Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM

பைடன், உங்கள் கால அவகாசம் இப்போது தொடங்குகிறது!

ஜனவரி 20 அன்று காலை நேரத்தில் ஒரு கையை விவிலியத்தின் மீதும் மறு கையை நெஞ்சருகே உயர்த்திப் பிடித்தபடியும் பைடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். வரலாறு, பைடனின் காலம் தொடங்கியதாகக் குறித்துக்கொண்டது. அதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக ஓர் ஒற்றை வரிச் செய்தியை அவர் ட்விட்டரில் ஏற்றி அனுப்பினார். “இன்று அமெரிக்காவில் ஒரு புதிய நாள்''. ஒவ்வொரு நாளும் புதிதாய்த்தானே பிறக்கிறது? 20 ஜனவரி 2021 என்கிற நாளும் நாட்காட்டியில் ஒரு முறைதானே வரும்? ஆனால், அந்த நாள் மற்ற நாட்களைவிட முக்கியமானதாக இருந்தது. உலகெங்கும் எதிர்பார்ப்புகளை விதைத்திருந்தது. அமெரிக்காவைச் சூழ்ந்திருக்கும் பெருந்தொற்று, இனவெறுப்பு, வறுமை, வன்முறை, சூழியற்கேடு முதலானவற்றிலிருந்து உய்யும் வழியைப் பலரும் எதிர் நோக்கியிருந்தனர். அதை பைடன் அறிவார். ஆகவே அன்றைய தினமே 17 ஆணைகளைப் பிறப்பித்தார்.

நான் ஆணையிட்டால்...

அந்த ஆணைகளில் முதலாவதாக கரோனா இருந்தது. கரோனாவால் அமெரிக்கா நான்கு லட்சம் உயிர்களை இழந்திருந்தது. உலக அளவில் உயிரிழந்தவர்களில் ஐந்தில் ஒருவர் அமெரிக்கர். பைடன் கரோனா கட்டுப்பாட்டைத் தன் நேரடிப் பார்வையில் கொண்டுவந்தார். அடுத்த 100 நாட்களுக்கு முகக்கவசத்தையும் தனிமனித இடைவெளியையும் கடைப்பிடிக்குமாறு மக்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார். முதல் 100 நாட்களுக்குள் 10 கோடி அமெரிக்கர்களுக்குத் தடுப்பூசி போடும் கடினமான இலக்கைத் தமது அரசுக்குத் தானே விதித்துக்கொண்டார். அமெரிக்காவுக்கு வரும் பயணிகள் தனிமைப்படுத்திக்கொள்வதைக் கட்டாயம் ஆக்கியிருக்கிறார்.

ட்ரம்ப் கரோனாவை எதிர்த்துப் போராடுவதைவிட, சீனாவைப் பழிப்பதில்தான் ஆர்வமாக இருந்தார். தனது கடைசி உரையில்கூட அவர் இந்தக் கொள்ளை நோயை ‘சீன வைரஸ்' என்று அழைப்பதை நிறுத்திக்கொள்ளவில்லை. தனது பதவிக் காலத்தில் அவர் சீனாவோடு உலக சுகாதார அமைப்பையும் சாடினார். அந்த அமைப்பிலிருந்தும் விலகினார். பைடன் அமெரிக்காவை மீண்டும் அமைப்பில் இணைத்தார்.

எச்1பி விசா பெறுவதற்கு ட்ரம்ப் விதித்திருந்த பல்வேறு கட்டுப்பாடுகளைக் களைந்தார் பைடன். அறிவியல், தொழில்நுட்பம், கணிதம் முதலான துறைகளை அமெரிக்காவில் கற்றுத் தேர்ந்தவர்களுக்குப் பச்சை அட்டை பெறுவதில் ட்ரம்ப் புகுத்தியிருந்த தடைகளை நீக்கினார். இவையெல்லாம் இந்திய இளைஞர்கள் அமெரிக்கக் குடியுரிமை பெறுவதில் உண்டாக்கப்பட்ட சிக்கல்களைப் பெரிதும் குறைக்கும். மேலும் ஏழு முஸ்லிம் நாட்டுப் பயணிகள் அமெரிக்கா வருவதற்கு ட்ரம்ப் தடை விதித்திருந்தார்; பைடன் அதை விலக்கினார். மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் குடியுரிமை இல்லாதவர்களை உட்படுத்தும் ஆணையொன்றையும் பிறப்பித்தார். இது அவர்களுக்கு வாக்குரிமையையும் பெற்றுத் தரக்கூடும். மெக்சிகோ எல்லையில் ட்ரம்ப் எழுப்பிவந்த தடுப்புச் சுவரின் கட்டுமானத்தை நிறுத்தி வைத்தார் பைடன்.

2015-ல் பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் பன்னாட்டு ஒப்பந்தத்தில் சுமார் 200 நாடுகள் இணைந்தன. பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வைக் கட்டுப்படுத்த இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டன. இது வாய்ச்சொல் வீரமில்லை. இந்த இலக்குகள் உறுப்பு நாடுகளைச் சட்டப்படிக் கட்டுப்படுத்தும். 2017-ல் ட்ரம்ப் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகினார். அமெரிக்கா வழங்கிவந்த நிதியையும் நிறுத்தினார். இப்போது பைடன் மீண்டும் இணைந்திருக்கிறார்.

பைடனின் அடுத்த ஆணை தன்பாலின உறவாளர்கள், திருநங்கை, திருநம்பி முதலானோர் மீதான பாரபட்சமான விதிகளை விலக்கிக்கொள்ள வழிவகை செய்தது.

வேண்டாம் அடிமை வரலாறு

சர்வதேச ஊடகங்கள் இந்தப் புதிய ஆணைகளில் பலவற்றைக் கவனப்படுத்தவே செய்தன. ஆனால், அதிகம் கண்டுகொள்ளப்படாத ஓர் ஆணையும் இந்தப் பட்டியலில் இருந்தது. அது ட்ரம்ப்பால் நியமிக்கப்பட்ட 1776 கமிஷனைப் பற்றியது. 15-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய வெள்ளையர்கள் அமெரிக்காவை ஆக்கிரமித்தனர். ஆப்பிரிக்காவிலிருந்து கறுப்பர்களை அழைத்து வந்து அடிமைகள் ஆக்கிக்கொண்டனர். அடிமைகள் விலைக்கு வாங்கப்பட்டனர். அடிமை வணிகம் 1865 வரை நீடித்தது. அதற்குப் பிறகும் கறுப்பர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாகவே இருந்தனர். 1965-ல்தான் அவர்களுக்கு வாக்குரிமையே கிடைத்தது. ஆனால், இப்படியான அடிமை வரலாறு அமெரிக்காவுக்கு வேண்டாம் என்றார் ட்ரம்ப். அது மாணவர்களிடையே தேசப்பற்றை வளர்க்காது என்றார். அதற்காக அவர் நியமித்ததுதான் 1776 கமிஷன். 1776-ம் ஆண்டு பல மாநிலங்கள் ஒன்றிணைந்து பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்தன. அமெரிக்க வரலாற்றை அங்கிருந்துதான் தொடங்க வேண்டுமென்றார் ட்ரம்ப்.

அவர் பதவி விலகுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக கமிஷன் தனது பூர்வாங்க அறிக்கையைச் சமர்ப்பித்தது. அமெரிக்காவின் அடிமை வரலாற்றையும், அது வேர் கொண்டிருக்கும் இன வேற்றுமையையும் அறிக்கை மறுதலித்தது. இந்த அறிக்கையை எழுதியவர்களில் யாரும் வரலாற்றாளர்கள் இல்லை, அனைவரும் பழமை விரும்பிகள் என்று எழுதியது நியூயார்க் டைம்ஸ். மேற்கோள்களோ ஆதாரங்களோ அடிக்குறிப்புகளோ இல்லாத இந்த அறிக்கையைப் பல வரலாற்று ஆசிரியர்களும் விமர்சித்தார்கள். பைடன் இந்த கமிஷனைக் கலைத்தார். அதன் அறிக்கையை அரசின் இணையதளத்தில் இருந்து அகற்றினார்.

பைடனின் முதல் நாள் ஆணைகள் அனைத்தும் பின்னோக்கிச் செல்லும் அமெரிக்காவை முன்னகர்த்த முனைபவை. பலவும் நிர்வாகரீதியானவை. எனில், 1776 கமிஷனைக் கலைக்கும் ஆணை வெள்ளையின மேலாதிக்கத்துக்கு எதிரானது. இனவேற்றுமை ஊதிப் பெருக்கப்பட்டுப் பிளவுண்டு கிடக்கும் தேசத்தை ஒன்றிணைக்கும் பணியில் பைடனின் முதல் அடிவைப்பாக இதை எடுத்துக்கொள்ளலாம்.

இந்தப் பயணம் அவருக்கு எளிதாக இருக்கப்போவதில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் வெள்ளையின மேலாதிக்கம் அரசு இயந்திரத்தின் ஆசிர்வாதத்தோடு மேலெழும்பி நின்றதை உலகம் நம்ப முடியாமல் பார்த்தது. ட்ரம்ப் இந்தத் தேர்தலில் தோல்வியுற்றிருக்கலாம். ஆனால் 47% அமெரிக்கர்கள், மிகுதியும் வெள்ளையர்கள், ட்ரம்ப்புக்குத்தான் வாக்களித்தார்கள். இந்த இடத்திலிருந்து அமெரிக்காவை ஒரு பன்மைத்துவம் மிக்க சமூகமாக வளர்த்தெடுப்பது எளிய வேலை இல்லை.

இன்னும் சவால்கள்

இந்த இனவாதத்தால் அமெரிக்காவின் வேலையின்மையும் வறுமையும் ஊடகங்களில் போதிய கவனத்தைப் பெறுவதில்லை என்கிறார்கள் நோக்கர்கள். கடந்த ஆண்டு சுமார் 2.68 கோடி அமெரிக்கர்கள் வேலை இழந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டால் இந்த எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கிறார்கள். மேலும், பைடன் 1.9 டிரில்லியன் டாலர் (ரூ.139 லட்சம் கோடி) மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களை முன் மொழிந்திருக்கிறார். அவற்றுள் ஒன்று, குடிமக்களுக்கு 1,400 டாலர் (ரூ.1 லட்சம்) வரை உதவிப்பணம் வழங்குவது. இதைப் பொருளாதார வல்லுநர்கள் வரவேற்றிருக்கிறார்கள்.

வெகுமக்களை அமெரிக்கப் பொருளாதாரம் சீரழித்துக் கொண்டிருக்கும்போது, அது நாட்டின் செல்வந்தர்களின் மீது கருணையோடுதான் இருக்கிறது. மார்ச் 2020-ல் 3 ட்ரில்லியன் டாலராக இருந்த 651 அமெரிக்காவின் அதிசெல்வந்தக் குடும்பங்களின் சொத்து மதிப்பு, டிசம்பர் 2020-ல் 4 ட்ரில்லியனாக உயர்ந்திருக்கிறது. இந்தச் சமனற்ற சாலையைச் செப்பனிடுகிற பணி கடினமானதாகத்தான் இருக்கும். பைடனுக்கு இன்னும் நான்காண்டுகள் அவகாசம் இருக்கிறது. அமெரிக்காவும் உலகமும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறது.

- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x