Published : 22 Dec 2020 03:15 AM
Last Updated : 22 Dec 2020 03:15 AM

ஜே.என்.யு. என்ற குட்டி இந்தியா

ஒரு நாடு என்பது தொடர்ச்சியாக உரையாடலில் ஈடுபட்டிருக்கும் மக்களின் திரள். இந்திய நாடு நாள்தோறும் வார்த்தெடுக்கப்படும் மற்ற இடங்களும் நம் நாட்டில் இருக்கும் என்று நான் உறுதியாக எண்ணுகிறேன். ஆனால், என்னைப் பொறுத்தவரை, இந்தச் செயல்பாடு நடைபெறுவதில் மிகவும் பிரதானமான இடம் டெல்லியில் உள்ள ‘ஜே.என்.யு.’ எனப்படும் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம்.

குட்டி இந்தியா

ஆரம்பத்தில் நான் டெல்லியில் கல்வி கற்றபோது பெரிய அளவில் பஞ்சாப், உத்தர பிரதேசத்திலிருந்தும் அவ்வப்போது மேற்கு வங்கம், தமிழ்நாடு அல்லது மஹாராஷ்டிரத்திலிருந்தும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் சந்தித்திருக்கிறேன். ஆனால், ஜே.என்.யு.வில் நான் ஆசிரியராக இருந்த 1980-லிருந்து 2005 வரை இந்தியாவில் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் ஏராளமானோரைச் சந்தித்திருக்கிறேன். ஒரு பல்கலைக்கழகமென்பது அடிப்படையில் பன்மைத்தன்மையைக் கொண்ட, எல்லோரையும் உள்ளடக்கிய நிறுவனம், ஆனால் எத்தனை பல்கலைக்கழகங்கள் இந்த லட்சியத்தை அடைந்திருக்கின்றன? பெண்களுக்கும் சிறுபான்மையினருக்கும் ஆதரவுக் கரம் நீட்டுவதாலும், இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மாணவர்களுக்கும், பொருளாதாரரீதியில் நலிந்த பிரிவினரிடையே உள்ள சாதிக்கத் துடிக்கும் ஆண்கள், பெண்களுக்கும், வரலாற்றுரீதியில் சாதிப் படிநிலையில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் இடமளிக்கும் வகையிலான சேர்க்கைக் கொள்கை காரணமாகவும் ஜே.என்.யு.வால் இதைச் செய்ய முடிந்திருக்கிறது. இந்தியாவின் அழகு, குறைபாடுகள் என்று எல்லாமுமான குட்டி இந்தியாதான் ஜே.என்.யு.

அதைப் போலவே கவர்ந்திழுக்கும் ஜே.என்.யு.வின் அம்சம் என்பது அதன் ஜனநாயகக் கலாச்சாரமாகும். இந்தியாவின் வேறு எந்தப் பல்கலைக்கழகத்தில் பணசக்தி இல்லாமல் கைகளால் வரையப்பட்ட சுவரொட்டிகளைக் கொண்டே மாணவர் மன்றத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன? ஒரு தரப்பின் அரசியல் பேச்சானது மறு தரப்பின் மேலதிகப் பேச்சால் எதிர்வினை புரியப்படுகிறது. இவை அடிக்கடி வாக்குவாதங்களாகவும் அறிவுப்போராகவும் மாறுமே தவிர ஒருபோதும் வன்முறையாக மாறாது. ஜே.என்.யு. தேர்தல்களெல்லாம் கலந்துரையாடல்கள், விவாதங்கள், வார்த்தைகளால் தாக்கிக்கொள்ளுதல் போன்றவை நிறைந்ததாக இருக்கும். இதன் விளைவாக தீர்க்கமான, ஈடுபாடு கொண்ட குடிநபர்கள் கிடைக்கிறார்கள். இவர்களில் பலரும் தேசிய அரசியலில் ஈடுபடுகிறார்கள்; அரசமைப்பில் ஈடுபாடு கொண்ட பொதுத்துறை அதிகாரிகளாக ஆகிறார்கள்.

ஆனால், இந்தப் பல்கலைக்கழகத்தின் மிகவும் ஈர்ப்பளிக்கும் அம்சம் என்பது அதன் கல்விச் செயல்பாடுதான். கற்பித்தல் என்பது மிகவும் தீவிரமானதொரு செயல்பாடாகும்; எந்த ஆசிரியரும் ஒரு வகுப்பையும் தவறவிடத் துணிய மாட்டார். வகுப்பறைகள் மாணவர்களால் நிரம்பி வழியும், பலரும் பல்வேறு துறைகளிலிருந்தும், வெவ்வேறு கல்விப் புலங்களைத் தாண்டியும் வருவார்கள். முதுகலை வகுப்புகள் இரண்டு மணி நேரத்தைத் தாண்டியும் நீடிக்கும்; ஆசிரியர் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் மாணவர்கள் உன்னிப்பாகக் கவனிப்பார்கள். எனினும், ஒரு குறிப்புக்கு விளக்கமோ விவாதமோ விவரிப்போ தேவைப்பட்டால் கையை உயர்த்தினால் போதும். அதன் பின்பு பரவசமூட்டும், எதிர்பாராத உரையாடலில் ஒட்டுமொத்த வகுப்பும் பங்கேற்கும். கவனித்தல், உரையாடுதல், கலந்துரையாடுதல், விவாதித்தல் என்ற கலைகள் புது உயரங்களுக்குக் கொண்டுசெல்லப்படும். சிறிய எம்.பில். வகுப்புகளில் கட்டிடக் கண்காணிப்பாளர் பூட்டுவதற்கு வரும்வரை ஆசிரியரோ மாணவர்களோ வகுப்பறையை விட்டு வெளியேற விரும்ப மாட்டார்கள். கலந்துரையாடலில் ஈடுபடும் சிலர் வீட்டுக்கோ விடுதிக்கோ சென்றுவிட்டாலும் மற்றவர்கள் மெதுவாக அருகில் உள்ள உணவகத்துக்குச் சென்று சமூக, அரசியல் பிரபஞ்சத்தின் புதிர்களை அவிழ்க்க முயல்வார்கள். பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் மரியாதையையும் அன்பையும் பெற்றிருந்தார்கள்; மாணவர்களும் ஆசிரியர்களைப் பார்த்து வாயடைத்துப்போகாமல், அறிவுபூர்வமான வழிகாட்டிகளாக அவர்களை மதித்தார்கள்.

பெருநகரங்களிலிருந்து வந்திருப்பவர்களும் சரளமாக ஆங்கிலம் பேசுபவர்களும் மேம்பட்ட கல்வி பெற்றிருப்பவர்களுமான மாணவர்களைப் பார்த்து முதல் பருவத்தில் பல்வேறு மாணவர்களும் அச்சப்படுகிறார்கள் என்பதை மறுக்க முடியாததுதான். மிகவும் தகுதிபெற்ற ஆசிரியர்களுக்கு முன்பு அவர்கள் மேலும் எந்த அளவுக்கு சங்கடமும் அச்சமும் கொண்டிருப்பார்கள்? குறிப்பாக, ஆங்கிலம் பேசுவதில் சிரமம் உள்ளவர்களும், அப்படிப் பேசும்போது தங்கள் வட்டார மொழியின் வாடையை வெகுவாகக் கலந்து பேசுபவர்களுமான தலித் மாணவர்கள், ‘பின்தங்கிய பிரதேச’ங்களிலிருந்து வரும் மாணவர்கள் விஷயத்தில் இது உண்மை. இந்த மாணவர்கள், சிரமமான சூழலில் தாக்குப்பிடிப்பதற்காக ‘பி மைனஸ்’ என்ற அளவில் தரநிலையைப் பெறுவார்கள். எனினும், இரண்டாவது பருவம் முடியும் தறுவாயில் அவர்களுக்கு நம்பிக்கை அதிகரித்திருக்கும், வகுப்பில் தைரியமாகப் பேசுவார்கள், அவர்களது மதிப்பெண் தரநிலையும் அதிகரிக்கும். அவர்கள் அடையும் உருமாற்றம் பரவசமூட்டக்கூடியது, சந்தேகமில்லாமல் ஒரு ஆசிரியரின் வெற்றி அது, ஆனாலும் சகாக்களிடமிருந்து கற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் அந்தப் பல்கலைக்கழகக் கலாச்சாரத்தின் வெற்றியும்கூட அது.

உண்மையான சிந்தனைகள் சிறுகச் சிறுக வளர்பவை, அவற்றைப் பொறுமையுடனும் கடின உழைப்பாலும் ஈடுபாட்டாலும் கற்றுக்கொள்ள வேண்டும். புத்தகங்களையும் கல்வி சார்ந்த இதழ்களின் கட்டுரைகளையும் திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும். நூலகத்தில் வியர்வை சிந்திப் படிக்க வேண்டும். சிந்தனைகளுடனான ஈடுபாடு என்பது நூலகத்தையும் வகுப்பறையையும் தாண்டி சிறிய, தீவிரமான, நட்பார்ந்த குழுக்களாகப் பரிணாமம் அடைய வேண்டும். அதன் பிறகு தனது ஆய்வுக்கு எழுத்து வடிவம் கொடுக்கவும், ஒருவர் தான் வைத்துக்கொள்ள வேண்டியதற்கும் அதிகமாக இருக்கும் சொற்களைத் தூக்கியெறியக் கற்றுக்கொள்வதற்கும் தனிமை தேவைப்படுகிறது. பல ஆண்டுகள் கடும் உழைப்புக்குப் பிறகு சீரான எழுத்துத் திறன் உருவாகிறது. உலகத்தின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற அர்ப்பணிப்பு மிக்க உழைப்பினால் மாணவர்களுக்கு மதிப்பும் சிறப்பும் உண்டாகிறது. ஒவ்வொருவருக்கும் இதுபோன்ற அறிவுபூர்வமான கடும் உழைப்பைக் கற்றுத்தருவதால் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுடன் ஜே.என்.யு. போட்டியிட்டது.

ஆய்வும் கற்பித்தலும் படைப்பூக்கமான வகையில் பிணைக்கப்பட்டிருக்கும்போது அசலான சிந்தனைகள் உருவாகின்றன. ஆசிரியர்கள் தங்களின் செழிப்பான கருத்துகளை கட்டுப்பாட்டு நெறிமுறைகளுக்கு அடங்கியிராததும், படைப்பூக்கம் மிகுந்ததுமான, இளம் மனதுகளின்மீது பிரயோகித்துப் பார்க்கும்போது அவர்கள் சாகசமானதும் இதுவரை கேட்கப்படாததுமான கேள்விகளைக் கேட்கும்போது அசலான சிந்தனைகள் உருவாகின்றன. இப்படிப்பட்ட நவீன ஆய்வுக்காக, ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தங்கள் கல்வித்திட்டங்களை வடிவமைக்கவும் மறுகட்டமைப்பு செய்யவும் வேண்டியிருக்கிறது. ஜே.என்.யு. நமக்கு இதற்கான வாய்ப்பைத் தந்தது. ஒரு பாடத்தைக் கற்பித்தவரே கேள்வித்தாளை வடிவமைத்தார் - குரு-சிஷ்ய பரம்பரையில் ஒரு புது வடிவம் இது.

குறைபாடுகள்

ஜே.என்.யு.வுக்கென்று சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. முதலாவதாக, துறைசார் பரிபாஷை, சித்தாந்தம் போன்றவற்றை ஆரோக்கியமற்ற விதத்தில் அதிகமாகச் சார்ந்திருப்பது. வாழ்ந்துபெற்ற அனுபவங்களைவிட கோட்பாடுகள் அதிகமாக மதிக்கப்படுகின்றன. நல்ல கல்விப்புல ஆராய்ச்சிக்கு அவ்வப்போது இந்த உலகின் தொடர்பைத் துண்டித்துக்கொள்வது நல்லதுதான். எனினும், ஆய்வாளர்கள் இந்த உலகுடன் தங்களைத் தொடர்புப்படுத்திக்கொள்வதற்கான வழியைக் கண்டாக வேண்டும்.

தத்துவத் துறையானது உலக நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் பிரதானமான துறையாக இருக்கும்பட்சத்தில் ஜே.என்.யு.வில் அதை ஆரம்பிக்க 40 ஆண்டுகள் எடுத்திருக்கிறது. ஜே.என்.யு. தொடங்கப்பட்ட 1960-களில் இந்தப் பல்கலையில் சமூக அறிவியல் பண்பு நீக்கமற நிறைந்திருந்தது காரணமாக இருக்கலாம் என்று ஊகிக்கிறேன். அதேபோல் கவலை தரும் இன்னொரு விஷயம் என்னெவன்றால் இந்திய மதங்களைப் பற்றிய ஆழமான ஆய்வு ஜே.என்.யு.வில் இல்லை என்பதுதான். மதம் என்று மேற்குலகில் சொல்லப்படுவதை நாம் எளிதில் தவிர்க்கலாம். ஆனால், மதம் என்று இந்தியாவில் சொல்லப்படுவதை நாம் தவிர்க்க முடியாது. அவற்றைக் கல்வியில் உள்ளடக்கவில்லையென்றால் இந்திய யதார்த்தத்தைப் பற்றிய குறைபட்ட சித்திரமே கிடைக்கும். இது, பன்மையான மத அனுபவங்களைத் தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்த நினைப்போருக்குதான் சாதகமாக மாறும்.

-ராஜீவ் பார்கவா, வளர்ந்துவரும் சமூகங்கள் குறித்த ஆய்வு மையத்தின் பேராசிரியர், டெல்லி.

- ‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x