Published : 10 Jan 2021 03:28 AM
Last Updated : 10 Jan 2021 03:28 AM
ஆ.மாதவனுக்கு 2016-ல் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. அதைக் கொண்டாடும் விதமாக ‘இந்து தமிழ்’ நாளிதழ், அவரைப் பற்றி நான் எழுதிய கட்டுரையை வெளியிட்டது. கட்டுரையை வாசித்த மாதவன் நேரில் சந்திக்க விரும்பினார். சென்று பார்த்து உரையாடிக்கொண்டிருந்தபோது கட்டுரையில் அடிக்கோடிட்டு வைத்திருந்த வரிகளை எடுத்துக் காட்டினார்.
பள்ளிப்பருவம் முதலே எழுத்தில் ஈடுபாடு கொண்டு எழுத்தாளர் ஆக விரும்பிய ஆ.மாதவனுக்கு வாழ்க்கை அதற்கான வாய்ப்புகளைக் கஞ்சத்தனமாகவே அனுமதித்திருக்கிறது. ஒருவேளை அவர் முழு நேரமும் இலக்கியப் படைப்பாளியாக இருந்திருந்தால் அவரது படைப்புகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம். இன்னும் அதிகமாக அறியப்பட்டிருக்கலாம். இன்னும் அதிகமான விருதுகளும் அங்கீகாரங்களும் பெற்றிருக்கலாம். ஆனால், மாதவனின் நிறைமனம் அவற்றைப் பொருட்டாக நினைக்கவில்லை. தமிழ் இலக்கியத்தில் தனக்கென்று ஓர் இடம் இருக்கிறது என்ற வரலாற்று உண்மையையே அவர் பெரிதாக எண்ணினார்.
இந்த வரிகளைச் சொல்லிவிட்டு, “வாஸ்தவம்... நிறைய எழுதியிருக்கலாம். கழியல. எழுதின வரைக்கும் நல்லா எழுதியிருக்கிறதாகத்தான் தோணுது. நான் சொல்றது சரிதானே?” என்று சிரித்தார். ஆதங்கமும் பெருமிதமும் மிளிர்ந்த சிரிப்பு அது. அந்த ஆதங்கம் உண்மையானது என்பதுபோலவே அந்தப் பெருமிதமும் பொருள்மிக்கது. நடுத்தர வணிகராக வாழ்க்கையை நடத்தியவர் இலக்கியத்தையே முதன்மையானதாகக் கருதினார் என்பதை இலக்கியத்தில் செயல்பட்ட ஆறு பதிற்றாண்டுப் படைப்புகளின் எண்ணிக்கை எடுத்துக் காட்டுகிறது.
குடும்பச் சூழ்நிலையால் பள்ளிக் கல்வி பாதியில் நின்றுபோனாலும் ஆ.மாதவன், தன் முயற்சியால் மலையாளத்தையும் தமிழையும் கற்றுக்கொண்டார். அவற்றின் இலக்கியங்களைத் தேடிப் பயின்றார். வாசிப்பின் வலுவில் எழுத்திலும் ஈடுபட்டார். பிற்காலத்தில் சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு ஆகிய இலக்கியத்தின் பல துறைகளில் பங்களித்திருந்தாலும் சிறுகதையாளராகவே இலக்கிய உலகுக்கு அறிமுகமானவர். அவர் சாதனைகள் நிகழ்த்திய துறையும் அதுவே.
1950-களை ஒட்டிய காலத்தில் தமிழகத்தில் நிலவிய திராவிடக் கருத்தாக்கங்களும், கேரளத்தில் செல்வாக்குச் செலுத்திய இடதுசாரிச் சிந்தனையும் அவரது எழுத்துக்குத் தூண்டுதல்களாக இருந்தன என்பதை மாதவனின் கதைகளிலிருந்தே அறியலாம். ஆரம்ப காலக் கதைகளில் பெரும்பான்மையானவை ‘முரசொலி’, ‘முத்தாரம்’, ‘திராவிடநாடு’ போன்ற திராவிட இயக்கச் சார்புள்ள இதழ்களிலும், ‘தாமரை’ முதலான இடதுசாரி இதழ்களிலும் வெளியானவை. எனினும், அந்த இயக்கங்களின் பரப்புரைக்கு உதவும் கதைகளை அல்ல; அவற்றின் மானுடச் சார்பை வெளிப்படுத்தும் கதைகளையே எழுதினார். சித்தாந்தப் பிடிப்புகளிலிருந்து விலகி சுதந்திரமான மனநிலையில் படைப்பில் ஈடுபட்டபோதும் இயக்கத்தினர் அவரை நினைவில் கொண்டிருந்தார்கள்.
சில ஆண்டுக் காலம் ‘குங்குமம்’ வார இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். பணித் தொடக்க காலத்தில் வெளியீட்டுக்கான படைப்புகளை முரசொலி மாறன் மேற்பார்வையிட்டு வந்தார். “பத்திரிகைக்கு வரும் கதைகள் எல்லாம் சடையாக இருக்கின்றன. நல்ல எழுத்தாளர்களிடமிருந்து கேட்டு வாங்கி வெளியிடுங்கள்” என்று அறிவுறுத்தினார். அன்று அவர் பரிந்துரைத்த எழுத்தாளர் பெயர்களில் ஆ.மாதவனின் பெயரும் இருந்தது. மாறனால் பெயரைச் சட்டென்று நினைவுகூர முடியவில்லை. “நம் பத்திரிகைகளிலெல்லாம் எழுதியிருக்கிறார். கேரளாவில் பாத்திர வியாபாரம் செய்கிறவர்” என்றதும் வியப்பாக இருந்தது. ஆ.மாதவன் என்று நினைவுபடுத்தியதும், “ஆமாம். அவர்தான்” என்று அபூர்வப் புன்னகையுடன் ஆமோதித்தார்.
ஓர் இயக்கத்தின் சித்தாந்தி, எழுத்தாளர் ஒருவரை மறவாமல் இருக்கிறார் என்பதைக் காட்டிலும் எழுத்தாளர் எவ்வளவு பெரிய ஜாம்பவான் என்பதிலேயே வாசகப் பெருமிதம் ஏற்பட்டது. அன்று மாதவனால் படைப்பு எதையும் இதழுக்கு அளிக்க முடியவில்லை. ஆனால், சில ஆண்டுகளுக்குப் பின்பு சம்பவத்தைச் சொன்னபோது பழைய ஞாபகத்தின் இனிமையை ருசித்துக்கொண்டு சிரித்தார். “அண்ணா, கருணாநிதி இவங்க கதை வருகிற மாதிரியே என்னோட கதைகளும் வந்திருக்கு. காத்திருந்து வெளியிடுவாங்க” என்றார்.
இதற்கு நிகரான சம்பவம் மிக அண்மையில் நிகழ்ந்தது. ஆ.மாதவனின் மறைவுச் செய்தியை வெளியிடுவதற்காக இடதுசாரி நாளிதழ் ஒன்று தொடர்புகொண்டது. அவரைப் பற்றியும் அவரது படைப்புகளைப் பற்றியும் சில குறிப்புகளைத் தெரிவித்ததும் தொடர்பிலிருந்த ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர் கேட்டார்: “ஆ.மாதவனைப் பாவங்களின் கதாகாரன்’ (எளியவர்களின் கதையாளர் ) என்று அழைக்கலாமா?” அப்படி அழைப்பது பொருத்தம்தான் என்றேன்.
தமிழின் முதன்மையான சிறுகதை ஆசிரியர்களின் வரிசையில் இடம்பெறுபவர் ஆ.மாதவன். அவரது கதைகள் பல வகையிலும் முன்னுதாரணம் இல்லாதவை. அவரது கதைக்களம் அநேகமாக மாற்றமில்லாதது. அவர் வணிகம் நடத்திய சாலைக் கம்போளமே அவரது படைப்புக் களம். சாலைத் தெரு. அதன் சந்துகள், இண்டு இடுக்குகள் அனைத்தும் புவியியல் மாற்றமில்லாமல் கதைகளில் இடம்பெறுகின்றன. அந்த இடத்தை அண்டிப் பிழைக்கும் எளிய மனிதர்களே கதாபாத்திரங்களாகிறார்கள். அவர்களது வாழ்க்கைச் சம்பவங்களே கதைத் தருணங்களாகின்றன. இடமும் மனிதர்களும் இந்த அளவுக்குப் பிணைந்த கதை உலகம் நவீனத் தமிழ் இலக்கியத்தில் முன்னர் கண்டிராதது.
மலையாள எழுத்தாளர் எஸ்.கே.பொற்றேகாட்டின் ‘ஒரு தெருவின் கதை’ என்ற நாவலை ஆ.மாதவனின் கடைத்தெருக் கதைகளுடன் ஒப்பிடலாம். கோழிக்கோடு நகரத்தின் முக்கியத் தெருக்களில் ஒன்றான மிட்டாய்த் தெருவைக் களமாகக் கொண்டது பொற்றேகாட்டின் நாவல். ஆனால், அதில் தெரு மங்கலான கதாபாத்திரம். மனிதர்களே கதை நடத்துபவர்கள். எனில், ஆ.மாதவனின் கடைத் தெரு மனிதர்களின் சுவாசத்தால் உயிர்பெற்றிருப்பது. அந்த மனிதர்களின் ஆன்மாவானது சாலைக் கம்போளத்தின் புழுதி அப்பிக் கிடப்பது. மாதவனின் சிறந்த கதைகளில் ஒன்று ‘சாளைப்பட்டாணி’. கதை மாந்தனான பட்டாணியைச் சாலைக் கம்போளத்தைத் தவிர்த்த வேறு எந்தக் களத்திலும் பொருத்திப் பார்க்க இயலாது.
திருவனந்தபுரம் என்ற மலையாள நகரத்தை ஆ.மாதவன், நீல பத்மநாபன் ஆகிய தமிழ் எழுத்தாளர்கள் சித்தரித்த அளவுக்கு மலையாள எழுத்தாளர்கள் எவரும் விரிவாகக் காட்டியது இல்லை. நீல பத்மநாபனின் சில கதைகளாவது திருவனந்தபுரம் எல்லையைத் தாண்டியவை. மாதவன் இந்த நகரத்தின் இலக்கிய வழிகாட்டியாகவே தென்படுகிறார். சாலைக் கம்போளம், தைக்காடு, கரமனை போன்ற இடங்களை விட்டு அவரது களமும் மாந்தர்களும் விலகுவதில்லை. “ஏன் அப்படி?” என்ற கேள்விக்கு, “பொறந்த நாள்லேர்ந்து இங்கேதான இருக்கேன். இந்த வாழ்க்கையைத்தான கண்டுவர்றேன். அந்தக் கதையெ எல்லாம் சொல்லி முடிக்கவே ஆயுசு காணாதே” என்று பதிலளித்தார். அது அவரது இலக்கிய வாக்குமூலமாகவே தென்படுகிறது. நவீன மலையாள இலக்கியத்திலேயேகூட இந்தத் தலைநகரம் பெரிதாக இடம் பெற்றதில்லை. முன்னோடி மலையாள நாவல்களில் ஒன்றான ‘மார்த்தாண்ட வர்மா’ (சி.வி.ராமன் பிள்ளை), ‘நார்மடிப் புடவை’ (சாரா தாமஸ்) ஆகிய இரண்டு நாவல்கள் திருவனந்தபுரத்தை மையமாகக் கொண்டவை. கள்ளி செல்லம்மா (ஜி.விவேகானந்தன்) நாவல் கோவளம் கடற்கரையை மையமாகக் கொண்டது. இவற்றிலெல்லாம் புலப்படாத நகர ஆன்மாவை ஆ.மாதவன் தமது கதைகளிலும் நாவல்களிலும் துலங்கச் செய்தார்.
ஆ.மாதவன் தமிழ், மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேர்ந்திருந்தார். தமிழகம், கேரளம் ஆகிய இரு நிலங்களின் பண்பாடுகளையும் அறிந்திருந்தார். ஓர் எழுத்தாளருக்கு அரிதாகக் கிடைக்கும் இந்த அரிய வாய்ப்பு அவருக்கு இயல்பாகவே கிடைத்தது. அதன் மூலம் பெற்ற அனுபவங்களையே கதைகளாக்கினார். அவை வேறொரு எழுத்தாளரால் பின்தொடர முடியாத தனித்தன்மையை அளித்தன. சி.வி.ராமன் பிள்ளையின் நாவல் திருவனந்தபுரத்தை மையமாகக் கொண்டிருந்தபோதும் அதன் மொழி அந்நியமானது. இந்த நகரத்தின் மொழியைக் கீழ் மட்டத்தில் பேசப்படும் மொழியாகவே நாவலில் காண முடியும். அந்த மேட்டுக்குடிச் சிந்தனையை ஆ.மாதவன் மாற்றினார் என்று சொல்லலாம். தமிழும் மலையாளமும் கலந்த மொழியை, கீழ்மட்டத்தவர்களின் மொழியையே தமது படைப்புகளில் கையாண்டார். அந்த மொழிக்கு ஓர் இலக்கியத் தகுதியை அளித்தார். இது அவரது படைப்புச் சாதனைகளில் முக்கியமானது.
ஆ.மாதவனின் கதைகள் கற்பனையானவை அல்ல; நடைமுறை வாழ்வை மீறியவை அல்ல. எல்லார் பார்வைக்கும் அன்றாடம் தென்படும் இடத்தில் அன்றாடம் காணப்படும் மனிதர் வாழும் வாழ்வைச் சொன்னவை. எளிய மனிதர்களின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையுமே கதையாக்கினார். நாவல்களாக்கினார். அந்த மனிதர்களை உயர்த்திக் காட்டவோ இழிவுபடுத்தவோ தீர்ப்புச் சொல்லவோ முற்படாமல், அவர்களது இயல்பான மனிதக் குணங்களுடன் காட்டினார். நன்மை தீமை இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் உழலும் மனிதர்களை உலகத்துக்கு அறிமுகப்படுத்தினார். அப்படிச் செய்வதன் மூலம் பொது உலகம் காண விரும்பாத அல்லது காண மறுக்கும் இன்னொரு உலகைப் பகிரங்கப்படுத்தினார். அதன் வாயிலாக, சமூகத்தின் எந்த வாழ்க்கையும் அடிப்படையில் ஒன்றுதான் என்ற உண்மையை உணர்த்தினார்.
சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட தருணத்தில் ஆ.மாதவன் இவ்வாறு குறிப்பிட்டார். “இந்த அங்கீகாரம் நல்லதுக்குத்தான். இன்னும் ஊக்கத்துடன் எழுதத் தூண்டுதலாக இருக்கும். பெரிய நாவல் ஒன்றை எழுதத் திட்டமிட்டிருக்கிறேன். அதை எழுதிவிடுவேன்.” அந்தப் பெரும் படைப்பு எழுதப்படாமலே போனது நவீனத் தமிழுக்கு இழப்புதான்.
- சுகுமாரன், கவிஞர், ‘காலச்சுவடு’ இதழின் பொறுப்பாசிரியர். தொடர்புக்கு: nsukumaran@gmail.com
தமிழகத்தின் தெற்கு மூலையில் இருக்கும் செங்கோட்டையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு, பிளவுபடாத திருவிதாங்கூராக இருந்தபோது குடியேறிய குடும்பத்தில் 1934-ம் ஆண்டு ஆ.மாதவன் பிறந்தார். தந்தை ஆவுடைநாயகம் பிள்ளை. தாயார் செல்லம்மாள். பள்ளிப்படிப்பைப் பூர்த்திசெய்யாத ஆ.மாதவன், குடும்பச் சூழ்நிலை காரணமாகச் சிறுவயதிலேயே வேலைக்குச் சென்றவர். ஆ.மாதவனின் புகழ்பெற்ற ‘கடைத்தெரு கதைகள்’ அனைத்துக்கும் களமான ஆதாரமான சாலைக் கம்போளம் தெருவில் செல்வி ஸ்டோர்ஸ் பாத்திரக் கடையை 75 வயது வரை நடத்தி வந்தார். ஆரம்பத்தில் திராவிட இயக்க இதழ்களில் கதைகளை எழுதத் தொடங்கிய ஆ.மாதவன், தமிழ்ச் சிறுகதை வடிவத்துக்கும் உள்ளடக்கத்துக்கும் சாதனைப் பங்களிப்பைச் செய்த முதல்நிலைப் படைப்பாளிகளில் ஒருவர். ‘புனலும் மணலும்’, ‘கிருஷ்ணப் பருந்து’ இரண்டும் குறிப்பிடத்தகுந்த நாவல் படைப்புகள். திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தை வளர்த்தெடுத்ததில் காத்திரமான பங்காற்றியவர். தமிழைப் போலவே மலையாளத்திலும் தேர்ச்சி கொண்ட ஆ.மாதவன், பி.கே.பாலகிருஷ்ணனின் ‘இனி நான் உறங்கட்டும்’, மலையாற்றூர் ராமகிருஷ்ணனின் ‘யட்சி’ ஆகிய நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறார். ‘சாகித்ய அகாடமி’, ‘விஷ்ணுபுரம்’, ‘கலைமாமணி’ விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT