Published : 31 Dec 2020 03:18 AM
Last Updated : 31 Dec 2020 03:18 AM
ரவீந்திரநாத் தாகூரின் குழந்தைப் பருவத்தில் ஒருமுறை அவர் வசித்த கல்கத்தாவில் இன்புளூயன்சா காய்ச்சல் பரவியதாம். எனவே, அவர் பெற்றோருடன் வசித்திருந்த ஜெரோசங்கோ மாளிகையிலிருந்து பக்கத்திலிருந்த பெனெட்டி என்ற கிராமத்துக்குச் சென்றிருந்தார். நாள் முழுவதும் மாளிகையிலேயே இருந்த அவருக்கு அது மிகவும் பிடித்திருந்தது என அவர் குறிப்பிடுகிறார். அவர் கிராமத்துக்கு அனுப்பப்பட்டதற்கான காரணம், நகரைவிட கிராமத்தில் தொற்றுக்கான வாய்ப்பு குறைவாயிருந்தது என்று குறிப்பிடுகிறார். தற்போது கரோனா பொதுமுடக்கத்திலும் தொற்றின் வீச்சு ஒப்பீட்டளவில் கிராமப்புறங்களில் மிதமாயிருப்பதையும் அதனைக் கல்வித் துறை எவ்வாறு பயன்படுத்த இயலும் என்ற எண்ணத்தையும் தவிர்க்க இயலவில்லை.
கரோனா பொதுமுடக்கக் காலத்தில் தமிழக அரசின் கல்வித் துறை பல்வேறு ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது வரவேற்கத்தக்கது. குறிப்பாக, அனைத்துப் பருவத்துக்கும் உரிய பாடப்புத்தகங்கள், சீருடைகள், இன்ன பிற அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள், குறிப்பாக உலர் தானியம் போன்றவை மாணவர்களை நேர்த்தியான முறையில் சென்று சேர்வதும் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டுவருகிறது. இந்த வெற்றிக்குப் பங்களிப்பு செய்துள்ள அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரையும் மனமாரப் பாராட்டத்தான் வேண்டும்
குறிப்பாக, கல்வித் தொலைக்காட்சி மூலமாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதும், அதற்கான அட்டவணைகளைச் சமூக ஊடகங்கள் மூலமாகப் பகிர்வதும் கல்வித் தேவையை ஈடுசெய்ய முயல்கின்றன. இம்முயற்சியைப் பாராட்டாமல் இருக்க முடியாது. இது எதிர்பார்க்கக் கூடிய விளைவுகளை அதிக அளவில் ஏற்படுத்தவில்லை என்று சொன்னாலும் நிச்சயமாகக் கல்வித் துறையில் புதிய முயற்சிகளை அணுகுவதற்கான ஒரு மைல்கல். ஆர்வமுள்ள ஆசிரியர்கள் சிலரும் ஆங்காங்கே சில முயற்சிகளை மேற்கொள்கின்றனர். பலரும் அரசின் வழிகாட்டலை எதிர்பார்த்தும் காத்துக்கிடக்கின்றனர். அதுபோலவே சமீப நாட்களாக ஆசிரியருக்குக் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகளை இணையம் மூலமாகக் கொடுத்துவருவதும் ஆரோக்கியமான ஒன்று.
இவ்வளவு ஆரோக்கியமான செயல்பாடுகளையும் பாராட்டும் நேரத்தில், அரசு நிச்சயம் யோசித்திருக்கும் அல்லது செய்ய உள்ள சில விஷயங்களையும் நாம் பகிர்ந்துகொள்ள வேண்டியது தேவையாகிறது. குறிப்பாக, பள்ளி என்பது மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் இடம் மட்டுமல்ல, அவர்களுடைய நடவடிக்கைகளில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த முயலும் இடம். மேலும், தொடர்ச்சியான சுயகற்றல் மற்றும் சக மாணவர்களிடமிருந்து கற்றல் வாய்க்கப்பெறும் இடம். கற்றல் தொடர்பான பல்வேறு பகிர்வுகள் நிறைவேறும் இடம். தன் மனதின் ஏக்கங்களை, கவலைகளைப் பகிர்வதற்கான வடிகாலாக உள்ள ஆசிரியர்களைச் சந்தித்து ஆற்றுப்படுத்துதல் பெறும் இடம். இதனிடையே விளையாட்டுகளும் குறும்புகளும் அரங்கேறும் இடம். குறிப்பாக, ஒரு வேளையாவது சமைத்த சத்துணவைக் கூடி மகிழ்ந்து சாப்பிடுவதற்கான இடம்.
இவ்வாறான கூறுகள் எதுவும் இல்லாமல் பள்ளி என்பதை நாம் யோசிக்க இயலாது. அந்த வகையில் அரசு எப்படிப் படிப்படியாகப் பல்வேறு நிறுவனங்களுக்கும் தளர்வு அளித்து இயங்கச் செய்துள்ளதோ அதுபோல சிறிது சிறிதாகப் பள்ளிச் செயல்பாடுகளை அதிகப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். இது மாநிலம் முழுமைக்குமான பொது அட்டவணையாக இருக்க இயலாது என்பது அனைவரும் அறிந்த விஷயமே. ஆங்காங்கே, மாவட்ட ஆட்சித் தலைவர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் போன்ற அதிகாரிகள் மாவட்ட அளவில், ஒன்றிய அளவில் திட்டமிட்டு வழிநடத்தக்கூடிய முயற்சிகளாக இருக்கலாம்.
இவ்வாறாக, சிறுசிறு முயற்சிகளைக் கிராமங்களில் தொடங்கி, ஒருவேளை தொற்று அதிகமாகும் பட்சத்தில் அதைப் பற்றிய மாற்று வழிகளை யோசிக்கலாம். தொடர்ச்சியாகப் பள்ளிக்கும் மாணவர்களுக்குமான தொடர்பு விடுபடுவது என்பது நீண்ட கால அளவில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை ஐநா போன்ற ஆய்வு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. தற்போது பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுவருகிறது. இதுவும் வரவேற்கக் கூடிய ஒன்றே. இதன் சாதக பாதக அம்சங்கள் கூடுதலாக விவாதிக்கப்பட்டு வழிவகைகளைக் கண்டறியலாம். தமிழ்நாட்டின் அனைத்து, ஜனநாயக இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் இதில் குழந்தைகளின் நலன்களையும் உரிமைகளையும் கூடுதலாக முன்னிறுத்தி அரசுக்கு ஆலோசனைகள் கூறலாம்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பதை நம் மாநிலம் பல நேரங்களில் நிரூபித்துவருவதை நாம் அனைவரும் அறிந்ததே. குறிப்பாக, செயல்வழிக்கற்றல், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு, பெண்கல்வி, மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி முறைகள் போன்றவற்றில் நாம் அகில இந்திய அளவுக்கும் ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளோம்.
இப்போதும் முன்மாதிரியாகச் சில முயற்சிகளை மேற்கொண்டு கரோனா காலத்தில் எவ்வாறு மாணவர்களைப் பாதுகாப்பாக அணுக இயலும் என்பதற்கான சிறுசிறு செயல்திட்டங்களைக் கல்வித் துறை யோசிக்கலாம். இதில் பல்வேறு ஆசிரியர்களும் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள்.
முதலில் ஆர்வமுள்ளோரை உரிய பாதுகாப்பு விதிமுறைகளோடு ஈடுபடுத்திவிட்டு, பின்னர் அதனைப் படிப்படியாக விஸ்தரிக்க முயலலாம். அந்த வகையில் தமிழ்நாட்டை இந்தியா நல்ல முன்மாதிரியாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. நிச்சயம் தமிழகத்தின் கல்வியாளர்களும் கல்வித் துறையும் இது குறித்துக் கூடுதல் கவனம் செலுத்திக் குழந்தைகளுக்கான கற்றலில் மேம்பாட்டைக் கொண்டுவருவதற்கு முயற்சிப்பார்கள் என்று நம்புவோம்.
- என்.மாதவன், மாநில செயற்குழு உறுப்பினர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
தொடர்புக்கு: thulirmadhavan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT