Published : 21 Dec 2020 03:14 AM
Last Updated : 21 Dec 2020 03:14 AM

இந்திய கிரிக்கெட்டுக்கு இடஒதுக்கீடு தேவையா?

தினேஷ் அகிரா

இந்திய கிரிக்கெட்டில் புதிதாகக் களம் கண்டிருக்கும் நடராஜனின் வெற்றி ரசிகர்களைத் தாண்டித் தமிழர்கள் மத்தியில் பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது. எளிய பின்னணியிலிருந்து புறப்பட்டு வந்த நடராஜனின் வெற்றி மக்களை உணர்ச்சிவசப்படுத்தியுள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்திய கிரிக்கெட் அணித் தேர்வில் சாதியப் பாகுபாடு குறித்து இருவேறு கருத்துகள் கொண்டவர்களும் நடராஜனின் வெற்றியை ஒருசேரக் கொண்டாடுகிறார்கள்.

ஆதிக்கக் கூறுகளைக் கொண்ட விளையாட்டு உள்ளூர்ப் போட்டிகள்கூட உலகளவில் விவாதிக்கப்படும் இந்த ஐபிஎல் யுகத்திலும் கிரிக்கெட்டில் சாதியப் பாகுபாடுகளுக்கு இடமுண்டா எனக் கேள்வி எழலாம். ஆம், இல்லை என்ற இரட்டை எதிர்நிலைகளில் பொருத்தி விவாதிக்க முடியாத அளவுக்கு இது மிகவும் நுட்பமானது. இயல்பிலேயே ஆதிக்கத்தின் கூறுகளைத் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு விளையாட்டு கிரிக்கெட். நீயும் நானும் ஒன்றல்ல என்பதைப் பறைசாற்றும் பொருட்டு ஆங்கிலேயர்கள் கிரிக்கெட் ஆட்டத்தைக் காலனிய தேசங்களுக்கும் கொண்டுசென்றனர். இந்தியாவில் ஆங்கிலேயர்களை அடுத்து கிரிக்கெட்டை நோக்கி ஈர்க்கப்பட்ட சமூகத்தின் படிநிலை, ஆட்டத்தில் அவர்கள் தேர்ந்தெடுத்த பாத்திரம் என்ன என்பதைக் கூர்ந்து நோக்க வேண்டியுள்ளது. உடல்வலு கொண்டவர்களுக்கு மட்டுமான ஆட்டமாக இல்லாததோடு உடல்கள் உரசாத ஆட்டமாகவும் கிரிக்கெட் இருப்பது இங்கு ஏற்கெனவே நிலைபெற்றிருந்த ஆசார மரபுக்கு ஏதுவாக இருந்தது.

பொதுப்படையாக எல்லோருக்குமான - உடல்ரீதியாக விளையாட்டாக இருந்தாலும் ஆட்டத்தின் ஒருசில பாத்திரங்களுக்கு வலிமையான உடற்தகுதி அவசியம். குறிப்பாக, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு. காலனிய அதிகாரிகளும், அவர்களுக்கு அடுத்த இடத்தில் இருந்த உள்ளூர் ராஜாக்களும் சொகுசாக மட்டையைப் பிடித்துக்கொண்டார்கள். அதிக உடல் உழைப்பைக் கோரும் வேகப்பந்து வீச்சை வடக்கு, வடமேற்கு மாகாணங்களைச் சேர்ந்த பார்ஸி, முஸ்லிம்களோடு சேர்ந்து பிராமணரல்லாத இந்துக்களும் எடுத்துக்கொண்டார்கள். வேலைப் பகுப்பு (division of labour) முறை இந்திய கிரிக்கெட்டில் காலெடுத்து வைத்தது இப்படித்தான்.

மட்டைக்கும் பந்துக்குமான ஏற்றதாழ்வு

காலனிய காலத்தில் வேகப்பந்து வீச்சில் உச்சத்தில் இருந்த இந்தியா தேசப் பிரிவினைக்குப் பிறகு மட்டையாட்டத்தையும் சுழற்பந்து வீச்சையும் பிரதானமாகக் கொண்ட தேசமாக உருமாறியது இங்கே குறிப்பிடத்தக்கது. முக்கிய வடமேற்கு மாகாணங்கள் பாகிஸ்தானுடன் இணைந்தது ஒரு காரணம் என்றாலும் சுதந்திர இந்தியாவில் கோலோச்சிய உயர்குடி மட்டையாளர்கள் மட்டையாட்டத்துக்குச் சாதகமான மைதானங்களைத் தயார்செய்யும்படி கிரிக்கெட் வாரியத்துக்குக் கொடுத்த நெருக்கடியும் வரலாற்றில் பதிவாகியுள்ளது.

சுதந்திர இந்தியாவின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளர்களை இரு வகைமைக்குள் எளிதாக அடக்கிவிடலாம். ஒன்று வடக்கு, வடமேற்கு இந்தியாவைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட இந்துக்கள். மற்றொன்று முஸ்லிம்கள். கபில் தேவ் தொடங்கி முகம்மது ஷமி வரை இதுதான் நிதர்சனமாக இருந்துவருகிறது. ஜவஹல் ஸ்ரீநாத், அஜித் அகர்கர், இஷாந்த் ஷர்மா போன்றோர் விதிவிலக்குகள். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டையாட்டத்தைத் தங்கள் முதல் நிலைத் தேர்வாகக் கொள்ளாததற்கு அவர்களின் பொருளியல் நிலையும் ஒரு முக்கியப் பாத்திரம் வகிக்கிறது. வேகப்பந்து வீசக் கொஞ்சம் உடல் திடமும் ஒரு டென்னிஸ் பந்தும் கிடைத்தால் போதும். முறையான பயிற்சியெல்லாம் இரண்டாம்பட்சம்தான். ஆனால், மட்டையாடக் கற்றுக்கொள்ள நிறைய செலவு பிடிக்கும். தெரு கிரிக்கெட்டில் மட்டை வைத்திருக்கும் சிறுவனுக்குக் கிடைக்கும் மரியாதை கண்கூடு.

கிரிக்கெட்டும் பிரதிநிதித்துவமும்

ஒரு காலத்தில் நிறவெறி கோலோச்சிய தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் தற்போது இடஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. ஆனாலும், டெம்பா பவுமா தவிர பெயர் சொல்லும் அளவுக்குக் கறுப்பினத்தைச் சேர்ந்த மட்டையாளர்கள் யாருமில்லை. மறுபுறம், மஹாயா நிதினி தொடங்கி ககிசோ ரபாடா வரை அவர்களுக்கு வரலாற்றுரீதியாக ஒரு செழுமையான வேகப்பந்து வீச்சுப் பாரம்பரியம் உள்ளது. தென்னாப்பிரிக்காவை விட ஏற்றத்தாழ்வுகள் அதிகமுள்ள இந்தியாவிலும் தேசிய கிரிக்கெட் அணியில் சிறுபான்மையினரின் பங்கு வெறுமனே வேகப்பந்து வீச்சாளர், ஆல்ரவுண்டர் என்கிற அளவில் மட்டுமே சுருங்கிப்போனது அதிர்ச்சி அளிக்கும் உண்மை. ரோஜர் பின்னி, ராபின் சிங் தொடங்கி பதான் சகோதரர்கள் வரை இதுதான் நிலைமை. சீக்கியர்கள் பெரும்பாலும் சுழற்பந்து வீச்சில் மட்டுமே தங்களுடைய பங்களிப்பை நல்கியுள்ளனர். நவ்ஜோத் சிங் சித்து போன்ற விதிவிலக்குகள் உண்டு. சுதந்திரத்துக்குப் பிறகான அதிகாரபூர்வ கிரிக்கெட் போட்டிகளில் இடம்பெற்ற தலித் வீரர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பழங்குடிப் பிரிவினரின் நிலைமையோ இதைவிட மோசமானது.

ஆஸ்திரேலியாவில் அந்த நாட்டின் பூர்வகுடியைச் சேர்ந்த ஜேசன் கில்லெஸ்பி வேகப்பந்து வீச்சாளராக உச்சத்துக்கு வந்தார். இதன் தொடர்ச்சியாக, தற்போது டி’ஆர்சி ஷார்ட் அந்த அணியின் முக்கிய மட்டையாளராக உருவெடுத்துவருகிறார். கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து பல்வேறு இனங்களையும் உள்ளடக்கும் அணித் தேர்வுக்குப் புகழ்பெற்றது. கெவின் பீட்டர்சன், ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் உள்ளிட்ட மாற்றுப் பூர்வீகத்தைக் கொண்ட நிறைய வெள்ளையர்கள் அந்த அணியின் மட்டையாட்டத்துக்குப் பங்களித்துள்ளனர். ஆனால், கறுப்பின மற்றும் இந்திய, பாகிஸ்தானிய வம்சாவளிகளைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்துக்காகப் பந்து வீசுவதற்கென்றே விதிக்கப்பட்டவர்கள்.

விஜய் ஹசாரேவுக்குப் பிறகு இந்தியாவில் மட்டையாடி உச்சத்தைத் தொட்ட சிறுபான்மையினர் என மன்சூர் அலிகான் பட்டோடியையும் முகமது அசாருதீனையும் அடையாளப்படுத்தலாம். ஒருவர், ஆக்ஸ்ஃபோர்டில் படித்த நவாப். மற்றொருவர், ஹைதராபாதின் கீழ் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த சாதாரணர். கவாஸ்கருக்குப் பிறகு அடுத்த சூரியோதயமாக வருவார் என அசாருதீன் கணிக்கப்பட்டார். ஆனால், அவருக்குப் பின்னால் வந்த சச்சின் தன்னுடைய பிறவி மேதைமையால் நொடிப் பொழுதில் ‘பட்டத்து இளவரசன்’ ஆனார். பின்னர், சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய அசாருதீன் தன்னுடைய பெயரைச் சின்னாபின்னமாக்கிக்கொண்டார்.

புறக்கணிக்கப்பட்ட திறமைசாலிகள்

எல்லா நேரத்திலும் திறமை மட்டுமே இந்திய கிரிக்கெட் தேர்விலும், ஊடக பிம்ப உருவாக்கத்திலும் முன்னிலைப்படுத்தப்படுகிறதா என்ற நியாயமான கேள்வி எழுகிறது. சச்சினுக்குக் கிடைத்த ஊடக வெளிச்சம் ஏன் அவருக்கு இணையான திறமை கொண்ட வினோத் காம்பிளிக்குக் கிடைக்கவில்லை? 17 டெஸ்ட் போட்டிகளில் இரண்டு இரட்டை சதங்களைக் குவித்த ஒரு வீரரை ஒரு தொடரை மட்டும் கருத்தில் கொண்டு வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ளத் திராணியற்றவர் என வாரியம் நிராகரித்தது ஆச்சரியமளிக்கிறது.

அனைத்தும் அனைவருக்கும்

புத்தாயிரத்துக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் அதிக அளவு இதர பிற்படுத்தப்பட்டவர்கள், மதச் சிறுபான்மையினர் இடம்பெற்றதற்கு இடஒதுக்கீடு முறை சமூக, பொருளியல் தளத்தில் ஏற்படுத்திய தாக்கமும் ஒரு காரணம். தலித்துகள் இடஒதுக்கீட்டின் பலனாகப் பொருளியல் தளத்தில் சற்றே முன்னேற்றம் பெற்றிருந்தாலும் விளையாட்டை ஒரு வருமானம் ஈட்டும் வாய்ப்பாக அவர்களால் இன்றும் எண்ணிப்பார்க்க முடியவில்லை. கடந்த கால நினைவுகளும், எதிர்காலம் குறித்த பாதுகாப்பின்மையும் தடையாக நிற்கின்றன. இந்த நிலையில், தென்னாப்பிரிக்க பாணியில் இந்திய கிரிக்கெட் அணித் தேர்விலும் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை கல்வியாளர்கள், அரசியலாளர்கள், சமூகநீதிச் செயற்பாட்டாளர்கள் தரப்பில் எழுப்பப்பட்டுவருகிறது. ஆனால், அது வெறுமனே எண்ணிக்கை அடிப்படையிலானதாக மட்டும் இல்லாமல் மட்டையாட்டம், பந்துவீச்சு எனப் பகுதி வாரியாக அமல்படுத்தப்பட வேண்டும்.

சின்னப்பம்பட்டி நடராஜனைக் கொண்டாடும் அதே நேரம் இன்னும் பெயர் தெரியாத சிற்றூர்களில் மறைந்திருக்கும் விவியன் ரிச்சர்ட்ஸ்களின் திறமைகளை உலகறியச் செய்திட நடப்பில் இருக்கும் அமைப்பை மாற்றியமைக்க வேண்டும். அதுகுறித்த முன்னெடுப்புகளை கிரிக்கெட் வாரியம் மேற்கொள்வதற்கு வெகுமக்கள், அரசியலர்கள், விளையாட்டு வீரர்கள் குரலெழுப்ப வேண்டும். அதை விடுத்து வெறுமனே ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் மீதான காழ்ப்பாக இதைத் திசைமாற்றுவது நீண்ட கால நோக்கில் பலனளிக்காது.

- தினேஷ் அகிரா, ஊடகவியலாளர்.

தொடர்புக்கு: dhinesh.writer@gmail.com

சின்னப்பம்பட்டி நடராஜனைக் கொண்டாடும் அதே நேரம் இன்னும் பெயர் தெரியாத சிற்றூர்களில் மறைந்திருக்கும் விவியன் ரிச்சர்ட்ஸ்களின் திறமைகளை உலகறியச் செய்திட நடப்பில் இருக்கும் அமைப்பை மாற்றியமைக்க வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x