Last Updated : 24 Dec, 2020 07:08 AM

45  

Published : 24 Dec 2020 07:08 AM
Last Updated : 24 Dec 2020 07:08 AM

நடைமுறைக்குச் சாத்தியமா கமலின் திட்டங்கள்?

முதலில் கமல்ஹாசனுக்கு ஒரு பூச்செண்டு. மக்கள் பணியில் அனுபவமும் திறமையும் கொண்டவர்களை அருகில் வைத்துக்கொண்டு, அவர்களை அறிமுகப்படுத்தித் தன் முன்னாலேயே பேசவும் அனுமதிப்பது என்பது இன்றைய அரசியல் தலைவர்களிடத்தில் அருகிக்கொண்டிருக்கும் பண்பாடு. அதற்காக, கமல்ஹாசன் பாராட்டுக்குரியவர்.

அண்ணா பிறந்த மண்ணில் கமல்ஹாசன் அறிவித்த ஏழு அம்சத் திட்டங்களின் காரணகர்த்தாவான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, அந்தத் திட்டங்களை விளக்கியும் பேசியுள்ளார். ஒரு கற்பனையுலகை நோக்கி நம்மை இட்டுச் செல்வதாக உணரவைக்கும் இந்த யோசனைகள் நடைமுறையில் சாத்தியமே என்கிறார் சந்தோஷ் பாபு. அவரது பணி அனுபவத்திலிருந்தே அதைச் சொல்கிறார். யதார்த்த அரசியலில் நிலவும் சில தடைகளைச் சரிசெய்துவிட்டால் அனைத்தும் சரியாகிவிடும் என்பது அவரது நம்பிக்கையாக இருக்கிறது.

துரித நிர்வாகம்

ஏழு அம்சத் திட்டங்களில் முதன்மையாக முன்வைக்கப்படுவது துரித நிர்வாகம். பஞ்சாயத்து அலுவலகங்கள் தொடங்கி முதல்வர் அலுவலகம் வரையில் அனைத்துக் கோப்புகளின் நிலவரங்களும் எளிதில் தெரிந்துகொள்ளக் கூடியதாகவும், எங்கேயும் தேங்கி நிற்காதவாறும் அமைய வேண்டும் என்று விரும்புகிறது இந்தத் திட்டம். இது அரசு நிர்வாகத்தின் மந்த நடைமுறையை மாற்றியமைக்கும் புரட்சிகரமான திட்டம் என்று கூறப்படுகிறது. ஆனால், இது ஒரு லட்சியப் பயணம். ஒரே நாளில் நடந்துவிடக் கூடியதல்ல. துறைவாரியாகப் படிப்படியாக மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டம்.

ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிர்வாகத் துறை சீர்திருத்தங்களே மந்தகதியில்தான் நடந்துகொண்டிருக்கின்றன. அரசிடம் மக்கள் முன்வைக்கும் விண்ணப்பங்கள் உடனடியாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்ற உள்ளக்கிடக்கை புரிகிறது. கணினிமயத்தால் அதை விரைவுபடுத்துவதால் சிவப்புநாடா முறை ஒழிந்துவிடும் என்பதற்கு எந்த நிச்சயமுமில்லை. சமீபத்தில் நடந்த பிஎம் கிசான் திட்ட மோசடிக்குக் கணினி வழியாக வேளாண் அதிகாரிகள் விரைந்து அளித்த அங்கீகாரங்கள்தான் காரணமாக இருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது.

சேவை என்பது உரிமை

ஊழல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாற்றாக ஊழலுக்கான வாய்ப்பையே வழங்காமல் முன்கூட்டியே கண்காணிக்கும் அமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பது அடுத்த திட்டம். முந்தைய திட்டத்தின் தொடர்ச்சி. மற்ற மாநிலங்களில் அரசின் சேவைகளைப் பெறுவது சட்டபூர்வமான உரிமையாக்கப்பட்டிருக்கிறது, தமிழகத்திலும் அந்தச் சட்டம் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. சட்டபூர்வமாக்குவதாலேயே உரிமைகள் கிடைத்ததாகிவிடுமா என்ற கேள்வியும் எழுகிறது. அரசின் சேவைகள் அனைத்தும் வீடு தேடி வரும்; வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை என்பதைத் தனித்துக் கவனப்படுத்தினால் மக்கள் ஆதரவு கிடைக்கக் கூடும்.

குடிசை, கான்கிரீட் வீடுகள் அனைத்தும் கணினி வசதி, இணைய வசதி கொண்ட மின்னணு இல்லங்களாக மாற்றப்படும் என்கிறது மற்றொரு திட்டம். நாம் இன்னும் முழுமையான கல்வியறிவைப் பெற்றுவிடவில்லை என்பதை இந்தத் திட்டம் கவனத்தில் கொள்ளவில்லை. தற்போதைய நிலையில் தொலைக்காட்சிப் பெட்டிபோல, கணினியையும் இணைய இணைப்பையும் வீடுவீடாகக் கொடுத்தாலும் அதன் பயன் என்ன? தொலைக்காட்சியில் தொடர்கள் பார்ப்பதுபோல, இணைய வழியிலும் திரைப்படங்கள்தான் பார்த்துக்கொண்டிருப்பார்கள். அதற்குப் பதிலாக, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்குக் கணினி என்று ஒரு திட்டத்தை வகுத்ததுபோல, அனைத்து மாணவர்களுக்கும் இணையத்துடன் கூடிய கணினி அளிக்கப்படும் என்று திட்டங்களை மேலும் வளர்த்தெடுக்கலாம்.

இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று கமல்ஹாசனால் வர்ணிக்கப்படும் ஐந்து லட்சம் சிறு தொழில் முனைவோர்களை உருவாக்கும் திட்டம் எவ்வாறு மேற்கொள்ளப்படவிருக்கிறது என்பதில் தெளிவு இல்லை. ஒவ்வொருவரின் தனித்திறமையும் கண்டறியப்படும், அது ஊக்குவிக்கப்படும் என்பதெல்லாம் திட்டமாகுமா? ஏற்கெனவே புதிய வேலைவாய்ப்புகளை வழங்குவேன் என்று உறுதியளித்த பிரதமர் மோடி, அதை இன்னும் நிறைவேற்ற முடியாமல் இருக்கிறார். தொழிற்திறன்களை வளர்த்தெடுக்கும் அவரது தொடர் முயற்சிகள் வெற்றிபெறவில்லை. வேலைவாய்ப்பு என்ற வார்த்தையைத் தொழில் முனைவோருக்கான வாய்ப்பு என்ற வார்த்தைகள் மாற்றீடு செய்யப்பட்டிருக்கிறதோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

பெண்களைக் கவரும் திட்டம்

இல்லத்தை நிர்வகித்துவரும் பெண்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்கிறது மற்றொரு திட்டம். பெண்களைக் கவர்வதற்கான பாப்புலிஸ்ட் திட்டங்கள் என்று இரு பெரும் திராவிடக் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளைக் கேலிசெய்த காலம் மாறிவிட்டது என்பதையே இது காட்டுகிறது. தேர்தல் அரசியலில் பெண்களின் ஆதரவைப் பெற வேண்டியிருப்பதன் அவசியத்தையே இது காட்டுகிறது. பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கச் சட்டமியற்றியதுபோல இன்னும் எத்தனையோ படிநிலைகளைக் கடந்தாக வேண்டியிருக்கிறது. ஒரே வேலையைச் செய்யும் இருபாலருக்கும் ஒரே ஊதியத்தை நடைமுறைப்படுத்த இயலாத நிலையில்தான் இன்னும் இருக்கிறோம். பள்ளி, கல்லூரி என அனைத்திலும் பெண்களுக்கு இலவசக் கல்வி என்று கமல் அறிவித்தால்கூட அது ஒரு தெளிவான திட்டமாக இருக்க முடியும். பெண்களை இரண்டாம் பாலினராகக் கருதும் நிலைக்கே அது முற்றுப்புள்ளி வைக்கக் கூடும்.
இயற்கை வேளாண்மையின் மூலம் பசுமைப் புரட்சி ப்ளஸ் திட்டத்தை முன்வைத்திருக்கிறார் கமல்ஹாசன். எதிர்பாராத திடீர் நோய்த் தாக்குதல்களால்தான் விவசாயிகள் தவிர்க்க முடியாமல் பூச்சிக்கொல்லிகளை நாடுகிறார்கள். பருவந்தோறும் சாகுபடி செய்தாக வேண்டிய நிர்ப்பந்தமே அவர்களை வேதியுரங்களை நோக்கித் தள்ளுகிறது. குறைவான நிலப்பரப்பும் அதிக மக்கள்தொகையும் கொண்ட இந்தியா போன்ற ஒரு நாட்டில் அதிக உணவு உற்பத்தி என்ற இலக்கை நோக்கியே நாம் ஓட வேண்டியிருக்கிறது. நம்மால் இயலக் கூடியதெல்லாம் கூடிய வரை வேதியுரங்களைத் தவிர்ப்பது மட்டுமே.

வறுமையை நீக்க வழி என்ன?

வறுமைக் கோட்டுக்குப் பதிலாகச் செழுமைக் கோடு கணக்கில் கொள்ளப்படும் என்ற கமல்ஹாசனின் கருத்து வரவேற்புக்குரியது. ஆனால், வறுமைக் கோட்டுக்கான அளவீடு ஒன்றிய அரசால் முடிவெடுக்கப்படுகிறது. அந்த அடிப்படையையே மாநிலங்களும் பின்பற்றப்பட வேண்டியிருக்கிறது. மேம்பாட்டுப் பொருளாதாரத்தில் நீண்ட நாளாக விவாதிக்கப்பட்டுவரும் சிக்கல் இது.
மனித மேம்பாட்டுக் குறியீடு அதைக் களைவதற்கான ஒரு முயற்சி. ஒரு நாளைக்குத் தேவையான உணவு, அதற்கான செலவு என்ற அடிப்படையில் இந்தியாவில் வறுமைக் கோட்டைத் தீர்மானிப்பது தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறது. ஆனால், ஐநாவின் உலக வறுமைக் கோட்டை நாமும் ஏற்றுக்கொள்ள இன்னும் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியிருக்கிறது.

மக்களுக்கான திட்டங்களை அவர்களோடு நேரடித் தொடர்பில் இருக்கும் தலைவர்கள் திட்டமிடுவதுதான் ஜனநாயகம். அதை நிறைவேற்றும் இடத்தில் அதிகாரிகள் இருக்கிறார்கள். தலைவர்கள் மக்களுடன் நேரடித் தொடர்பில் இல்லாத நிலையில், அதிகாரிகளே தலைவர்களுக்கு அந்தத் திட்டங்களை வடிவமைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். நேர்மையாகப் பணியாற்ற முடியாமல் நெருக்கடிக்கு ஆளாகி பதவி விலகிய சந்தோஷ் பாபு தகவல்தொழில்நுட்பத் துறையின் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். அவரது பணிக்கால அனுபவங்கள் ஏழு அம்சத் திட்டங்களிலும் பிரதிபலித்திருக்கின்றன. அடிப்படையில் அவர் ஒரு மருத்துவர். சுகாதாரத் துறை சார்ந்து அவரிடமிருந்து எந்தத் திட்டங்களும் வரவில்லை என்பது ஆச்சரியம்.

நமது பக்கத்து மாநிலமான கேரளத்தில், மக்கள் நலத் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்படுவதன் கள நிலவரங்களை நன்கறிந்தவர் சந்தோஷ் பாபு. கமல்ஹாசனுக்கு அரசியல் களத்திலும் திட்டங்களை வகுப்பதிலும் அவர் பெருந்துணையாக இருக்கக் கூடும். ஆனால், இருவரும் இன்னும் கலந்தாலோசிக்க வேண்டும். அவர்களது இலக்குகள் மதிப்புக்குரியவை. அதைச் சென்றடைவதற்கான பயண வரைபடம் இன்னும் தயாராகவில்லை. பாமக ஆண்டுதோறும் வெளியிடும் பசுமை பட்ஜெட்போல அப்படியொரு வரைபடத்தை அவர்கள் முன்வைத்தால், ஆளுங்கட்சி எதுவென்றாலும் அதை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகும். கமலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x