Last Updated : 30 Oct, 2015 08:56 AM

 

Published : 30 Oct 2015 08:56 AM
Last Updated : 30 Oct 2015 08:56 AM

அறிவோம் நம் மொழியை: மண்ணாசை தீர்ந்தால்...

ஐம்பூதங்களில் நிலம் குறித்துப் பார்த்துக் கொண்டிருக் கிறோம். ஒருங்கிணைந்த தஞ்சை வட்டாரத்தைச் சேர்ந்த பேராசிரியர் தங்க. ஜெயராமன் அந்தப் பண்பாட்டின் சாரமாகத் திகழ்பவர்.

நிலம் குறித்து அவர் எழுதி அனுப்பியதைப் பார்த்தபோது, மண்ணில்தான் எத்தனை வகைகள், மண்ணுக்குத்தான் எத்தனை பெயர்கள் என்று தோன்றுகிறது. “தஞ்சைப் பகுதியில் மண்ணை வண்டல், களி, மணற்சாரி, இருமண்வாகு, களர், ஈளை என்றெல்லாம் சொல்வார்கள்” என்று பட்டியலிடும் ஜெயராமன், இந்தப் பெயர்கள் ஒவ்வொன்றுக்குமான விளக்கங்களையும் தருகிறார்.

“இருமண்வாகு என்றால் களியும் வண்டலும் (இரண்டறக் கலக்காமல்) ஒன்றோடு ஒன்று விரவிக் கிடப்பதாக இருக்கும் நிலம். உயர்வானது. ஆற்றுப் படுகை வண்டலாகவே இருக்கும். கடற்கரையை ஒட்டிய பகுதி மணற்சாரியாக இருக்கும். திருத்துறைப்பூண்டிக்குத் தெற்கிலும் கிழக்கிலும் ஒரு பெரும் பரப்பு இப்படி உள்ளது. களர் என்பது சற்று உப்பாக இருக்கும். பயிர் தழைக்காது. மண் உப்புப் பூத்ததுபோல் இருக்கும். இதற்குத் தழை உரமான கொழிஞ்சி, பில்பசலி, டேஞ்சா, சஸ்பேனியா முதலியவற்றைத் தெளித்து வளர்த்து அதை மடக்கி உழுது மண்ணை மாற்ற முயற்சிப்பார்கள். கீழத் தஞ்சையில் பல இடங்களில் இது தீவிரமாக நடந்தது. இப்போது காண முடிவதில்லை. அதாவது ரசாயன உரத்தையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம். பனை மட்டையைக்கூட மண்ணில் புதைத்துக் களர் நிலத்தை மாற்ற முயல்வார்கள். ஈளை என்பது எதற்கும் உதவாதது. பல இடங்களில் வயலிலும் இருக்கும். இதை உழுது சேறாக்க முடியாது. பயிர் இதில் தழைக்காது. ரப்பர் போல இழு, இழு என்று இருக்கும். தண்ணீர் குறைவாக இருந்து, மண் மலர்வதற்குள் (பூங்கார்ப்பு ஆவதற்குள்) மீண்டும் காய்ந்து, பிறகு நனைந்து, இப்படியே பூங்கார்ப்பு கொடுக்காமல் இருந்தால் மண் கலுங்குப்பட்டுவிடும். கலுங்குப்பட்டால் உழும்போது ரப்பர் பந்துகளாகத்தான் வரும். சேறே ஆகாது. இது கீழத்தஞ்சை மண்ணின் தனித்தன்மை. பூங்கார்ப்பு கொடுத்துவிட்டால் மண் ஒரு சால் ஓட்டினாலே நடுவதற்குத் தோதாகிவிடும். நீர்ச்சிக்கனம், முறைப் பாசனம் என்பவர்கள் இதை கவனிக்க வேண்டும். நிலம் எளிதாகச் சேறாவது நெல் சாகுபடியில் முக்கியமான கட்டம்.

நல்ல மண் என்றால் ‘சர்க்கரை’யாக (நாட்டுச் சர்க்கரை) இருக்கிறது என்பார்கள். சாகக் கிடக்கும் முதியவர்கள் உயிர் போகாமல் இழுத்துக்கொண்டு கிடந்தால் கொஞ்சம் வயல் பொறுக்கைக் கரைத்து வாயில் விடுவார்கள். மண்ணாசை தீர்ந்தால் உயிர் விடுபடும் என்று” எனச் சொல்கிறார் தங்க.ஜெயராமன்.

ஆஹா, ஆஹா.. என்ன மண் வளம், என்ன சொல் வளம்!

இப்படி ஒவ்வொரு பகுதியிலும் நிலத்தைக் குறிப்பிட மட்டும் எத்தனை எத்தனை சொற்கள் வழக்குகள் புழங்குகின்றன என்று வாசகர்கள் அனுப்புங்களேன். பகிர்ந்துகொள்வோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x