ஓவியம்: வெங்கி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT