Published : 06 Jan 2021 03:13 AM
Last Updated : 06 Jan 2021 03:13 AM

விவசாயிகள் போராட்டத்தின் ஊடாக ஒரு பயணம்

தடித்த பனிச் சுவர்களைத் தலைகொண்டு மோதி மோதி நடந்தால் ஏற்படும் சில்லிடும் உணர்வைத் தருகிறது டெல்லியின் அதிகாலை. காலை வேலைக்குக் கிளம்புபவர்கள் பஜார் சாலையின் ஓரத்திலேயே நெருப்பை உருவாக்கி ரொட்டி சுட்டுக்கொண்டிருக்கிறார்கள். குளிரைக் குறைப்பதற்காக ஆங்காங்கே நெருப்பை எரியவிட்டு அதன் வெப்பத்தில் ஏழை முதியவர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். பால் வாங்க வந்த எஜமானர்களுடன் குளிருக்குக் கதகதப்பாக ஸ்வெட்டர் அணிந்து கம்பீரமாக நம்மை வேடிக்கை பார்த்தபடி செல்லும் வளர்ப்பு நாய்களையும் காலையிலேயே பார்க்க முடிகிறது. சென்னையில் காணப்படும் நாய்களைவிட இரண்டு மடங்கு தடிமன் கொண்டு போஷாக்காகத் தெரிகின்றன புதுடெல்லி நாய்கள். அதிகாலை டெல்லி குளிர் தந்த உற்சாகத்திலேயே குளித்துவிட்டு, வாடகை கார் பிடித்து பஞ்சாபைச் சேர்ந்த விவசாயிகளின் போராட்ட மையமான சிங்கூ எல்லைக்குப் போய் இறங்கினேன்.

இயந்திரத் துப்பாக்கிகள், கண்ணீர்ப் புகைத் துப்பாக்கிகளுடன் நூற்றுக்கணக்கில் ஆயுதப்படை போலீஸார், முள்சுருள் வேலிகள் அமைத்து, பெரிய பெரிய சிமென்ட் பாளங்களைப் போட்டுத் தடுத்திருக்கும் இடத்தைப் பார்க்கும்போதே அதுதான் போராட்டம் நடக்கும் எல்லை என்று தெரிந்துவிடும். பக்கவாட்டில் நடமாடும் கழிப்பறை வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சிங்கூ எல்லையைப் பொறுத்தவரைக்கும் பக்கவாட்டு வழியாக பஞ்சாப் விவசாயிகள் போராடும் இடத்தைச் சில எட்டுகளில் அடைந்துவிட முடிகிறது. களத்தின் தொடக்கத்திலேயே ஒரு பெரிய மேடையில் ஆர்மோனியத்தோடு கீர்த்தனைகளைப் பாடிக்கொண்டிருந்தனர். அதுதான் போராட்டம் தொடர்பிலான அறிவிப்புகள், உரைகள், பிரார்த்தனைகள், பத்திரிகை அறிக்கைகள் அனைத்தும் நடக்கும் மேடையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. பார்வையாளர் விரிப்புக்கு அப்புறம் போராட்டக் களம் ஒரு கிராமத்துத் திருவிழாக் காட்சியைப் போல நம் முன்னால் விரிகிறது. உல்லாச கார்கள் தொடங்கி டிராக்டர்கள், குட்டியானை வண்டிகள், டிரக்குகள் என அது அதற்கே உரிய வசதிகளையும் காலத்தையும் உணர்வுகளையும் பிரதிபலித்தபடி தற்காலிக வீடுகளாகவும் முகாம்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.

பசித் தீயை அணைக்க…

விவசாயிகள் சங்கங்களின் கொடிகளோடு மக்கள் ஆங்காங்கே நடைபயின்றுகொண்டிருக்கின்றனர். சாலையின் மையத்திலும் பக்கவாட்டுகளிலும் ஆங்காங்கேயும் சிறிதாகவும் பெரிதாகவும் அடுப்புகள் எரிந்துகொண்டிருந்தன. வடலூரில் வள்ளலார் ஏற்றி, இன்னும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் நெருப்பு இங்கே சமையல் நடந்துகொண்டிருக்கும் லங்கார்களைப் பார்க்கும்போது ஞாபகத்துக்கு வந்துசென்றது. சீக்கிய, சூஃபிப் பண்பாட்டில் லங்கார் எனப்படும் பொதுச் சமையல் கூடங்களுக்குப் பின்னால் இருந்த நோக்கமும் தேவையும் இன்னமும் தீரவில்லை. மிகப் பெரிய கடாயில் காலிஃபிளவரும் உருளைக் கிழங்கும் மஞ்சளாக ஆவியைப் பரப்பி, தீராத வயிற்றின் நெருப்பைத் தணிக்க வெந்துகொண்டிருக்கின்றன. எத்தனையோ பசிகள் தீராத மானிடத்தின் அடிப்படையான ஒரு பசியை, அந்தப் பசி நம் கும்பியில் மூட்டும் தீயை அணைக்க, உலகெங்கும் பொது அடுப்புகள் இன்னும் எரிய வேண்டியதன் அவசியத்தை நவீன குடிமக்களுக்கும் நவீன அரசுக்கும் விவசாயிகள் நினைவூட்டுகிறார்கள். தங்கள் வயிற்றுப்பாட்டோடு வருபவர்கள், வேடிக்கை பார்ப்பவர்கள், ஊடகர்கள், காவல் துறையினர் என்று கை நீட்டுபவர்கள் அனைவர் வயிற்றுப்பாட்டையும் இந்தப் போராட்டக் களத்திலும் அவர்கள் பூர்த்திசெய்கிறார்கள்.

நடுநடுவே சீக்கியத் துறவிகள் சிறு சிறு கூடாரங்களை இட்டு, கிரந்தத்தின் வாசகங்களையும் வாசிக்கின்றனர். மருத்துவ சோதனை முகாம்கள், இலவச மருந்து, மாத்திரைகள், சானிடரி நாப்கின் தொடங்கி டூத் பிரஷ்கள் வரைக்கும் வாங்கிக்கொள்வதற்கான இடங்கள் தெரிகின்றன. துவைக்கும் இயந்திரங்களைக் கொண்டு அழுக்குத் துணியைத் தருபவர்களுக்கு 10, 15 நிமிடங்களில் துணியைத் துவைத்தலசி உலரவைத்துத் தருகின்றனர். இந்தப் போராட்டக் களத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து வயதுகளிலும் ஆட்கள் இருந்தாலும் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட வயதினரே அதிகம் பேரைப் பார்க்க முடிகிறது. ஒரு மாதத்தைத் தாண்டி டெல்லியின் உச்சபட்ச குளிர்பருவத்தில் நடக்கும் இந்தப் போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துபோயுள்ளனர்.

தன்னிறைவு வாழ்க்கை

தோலின் தோற்றம், உடைகள், வாகனங்கள், பயன்படுத்தும் எலெக்ட்ரானிக் கருவிகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஏழை, நடுத்தர மக்கள், பணக்காரர்கள் என எல்லாரையும் இந்தப் போராட்டக் களத்தில் காண முடிகிறது. சென்ற நூற்றாண்டின் துவக்கத்திலேயே உலகம் முழுவதும் சஞ்சரிக்கத் தொடங்கிய சீக்கிய மக்கள் அடைந்திருக்கும் காஸ்மோபாலிட்டன் தன்மையையும் அதேவேளையில் அவர்களிடம் இன்னும் தொடரும் வேர் அறாத மரபையும் சேர்ந்து காண முடிகிற போராட்டம் இது. சமய அடையாளம், இன அடையாளம், வழிபாடு என தங்களது எல்லா நடைமுறைகளையும் அரசை எதிர்த்து நடத்தும் இந்த தார்மீகப் போராட்டத்தோடு அவர்கள் பிணைத்துள்ளனர். நவீனப் பொருட்கள் அத்தனையையும் அவர்கள் பாவிப்பதோடு, தன்னிறைவான ஒரு வாழ்க்கை முறையை அவர்கள் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வலுவாகக் கொண்டிருப்பதால்தான், ஒரு தலைநகரின் எல்லையில் தடுக்கப்பட்ட நிலையில் ஒரு நெடுஞ்சாலை வாழ்க்கையில் 30 நாட்களுக்கு மேல் அவர்களால் தாக்குப்பிடிக்க முடிகிறது. இன்னும் மூன்று மாதங்களுக்குப் போராட்டத்தை நீடித்தாலும் அவர்களிடம் உணவுப் பொருட்கள் இருப்பதை அங்கிருக்கும் வாகனங்கள் உறுதிசெய்கின்றன. சாதாரணமாக விறகுகளைப் போட்டு வெந்நீர் போடும் தகரத்தில் செய்யப்பட்ட கருவிகளைப் புதிதாக உருவாக்கிப் போராட்ட இடத்தில் குளிப்பதற்கும் குடிப்பதற்கும் பயன்படுத்துவதைப் பார்த்தேன்.

வெளியே காண்பதைப் போலவே இந்தப் போராட்டத்தில் அனைத்து வித்தியாசங்களையும் காண முடிகிறது. ஆனால், அத்தனை பேதங்கள், வேறுபாடுகளுக்கிடையே உயிர்ப்பையும் வண்ணங்களையும் ஆற்றலையும் உணரக்கூடிய இடமும்தான் அது. விளிம்பிலும் ஆற்றல் ததும்பும் இடமாக இது இருக்கிறது. அடுத்த நாள் பஞ்சாபிகளும் ஜாட் மக்களும் சேர்ந்து போராடும் டிகாரி எல்லைப் பகுதியிலும் இந்த உணர்வை அடைந்தேன். விவசாயத்தின் மேன்மை, விவசாயத்தின் தேசிய முக்கியத்துவம் ஆகியவற்றை உணர்வுபூர்வமாகச் சொல்லும் கோஷங்கள் எழுதப்பட்ட பதாகைகளோடு முழக்கங்களும் எழுப்பப்படுகின்றன. புதிய வேளாண்மைச் சட்டங்களால் பயனுறும் தொழிலதிபர்கள் என்று அதானி, அம்பானியின் பெயர்களும் முகங்களும் உள்ள சுவரொட்டிகளில் அவர்களது நிறுவனங்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுப் புறக்கணிக்கப்படுமாறு வலியுறுத்தப்படுகின்றன. மோடி, அமித் ஷா படங்களையும் வைத்திருக்கிறார்கள். விவசாயிகளின் கோபத்தைக் கிளறிய இன்னொரு முகம் கங்கணா ரணாவத்துடையது.

தார்மீகப் பொருளாதாரம்

இந்தி, ஆங்கிலம், மலையாள ஊடகர்கள் தென்படுகின்றனர். ஆனால், அவர்கள் வேடிக்கை பார்ப்பவர்களாக போலீஸாரைப் போலவே உள்ளனர். ஊடகர்கள் அனுமதிக்கப்பட்டாலும் போராட்டத்தின் உணர்வுக் களத்துக்கு வெளியேதான் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். போராட்டம் செய்யும் குடியானவர்களிடம் உள்ள தார்மீகப் பொருளாதாரம் ஊடகவியலாளர்களிடம் இந்தப் போராட்டத்தைப் பொறுத்தவரை இல்லை என்று ஷிவ் விஸ்வநாதன் ‘தி டெலிகிராப்’ இதழில் எழுதியிருந்தது ஞாபகத்துக்கு வருகிறது. குறிப்பாக, அண்ணா ஹசாரே நடத்திய ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தைப் போல, ரகசிய வேட்கை கொண்ட ஒரு சிறு வர்க்கத்தினரின் நலன்கள் அதிகாரம் செலுத்தும், எளிய மக்களைப் போஷிக்கும் கண்களோடு பார்க்கும் தொண்டு நிறுவன மனப்பான்மையை இந்தப் போராட்டத்தில் எந்த முனையிலும் காண முடியவில்லை.

ராஜஸ்தான், ஹரியானா, உத்தர பிரதேசம் எனப் பல மாநிலங்களிலிருந்து டெல்லிக்கு நுழையும் எல்லைப் பகுதிகளில்தான் இந்தப் போராட்டங்கள் நடக்கின்றன. சிங்கூ எல்லையில் போராட்டம் நடக்கும் இடத்தை 50 மீட்டர் தாண்டும்போதே ஒட்டுமொத்த டெல்லியின் பரபரப்பு, போராட்டத்துக்கு மிகத் தொலைவில் உள்ளது போன்ற உணர்வு ஏற்படுகிறது. விவசாயிகள் நம் வாழ்க்கையின் எல்லையில் அல்லது விளிம்பில்தான் இப்படி நிற்கிறார்கள்போல. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம், குடியுரிமைச் சட்டம் தொடங்கி, விவசாயிகள் சட்டத்துக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் வரை இந்த எல்லை கட்டப்பட்ட தன்மை இருப்பதை உணர்கிறேன்.

சமயம், அரசியல், வாழ்க்கை முறை, நவீனம், மரபின் நல்ல அம்சங்களிலிருந்து பெற்றுக்கொண்ட உரம் அத்தனையும் சேர்ந்த போராட்டம் இது. சமய அடையாளத்தைச் சீக்கிய விவசாயிகள் ஒரு தார்மீகக் கேடயமாக ஆக்கியிருக்கிறார்கள். நடக்க நடக்க ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் சேர்ந்து முகங்கள், வாகனங்கள் நீள்கின்றன. போராட்டக் களத்தில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் 60 வயதைத் தாண்டிய முதியவர்கள். அந்த முதியவர்களின் ஆழமான முகரேகைகள் படிப்பதற்குத் தனிப் புத்தகங்கள். இந்தப் போராட்டம் இந்திய அரசியல் போராட்டங்களின் வடிவத்துக்குப் புதிய வடிவம் ஒன்றைத் தரும்!

- ஷங்கர்ராமசுப்ரமணியன்,

தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x