Published : 11 Jun 2014 12:12 PM
Last Updated : 11 Jun 2014 12:12 PM
மனிதர்கள் தங்களுக்கு நோயைத் தரும் கிருமிகளை இனம்கண்டு, பகுத்தாய்ந்து அவற்றைக் கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்தவும் வெவ்வேறு மருந்துகளைத் தொடர்ந்து தயாரிக்கின்றனர். ஆனால், பாக்டீரியாக்கள் எல்லா நோய்த்தடுப்பு மருந்துகளையும் மீறி தங்களுடைய தாக்குதலைத் தொடர்கின்றன. இது ஒரு விஞ்ஞான எதிர்விளைவு. இதையும் சவாலாக எடுத்துக்கொண்டிருக்கிறது சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனம் ரோஷ் (Roche). நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் மருந்துகளையும் மீறிப் பாதிப்பை ஏற்படுத்தும் நோய்க்கிருமிகள் குறித்து ஆராய ரோஷ் முடிவு செய்திருக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மருந்துகளை உட்கொண்ட பிறகும் வியாதிக் கிருமிகளின் தாக்குதலிலிருந்து மீள முடியாமல் அமெரிக்காவில் மட்டும் ஆண்டுதோறும் இருபது லட்சத்துக்கும் மேற்பட்டோர் அவதிப்பட்டுவருகின்றனர். அவர்களில் சுமார் 23,000 பேர் இறக்கின்றனர். “நாம் நினைத்ததைவிட பாக்டீரியாக்கள் புத்திசாலித்தனமானவை; எந்தவித உயிர்கொல்லி மருந்துகளாலும் கொல்லப்படாமல் வாழவும் வளரவும் சக்திபெற்றவை” என்கிறார் ரோஷ் நிறுவனத் தின் மருந்து ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவர் ஜேனட் ஹேமண்ட்.
நவீன கால பெனிசிலின் மருந்துகளில் சிலவற்றைத் தயாரித்ததில் இந்த நிறுவனம்தான் முன்னோடி என்றாலும் 1990-களோடு அந்த ஆய்வுகளை முடித்துக்கொண்டது.
பெரிய மருந்து நிறுவனங்கள் எல்லாம் பாக்டீரியா ஆராய்ச்சிகளிலிருந்து விலகிக்கொண்டிருக்கின்றன. பொதுவான நோய்க்கிருமி ஆராய்ச்சிகளுக்குச் செலவு அதிகமாக இருப்பதுடன் வருவாயும் அதிகமில்லை என்பதே இதற்கு முக்கியக் காரணம். இந்நிலையில் ரோஷ் நிறுவனம் தன்னுடைய அடித்தளக் கட்டமைப்புகளையும் நிபுணத்துவத்தையும் கடந்த 2 ஆண்டுகளாக இதற்காகப் பட்டைதீட்டிவருகிறது.
நோய்எதிர்ப்பு சக்தி மருந்துகள் தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பாக, அந்த மருந்துகளை 5 ஆண்டுகளுக்கு அவை மட்டுமே தயாரித்து விற்பனை செய்வதற்கான உரிமைகளைத் தர அமெரிக்காவில் சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதனாலேயே ரோஷ் உள்பட பல நிறுவனங்கள் இத்தகைய ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT