Published : 25 Oct 2015 09:38 AM
Last Updated : 25 Oct 2015 09:38 AM
வேற்று மாநிலங்கள் செல்வது உலக நாடுகளில் நிலவும் பொதுவான விஷயம். இந்தவகையில், புலம் பெயரும் பிஹார்வாசிகள் மட்டும் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குப் பின் எல்லா மாநிலங்களிலும் நெருக்கடிகளுக்கு உள்ளாகிறார்கள். பிஹாரிகள் இயற்கையிலேயே கடின உழைப்பாளிகள். அறிவாளிகளும்கூட. இன்று நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் குறைந்த கூலியில் உழைப்பைத் தர பிஹாரிகளை விட்டால் ஆள் இல்லை.
இப்படிப்பட்டவர்கள் தம் மாநிலத்தை விட்டுச் செல்லாமல் இருக்க கடந்த இரண்டு சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் பிரதானமாக முன்னிறுத்தப்பட்ட புலம் பெயர்தல் பிரச்சினை இந்தமுறை ஏனோ காணாமல் போயுள்ளது.
பிழைப்புக்காக சுமார் 11 கோடி மக்கள் வாழும் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்று பிஹார். இதிலிருந்து 2000-ல் கனிமவளங்கள் நிறைந்த பகுதி முழுவதும் ஜார்கண்ட் என்ற பெயரில் பிரிந்த பின் மேலும் பின்தங்கியது. பண்டைக்கால வரலாற்றில் புத்தரின் பெயரால் முக்கியத்துவம் வாய்ந்த இது, ‘ஓ! லாலுவின் பிஹார்!’ எனக் கிண்டலுடன் லாலு பிரசாத் யாதவால் அடையாளம் காணப்பட்டது. இதற்கு, லாலுவின் ஆட்சிக் காலத்தில் பெருகிய குற்ற நடவடிக்கைகள் மற்றும் அதிகமான பொதுமக்கள் புலம் பெயர்ந்தது ஒரு முக்கியக் காரணம்.
தம் அருகில் உள்ள மேற்கு வங்காளத்துக்கு முதலில் துவங்கிய தாகக் கருதப்படும் பிஹாரிகளின் புலம் பெயர்தல், அங்கிருந்த இடதுசாரி ஆட்சியின் குறைந்த தொழில் வளர்சியால் நெருக்கடிக் குள்ளானது. அடுத்து, அசாமுக்கு மாறியவர்கள் மீது தீவிரவாத இயக்கமான உல்ஃபா அடிக்கடி நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் பல அமைப்புகளின் தொடர்ந்த தாக்குதலால் பிஹாரிகள் பஞ்சாப் மற்றும் டெல்லிக்கு இடம்பெயரத் துவங்கினர்.
பஞ்சாபில் குறைந்து விட்ட கூலியால் மகராஷ்டிரம், ஹரியாணா மற்றும் டெல்லிக்கும் போகத் துவங்கினர். மும்பையில் தாக்கரே குடும்பத்தினர் பிஹாரிகள் மீது நடத்திய தாக்குதலால் அங்கும் நெருக்கடி உருவானது. வேறுவழியின்றி, டெல்லியைச் சுற்றியுள்ள உபி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்குள்ளும் பிஹாரிகள் பிழைப்புக்காக நுழைய வேண்டியதாயிற்று.
ஆனால், டெல்லியில் மட்டும் படுவேகமாக வளர்ந்துவிட்ட பிஹாரிகள் எண்ணிக்கை அதன் பெரும்பாலான தொகுதிகளில் இன்று தேர்தலின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கிறது. தொடர்ந்து பிஹாரிகளின் பார்வையைத் தென் மாநிலங்களின் பக்கம் திரும்பச் செய்தது. இதில் கடந்த ஐந்து ஆண்டுகளில் குறிப்பாக தமிழகத்தில் மட்டும் ஒரு கணிசமான எண்ணிக்கையில் பிஹார்வாசிகள் பெருகிவிட்டனர்.
பிஹாரிகள், தம் தாய்மண்ணை விட்டு விலகி வர லாலுவும் ஒரு முக்கியக் காரணம். காங்கிரஸ் ஆதரவுடன் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் சார்பில் 1990 முதல் 2005 வரை 15 ஆண்டுகளாக பிஹாரை ஆட்சி செய்தவர், மக்களின் எந்த முன்னேற்றம் பற்றியும் கவலைப்படாமல் இருந்தார். இத்தனைக்கும் லாலு, உயர்குடி மக்களால் அடக்கி வைக்கப்பட்டிருந்த தாழ்த்தப்பட்டவர்களின் ஆதரவில் சமூகநீதி குரல் கொடுத்து ஆட்சிக்கு வந்தவர்.
இவரது காலகட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தின்படி, 1982-83-ல் 7.49 ஆக இருந்த புலம்பெயரும் மக்களின் சதவீதம் 1999-2000-ம் ஆண்டுகளில் 13.42 ஆக உயர்ந்தது. இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கூலித் தொழிலாளர்கள்.
காரணம், லாலுவின் ஆட்சியில் அரசுப் பணியாளர்களுக்கு மாதச் சம்பளம் ஆண்டுக்கணக்கில் தாமதமாகக் கிடைத்தது. பப்பு யாதவ், சாது யாதவ், சையது சகாபுத்தின், அனந்த் மோகன், ராஜன் திவாரி, முன்னா சுக்லா என நீளும் கிரிமினல் அரசியல்வாதிகள் பட்டியலால் பிஹாரின் அவலநிலை நாடு முழுவதும் கொடிகட்டிப் பறந்தது. இருட்டிவிட்டாலே வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் மக்கள் திகிலில் மூழ்கினர்.
பெரும் தொகைக்காக அடிக்கடி மருத்துவர்கள் கடத்தப்படுவது பிஹாரில் சாதாரண நிகழ்ச்சியானது. இவர்கள் உயிருக்குப் பயந்து பிஹாரைக் காலி செய்ய அங்கு சிறப்பு மருத்துவர்களே இல்லை என்ற ஆபத்தான சூழல் நெருங்கிக்கொண்டிருந்தது. குழந்தைகள் பள்ளிக ளுக்கும் துப்பாக்கி ஏந்திய சொந்த காவலர்களுடன் போக வேண்டிய நிலை. ஆள் கடத்தல் என்பது ஒரு சுயதொழிலாகப் பரவி, சட்டம் - ஒழுங்கே இல்லாமல் போனது.
லாலு ஆட்சியில் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப் பட்டும் கைதாகாமல் மாநிலம் முழுவதும் சுமார் 25,000 குற்றா வாளிகள் உலவிவந்தனர். அவர்களில் 5,000 பேரைக் குடியரசுத் தலைவர் ஆட்சியில் ஆளுநராக இருந்த பூட்டாசிங், மூன்றே வாரங்களில் அள்ளி ஜெயிலில் அடைத்தார்.
நிதிஷ்குமார் முதல்வர் ஆன பிறகுதான் பிஹார் மெல்ல முன்னேற்றப் பாதையில் திரும்பி, பொதுமக்கள் புலம் பெயர்வது ஓரளவுக்குக் குறைந்தது. நிதிஷ்குமாரின் ஆட்சியில் அதிகபட்ச வளர்ச்சியாகக் கடந்த 2012-ல் 14 சதவிகிதம் கணக்கிடப்பட்டுள்ளது. கடைசியாக எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தின்படி, பிஹார்வாசிகள் இடம்பெயரும் சதவீதம், 2006 முதல் 2008 வரை 26.53 சதவீதம் குறைந்துவிட்டது எனவும், மக்களுக்கான பொதுவசதி 20 சதவீதம் வளர்ந்துள்ளதாகவும் தெரிந்தது.
இதற்கு முக்கியக் காரணமான நிதிஷ், இந்தத் தேர்தலில் லாலுவுடன் கைகோத்து விட்டார். இதனால், தம்மால் குறைந்த புலம் பெயர்ந்தவர்கள் எண்ணிக்கையை மேடைகளில் பறைசாற்ற நிதிஷால் முடியவில்லை. இவரது ஆட்சியில் அந்தச் சமயங்களில் பங்குவகித்த பாரதிய ஜனதா கட்சியும் ஏனோ புலம்பெயர்தல் பிரச்சினையை இந்தமுறை பெரிதாக்கிப் பேச மறுக்கிறது!
- ஆர். ஷபிமுன்னா,
தொடர்புக்கு: shaffimunna.r@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT