Published : 31 Dec 2020 03:18 AM
Last Updated : 31 Dec 2020 03:18 AM
வெள்ளம் (2015), பணமதிப்பிழப்பு (2016) காரணமாகப் பதிப்புத் துறை எதிர்கொண்ட நஷ்டங்களை ஈடுசெய்யும் விதமாக ‘இந்து தமிழ்’ நாளிதழின் ஆதரவுடன் தொடங்கப்பட்ட ‘புத்தாண்டுப் புத்தக இரவு’ இயக்கம் தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக்கொண்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் பல புதிய அம்சங்களோடு தன்னை விஸ்தரித்துக்கொண்டது. இந்த ஆண்டோ கரோனா நெருக்கடி. கரோனாவால் மிக மோசமாகப் பாதிப்படைந்த துறைகளுள் பதிப்புத் துறையும் ஒன்று. கொஞ்சம் கொஞ்சமாகப் பதிப்புத் துறை மீண்டுவரும் சூழலில், இம்முறை ‘புத்தாண்டுப் புத்தக இரவு’ நடக்குமா என்ற கேள்வி வாசகர்களிடம் இருந்தது. ஆம், நடக்கிறது. மிக எளிய முறையில்.
தமிழ்நாடு முழுவதும் வெவ்வேறு இடங்களில் இன்று இரவு புத்தகக் கடைகளைத் திறந்து வைக்க ஏற்பாடாகியிருக்கிறது. அரசு அறிவித்த விதிகளுக்கு உட்பட்டு நிகழ்வுகள் நடக்கின்றன. ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ புத்தகக் கடையில் வாசகர்களும் எழுத்தாளர்களும் சந்தித்து உரையாட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ தரைத் தளத்தில் டிசம்பர் 20 முதல் புத்தகக்காட்சி நடந்துகொண்டிருகிறது என்பது கூடுதல் சிறப்பு. 10%-50% தள்ளுபடி உண்டு. அதேபோல, 50% தள்ளுபடியுடன் ‘பாரதி புத்தகாலயம்’ நடத்திவரும் புத்தகக்காட்சியோடு புத்தக இரவுக் கொண்டாட்டமும் வழக்கம்போல உண்டு. ‘சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம்’ தங்கள் எழுத்தாளர்களை வரவழைத்து எழுத்தாளர் - வாசகர் சந்திப்பை ஏற்பாடுசெய்திருக்கிறது. ‘எதிர்’ பதிப்பகமும் எப்போதும்போல புத்தக இரவைக் கொண்டாடுகிறது. ‘எதிர்’ வெளியீடுகளுக்கு 30% வரை தள்ளுபடி தர முன்வந்திருக்கிறது. புதிதாக உதயமாகியிருக்கும் ‘பி ஃபார் புக்ஸ்’ கடையிலும் கலந்துரையாடலுடன் நூல் வெளியீட்டு நிகழ்வும் உண்டு. முக்கியமான ‘கிளாசிக்’ படைப்புகள் குறித்து அறிமுகப்படுத்தவும் இருக்கிறார்கள். கூடவே, ‘கோடு’ கேலரியில் இரவு 7.30 மணி முதல் நவீன ஓவியக் கண்காட்சி நடக்கவிருக்கிறது. தமிழகமெங்கும் புத்தாண்டை முன்னிட்டு புத்தகக்காட்சி நடத்துகிறது என்சிபிஹெச் நிறுவனம். இதன் அனைத்துக் கிளைகளிலும் 10%-50% தள்ளுபடியோடு புத்தகங்கள் வாங்கிக்கொள்ளலாம்.
கரோனா தந்த நெருக்கடிகளெல்லாம் 2020-ஐ ஒரு விரும்பத்தகாத ஆண்டாக மாற்றிவிட்டன. இந்நிலையில், புதிய ஆண்டுக்காகவும், புதிய வாழ்க்கைக்காகவும், புத்துணர்வுக்காகவும் உலகமே காத்திருக்கிறது. வாருங்கள், நாம் புத்தகங்களோடு புத்தாண்டை வரவேற்போம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT