Published : 20 Dec 2020 03:14 AM
Last Updated : 20 Dec 2020 03:14 AM

ஒவ்வொரு உயிரிக்கும் ஒரு கதை இருக்கிறது!- ஜானகி லெனின் பேட்டி

அறிவியல் எழுத்து, சுவாரஸ்யமான எழுத்து என்பவை எதிரெதிர் முனைகளிலேயே இன்றும் தொடரும் நிலையில், வன உயிர்களைப் பற்றிய அறிவியல்ரீதியான விவரங்களுடன் கூரிய நகைச்சுவை உணர்வைத் தக்கவைத்துக்கொண்ட எழுத்து ஜானகி லெனினுடையது. ஆங்கிலத்தில் இவர் எழுதிய ‘மை ஹஸ்பெண்ட் அண்ட் அதர் அனிமல்ஸ்’ கட்டுரை நூல், ‘எனது கணவனும் ஏனைய விலங்குகளும்’ என்ற தலைப்பில் ‘பாரதி புத்தகாலயம்’ வெளியீடாகத் தமிழில் வெளியாகியுள்ளது. சென்னைக்கு வெளியே செங்கல்பட்டில் ஒரு சிறிய வனம் சூழ்ந்த வீட்டில் கணவரும் ஊர்வன உயிரியலாளருமான ரோமுலஸ் விட்டேகருடன் வாழ்ந்துவருகிறார். பாம்பு, கீரி, மரநாய், முள்ளம்பன்றி, தவளை, தேரை எனப் பல்லுயிர்கள் நடமாடும் மனமும் இடமும் இவர்களுடையது. ஜானகி லெனினுடன் உரையாடியதிலிருந்து...

காட்சி ஊடகத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டிய பிறகு, எழுத்துலகத்துக்குள் முழுமையாக ஈடுபட்டு வெற்றியையும் காண்கிறீர்கள். காட்சி ஊடகத்திலிருந்து எழுத்துலகுக்கு வந்ததற்கான காரணங்கள் என்ன?

தொடக்கத்தில் ஆவணப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரப் படங்களுக்குப் படத்தொகுப்பாளராக இருந்தேன். படத்தொகுப்பாளராக இருந்ததையும் சேர்த்து இத்துறையில் 12 ஆண்டுகள் ஈடுபட்டிருந்தேன். ஒருகட்டத்தில் ஆர்வம் இழந்தேன். அப்போது நான் பார்த்த வேலையின் அழுத்தம் காரணமாக உடல்ரீதியாகவும் பாதிப்புக்குள்ளானேன். அப்படியான சூழலில் தொழிலை விட்டே வெளியேற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதைத் தவிர, எனக்குத் தெரிந்த ஒரே பணி எழுத்துதான். எனது குடும்பத்தினர் கொடுத்த ஊக்கத்தில் உடனடியாக எழுத்துக்குள் குதித்துவிட்டேன்.

உங்கள் எழுத்துகளில் நீங்கள் விவரிக்கும் விலங்குகள், உயிரினங்களின் வாழ்வை மனிதர்களின் அன்றாட வாழ்க்கைச் சூழல்களோடு தொடர்புபடுத்துவது உங்களது தனித்துவமாக உள்ளது. மனிதர்களிடமிருந்து விலங்குகள் எவ்வளவு தூரத்தில் உள்ளன?

என்னால் பரிவுகொள்ள முடியாத ஒரு உயிர்வடிவத்தை நான் இதுவரை கடக்கவில்லை. ஒற்றை செல் பாக்டீரியாவாக இருந்தாலும் திமிங்கலமாக இருந்தாலும் உணவைத் தேடும்போதோ, இனப்பெருக்கத்தில் இருக்கும்போதோ ஊறுபடுவதையோ கொல்லப்படுவதையோ விரும்புவதில்லை. சூழலியல்ரீதியான சவால்களை எதிர்கொள்வதற்கு, அவை தங்களது வரையறைகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது. சில உயிரினங்கள் பார்ப்பதற்கு நூதனமாக இருக்கலாம். ஆனால், அவை அனைத்தும் மனிதர்களைப் போன்றே உயிர்வாழ்வதற்குப் போராடுபவைதான்.

புவி வெப்பமாதல் தொடங்கிப் பெருந்தொற்று வரை மனிதர்கள் தேவைக்கு அதிகமான இடத்தை எடுத்துக்கொண்டதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தப் பெருந்தொற்றுக் காலம் நமக்குக் கற்றுக்கொடுத்திருப்பது என்ன?

இயற்கையை நாம் பழக்கப்படுத்தி நம் கட்டுக்குள் வைக்க முடியாது. ஒரு உயிரினமாகக் குறுகிய கால லாபங்களுக்காக நாம் வனங்களையும் இயற்கை நிலப்பரப்புகளையும் துடைத்தழித்துவிட்டோம். அதன் எதிர்பாராத தொடர்விளைவுதான் பருவநிலை மாற்றம். அத்துடன் அதன் தீவிரத்தன்மையை நாம் புரிந்துகொள்ளவுமில்லை. இயற்கைப் பேரிடர்கள் நிகழும்போதெல்லாம் அதற்கான காரணங்களை ஆராய்கிறோம். உடனடியாக அவற்றையெல்லாம் மறந்துவிட்டு முன்பிருந்தபடியே தொடர்கிறோம்.

நாம் நாகரிகத்தில் எவ்வளவு உச்ச நிலையில் இருந்தாலும் இயற்கையின்றி நம்மால் வாழ முடியாது. ஊரடங்கு நாட்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குள்ளேயே அடைபட்டுக் கிடக்கும் நிலை வந்தபோது வானத்தை, பறவைகளை, மரங்களை, பூச்சிகளைப் பார்க்க மக்கள் தவித்த நிலை எனக்குத் தெரியும். இப்போது கெடுபிடிகள் தளர்த்தப்பட்டுவிட்டன. அப்போது எதுவெல்லாம் ஆறுதலாக இருந்ததோ அதை அனைவரும் மறந்துவிட்டு, முன்புபோலவே இருக்கத் தொடங்கிவிட்டோம். இயற்கை நமக்குச் செய்திகளை அனுப்பத்தான் செய்கிறது. ஆனால், அதற்கு நாம் கவனம் கொடுப்பதில்லை.

காலம் காலமாக இந்தப் பூமியில் செழித்திருந்த வளமானது வளர்ச்சி என்ற பெயரால் மனிதர்களால் சுரண்டி அழிக்கப்பட்ட நிலையில், அந்த அழிமானத்துக்கான பொறுப்பை ஏற்று மனிதர்கள் இந்த உலகத்தைத் திரும்ப ‘மறு-வனமாக்கல்’ செய்ய முடியும் என்ற நம்பிக்கையை அட்டன்பரோ போன்றவர்கள் வைக்கிறார்கள். அதுகுறித்த உங்கள் பார்வை என்ன?

‘மறு-வனமாக்கல்’ என்பதைக் கேட்கும்போது நன்றாக உள்ளது. நூற்றாண்டுகளாகப் படிப்படியாகப் பேருயிர்களை அவர்கள் அழித்துவிட்டதால், மேற்கில் ‘மறு-வனமாக்கல்’ என்பதற்கு அவசியம் உள்ளது. அதற்கான தேவை இந்தியா போன்ற நாடுகளில் இல்லை. அப்படிச் செய்தாலும் அதற்கு எங்கே நிலம் உள்ளது? ’மறு-வனமாக்க’லை நாம் யாருடைய நிலங்களில் செய்யப்போகிறோம்? ‘மறு-வனமாக்க’ப்பட்ட ஒரு தனியார் நிலத்தை இன்னொருவர் வாங்கிவிட்டால் அதன் உரிமையாளர்கள் அங்குள்ள விலங்குகள் வாழ்வதற்கு அனுமதிப்பார்களா? விற்கப்படாவிட்டால்கூட, அடுத்த தலைமுறையில் வரும் நில உரிமையாளர் அதே நிலையைத் தொடர்வார்களா? யாரோ வந்து ‘மறு-வனமாக்கு’வதற்கு இந்தியாவில் ஒரு காலி நிலம்கூட இல்லை. வனங்களில் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த குடிகளிடமிருந்து பறித்தே நாம் காடுகளைப் பல தருணங்களில் உருவாக்கியிருக்கிறோம். மக்கள் தங்கள் விலங்குகளை மேய்ச்சலுக்கு விட்ட நிலங்கள் பின்னர் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், வனங்களை எப்படி மீண்டும் நிர்மாணிக்க முடியும்? சுரங்கம் தோண்டுவதால் நாசமாக்கப்பட்ட பல நிலப்பகுதிகள் இந்தியாவில் உள்ளன. அவற்றைப் புனரமைக்கலாம். இந்தத் திசையில் சில முயற்சிகளும் நடந்துகொண்டிருக்கின்றன. ஒரு வாழிடச் சூழலை உருவாக்கிவிட்டால் போதும், விலங்குகள் அங்கே வந்துவிடும். அவற்றை ஒரு இடத்தில் பிடித்து இன்னொரு இடத்தில் விட வேண்டியதெல்லாம் இல்லை.

உங்கள் கணவர் ரோமுலஸ் விட்டேகருடனான பரிச்சயத்துக்குப் பிறகுதான் உங்களுக்குக் கானுயிர் உலகம் தொடர்பான அறிமுகம் ஏற்படுகிறதல்லவா?

ரோமுலஸ் விட்டேகரைச் சந்திக்கும் வரை நான் ஒருமுறைகூடக் காட்டுக்குச் சென்றதில்லை. அதனால்தான், எங்கள் வாழ்க்கையின் தொடக்க ஆண்டுகள் சாகசமாகவே இருந்தன. நாங்கள் அமைத்திருந்த குடிலைத் தேடி வந்து யானைகள் எங்களைக் கொசுக்கள்போல நசுக்கித் துவம்சம் செய்யும் என்று எதிர்பார்த்தேன். அட்டைப்பூச்சிகள் கொடுக்கும் அசௌகரியங்கள், உணவுப் பற்றாக்குறை, களைத்து விழும் வரை நடப்பது என்பதெல்லாம் பெரும் பிரச்சினைகளாகவே இருந்தன. ஒரு வேளை, இரண்டு வேளை, மூன்று வேளைகூடச் சாப்பாடில்லாமல் இருப்பது, சில துளி ரத்தக் கொடை, உறக்கமற்ற இரவுகளை ஒரு பறவையின் கூவலோடும் ஒரு வண்ணத்துப்பூச்சியை ரசிப்பதோடும் கழிக்கவும் சௌகரியமாக இருக்கவும் கற்றுக்கொண்டேன். ரோம் என்னிடம் பொறுமையாக இருந்திருக்காவிட்டால், என்னால் தாக்குப்பிடிக்கவே முடிந்திருக்காது.

ஜானகி லெனின், ரோமுலஸ் விட்டேகரின் ஒரு நாள் எப்படி விடிந்து எப்போது முடிகிறது?

அவரது நாள் காலை ஐந்து மணிக்குத் தொடங்கும். அவர் எனக்குச் சமையலறையில் உதவிபுரிவார். வெளிச்சம் துலங்கத் தொடங்கியவுடன் எங்கள் வளர்ப்பு நாய்களோடு நடைக்குச் செல்வோம். எட்டு மணிக்கு அவர் தொடங்கும் வேலை மாலை நான்கு மணிக்கு முடியும். பிறகு, நாய்களுக்கு உணவளித்துவிட்டு அவற்றை மாலை நடைக்கு அழைத்துச் செல்வோம். பின்னர், வீட்டில் உட்கார்ந்து ஏதாவது ஒரு உரையை மதுவுடன் கேட்போம். நாள் முழுவதும் தனித்தனியான வேலைகளில் ஈடுபட்ட பிறகு சேர்ந்து செலவழிக்கும் வேளை அது. ஏழு மணிக்கு அவர் ஒரு திரைப்படம் பார்ப்பார். 9 மணிக்கு உறங்கச் செல்வார்.

மிகையான கருணையுணர்வோ பச்சாதாப உணர்வோ வெறுப்போ விலக்கமோ இன்றி உயிர்களை அதனதன் இயல்பில் பார்க்கிறீர்கள். இப்படிப் ‘பார்ப்பதன்’ இயல்பு உங்களுக்கு வந்ததைப் பற்றிக் கூறுங்கள்…

ரோமுடன் அறிமுகம் ஏற்பட்ட பின்னர் எனக்கு முதலில் பரிச்சயமான விலங்குகள் பாம்பும் முதலையும். ரசனையும் பரிவும் அவற்றின் மீது எனக்கு இருந்ததால்தான், வேறு விதமான உணர்வு எனக்கு ஏற்படவில்லை. மற்றவர்கள் அசிங்கமாக, அபாயகரமாக நினைக்கும் உயிரினங்களைக்கூட நாம் பாராட்டத் தொடங்கிவிட்டால் உலகைப் பார்க்கும் விதம் மாறிவிடும். அட்டைப்பூச்சிகளுடன் எனக்கு நெருக்கடியான நாட்கள் இருந்தன. அவற்றை என் கால்களிலிருந்து அகற்றுவதற்காக உப்பைப் பயன்படுத்தியிருக்கிறேன். கானுயிர் பாதுகாப்பைப் பற்றிய பேச்சைக் கேட்டபோதுதான், அட்டைப்பூச்சிகள் மீது உப்பைப் போடுவது எத்தனை குரூரமானது என்பதை உணர்ந்தேன். பின்னர், அவற்றின் மீது ஆர்வம் ஏற்பட்டு அவற்றின் உடல் அமைப்பையும் உயிரியலையும் பற்றிப் படிக்க ஆரம்பித்தேன். அட்டைப்பூச்சிகள் பற்றி யாராவது புகார் கூறினால், அந்த அனுபவத்தை எதிர்கொண்டு கடந்து வாருங்கள் என்றுதான் சொல்வேன். விலங்குகளின் ராஜ்ஜியத்தைக் குறுக்குநெடுக்காகப் பார்க்கும்போது அளவில் சிறியவைதான் மிக சுவாரஸ்யமான அம்சங்களைக் கொண்டிருக்கின்றன.

உங்களுடைய வாழ்க்கையில் ஒரு நாளைக்கூட அலுப்பானதாக உணர்ந்ததில்லை என்று ஒரு நேர்காணலில் தெரிவித்திருக்கிறீர்கள். அப்படியென்றால், உங்கள் வாழ்க்கை மகத்தான பரிசாகத்தான் இருக்கும். அப்படி ஒரு வாழ்வை எப்படி அமைத்துக்கொண்டீர்கள்?

நாம் எங்கே வாழ்கிறோம், நாம் என்ன செய்கிறோம் என்பது தொடர்பானது அது. நாங்களே உருவாக்கிய காட்டில் நிறைய உயிர்கள் சூழ வசிக்கிறோம். சில உயிர்கள் எங்களது இல்லத்திலேயே எங்களுடன் இருப்பவை. நான் பணியாற்றும் அறையின் ஜன்னலுக்கு வெளியே பார்ப்பதற்குச் சுவாரஸ்யமாக ஏதோ ஒன்று நடந்துகொண்டே இருக்கிறது. நான் எனது பணிக்குத் திரும்புவதற்கு முன்னால் வழக்கமாக ஒரு பறவையைப் பார்த்துவிட்டே உள்ளே புகுவேன். ஏதாவது ஒரு பறவை பதற்றமாக அழைத்தால், என்னவென்று பார்க்க வெளியே போவேன். அங்கே ஒரு பாம்போ உடும்போ தென்படும். எங்கள் நாய்களுடன் நடைகளுக்குச் செல்லும்போது பெண் மயில் தங்கள் குஞ்சுகளுடன் தென்படும். கீரிப்பிள்ளை, கழுகையும் பார்க்கலாம். வெருட்டென்று ஓடும் முள்ளம்பன்றி, மரநாய் ஒரு கீற்றாகக் கடக்கலாம். எப்போதும் பார்ப்பதற்கு ஏதாவது இருந்துகொண்டே இருக்கும்.

உங்கள் கணவர் இன்னொரு நாடு, இன்னொரு கலாச்சாரம், இன்னொரு மொழிப் பின்னணியிலிருந்து வருபவர். அவரைப் பற்றிய உங்கள் மதிப்பீட்டைச் சொல்லுங்கள்…

ரோம் வெள்ளையராக இருக்கலாம். ஆனால், அவர் தன்னை இந்தியராகவே கருதுகிறார். அவர் அமெரிக்காவில் பிறந்தார். ஆனால், எட்டு வயதிலேயே இங்கே வந்துவிட்டார். பள்ளிப் படிப்பை கொடைக்கானல், மைசூர், மும்பையில் முடித்து 1969-லிருந்து சென்னையில் வசித்துவருகிறார். அவர் தமிழ்நாட்டில் வாழ்ந்த காலம் என் வயதைவிட அதிகம் என்பதால், வயதாலும் அனுபவத்தாலும் என்னைவிடத் தானே முழுமையான தமிழன் என்று மகிழ்ச்சியோடு சொல்லிக்கொள்வார். அவர் சொல்வதும் சரியே.

ஏழைகள் மீதும் பழங்குடிச் சமூகங்கள் மீதும் எனக்குத் தெரிந்து அத்தனை நேசம் கொண்ட ஒரு மனிதரை நான் பார்த்ததில்லை. சென்னையில் நான் மாணவியாக இருக்கும் காலம்தொட்டே விளிம்பு நிலை சமூகத்தினருடன் பணியாற்றும் சமூக சேவகர்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்களைப் பார்த்துவருகிறேன். ஆனால், ரோமின் நேசமோ அவர்களில் ஒருவராகத் தன்னை அடையாளம் கொள்வதிலிருந்து வருவது. அவர்கள் மீதான இரக்க உணர்வாகவோ, பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்கும் பார்வையாகவோ அதைக் கருதவில்லை. அவர் நெருக்கமாகப் பழகும் பாம்பு பிடிக்கும் இருளர் மக்களிடமும் வைத்தியர்களிடமும் ஒரு பேராசிரியரிடம் மாணவன் எப்படிக் கற்றுக்கொள்வானோ அப்படி அவர்களது அறிவையும் திறன்களையும் மதிப்பார். இருளர் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த பாம்பு பிடிப்பவர் ஒருவரின் அளவுக்கான அறிவாளியாவதுதான் அவரது லட்சியம். இருளர் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள்கூட அவரைவிடப் பாம்புகளின் இடத்தை அறியும் சூட்சுமத்தைக் கொண்டிருப்பது அவருக்கு ஏமாற்றமாகவே இருக்கிறது.

உங்களது சமீபத்திய நூலான ‘எவெரி க்ரீச்சர் ஹேஸ் எ ஸ்டோரி’ (Every Creature Has a Story) பற்றி தமிழ் வாசகர்களுடன் கொஞ்சம் பகிர்ந்துகொள்ளுங்கள்...

விலங்குகள் தொடர்பிலான விசேஷமான அம்சங்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். அறிவியல் ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட, ஆச்சரியமூட்டும் விலங்குகளின் செயல்களைப் பற்றிய கட்டுரைகள். எடுத்துக்காட்டாக, ஓர் ஒட்டகச்சிவிங்கி தன் இதயத்திலிருந்து ரத்தத்தை நீண்ட கழுத்து வழியாக எப்படித் தன் மூளைக்கு அனுப்புகிறது? யானைகளுக்கு ஏன் புற்றுநோய் வருவதில்லை? சில பாம்பு வகைகளுக்கு உடல் வீச்சம் என்பதே கிடையாது. அதனால், மோப்பம் பிடிப்பதன் மூலம் இரைபிடிக்கும் உயிர்களால் இந்தப் பாம்புகளைப் பிடிக்கவே முடியாது. விலங்கு நடத்தைகள் ஆச்சரியமும் சில சமயங்களில் நூதனமும் கொண்டவை. ஆனால், எப்போதும் வியக்க வைப்பவை.

- ஷங்கர்ராமசுப்ரமணியன், தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x