Published : 21 Jan 2021 07:14 AM
Last Updated : 21 Jan 2021 07:14 AM

குடியரசுக் கட்சியைச் சிதறடிக்கிறாரா ட்ரம்ப்?

தாமஸ் எல்.ஃப்ரீட்மன்

அமெரிக்க கேப்பிட்டல் கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தேசத்துரோகத் தாக்குதல் தொடர்பான எல்லா உண்மைகளும் வெளிவரும்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது மூன்று முறை பதவிநீக்கத் தீர்மானம் கொண்டுவந்திருந்தாலும் போதாமல்தான் இருந்திருக்கும். “கேப்பிட்டலில் கூடிய கும்பல் காவல் துறை அதிகாரி ஒருவரை மாடிப்படியில் இழுத்துவருவதை ஒரு காணொளி காட்டுகிறது. கலவரக்காரர்களில் ஒருவர் அமெரிக்கக் கொடி பறக்கும் கம்பால் காவல் துறை அதிகாரியை அடிக்கிறார்” என்று ‘வாஷிங்டன் போஸ்ட்’ இதழில் வெளியான தலைப்புச் செய்திகளைப் பாருங்கள்.

ட்ரம்ப் வெளியேற வேண்டும் என்று நான் விரும்பும் அதே நேரத்தில் ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் அவருக்கு நிரந்தரமாகத் தடைவிதிக்க வேண்டுமா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அவரது அதிபர் பதவிக் காலத்துக்குப் பிறகு அவர் செய்ய வேண்டிய காரியமொன்றுக்கு அவருக்கு உரிய, பெரிய ஒலிபெருக்கிகள் தேவை என்று நினைக்கிறேன். குடியரசுக் கட்சியைச் சுக்குநூறாகத் தகர்ப்பதுதான் அந்தக் காரியம்.

இரண்டு காரணங்கள்

இன்றைய அமெரிக்காவுக்கான எனது முதல் ஆசை குடியரசுக் கட்சி பிளவுபட வேண்டும் என்பது, கொள்கையற்ற குடியரசுக் கட்சி அரசியலர்கள், ட்ரம்ப்பை வழிபடுபவர்கள் ஆகியோரிடமிருந்து கொள்கைப் பிடிப்புள்ள குடியரசுக் கட்சி அரசியலர்கள் பிரிய வேண்டும். அது இரண்டு காரணங்களுக்காக அமெரிக்காவுக்கு ஒரு வரம் போலாகும்.

முதலாவது, நாடாளுமன்றத்தில் நிலவும் முட்டுக்கட்டைச் சூழலை அது முடிவுக்குக் கொண்டுவந்து, அடிப்படைக் கட்டமைப்பு, கல்வி, மருத்துவம் போன்றவற்றில் எல்லா அமெரிக்கர்களுக்கும் உதவும் வகையில் சில பெரிய விஷயங்களைச் செய்வதற்கு இது உதவும்.
மிட் ரோம்னி, லிஸா முர்கோவ்ஸ்கி போன்ற கொள்கைப் பிடிப்புள்ள ஒருசில மைய-வலதுசாரிக் குடியரசுக் கட்சி அரசியலர்கள் இந்தப் ‘பழம்பெரும் கட்சி’யைக் (குடியரசுக் கட்சியை) விட்டு வெளியேறினாலோ அல்லது பைடனின் மைய-இடதுசாரிக் குழுவோடு இணைந்து பணிபுரியத் தயாராக இருந்தாலோ செனட்டில் ‘தீர்வு காண்பவர்கள் குழு’வும், ஒத்த மனதுடைய உறுப்பினர்களின் எண்ணிக்கையும் முன்னெப்போதையும்விட வலுவாக மாறும். இப்படித்தான் அமெரிக்கா முழுவதும் தற்போது காணப்படும் வெறியைத் தணித்து, ஒருவருக்கொருவர் எதிரி என்று கருதாமல் சக குடிமக்கள் என்று பார்ப்பதற்கு வழி பிறக்கும்.
இரண்டாவதாக, கொள்கைப் பிடிப்புள்ள குடியரசுக் கட்சியினர் ட்ரம்ப் குழுவிடமிருந்து பிரிந்தால் தேசிய அளவிலான எந்தத் தேர்தலிலும் அந்தக் கட்சி வெற்றிபெறுவது கடினமாக ஆகிவிடும். நாம் இதுவரை கண்டிருப்பதை வைத்துப் பார்க்கும்போது இந்த ட்ரம்ப்பியர்களை நம்பி இனியும் அதிகாரத்தை ஒப்படைக்க முடியாது.

பெரும் பொய்

அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். ட்ரம்ப்பை வழிபடும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் ட்ரம்ப்பின் பெரும் பொய்யை வேண்டுமென்றே ஆதரித்து, ஊதிப் பெருக்கியிருக்கிறார்கள். அமெரிக்க வரலாற்றில் மாபெரும் தேர்தலில் ட்ரம்ப் நின்றார் – முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அமெரிக்கர்கள் வாக்களித்த தேர்தல், கொடுமையான ஒரு பெருந்தொற்றுக்கு மத்தியில் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெற்ற தேர்தல் – அந்தத் தேர்தலில் தான் வெற்றிபெறாததால் அதனை மோசடி என்று ட்ரம்ப் கூறினார். அடுத்ததாக, அந்தப் பெரிய பொய்யின் அடிப்படையில், குடியரசு செனட்டர்கள் 8 பேரும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 139 பேரும் ஜோ பைடனின் வெற்றி செல்லாது என்று வாக்களித்தனர். அது மிகவும் மோசம்.

அதனால்தான் அந்தக் கட்சி உடையும் என்று நம்புகிறேன். அப்படி உடைவதில் இன்னமும் சத்தம் போட்டுக்கொண்டிருக்கும் ட்ரம்ப் உதவிகரமாக இருப்பார்.

செனட்டர்கள் ஜோஷ் ஹாலீயும் டெட் க்ரூஸும் முழு அளவில் தேசத்துரோகத்தில் ஈடுபட்டு, ட்ரம்ப்பின் பெரும் பொய்யின் அடிப்படையில் பைடனின் வெற்றியை இல்லாமலாக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, அவர்கள் என்ன கனவில் இருந்தார்கள்? ட்ரம்ப் இல்லாத ட்ரம்ப்பிய உலகம் பற்றிய கனவில் அவர்கள் இருந்தார்கள். ட்ரம்ப் ஏவியதைக் கோழைத்தனமாகத் தற்போது செய்தால், ட்ரம்ப் போன பிறகு அவருடைய தளம் தங்களுடையதாகும் என்று அவர்கள் நினைத்துவிட்டார்கள்.

அவர்களெல்லாம் முட்டாள்கள். ட்ரம்ப்பும் அவரது பிள்ளைகளும் கலந்துகொண்டதும், அவரது ஆதரவாளர்கள் கேப்பிட்டலைச் சூறையாடத் தூண்டியதுமான பேரணியில் அவர்கள் தெளிவாக ஒன்றை உணர்த்திவிட்டார்கள், ட்ரம்ப்போடு கூடிய ட்ரம்ப்பியத்தில்தான் ட்ரம்ப் குடும்பத்தினருக்கு அக்கறை.

அல்லது கலவரம் செய்யவிருந்தவர்களிடம் (அவர்களைத் ‘தேசபக்தர்கள்’ என்று இவாங்கா குறிப்பிட்டார்) டொனால்டு ட்ரம்ப் ஜூனியர் கூறியதுபோல் அந்தப் ‘பழம்பெரும் கட்சி’க்கு ஒரு எழுச்சி தேவைப்படுகிறது. நாடாளுமன்றத்தில் உள்ள எல்லா குடியரசுக் கட்சியினரும், “அந்தத் திருட்டைத் தடுத்து நிறுத்த ஏதும் செய்யவில்லை. அவர்களுக்கெல்லாம் இந்தக் கூட்டம் ஒரு செய்தியைக் கூற வேண்டும்: இது இனியும் அவர்களின் குடியரசுக் கட்சி அல்ல. இது டொனால்டு ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி” என்று அவர் கூறினார்.

அப்படித்தான் சொல்ல வேண்டும் ட்ரம்ப் ஜூனியர். நீங்கள் எந்த அளவுக்கு வலியுறுத்துகிறீர்களோ அந்த அளவுக்குக் கொள்கைப் பிடிப்புள்ள குடியரசுக் கட்சியினர் அந்தக் கட்சியை விட்டு விலகிச் செல்வார்கள். சமீபத்தில் நடத்தப்பட்ட கின்னிபியாக் கருத்துக் கணிப்பின்படி 70%-க்கும் மேற்பட்ட குடியரசுக் கட்சியினர் இன்னமும் ட்ரம்ப்புக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் அது தன்னுடைய கட்சி என்று அவர் சொல்வது நீடிக்கவே செய்யும் என்று நாம் நம்பலாம். அவர் மோசமான விஷயங்களைச் சொல்வது தொடரவே செய்யும். குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசுவாசத்துக்குத் தினசரி பரீட்சை நடத்தப்படும்.

குடியரசுக் கட்சியினர் தெரிவுகளை மேற்கொள்ள இதுவே தருணம். ‘‘எனது குழந்தையின் விளையாட்டு அணியின் பயிற்சியாளராக ட்ரம்ப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன், ஆனால் அவரது வரிக்குறைப்பு, இஸ்ரேல் தொடர்பான கொள்கைகள், நீதிபதிகள் அல்லது கருக்கலைப்பு போன்ற விவகாரங்களில் அவர் எடுக்கும் நிலைப்பாடு போன்றவற்றை நேசிக்கிறேன்” என்று சொல்வதெல்லாம் இனியும் எடுபடாது. ட்ரம்ப் ரொம்பவும் அத்துமீறிவிட்டார், அவரது ஆதரவுத் தளம் இன்னமும் அவருடன் இருக்கிறது. ஆகவே, அது உண்மையில் அவருடைய கட்சி.

நான்கு முகாம்கள்

கூர்ந்து கவனித்தால் குடியரசுக் கட்சியில் இன்று நான்கு பிரிவுகள் இருப்பது தெரியும்: கொள்கைப் பிடிப்புள்ள மரபியர்கள், அவநம்பிக்கை கொண்ட காரியக்கார மரபியர்கள், கொள்கைப் பிடிப்பற்ற மரபியர்கள், ட்ரம்ப் துதிபாடிகள். கொள்கைப் பிடிப்புள்ள மரபியர்கள் முகாமில் நான் ரோம்னியையும் முர்கோவ்ஸ்கியையும் வைப்பேன். ‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ என்று உண்மையில் சொல்லக்கூடியவர்கள் அவர்கள்தான். கட்சி, சித்தாந்தம் போன்றவற்றைவிட நாட்டுக்கும் அரசமைப்புச் சட்டத்துக்கும்தான் முன்னுரிமை கொடுப்பவர்கள்.

மிட்ச் மெக்கானல் முகாம் என்று அழைக்கக்கூடிய அவநம்பிக்கை கொண்ட காரியக்கார மரபியர்கள் முகாமில் ட்ரம்ப்புக்கு ஆதரவாகச் சில காலம் இருந்து, பிறகு பைடனின் வெற்றியை அங்கீகரித்தவர்களை நான் சேர்ப்பேன். கொள்கைப் பிடிப்பற்ற குடியரசுக் கட்சியினரின் முகாம் ஹாலீயாலும் க்ரூஸாலும் வழிநடத்தப்படுவது, இவர்களோடு பைடனின் வெற்றியை நாடாளுமன்றம் அறிவிக்க முட்டுக்கட்டை போட முயன்ற பிற செனட்டர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இறுதியாக, மிகத் தீவிரமான ட்ரம்ப் ஆதரவாளர்கள் முகாம், இவர்கள் சதிக்கோட்பாடுகளை நம்புபவர்கள், ட்ரம்ப்பின் பெரிய பொய்யை நம்புபவர்கள், அந்தப் பொய்யின் வியாபாரிகள்.

இந்த நான்கு முகாம்களும் எப்படி ஒன்றாக இருக்கப்போகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. அமெரிக்காவின் நலனுக்காக, அவை ஒற்றுமையாகவும் இருக்கக் கூடாது என்று நம்புகிறேன்.

இந்த விஷயத்தில் ஜனநாயகக் கட்சியினருக்கும் இதில் ஒரு வாய்ப்பு இருக்கிறது. மைய-வலதுசாரிக் குடியரசுக் கட்சியினரிடமிருந்து கொஞ்சம் ஆதரவைப் பெறுவதற்கு அவர்களுக்கு இதுவே நல்ல வாய்ப்பான தருணம். தற்போது சூழலில் மிகவும் இருள் இருக்கிறதென்பதை நான் அறிவேன். ஆனால், பைடன் அமைத்த பன்மைத்தன்மையும், மிகவும் உயர்தரமும் வாய்ந்த மைய-இடதுசாரி அமைச்சரவையையும் ட்ரம்ப்பின் போர்வீரர்களாக இல்லாமல் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடியவர்களாக இருக்கும் மைய-வலதுசாரிக் குடியரசுக் கட்சியினரும் நம்பிக்கையின் ஒளிக்கீற்றைத் தருகிறார்கள்.

நியூயார்க் டைம்ஸ், சுருக்கமாகத் தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x